அங்கே என்ன சத்தம்? – 17

இந்த விவாதம் ஒரு திரைக்கதையின் துவக்கம் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றியது. அதற்கு முன்பு ஒரு மேற்கோளைப் பார்ப்போம்.

“You have got approximately ten pages (about ten minutes) to establish three things to your reader or audience: (1) who is your main character? (2) What is the dramatic premise — that is, what’s your story about? and (3) what is the dramatic situation — the circumstances surrounding your story?”

– Syd Field (The Foundations of Screenwriting, p. 90)

சிட் பீல்டைப் பொறுத்தமட்டில் ஒரு திரைக்கதையை சரியாகத் துவங்க முதலில் நாம் அதன் முடிவை, கதையின் உள்ளார்ந்த மோதல்கள் உருவாக்கும் சிக்கலுக்கு நாம் வந்தடைகிற தீர்வை (resolution) நாம் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும். அதாவது ஒரு நல்ல திரைக்கதை துவங்குகிற இடத்தில் அதன் முடிவு ஏற்கனவே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதன் முடிவை அசரீரி போல அதன் துவக்கம் முன்னுணர்த்திட வேண்டும்.

Django Unchained (2012) டிவிண்டின் குவரெண்டினோவின் மிக முக்கியமான அதே சமயம் மிக ஆர்ப்பாட்டமான படங்களில் ஒன்று – இப்படம் கறுப்பர்களை அடிமைகளாய் வெள்ளையர் தம் பண்ணைகளில் வைத்திருந்து கொடுமைப்படுத்திய காலகட்டத்தில் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் நடக்கிறது. ஆனால் இப்படம் இனவெறி குறித்ததல்ல. இனவெறி என்பது கதையின் பின்னணியே ஒழிய கதை ஒரு கறுப்பினத் தம்பதியினரின் விடுதலை, அவர்கள் தம் சுயமரியாதையை மீட்டு வாழ்வதைப் பற்றியது. இந்த விடுதலை எப்படி ஒரு தனிமனிதனின் துணிச்சலாலும் பல தன்னிச்சையான நிகழ்வுகளாலும் சாத்தியமாகிறது எனவும் இப்படம் சொல்கிறது. அங்கு விடுதலை (ரத்தவெறிக்) கொண்டாட்டத்தில் பார்வையாளர்களையும் பங்கேற்க அழைக்கிறது. வரலாற்றின் பார்வையாளர்களாக இருப்பதும் அது கற்பனாபூர்வமாய் பங்கேற்பதும் ஒன்றே என்பது இப்படத்தின் உபபிரதி (subtext).

“ஜாங்கோ அன்செயிண்டின்” துவக்கக் காட்சி அபாரமானது – சிட்பீல்ட் துவக்கத்தில் குறிப்பிட்டது போல முதல் காட்சியிலே நமக்கு பிரதான இரு பாத்திரங்களான கறுப்பின அடிமை ஜாங்கோ மற்றும் சன்மானத்துக்காக குற்றவாளிகளைக் கொன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் bounty hunterஆன ஜெர்மானியர் ஸ்குல்ட்ஸ் ஆகியோரை தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.

படம் 1859இல் ஒரு அடர் வனப்பகுதியில் நள்ளிரவு வேளையில் நடக்கிறது. கறுப்பின அடிமைகளை கடத்தி வந்து விற்கிற வியாபாரிகளை ஒரு குதிரை வண்டியில் செல்கிறார்கள். அவர்களை மற்றொரு குதிரை வண்டியில் வரும் ஸ்குல்ட்ஸ் எதிர்கொள்கிறார். அவர்களிடம் ஜாங்கோவைக் குறிப்பிட்டு அப்படி ஒரு அடிமை அவர்களிடம் உண்டா எனக் கேட்கிறார். ஸ்குல்ட்ஸுக்கு அவர்களிடம் இருந்து ஜாங்கோவை வாங்க வேண்டும். ஆனால் இந்த வியாபார பரிவர்த்தனை சுமூகமாய் நடப்பதில்லை – ஸ்குல்ட்ஸுக்கு கறுப்பர்களை அடிமைகளாக கடத்தி வந்து விற்று / வாங்கி சுரண்டுவதில் உடன்பாடில்லை. இந்த அடிமைப் பண்பாடே அவலமானது, அநீதியானது என அவர் நம்புகிறார். அவரது இந்த எதிர்ப்பு இந்த வியாபாரிகளிடம் அவர் காட்டும் அலட்சியம் மற்றும் ஆணவத்தில் வெளிப்படுகிறது. சீண்டப்படும் அவர்கள் அவரிடம் முரட்டுத்தனமாய் நடந்து கொள்ள, ஸ்குல்ட்ஸ் சற்றும் யோசிக்காமல அவர்களை சுட்டு வீழ்த்துகிறார். பிறகு எல்லா அடிமைகளையும் விடுவித்து அவர்கள் இடையே ஜாங்கோவைக் கண்டடைந்து அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.

