எண்பதுகளின் துவக்கத்திலேயே என் கைகளிலிருந்து பட கதைகளும், மாயக் கிழவிகளின் உயிர் பதுங்கியிருக்கும் பச்சைகிளிகளின் குகைக்கதைகளும் விலக்கி வைக்கப்பட்டு, லேனா தமிழ்வாணனின் கதைகள், சாண்டில்யன், பீ.டி சாமியின் ஊதுபத்தி, பன்னீர் வாடை பேய்கதைகள்… எனப் பலவும் சலிப்பு தட்டியபோது பதிமூன்று வயதைக் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன். உறுப்புகளில் உணர்ச்சிகூடிய நாட்களில், என் மாமா ஒளித்துவைக்கும் பெரிய மார்புகள் கொன்ட புத்தகங்களைத் தேடித் தும்பலை வரவழைத்துக்கொண்ட வீட்டில் யாருமற்ற அந்தப் பகலில் என் கைகளுக்கு கிடைத்த அதிசயம் 17ஆம் நூற்றாண்டு மிகுயெல் தசெர்வான்தெஸின் டான் குயிக்ஸாட் கதைகள், என் பால்யத்தில் ஒரு மந்துர கம்பளம்போல என் மனதில் பறக்க, நான் அதில் ஏறி குதிரைகள் மீதும் உலக கடல்கள் மீதும் பறந்துக்கொண்டிருந்தேன்.

கதை சொல்லி என் பரபரக்கும் மனதை சாந்தப்படுத்த பாட்டன்களோ பாட்டிகளோ அற்ற எனக்கு இன்னொரு பரிசாக சார்லஸ் டிக்கனஸின் இரு பெரும் நகரங்கள் கிடைத்தபோது நான் என் நகரத்தையும் அதன் இருப்பையும் தற்போதைய ஆண்டு இந்தக் கதை நடந்த ஆண்டு அந்த ஊர் அதன் மக்கள் , என்னைச் சுற்றியுள்ள மக்கள் என விசாரணைகள் தொடங்கிவிட்டன, அப்போது நான் எட்டாம்வகுப்பு இறுதித் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். உள்ளூர் படைப்புகளில் ஆர்வம்குன்றி பொழிபெயர்ப்புகளை நோக்கி மனம் அலைந்துகொண்டிருந்தது.

அப்போது வெளியூர் விடுதியொன்றில் படிக்க போய்விட்டதால் என் படிக்கும் ஆசையை அங்கிருந்த பொது நூலகம் தீர்க்க பள்ளி பாடங்களில் கவனமற்று எப்போதும் நூலக நூல்களிலேயே மூழ்கிக்கிடந்த நாட்கள். அங்கு மொழிபெயர்ப்புகள் எதுவுமில்லை அதைப்பற்றிய விசாரணை எதுவுமற்று புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், லஷ்மி, ராஜம் எனக் கிடைப்பதையெல்லாம் படித்துக்கொண்டிருக்க… அந்த மொழிபெயர்ப்புகள் வேறு உலகையும் மனிதர்களின் வேட்கையை, தீவிரமான ஆவேசத்தைத் தன்னை ஒடுக்குகிறவனுக்கு எதிராக கிளர்ந்தெழும் அந்த எளிய மனிதர்களில் மின்னும் கதாநாயக பிம்பத்தைத் தேடி உள்ளம் அவதியுற்ற நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நாளில் மீண்டும் என்னை சென்னைக்கே அழைத்து வந்துவிட்டார்கள்.

அப்போது எங்கள் வீட்டில் டீவி இல்லாததால் என் உறவினர் வேப்பேரியில் உள்ள தொழில்நுட்ப மாணவர்கள் பயிலும் மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தார். அவரைப் பார்க்க போகும்போது அப்படியே அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் படங்களைப் பார்த்துவிட்டு வருவோம்… அதுமாதிரியான சூழலில், என் உறவினர் அறையில் மணவரல்லாத ‘ஆருமற்ற அரசு ஊழியர் ஒருவர் தங்கியிருந்தார் அவரது பெட்டியிலோ ஏராளமான புத்தகங்கள் எனக்கு வாயில் எச்சில் ஊறுகிறது… அதை வேடிக்கை பார்ப்பதை அவர் பார்த்துவிட்டார் ஒரு புத்தகத்தை எடுத்துத் தந்தார்…

” பாரு படிக்க முடியும்ன்னா படி” அதன் அட்டையில் இருந்த பெயரைகூட என்னால் வாசிக்க முடியாதபடி கடினமாக இருக்க… அந்தப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். அவ்ளவு நேர்த்தியான ஓவியங்கள் சில புகைப்படங்கள் என முதல் இரண்டு பக்கங்கள் படித்தவுடன் என் நெஞ்சில் அந்த வார்த்தைகள் அப்படியே ஒட்டிக்கொண்டன. எனது ஆர்வத்தைப் பார்த்து, “நீ வீட்டுக்கு எடுத்துக்கினு போய் படி என்று தந்துவிட்டார் அந்தப் புத்தகம்தான் என் வாசிப்பு மற்றும் என் மனதில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தியது. அதைவிட துயரம் அந்த அறையிலிருந்து சிவப்பு அட்டையிட்ட அந்த அண்ணன் தந்த புத்தகத்தைவிட பெரியதான புத்தகம் ஒன்றை திருடியிருந்தேன்…

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
  3. அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
  4. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  5. உண்மை மனிதனின் கதை |  பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
  6. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  7. சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
  8. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  9. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  10. லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி