3. அ, ஆ, இ – வியாபாரம்

பிரிட்டீஷார் உலகைப் பிடித்த காலத்தில்தான் தொழிற்புரட்சி ஆரம்பித்தது. சுரங்கம், இரும்பு தொழில் வளர்ச்சி போன்றவை இருப்பினும் அவர்களின் தொழில் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாகவே இருந்தது.

மேற்கு மலைத்தொடர், அசாம் போன்ற இடங்களில் அவர்களின் ஆதிக்கம் நன்றாகவே தெரியும். ஒரு டீ புதருக்கு இத்தனை மனிதக்காவு என்று… எரியும் பனிக்காட்டில் குறிப்பிட்டிருப்பார். செயற்கை பஞ்சம் உருவாக்கி, விவசாய கூலிகளுக்கு வேலையில்லாமல் செய்து அவர்களுக்குப் பணத்தாசை காட்டி, ஊரைவிட்டு வரச் செய்து… காடுகளிலும், மலைகளிலும் அடிமையாக்கி பல பெரும் கொடுமைகள் செய்த வியாபாரம்தான் இன்று நாம் அருந்தும் தேனீர்.

அமெரிக்காவில் செவ்விந்தியர்களை இருந்த இடம் இல்லாமல் ஆக்கி, ஆப்பிரிக்கர்களை அடிமையாக்கி என்று செழித்து வளர்ந்தது அமெரிக்க விவசாயம்.

அதில் இருந்து சுரங்கம், தொழிற்சாலைகள், உற்பத்தி நெருக்கடி இப்படி ஆரம்பித்த விஷயங்கள்… தொடர்ந்து இன்று ஐடி துறையில் 14 மணி நேரம் வேலைப் பார்க்கும் நிலையில் முடிந்து இருக்கிறது.

பிரிட்டிஷ் செய்தததை இன்று பல இடங்களில் முதலாளித்துவம் கையில் எடுத்துக்கொண்டது. பெரும்பாலும் மக்களுக்குத் தேவை எனச் சொல்லி விற்கும் பல பொருட்கள் பூமிக்கு பாரமான குப்பைகள்.

‘கரிப்பொடி’, ‘பேஸ்ட்’ ஆகி.. இன்று “ஆக்டிவேடட் சார்கோல் பேஸ்ட்” ஆகிவிட்டது.. கரிப்பொடி இலவசம். ஆனால், பல்பொடி சிறிது காசு – பேஸ்ட் காஸ்ட்லி- ‘கரிப்பொடி பேஸ்ட்’ இன்னும் கூடுதல் விலை!!

அடுத்து. ஸ்பெஷல் மார்க்கெட்டில் அதிகபட்ச விலையில்… ‘எக்ஸ்ளுசிவ் ஆர்கானிக்’ கடைகளில் மட்டும் கிடைக்கும். நடுத்தர வர்க்கம் பேஸ்ட்ல் ஆரோக்கியமில்லாமல் வாழ்வார்கள்.

இப்பொழுது புரிகிறதா? நம் கொல்லைக்கட்டில் சும்மா கிடந்த கரிப்பொடி, மாலில் எக்ஸுளுசிவ் ஆர்கானிக் அழகு கடைக்கு சென்ற ரகசியம்?

மயக்கம், தய்க்கம் இல்லாத, சரியான முடிவெடுக்கும் நுகர்வோராக நாம் எப்பொழுது மாறுவோம்?

ஒரு பைசாவுக்குக்கூட பிரயோஜனமே இல்லாத “கோகோ கோலா” ஒரு காலத்தில் நீருக்குப் பதிலாகக் குடிக்கப்பட்டது. தாகமெடுத்தால் இனி தண்ணீர் இல்லை “கோக்”தான் என்ற வியாபார லட்சியத்துடன் விளம்பரப்படுத்தபட்டது. ஒரு கிளாஸ் கோக்கில் 20 ஸ்பூன் சர்க்கரை. அதாவது ஒரு நாளுக்கு ஒரு மனிதனுக்குத் தேவையான சர்க்கரையை ஒரு கிளாசில் தந்து பெரும்பாலான மக்களின் அடிப்படை பிரச்சனையான “ஓபேசிட்டி”யை அதிகப்படுத்தியது.