அவருக்கு அவனால் ஒரு தேவை உள்ளது – பிரிட்டில் சகோதரர்கள் எனப்படும் குற்றவாளிகள் இருவர் ஜாங்கோ முன்பு பணி செய்த பண்ணையொன்றில் பதுங்கி இருக்கிறார்கள். அவர்களைக் கொல்வதற்கான பிடியாணை (warrant) ஸ்குல்ட்ஸிடம் உள்ளது. அவர்களை ஜாங்கோவால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும். அவர்களைக் கொல்வதற்கு ஜாங்கோ உதவ, சன்மானத்தை அவனுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். இதை அடுத்து ஸ்குல்ட்ஸின் இந்த குற்றவாளிகளை வேட்டையாடும் பணியில் ஜாங்கோவும் கூட்டாளியாக இணைகிறான். ஜாங்கோவுக்கு ஒரு பின்னணிக் கதை உண்டு – அவனது மனைவி ப்ரூம்ஹில்டா அவனிடம் இருந்து பிரிக்கப்பட்டு அடிமையாக வாழ்கிறாள். அவளைக் காப்பாற்றி அவளுடன் இணைய வேண்டும் என்பது அவனது லட்சியம். அதற்கு உதவ ஸ்குல்ட்ஸ் முன்வருகிறார்.  படத்தின் கிளைமேக்ஸ் ஜாங்கோ எப்படி தன் அடிமைத்தளையை உடைத்து தன்மானம் மிக்கவனாக வெளிவருகிறான், தன் மனைவியுடன் இணைகிறான் என சித்தரிக்கிறது. அடிமைத்தளை என்பது வெறுமனே இனவெறியாளர்களிடம் இருந்து தப்பிப்பது மட்டுமல்ல அவர்கள் முன்பு தலைகுனியாமல் நிற்கிற ஆன்ம உறுதிப்பாட்டை அவன் பெறுவதுமாகும் என, ஸ்குல்ட்ஸின் உதவியுடன், அவன் புரிந்து கொள்கிறான்.

சரி மொத்த கதையையும் அறிந்து கொண்ட நிலையில் இப்போது துவக்க காட்சிக்கு மீள்வோம்.

 ஸ்குல்ட்ஸ் மற்றும் ஜாங்கோ பற்றி நாம் இக்காட்சியில் என்ன அறிந்து கொள்கிறோம்? ஜாங்கோ சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாலும் அவன் உள்ளூரத் துணிச்சலானவன். அவனது நெஞ்செல்லாம் அவனது மனைவி மீதான காதலே நிறைந்திருக்கிறது. அவளை மீட்க அவன் எந்த ஆபத்தையும் சந்திக்கத் தயார். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஸ்குல்ட்ஸின் இனவெறி எதிர்ப்பு, நீதியுணர்வு, துணிச்சல், புத்திசாலித்தனம், துப்பாக்கி சுடும் வேகம், ஒரு விசயத்தை திட்டமிட்டு துரிதமாய், உணர்ச்சிவயப்படாமல் (அவர் ஒரு பல் மருத்துவர் என்பதால் பல்லைப் பிடுங்குவதைப் போல) ஒரு செயலை ஆற்றும் பாங்கு, அவரது நமுட்டு நகைச்சுவை உணர்வு, ஜெர்மானியர் என்பதால் ஆங்கிலத்தை சுற்றி வளைத்து ஒரு வித்தியாசமான உச்சரிப்புடன், அலங்கார ஜோடனைகளுடன் பேசுகிற பாங்கு என நிறைய விசயங்களை முதல் காட்டியே நமக்கு உணர்த்தி விடுகிறது. ஸ்குல்ட்ஸிடம் இருந்து இந்த பண்புகளில் சிலவற்றை ஜாங்கோ கற்று அவற்றைக்கொண்டு தன் மனைவியை மீண்டு பழிவாங்கப் போகிறான் என்பதால் அவருக்கு இந்த முதல் காட்சியில் அளிக்கப்படும் காட்சி நேரம் மிக முக்கியம். அவர் அவனுக்கு ஒருவித ஞானகுருவாக இருக்கப் போகிறார்.

