க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-13

Following | English | 1998 | United Kingdom | 1 hr 9 mins | Christopher Nolan

நோலன் இயக்கிய‌ முதல் முழு நீளத் திரைப்படம் Following. குறைந்த பட்ஜெட்டில் உருவான கருப்பு வெள்ளைப் படம். டிஜிட்டல் சினிமா பரவலாகாத காலகட்டம். 16 எம்எம் வடிவில் எடுத்தார்கள். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பான்மை ஃபிலிம் சுருள் தான். அதனால் காட்சிகளுக்கான பலத்த ஒத்திகைக்குப் பின்பே கேமெரா இயங்கத் தொடங்கும். அதிகபட்சம் இரண்டு டேக். இயற்கை லைட்டிங்கிலேயே பெரும்பாலான காட்சிகளை எடுத்தனர். ஒளிப்பதிவை நோலனே கவனித்தார். எடிட்டிங்கும் செய்தார்.

வார நாட்களில் ஒரு முழுநேர வேலை. வார இறுதிகளில் படப்பிடிப்பு. ஒரு வருடம் நீண்டிருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் வீடுகளிலேயே படத்தை எடுத்தார். படத் தயாரிப்பிலும் பங்களித்தார். தன் சம்பளத்திலும் சமரசம் செய்ய வேண்டி இருந்தது. அவரும் மனைவி எம்மாவும் இணைந்து நடத்தும் சினிமாத் தயாரிப்பு நிறுவனமான SYNCOPY பெயரில் வந்த‌ முதல் படம் இது. நாயகன் ஜெரமியும் பணம் போட்டிருந்தார்.

இதை நியோ-ந்வார் (Neo-noir) வகைத் திரைப்படமாகச் சொல்லலாம். ந்வார் என்பது குற்றவியல் படங்களைக் குறிப்பது. நிழலுலகம் சார்ந்தது. அவற்றின் இருண்மையைச் சுட்டுவது. பொதுவாக 1940, 1950களில் வந்த படங்களை இச்சொல்லில் குறித்தனர். ஆக்கம், உள்ளடக்கத்தில் அதன் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவம் தான் நியோ-ந்வார். வினோத ஃப்ரேம்களும், வித்தியாசக் கேமெரா கோணங்களும் இத‌ன் அடையாளம். இத‌ன் லைட்டிங்கில் வெளிச்ச, நிழல் விளையாட்டுக்கள் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாய் நல்லவனுக்கும் கெட்டவனுக்குமான அழுத்தக் கோடானது அழிபட்டிருக்கும்.

இந்தப் படத்தின் நாயகனும் அப்படித்தான். லண்டனில் தனியே வசிக்கும் இளைஞன். முழு நேர எழுத்தாளன் அல்லது வேலை இல்லாதவன் அல்லது எழுத்தாளனாக முயன்று கொண்டிருப்பவன். எழுத்தாளன் என்றாலே உடன் கிறுக்குத்தனமும் வந்து சேர்ந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. அவன் தன் முதல் நாவலுக்கான கருவைக் கண்டடைய நகரில் random-ஆக ஆட்களைப் பின்தொடர்கிறான். அவர்கள் எங்கே போகிறார்கள், யாரைச் சந்திக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் எனக் கவனிக்கிறான். அதில் கிட்டும் தகவல்களைத் தன் கதையில் கச்சாப் பொருளாகப் பயன்படுத்துவது நோக்கம். இதை ஆபத்தின்றிச் செய்ய சில விதிகளை வைத்துக் கொண்டிக்கிறான். ஒருவரையே நீண்ட காலம் தொடரக் கூடாது, பெண்களை இரவில் தொடரக்கூடாது – இப்படி. ஆனால் அவனே அவற்றை உடைத்து மீறுகையில் ஆபத்து தொடங்குகிறது.

படத்தில் ஓரிடத்தில் அவன் தன் பெயரை பில் என்று சொல்கிறான். அதனால் நாமும் பில் என்றே அவனைக் குறிக்கலாம். காப் என்பவனை பில் பின்தொடரும் போதுதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. காப் தான் பின்தொடரப்படுவதை அறிந்து அவனைப்பிடித்து விடுகிறான். தன்னை ஒரு திருடன் என்றும் ஆளற்ற‌ வீடுகளில் நுழைந்து திருடுவது வழக்கம் என்றும் அறிமுகம் செய்து கொள்கிறான் காப். திருட்டில் கிடைப்பதை விட அச்செயலில் உள்ள அடுத்தவர் உலகில் நுழையும் வசீகரமே தனக்குப் பிடித்தமானது என்கிறான். பில்லையும் தன்னுடன் அதில் பங்கேற்குமாறு அழைக்கிறான். பில் அந்த அனுபவத்தின் மூலம் தனக்கு ஏதேனும் கதை கிடைக்கும் என ஒப்புக் கொள்கிறான்.

