7.அங்கே என்ன சத்தம்
காதலிப்பவர்களுக்கு இத்தகைய சேதிகளையெல்லாம் படிக்க நேரமிருக்காது எனத் தெரிந்தேதான் இதை எழுகிறேன்
1) இது மிக முக்கியமானது என்பதாலே முதலில் சொல்கிறேன் – அழகிகளை ரசியுங்கள், ஆனால் காதலிக்காதீர்கள். காதலுக்கு முதன்மையான விரோதி அழகு தான். ஏனென்றால் அழகு ஒரு சமநிலையின்மையை ஏற்படுத்தி உங்களை நேசத்துக்காக பிச்சையெடுக்க வைக்கும். பிச்சைக்காரர்கள் ஒருநாளும் காதலர்கள் ஆக முடியாது.
அடுத்து, அவளது அழகிய தோற்றம் அவளை அறிய விடாமல் உங்களைத் தடுக்கும், அவளுக்கு அகந்தையை அளிக்கும், அந்த அகந்தையை நீங்கள் சதா கெஞ்சியும் கொஞ்சியும் பலமடங்காக பெருக்குவீர்கள். இப்போது அப்பெண் உங்களை நேசிக்காமல் நீங்கள் நேசிக்கும் தன்னை நேசிக்கத் தொடங்குவாள். பிறகு உங்கள் காதலை யாருமே காப்பாற்ற முடியாது. Dialogues நூலில் சாக்ரடீஸ் ஒரு இளைஞருக்கு அளிக்கும் அடிப்படையான அறிவுரை நீ யாரைக் காதலிக்கிறாயோ அவரை ஒருபோதும் மிதமிஞ்சி புகழாதே என்பது. ஆனால் இதெல்லாம் சொல்ல எளிது – ஒரு பேரழகி நம் முன் வந்தால் எல்லா தீர்மானங்களும் தலைகீழாக கவிழ்ந்து விடும்.
அழகு என்பது உடல் வேட்கை தீர்ப்பதற்கான ஒரு தோரணவாயில். ஒரு பெண்ணை நீங்கள் அடைந்ததும் அவள் மீது ஆர்வம் இழக்கும் படியே இயற்கை உங்களைப் படைத்திருக்கிறது; அதனாலே அழகு போகப் போக குறைகிறது; அழகு அப்படி குறைய முடியாது அல்லவா, ஆனால் நமக்கு அப்படித் தோன்றும் வரை இயற்கை ஹார்மோன்களை சுரக்க செய்கிறது. அது நம் பார்வையை மழுங்கடிக்கிறது. ஆனால் காதல் அழகினால் தூண்டப்படும் என்றாலும் அது அழகில் உருவெடுப்பதில்லை. அதற்கு அழகு அவசியமும் அல்ல.
காதல் மொழிவயப்பட்டது. அது பேச்சில் வளர்ந்து உடல் இணக்கத்தில் தீவிரம் கொள்வது.
2) காதலிக்கும் பொது அந்த உறவாடலைத் தவிர வேறெதுவும் முக்கியமல்ல. காதலியை மகிழ்ச்சியாக்குவது உங்களுக்கு அது மகிழ்ச்சி தரும் பொருட்டு மட்டுமே நிகழ வேண்டும். தியாகத்துக்கு காதலில் எந்த இடமும் இல்லை. உங்கள் காதலிக்காக நீங்கள் சொந்த பணத்தை ஏராளமாக செலவழிக்க அவசியம் இல்லை; அவளுக்காக யாரையும் விட்டுத் தர அவசியமில்லை. அவளும் உங்களுக்காக தனக்குப் பிடிக்காத எதையும் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தால் அது காதலுக்கே பாதகமாகும்.
நீங்கள் தியாகம் பண்ணும் போது காதலில் ஒரு ஏற்றத்தாழ்வு வந்து விடுகிறது. நீங்கள் எதையோ ஒன்றை விட்டுக் கொடுத்து அந்த தன்னுணர்வுடனே இருக்கிறீர்கள் எனில் அதற்காக காதலியோ காதலனோ உங்களிடம் கடன்பட்டிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். இது கசப்பையும் ஏமாற்றத்தையும் கொண்டு வரும்.