இந்த வியாபாரம் உணவு உலகை, டயட் உலகை எப்படி வசப்படுத்தியது என்ற வரலாறு பயங்கரமானது.

ஏதோ ஒரு ஆராய்ச்சியாளர், “கொழுப்பு”தான் பிரச்சினை… ஒபேசிட்டிக்கு அதுதான் காரணம் என்று கூற ..,கொழுப்பு இல்லாமல் இருந்தால் “ஹார்ட் அட்டாக்” வராது என ஒரு கொழுப்பெடுத்த அறிக்கை கொடுக்க,அன்று ஆரம்பித்தது முதலாளிகளின் கொழுத்த லாபகணக்கு.

“ஃபேட் ஃப்ரி மில்க்”, “சீரியல்ஸ்” , “கெலாக்ஸ்”, “கோக்” இன்னும் எதில் எதில் ஃபேட் ஃபிரியை சேர்க்க முடியுமோ அங்கு எல்லாம் ஒரு உணவுப்பொருளாகவே சேர்த்தனர்.

உச்சபச்சமாக, முழு கொழுப்புணவான வெண்ணயில் ஃபேட் ஃப்ரி வெண்ணெய் வந்தது. அடேய் வெண்ணெய்களா!

இப்படி “ஃபேட்” என்று சொன்னாலே குண்டாவோம் என்று சொல்லிச் சொல்லியே வியாபர உலகம் மனித இனப்பெருக்கத்தில் கை வைத்து “உண்டாகாமல்” செய்துகொண்டு இருக்கிறது!

“பேலியோ” ஆதி மனிதனின் உணவு, இயற்கையாக உண்ண வேண்டும் என்று கடந்தகாலங்களில் பிரபலப்படுத்தப்பட்டு உலகெங்கும் “கீட்டோ டயட்” உலகின் தலைவன் ஆகியது. இந்தப் பக்கம் வேகன், வேகன் என்று.. இதை தலைவி என்று வைத்துக்கொள்ளலாம்.

அசைவம் தொட்டா போச்சுன்னு சைவ குருப்… கோடிக்கணக்கில் பூச்சியை அழித்தால்தான் விவசாயம் என்ற அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் இவர்கள். இன்னும் குரங்கின் காலத்தில் இருக்க வேண்டும் எவால்வ் ஆக கூடாதுன்னு அவர்கள்..

இதையெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது வியாபார உலகம். உலகில் முதலாளிவர்க்க கணக்குப்படி அடுத்த பெரும் வியாபாரம் டயட்தான். சும்மா இருப்பார்களா?

கீட்டோ மாத்திரை, கீட்டோ ப்ரொடின் பார், பேலியோ சிப்சு (அடேய் சிப்ஸுகளா) வேகன் ஸ்னாக்ஸ்.. அதைத்தாண்டி மாத்திரைகள்… எல்லாத்துக்கும்… இரும்பில் இருந்து சுண்ணாம்பு வரை… அதாஙக… ஐயர்ன், கால்ஷியம் சப்ளிமெண்ட்ஸ்.. அடுத்தக்கட்ட பார்மா உலகம் சப்ளிமெண்ட்களை குறிவைத்து இது மாத்திரையல்ல சத்து என்று ஆரம்பித்து இருக்கிறது. அதுவும் குறைபாட்டுக்குத்தானே தவிர உணவு அல்ல.