அப்படி ஒரு பெண்ணின் வீட்டினுள் நுழைந்து திருடுகிறார்கள். அங்கிருந்த அவளது புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு பில் அவளைப் பின்தொடர்கிறான். அவளோடு சினேகமாகிறான். அவளொரு செம்பட்டைச் சிகைக்காரி (The Blonde – படத்தின் இறுதி டைட்டில் கார்டில் அந்தப் பாத்திரத்தின் பெயர் அப்படித் தான் போடப்படுகிறது) – மர்லின் மன்றோ போல், ஹிட்ச்காக்கின் Psycho நாயகி போல். ஐரோப்பாவில் Beautiful Blonde என்றொரு கற்பிதம் இருக்கிறது. அதாவது இப்பெண்கள் அழகான முட்டாள்கள் என. அதையொட்டி ஏராள நகைச்சுவைகள் அங்குண்டு. பாலியல் விதிமீறல்களுக்குப் பழக்கமானோர் என்றும். படம் இப்புரிதலின் சில அம்சங்களை எடுத்தாளுகிறது.

அவள் மனதிற்கொவ்வாத‌ ஒரு வயதான வழுக்கைத் தலைக் காதலன் இருக்கிறான். பில், காப், அப்பெண், அவளது காதலன் இந்த நால்வருக்கும் நிகழும் ஆட்டம் தான் மீதிக் கதை. படம் நெடுக‌ப் பார்வையாளன் எதிர்பாராத, சுவாரஸ்யத் திருப்பங்கள்.

ஆனால் படத்தின் பிரதான வசீகரம் அதுவன்று. இது மாதிரி சுவாரஸ்யமான க்ரைம் கதைகளை எவரும் சொல்லி விட முடியும். சொல்லியும் இருக்கிறார்கள். மாறாக, இதன் தனித்துவம் திரைக்கதையின் நேரற்ற தன்மையில் இருக்கிறது. நான்-லீனியர் எழுத்து. படத்தை மிகப் புத்திசாலித்தனமாகக் கலைத்துப் போட்டிருக்கிறார் நோலன்.

இந்தப் படம் அளிக்கும் ருசியின் ஒரு பகுதி இதைப் பார்க்கையில் உண்டாகிறதெனில் இன்னுமொரு பகுதி படம் பார்த்து முடித்த பின் இந்த நேரற்ற‌ காட்சித் தொகுப்பைப் பார்வையாளன் மனதில் அசைபோட்டு வரிசைப்படுத்திப் புன்னகைப்பதில் இருக்கிறது.

உதாரணமாக அப்பெண்ணைச் சந்திக்கும் போது பில் நன்றாக முகச் சவரம் செய்து ஒரு கனவானைப் போல் உடையணிந்திருப்பான். அது தான் முதலில் காட்டப்படும். அதற்கு அடுத்து தான் அவளது வீட்டை உடைத்து நுழைந்து பில்லும் காபும் திருடும் காட்சி வரும். ஆனால் அது பில் அவளைச் முதன்முதலாகச் சந்திப்பதற்கு முன்பே நிகழ்ந்தது. அதில் பில் முகச்சவரம் செய்யாத, சாதாரணன் தோற்றத்தில் இருப்பான். படத்தின் பிற்பகுதியில் இவ்விரண்டு சம்பவத்தின் இடையே நிகழ்ந்த ஒரு விஷயம் காட்டப்படும். பில் ஏன், எப்படித் தனது தோற்றத்தை மாற்றிக் கொண்டான் என்ற காட்சி. அதாவது உண்மையில் 1, 2, 3 என்ற வரிசையில் நிகழ்ந்த சம்பவங்களை 3, 1, 2 என்று படத்தில் வரிசைப்படுத்துகிறார் நோலன். இன்னொரு உதாரணம் கண்களில் காயம் பட்ட பில் காபுக்குத் தொலைபேசி, திருடும் போது தேவைப்படும் தற்காப்பு ஆயுதங்கள் பற்றிக் கேட்கிறான். அவனுக்கு எப்படிக் காயம் பட்டது என்பது பற்றி அப்போது சொல்லப்படுவதில்லை. பிறகு காயக் கண்ணுடன் பில் கொள்ளையிடும் காட்சி. அடுத்து கொள்ளைத் திட்டத்தை பில் காபிடம் சொல்லும் காட்சி வருகிறது. அப்போது தான் காப் அவனை முகத்தில் தாக்கி வீழ்த்துகிறான். இங்கே 1, 2, 3 என்ற சம்பவ‌ வரிசை 2, 3, 1 என்ற காட்சி வரிசையாக நமக்கு மாற்றிக் காட்டப்படுகிறது.