இந்த படத்தின் முதற்கோள் (premise) என்ன? தீமைக்கு, அநீதிக்கு எதிராகப் போராடுவது. அதற்கு சூழ்ச்சி, வன்முறை என தீமையின் வழியையே எடுத்து பயன்படுத்துவது. வேறு பெரிய முரண்கள் ஒன்றும் இல்லாத எளிமையான கதை இது. தனக்கு இழைக்கப்படும் அநீதிக்கு ஜாங்கோ, ஸ்குல்ட்ஸின் உதவியுடன், பழிவாங்கப் போகிறான். புத்திசாலித்தனமான வேகமாய் துணிந்து செயல்பட்டு. இதை நாம் படத்தின் துவக்கக் காட்சியிலேயே கண்டுகொள்கிறோம். மிச்ச படத்தின் திருப்பங்களுக்கு தயார் செய்யப்படுகிறோம். முதல் காட்சியில் தூலமான கை-கால் சங்கிலிகளைத் திறந்து சுதந்திரமாகும் ஜாங்கோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இனவெறிப் பண்பாட்டு முதலீட்டிய சூழலில் சுதந்திரமாக சட்டத்தின் பாதுகாப்பு பெற்ற freeman ஆக வேண்டும். அதற்கு ஸ்குல்ட்ஸ் உதவுகிறார். ஆனால் கறுப்பர்கள் பிறந்ததே தமக்கு அடிமையாகத் தான் என நம்பும் இனவெறி மிக்க வெள்ளையர்கள் இடையே ஜாங்கோ தலைநிமிர்ந்து வாழ அந்த சட்டப் பாதுகாப்பு மட்டும் போதாது. அவர்களைத் திரும்ப அடிக்க அவன் முன்வர வேண்டும். அவனது விடுதலையானது தூலமான நிலையில் இருந்து அரூபமான பண்பாட்டு நிலையில் நிகழ்வதையே இப்படத்தின் சிக்கல் தீர்வு (resolution) எனக் கூறலாம். இது சரியாக இறுதிக்காட்சியில் நிகழ்கிறது – இதற்கான ஒரு உருவகம் போல ஜாங்கோ முதற்காட்சியில் தன் கை-கால் சங்கிலியை விடுத்து (அடிமைத்தளை எனும் உருவகம்) நிமிர்ந்து நடந்து ஸ்குட்ஸுடன் கிளம்புகிறான். இந்த காட்சியின் அடுத்தடுத்த நிலையிலான வளர்ச்சியை நாம் தொடர்ந்து கண்டு உச்சத்தை இறுதிக்காட்சியில் காண்கிறோம்.

இறுதியாக, சிட் பீல்ட் குறிப்பிடுகிற சந்தர்ப்ப சூழலையும் (பத்தொன்பதாம் நூற்றாண்டு, அடிமை வியாபாரம், இனவெறி, ஒடுக்குமுறை) முதற்காட்சி நமக்கு செவ்வனே அறிமுகப்படுத்தி விடுகிறது.

இதனால் தான் “ஜாங்கோ அன்செயிண்ட்” படத்தின் துவக்கக் காட்சி அப்படி ஒரு கிளாசிக்காக இருக்கிறது.

சரி, இனி சில தமிழ்ப் படங்களின் ஆரம்ப காட்சிகளுக்கு, முதல் பத்து நிமிடங்களுக்கு வருவோம்.