இப்படி இயற்கையாக ஒரு டயட் அறிமுகப்படுத்தினால்கூட இதான் இயற்கை என்ற விளம்பரத்தோடு உள்ளே வருகிறது வியாபார உலகம். அமேசான் காடுகள் ஒழுங்கா இருந்தாலே ஆக்சிஜன் உற்பத்தியாகும். ஒழுங்கா நோயில்லாமல் இருப்போம். முடி கொட்டாமல் இருக்கும். ஆனால் அமேசான் காட்டில் இருந்து ஒரு எண்ணை எடுத்து விளம்பரம் செய்து நம் தலையில் தடவும் வியாபார உலகம்.

பணம் மிக மிக அடிப்படை தேவை. நாம் எது செய்தாலும் இலவசம் என்பது இருக்கவே கூடாது. அது என்ன காரணமாக இருப்பினும். ஆனால் மன சாட்சியை அடகு வைத்து சம்பாதிக்கும் பணம் ஒரு அக்கிரமம். முதலாளித்ததுவம் இதை கையில் எடுத்து மிக அதிக நாளாகிறது.

மருத்துவ உலகம் சாகவே விடாது. ஆனால் எப்படி வாழ வைக்கப்போகிறது என்றால்..அவர்கள் இல்லாவிடில் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியாது என்ற சார்பு தன்மையில் நம்மை வைத்திருக்கப்போகிறது.

உணவுலகம் அதில் இருந்து ஒரளவுக்கு நம்மைக் காப்பாற்றும். இந்த வியாபார ஊடுருவிகள் அதில் உள்ளே வராமல் இருந்தால்..

சரி உணவு மட்டுமா வியாபாரம்… மனம்?

வெளியே செல்லும் பொழுது வயிறு முழுக்க சாப்பிட்டுவிட்டு பசியில்லை என்றுதான் செல்வோம். ஆனால் உணவு அங்காடியில் பல்வேறு நிறங்கள் நம்மை கவர்ந்து இழுக்கும்… அவை பெரும்பாலும் கலர் சைக்காலஜி அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும். என்ன செய்தால் மனிதர்கள் “டெம்ப்ட்” ஆவாரகள் என்பது வியாபார நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும்.

சைக்காலஜியை பொறுத்தவரை அதன் ஆராய்ச்சிகளை வைத்தே பலவற்றுக்கு அடிப்படை மருத்துவம் செய்கிறார்கள். “தெரபி”கள் எல்லாம் அதன் அடிப்படையில்தான். ஆனால் இப்பொழுது ஒரு உண்மை… 68 சதவிகிதம் அதில் பங்கு பெறுவது அமெரிக்கர்கள். அதைத்தவிர எந்த நாடாகிலும் பங்கு பெறுவது சைக்காலஜி மாணவர்கள். ப்ரொபசர்கள் ஃபண்டிங் வாங்கி, நாலு பேப்பரில் கேள்விகள் அச்சடித்து மாணவர்களிடம் கொடுத்து இதான் முடிவு என்று அறிவிப்பதாய் ஒரு செய்தி தெரிவிக்கிறது. இதுபோன்ற ஆராய்ச்சிகள் பொது மக்களை வைத்து எடுக்காமல், அவர்களை அளவீடாய் குறிக்கின்றனர்.

எம். ஆர்.ஐ, ரத்த பரிசோதனை எதுவும் செய்யபடாமலே பல்வேறு மருந்துகள் சைகாட்ரிஸ்ட் பரிந்துரைக்கிறார்கள். வெறும் டி.எஸ்.எம் எனப்படும் மேனுவல் மட்டும் வைத்துக்கொண்டு நோயாளிகளின் பிரச்சனைகள் நிர்ணயிக்கபடுகிறது.