3) எப்போதும் காதலி கேட்பதை உடனே செய்து தராமல் முடியாது என மறுக்க பழகுங்கள். அவள் உங்கள் சேவைகளை எளிதாக சாதாரணமாக எடுத்துக் கொள்ள அனுமதிக்காதீர்கள். நீங்கள் உங்கள் செயலாலே மதிப்பிடப்படுவீர்கள். கேட்கிறதை எல்லாம் எடுத்துக் கொடுக்கும் ஆள் நீங்கள் எனில் நீங்கள் மலிவான ஒரு நபர் எனும் மதிப்பீடு சுலபத்தில் அவளுக்கு வந்து விடும். (காதலிகளுக்கும் இது பொருந்தும்.) காதலில் “முடியாது” எனும் சொல் இனிமையானது; அதை சரியான படி பல சந்தர்பங்களில் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
4) சும்மா பாராட்டிக் கொண்டு மட்டும் இராமல் குறைகூறக் கற்றுக் கொள்ளுங்கள். காதலியிடம் குறைகாணும் போதே அவளுக்கு உங்கள் மீதான அக்கறையும் பிரியமும் பலமடங்காகிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் குறை காண வேண்டாம். பெரிய விசயங்களை பாராட்டுங்கள், ஆனால் சின்னச் சின்ன செய்கைகளில் விமர்சனம் வையுங்கள், அதை தர்க்கரீதியாக கண்ணியமாக அல்லாமல் கோபாவேசமாக செய்யுங்கள். உணர்ச்சியின் மொழியில் வெளிப்படும் குற்றஞ்சாட்டல்கள் அழகிய காதல் தருணங்களாக பரிணமிக்க வாய்ப்பு அதிகம். அவள் அணிந்து வரும் நளினமான ஆடையை பொதுவாக பாராட்டுங்கள், ஆனால் ஒரு சின்ன குறையை சுட்டி அதற்காக கோபத்துடன் கடிந்து கொள்ளுங்கள். அவளுக்கு சற்று வருத்தம் ஏற்பட்டு கண்ணில் நீர் வரும்படிக்கு. அடுத்து அவளாகவே உங்களை சமாதானப்படுத்துவாள். ஆமாம், நீங்கள் அவளை சமாதானப்படுத்தினால் அது சரணாகதி. அவளாகவே உங்களை ஆறுதல்படுத்தினால் அங்கு காதல் தேன் சொட்டும்; அங்கு அவள் தன் அழகை உங்களிடத்து பரிபூரணமாக உணர்வாள். அங்கு அவள் உங்கள் அன்பை, அவள் மீதான அர்ப்பணிப்பை மறைமுகமாய் தன்னுடைய ஆறுதல்மொழி வழியாக அறிவாள். “எனக்காக எவ்வளவு கோபப்படுகிறான் பார்” என அபத்தமாக ஆனால் அழகாக உங்கள் காதலி நினைப்பாள்.
அதனால் கோபப்படுங்கள். உங்களுக்காக அவள் பிரியாணி செய்து பரிமாறினால் அதை முழுமையாக பாராட்டாதீர்கள். அப்படி பாராட்டினால் அவளுக்கு அது ஒருவித கசப்பை தரும். அவள் என்ன முனியாண்டி விலாஸ் சர்வரா “பிரியாணீ பிரமாதம்” என சொல்லி டிப்ஸ் தருவதற்கு. அவளுக்கு அது பிரியாணி மட்டுமல்ல, தன்னுடைய இச்சை திளைக்கும் தேகத்தின் நீட்சி. அவளிடம் “சிறப்பு” எனப் பாராட்டும் போது “இது போதும்” என அவள் மீது, அவளுடல் மீது வைக்கும் ஒரு மதிப்பீடாகிறது. ஆனால் “இது போதாது, இதை விட நன்றாக நீ செய்திருக்க வேண்டும்” என கோபத்தைக் கொட்டும் போது, அப்போது அவள் மனம் புண்பட்டு கோபத்தில் திரும்ப உங்களிடத்து சீறும் போது, கண்ணீரைக் கொட்டும் போது அவள் மீதான உங்களுடைய இச்சையை சுலபத்தில் திருப்திப்படுத்த முடியாது என தன் ஆழ்மனத்தில் உணர்ந்து கொள்கிறாள்.
ஆனால், கவனம்: அவளிடத்து நீங்கள் நேரடியாக அதிருப்தியைக் காட்டினால் அது காதல் முறிவுக்கு இட்டுச் செல்லும்.
ஆகையால் அவளது வேலையில், செய்கைகளில் தொடர்ந்து அதிருப்தியை வெளிப்படுத்துங்கள். அதை ஆவேசமாக உண்மையாக செய்யுங்கள். சின்ன சின்ன விசயங்களால் நீங்கள் ஆழமாக புண்படுவதாகக் காட்டுங்கள். அப்போது தனது “கட்டற்ற தன்மையை, தனது எல்லையற்ற அழகை, அள்ளத் தீராத அன்பை இவன் உணர்கிறான்” என அவள் புரிந்து கொள்வாள்.
5) தீர்மானங்கள் இல்லாமல் இருங்கள் – இது உண்மைக் காதல், இது சாஸ்வதமான காதல், இவளிடம் இருந்து அணுவளவும் பிரியாதிருப்பேன் என்றெல்லாம் நினைக்காதீர்கள். ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாகக் காணுங்கள். அப்போதே காதல் உயிர்ப்புடன் இருக்கும். பெரிய ஏமாற்றங்கள் இன்றி வாழ முடியும்.
6) காதல் எப்போதும் முரண்களுக்குள் வாழ்கிறது – நிதானமாய் கச்சிதமாய் கராறாய் பகுத்தறிவுடன் நேர்த்தியாய் இருப்பவர்களுக்கானது அல்ல காதல். அது ஒரு பொய்யான குமாஸ்தாத்தனமான ஆண்–பெண் உறவை மட்டுமே உருவாக்கும். நீ எனக்குத் தேவையானதைக் கொடு, நான் உனக்குத் தேவையானதை திரும்பத் தருகிறேன் என்பது ஒப்பந்தம், ஒருவித விபச்சாரம். ‘நீ உனக்குத் தேவையானதைக் கேள், ஆனால் நான் அதைத் தர மாட்டேன், எனக்குத் தர ஆசை என்பதாலே தர மாட்டேன், நீ கேட்டு வாங்கிக் கொள்ளேன்’ என சீண்டுவதே காதல். ஒன்றைக் கொடுத்து விட்டால் அங்கு காதல் முடிந்து போகிறது, அதை கொடுத்தும் கொடுக்காமல் மீதம் வைப்பதே காதலை தக்க வைக்கிறது.
ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். அது உங்கள் மீதான நம்பிக்கையை குலைக்கும். ஆனால் ஒன்றை சொல்லி விட்டு அதற்கு மாறாக மற்றொன்றை சொல்லுங்கள். இந்த இரண்டுக்கும் இடையில் ஊசலாடுவதே உங்களுடைய உண்மை எனப் புரிய வையுங்கள். காதலில் செல்லுபடியாகும் ஒரே உண்மை தன் வாலை தானே வளைந்து தின்னும் பாம்பைப் போன்ற உண்மைகளே.
7) நீதி–அநீதி, சரி–தவறு, அரசியல் சரித்தன்மை போன்ற சமாச்சாரங்களுக்கு காதலில் எந்த மதிப்பும் இல்லை என்பது மட்டுமல்ல, இவற்றை எல்லாம் சுமந்து வருகிறவர்களுக்கு காதலில் கதவு உடனேயே மூடி விடும்.
8) முற்போக்கு சிந்தனைக்கு காதலில் இடமில்லை. உ.தா., நீங்கள் ஒரு ஆண் பெண்ணியவாதி, உங்கள் காதலி ஒரு பெண் பெண்ணியவாதி எனில் நீங்கள் பரஸ்பரம் உச்சிமுகர்ந்து பேஸ்புக்கில் பதிவுகள் போடலாம். ஆனால் காதல் அங்கேயே படுத்து உயிரை விட்டு விடும்.
9) ஆனால் உங்களுடைய நன்னெறிகளை காதலிக்கு உணர்த்த தவறாதீர்கள், அந்த நன்னெறிகளுக்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் நேரடி உறவில்லை எனப் புரிய வைத்தபடியே அதைப் பண்ணுங்கள்.
10) உடல் விருப்பமும் விளையாட்டுத்தனமும் சதா மொழியில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உங்கள் காதலியின் வறண்ட உதடுகளைப் பார்க்கப் பிடிக்கவில்லை என்றாலும் உன் உதடுகளை கவ்விக் கொள்ளவா என சும்மாவேனும் சொல்லி வையுங்கள்; அல்லது உங்கள் உடல்மொழி அல்லது பார்வை மூலம் அந்த சேதியை கடத்துங்கள். அல்லாவிடில் காதல் சட்டென இறங்கி நட்பாகி விடும். இதை செய்யும் போது, எப்போதுமே இவனுக்கு செக்ஸ் தான் மனத்தில் என்கிற எண்ணம் அவளுக்கு உங்களைப் பற்றி ஏற்படாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் பாணியில் எதையாவது வேடிக்கையாக சொல்லிக் கொண்டிருங்கள். உங்களைப் பிடிக்கும் என்றால் அவள் நீங்கள் அடிக்கும் மொக்கை நோக்குக்குக் கூட சிரிப்பாள். (நீங்களும் அவள் விசயத்தில் அப்படித் தான்.) சிரிக்க சிரிக்க காதலில் ஒரு அபார சுதந்திரம் ஏற்படும். நினைத்ததை எல்லாம் அவளிடத்து சொல்லுகிற, தோன்றுகிற போல அவள் உடலை எடுத்துக் கையாளுகிற சுதந்திரம்.
காதலர் தின வாழ்த்துக்கள்!
முந்தைய தொடர்கள்:
6.எனது நண்பன் எனது நண்பன் அல்லhttps://bit.ly/2xTmygJ
5.ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?https://bit.ly/2U1ZmW0
4.நிழல் நிஜமாகிறதுhttps://bit.ly/3a3P9xM
3.பாய் பெஸ்டிகளின் தர்மசங்கடம்https://bit.ly/2QuC09r
2.தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர்https://bit.ly/2Qsg1jn
1.யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன்https://bit.ly/33AmePx
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
- கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
- ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
- கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்
- முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
- காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
- சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
- பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
- ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
- தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
- ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
- பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
- அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
- எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
- ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
- நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
- சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
- யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்