இப்படிக் காட்சிகளை எழுதியது மிகப் பிரமாதமான சிந்தனையாக எனக்குப் படுகிறது. இது வெறுமனே random-ஆகக் காட்சிகளை முன் பின் கலைத்துப் போடும் செயலல்ல‌. சம்பவங்களை நிஜ வரிசையில் இல்லாமல் குறிப்பிட்ட‌ மாற்று வரிசையில் வைக்கும் போது, பார்வையாளனுடன் ஒரு புத்திசாலித்தன விளையாட்டைத் தொடங்குகிறது படம். அப்படி அவன் யோசனை அலைக்கழிப்படுவதைத் திட்டமிட்டே செய்கிறார்.

ஒருவழிக் கதைசொல்லலை விட, பார்வையாளனும் பங்கேற்க ஆரம்பிக்கையில் அவன் சுலபமாகப் படத்துக்குள் இழுக்கப்படுகிறான். அந்த அனுபவம் வழக்கமான திரைப்படம் பார்த்தல் என்ற சம்பிரதாய வழக்கிலிருந்து வேறு மாதிரியானது.

இன்னொரு தளத்தில் பார்த்தால் நோலன் கடவுள் அல்லது இயற்கைக்கு எதிராகப் புன்னகையுடன் நிகழ்த்தும் கலகச் செயல் இது. மாற்ற முடியாத காலத்தை மாற்றி வைத்து விளையாடுவது. அதன் வழியாகப் பிரத்யேகமான‌ உலகம் ஒன்றைச் சிருஷ்டிப்பது. அந்த உலகில் சம்பவங்கள் நேர்வரிசையில் தான் நடக்க வேண்டும் என்றில்லை. எதிர்பாராத எந்த வரிசையிலும் நடக்கலாம். இதைத் தொடர்ச்சியாகத் தன் படங்களில் செய்தார் நோலன். அதற்கான ஆரம்பப் புள்ளி தான் Following படம்.

இன்னொரு விஷயத்தையும் நோலன் இப்படத்தில் செய்கிறார். ட்விஸ்ட் எனப்படும் திருப்பங்கள் மூலம் பாத்திரங்களின் செயல்களுக்கான‌ காரணமெனப் பார்வையாளன் புரிந்து கொள்வதைத் தொடர்ச்சியாக‌ மாற்றிக் கொண்டே இருப்பது. இது எந்தவொரு த்ரில்லர் படத்துக்கும் உண்டான குணநலன் தான் என்றாலும் இப்படத்தில் நன்றாக எடுபட்டிருக்கிறது. உதாரணமாக‌ காப் பில்லை அடிக்கும் காட்சிக்கு முன்பாக பில் அப்பெண்ணைச் சந்தித்து அவளிடம் இத்திருட்டை நடத்துவதாகச் சொல்லிக் கலவி கொள்ளும் காட்சி, அதற்குப் பின் அவளும் காபும் சந்திக்கும் காட்சி. அக்காட்சிக்கு முன்பாக காப் பில்லை அடிக்கும் காரணம் ஒன்றாகப் புரியும் அல்லது சரியாய்ப் புரியாது. அதன் பிறகு அந்த வன்முறைக்குக் காரணம் வேறொன்றெனப் பிடிபடும்.

ஆட்டத்தில் யார் யாரை வெட்டுகிறார் என்பதும் மாறிக் கொண்டே இருக்கிறது.

படத்தின் வசனங்கள் (மணி)ரத்ன சுருக்கமாக இருக்கின்றன‌. மிகச் சில சொற்களில் கதாபாத்திரங்களின் மனநிலையைத் துல்லியமாக நமக்குக் கடத்தி விடுகிறது. உதாரணமாக காபுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே நிகழுமோர் உரையாடல்:

“Did you have to beat him?”

“Did you have to sleep with him?”

“You told me to.”

“Did you enjoy it?”

“Did you enjoy beating him up?”

“Of course.”

மௌன இடைவெளி.

இன்னொரு இடம் பில் முதன் முதலாக அப்பெண்ணை பாரில் சந்திக்கும் காட்சி.

“Buy you a drink?”

“Yeah. But you can’t sleep with me.”