சைக்காலஜி தெரபி கொடுக்கிறேன் பேர்வழி என்று ஆளாளுக்கு ஒரு சென்டர் … இதில் பல ஹீலர்களுக்கு உளவியல் அடிப்படை கூட தெரியாதது பரிதாபம். அதே சமயம் மருத்துவப்பக்கம் , ஃபார்மா என வியாபாரம் செழிக்கிறது. மனதை சரி செய்ய்யும் வியாபாரம், மகிழ்ச்சி, நிம்மதி வியாபாரம்தான் இன்று நம்பர் ஒன்,

அதை தவிர மனம் பற்றி பேசி பேசி கார்பரேட் சாமியார்கள் உலகம் எங்கும் கொழிக்கிறார்கள். இந்தியா மட்டுமில்ல… ப்ரேசில், ஆப்ரிக்கா என பல்வேறு நாடுகள், கண்டங்களில் இந்த God Man பிசினஸ் சக்கைப்போடு போடுகிறது.

சைக்காலஜியில் புது துறையாக ஆன்மீக (ஸ்பிரிச்சுவல்) சைக்காலஜி இணைக்கப்பட்டு இருக்கிறது. மனித மனதுக்கு ஆன்மீகமும் மிக அவசியம் என்று கண்டுப்பிடித்து உள்ளார்கள். அதை வைத்துக்கொண்டுதான் மேற் சொன்ன பெரும் வியாபாரஙகள்.

அடுத்து சைக்காலஜி பிரிவில் இண்டஸ்ட்ரி, மார்கெட்டிங் பிரிவுகள் உண்டு. இங்கு மனித மனத்தைப் படித்து அதற்கு ஏற்றவாறு வியாபாரம் செய்வார்கள். இதில் கற்று தேர்ந்த ட்ரைனர்கள் மனித மனத்தை மாற்றி அவர்களை மோட்டிவேட் செய்யும் கலையில் விற்பன்னர்களாக இருப்பர். அதைத் தெரிந்து quote க்கு என ஒரு தளம் கடைவிரிக்கிறது. புத்தகங்கள் இணையம் என எல்லாம் வந்துவிட்டது. ஒவ்வொன்றாக அனைத்தும் இணையத்தில் இடம் பிடிக்கிறது. அதில் மிக முக்கியமானவை டயட் குழுக்கள். இவை வளர முழுக்க முழுக்க இணையமே காரணம். டயட் வியாபாரமும் செழித்தோங்குகிறது. ஏன்? எனக்கும்தான்..! இணையம்தான் என் வியாபாரங்களுக்கு முதலீடு.

வியாபாரம் என்று தெரிந்து பல வலைகளில் விழுந்து இருக்கிறோம். ஆனால் நம்மை முழுக்க அடிமையாக்கும் வியாபாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் சோஷியல் மீடியா.

நம்மை அறியாமல் நாம் பேசுவது கண்காணிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு பொருட்கள் விற்கப்படும். கூகிளில் ஊறுகாய் தேடினால்..ஒரு வாரம் முழுக்க ஊறுகாய் விளம்பரங்கள்தான். அமேசானில் ப்ளே ஸ்டேஷன் விலையை மகன் பார்க்க, அதில் இருந்து ஒரு மாதம் எங்கு சென்றாலும்..”ப்ளே ஸ்டேஷன் வாங்கலியோ? ப்ளே ஸ்டேஷன்” என்று கூடைக்காரி போல் பின்னாலேயே வந்து கடை பரப்பினர்.

எழுதும் எதுவும் நம்முடையது அல்ல… பகிரும் எல்லாம் கடைப் பரப்ப வாய்ப்பு இருக்கிறது.

டிக்டாக்கில் பார்த்தால், முதற் பக்கம் அவர்கள் பகிரல் எல்லாம் பெண்களின் அங்க அசைவுகளாக இருக்கும். இந்தியப் பெண்களுக்கு பொதுவாக கிடைக்காத, பாராட்டும் அங்கீகாரமும்தான் இவர்களின் இலக்கு. அங்க அசைவுகளைத் திருப்பித் திருப்பிப் போட்டு அதற்கு அதிகம் லைக் வாங்க வைக்கின்றனர்.