“…”

“Still want to buy me that drink?”

“No.”

அப்பெண் புன்னகைக்கிறாள்.

படம் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில ஆரம்பக் காட்சிகள் தவிர எல்லாமே வீட்டுக்குள் எடுக்கப்பட்ட காட்சிகள். அது பொதுவாய் ஒரு மாதிரி நாடக நினைப்பைப் பார்வையாளனுக்குத் தந்து விடும். சில புத்திசாலித்தனமான கோணங்கள் மூலம் மிகக் கவனமாக அதைத் தவிர்த்து விடுகிறார் நோலன்.

படத்தின் இசையும் நன்று. Doodlebug என்ற நோலனின் முந்தைய குறும்படத்துக்கு இசையமைத்த அதே டேவிட் ஜூல்யன். குறிப்பாக படத்தின் ஆரம்பத்தில் வரும் பெண்ணின் பெட்டியைக் கையுறையணிந்த‌ போலீஸ்காரர் திறந்து, அதிலிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்துப் பார்க்கும் காட்சியின் வரும் பின்னணி இசை. ஆங்காங்கே முக்கியச் சம்பவங்களின் போது இந்த இசை வருகிறது. படத்தின் தீம் இசை என இதைக் கொள்ளலாம். மற்றபடி, இளையராஜா இசையமைத்தாரோ என எண்ணுமளவு மிகக் குறைவான பின்னணி இசையே இந்தப் படத்தில் வருகிறது.

நாயகன் ஜெரமி தியோபால்டும் Doodlebugல் நடித்தவரே. சிறப்பான, நளினமான‌ நடிப்பு. குறிப்பாகத் தன் வீட்டுக்குத் திரும்பி சவரம் செய்து கொண்டு அவள் பெட்டியிலிருந்து பொருட்களை, அவள் உள்ளாடைகளை எடுத்துப் பார்க்கும் காட்சி. இவர் இந்தப் படம் தவிர வேறு படங்கள் எதிலும் பிரதானப் பாத்திரமேற்று நடித்ததாகத் தெரியவில்லை. (நோலனே பிற்பாடு தன் Batman Begins படத்தில் ஒரு சிறுபாத்திரம் அளித்திருக்கிறார்.)

படத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் அந்தப் பெண்ணுடையது தான். காதலுக்காக ஒரு பாவத்தில் தயக்கமின்றி இறங்கும் மனோபலம் மிக்கவள். அவளது அலட்சியம் மிக்க உடற்மொழியில் அது செவ்வனே வெளிப்படுகிறது. லூசி ரஸ்ஸெல் என்ற நடிகை அந்தப் பாத்திரத்தைச் செய்திருக்கிறார் (இவரும் கூட‌ Batman Begins படத்தில் உண்டு).

இப்படத்தின் கதையில் இன்னொரு சுவாரஸ்யம் உண்டு காதலுக்காகவே பில் ஒரு குற்றத்தில் இறங்குகிறான். அப்பெண் பில்லை அக்குற்றத்தைத் தூண்டச் செய்வதும் காதலின் பொருட்டே. ஆனால் இந்த‌ இருவருமே இறுதியில் ஏமாற்றப்படுகிறார்கள். எவரெல்லாம் காதலிலிருந்து தள்ளி இருக்கிறாரோ, அல்லது காதலை வெறும் உடல் துய்ப்பாக மட்டும் கருதுகிறார்களோ அவர்கள் மட்டுமே இறுதியில் மிஞ்சுகிறார்கள்.

பிற்பாடு நிகழ்த்தப் போகும் சாதனைகளுக்கான ஓர் அறிவிப்பாக Following படத்தை நோலன் எடுத்தார் என்று சொல்லலாம். அவர் எடுத்து வைத்த‌ பலமான முதல் அடி! 22 ஆண்டுகள் முன்பு எடுக்கப்பட்ட படம் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கிறது, இதன் உள்ளடக்கம் இன்றைக்கும் பொருந்துகிறது என்பதும் கூடக் காலத்தின் கலை தான்.

(கடிகை ஓடும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. க்றிஸ்டோஃபர் நோலனின் Insomnia:நான் மகான் அல்ல‌-சி.சரவண கார்த்திகேயன்
  2. க்றிஸ்டோஃபர் நோலன்: நான் சிகப்பு மனிதன்-சி.சரவண கார்த்திகேயன்
  3. ராஜா சின்ன ரோஜா- சி. சரவண கார்த்திகேயேன்
  4. க்றிஸ்டோஃபர் நோலன்: காலத்தின் கலைஞன்-சி.சரவணகார்த்திகேயன்