இதைப் பார்க்கும் ஆண்களுக்கு ஒரு மாயையான காமத்தூண்டல் உணர்வை ஏற்படுத்துகின்றனர். இரண்டும் பொய். எல்லாம் வியாபாரம்,. அதை வைத்துக்கோண்டு பெருமளவில் வியாபாரம் செய்து மேலே வந்தவர்களும் உண்டு.

ஆண், பெண் உணர்வுகள் பற்றி திடீரென ஏன் இந்தளவுக்கு விவாதிக்கிறோம்..?இத்தனை நாள் இவை எங்கு இருந்தது..?

எல்லாவற்றையும் சோஷியல் மீடியா சந்தைப்படுத்துகிறது. ஒரு பெண் “டிண்டிலில்” இல்லையா..?”செம்ம்ம டேட்டிங் சைட் “என்கிறாள்..! “ஏம்மா நான் புள்ளக்குட்டிக்காரி” என்றால்,..சோ வாட்? என்கின்றனர். ‘செக்ஸ்’ ஐ இந்தளவுக்கு சந்தைப்படுத்தி..அதை ஆஹா, ஓஹோ என்று ஏதேதோ பேச வைத்து, மாய கிளர்ச்சியில் ஈடுபட்டு அதற்கு அடிமையாக வைக்கின்றனர்.

நிலா, கவிதை அடுத்து புறக்கணிப்பு, பிரிவு என்ற “பேட்டர்னில்”தான் இணையக்காதல்கள் இருக்கும். இதில் நல்ல விஷயம்..சமத்துவம்தான். இதில் “ப்ரேக் அப்” ஆனால் அதற்கான சைட்டுகள் உள்ளன. இப்படி இணையத்தின் மிகப்பெரும் வியாபாரம் காதல், காமம், அங்கீகாரம். இதை வைத்துக்கொண்டு மனித மனத்தை அடிமையாக்கி நம்மை விலகவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இணையத்தை வியாபாரம் செய்தால் உலக வியாபாரம், இணையத்திற்குள் வியாபாரம் செய்தால் உள்ளுர் வியாபாரம்! எது சரி, எது தவறு, எது சமூகம், எது நாம், எது உறவு, எது குடும்பம் என்ற எல்லா வரையரையையும் இணைய வியாபாரங்கள் உடைத்துப் போடுகிறது. அவர்களுக்கு மனிதர்களை தனிமை படுத்தி இணையத்திற்குள் விழவைக்க வேண்டும். மனிதர்கள் பைத்தியமாக முதல்படி தனிமை… அதை இணைய வியாபாரம் செவ்வனே செய்கிறது.

இணைந்த மனங்களை இழந்து இணையத்தில் அடையபோவது என்ன?

முந்தைய தொடர்கள்:

2.உறவுகள் தரும் அழுத்தங்கள் – https://bit.ly/2waiB6Q
1.ஆரோக்கியம் பொறுத்தவரை –https://bit.ly/3b9jUlb

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எது நம் வீடு ?- கிர்த்திகா தரன்
  2. நம்மைக் காக்கும் நல்ல பாக்டீரியாக்கள் - கிர்த்திகா தரன்
  3. தற்கொலையை மட்டும் நியாயப்படுத்தி விடாதீர்கள்- கிர்த்திகா தரன்
  4. 'இணையம் தூரத்தை அருகில் வைத்து, உறவுகளை தூரமாக்கிவிட்டது.' – கிர்த்திகா தரன்
  5. எங்கே இருக்கிறார் நவீன கடவுள்? - கிர்த்திகா தரன்
  6. உறவுகள் தரும் அழுத்தங்கள் - கிர்த்திகா தரன்
  7. ஆரோக்கியம் பொறுத்தவரை நாம் என்ன கொடுக்கிறோமோ அதுதான் நாம் - கிர்த்திகா தரன்