பாட்ஷா” (1995):

“பாட்ஷாவின்” நாடகீய முடிச்சு, அதன் முதற்கோள், என்ன? பாட்ஷா யார் என்பதை மட்டுமே அப்படம் திரும்பத் திரும்பக் கேட்கிறது. அந்த மர்மம் தான் கதையின் மையம். படத்தின் கிரெடிட்ஸ் ஓடும் போது பாட்ஷாவின் அதிரடியான ஒரு பக்கம் நமக்குத் தெரிகிறது. மும்பையில் பாட்ஷா எப்படி இருந்தான் என்பதை நெகட்டிவ்வில் மிகச்சுருக்கமாய் நமக்குக் காட்டுகிறார்கள். நமது ஆர்வம் இதனால் தூண்டப்படுகிறது. பிளேக் ஸ்நைடரின் Save the Cat எனும் திரைக்கதை உத்தி பிரசித்தமானது – திரைக்கதையில் போகிற போக்கில் நாயகனை ஒரு சிறிய நன்மையை செய்ய வைத்து அவன் மீது அக்கறையை, நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்துவது. உடனே பார்வையாளர்கள் அவனது பெரும்பாலான குறைகளை மறந்து அவனை ஆதரிக்கத் தொடங்குவார்கள் (படம் முழுக்க ரஜினி பல இடங்களில் இதை செய்வார்; அவர் ஒரு கொலைகார டான் என்பதையே நாம் மறந்துவிடுமளவுக்கு). இந்த ஸ்டைலில் பாட்ஷாவின் துவக்கம் அமைகிறது –  பணமின்றி நின்று போகும் தறுவாயில் உள்ள ஒரு திருமணத்தை அவர் பெயரில் ஆட்டோக்காரர்கள் வந்து பணம் தந்து நடத்துகிறார்கள்; ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் இருப்பவருக்கு காசு கொடுக்கிறார்கள். நமக்கு உடனே யார் இந்த பாட்ஷா, இவர் பயங்கரமான தாதாவா, இல்லை பரோபகாரியா, இவருக்கும் ஆட்டோக்காரர்களுக்கும் என்ன சம்மந்தம் என அக்கறையும், ஆர்வமும் மிகுதியாகிறது. அடுத்து வழக்கமான நாயக அறிமுகப் பாடல். அதை அடுத்து ரஜினி ஒரு அப்பாவியான ஆட்டோக்காரராக, அன்பான அண்ணனாக, மகனாக அறிமுகமாகிறார். ரொம்ப அமைதி விரும்பியாக இருக்கிறார். இப்படி நமது ஆர்வம் மேலும் மேலும் தூண்டப்படும்படி முதல் அரைமணிநேரம் என்பது படத்தின் முதல் பத்து நிமிடங்களின் நீட்சியாக செல்கிறது. ஆனால் இந்த மர்மம் மட்டுமல்ல “பாஷாவின்” மையம் – அதைக் கடந்து ஒரு உளவியல் முரண் உள்ளது: தன் அப்பாவுக்கு அளித்த வாக்குறுதிக்காக ரஜினி மும்பையில் தான் இறந்துவிட்டதாக செட் அப் செய்து விட்டு சென்னைக்கு வந்து அமைதியான ஆட்டோக்காரர் மாணிக்கமாக நடிக்கிறார். இடையே ஒரு லோக்கல் ரௌடி அவரது தங்கை மீது கைவைக்க அவரால் அதற்கு மேல் தன் உண்மை சொரூபத்தை மறைக்க முடியாமல் போகிறது. மாணிக்கம் தற்காலிகமாக ஒரு காட்சியில் பாட்ஷாவாகிறார். இடைவேளைக்குப் பிறகு அவர் யார் என்பதுடன், அவர் இனிமேல் எப்படி சமாளிக்கப் போகிறார் எனும் கேள்வியும் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. இறுதியில் வில்லன் ஆண்டனி (ரகுவரன்) பாட்ஷாவைத் தேடி சென்னைக்கு வந்து விட இந்த முரண் (பாஷாவா மாணிக்கமா?) உச்சமடைகிறது. ஒரு கட்டத்தில் அநீதியை பார்த்து மௌனமாய் நிற்பதில் அர்த்தமில்லை எனப் புரிந்து கொள்ளும் மாணிக்கம் தன் வாக்குறுதியை மறந்து பாட்ஷாவாக களமிறங்கி வில்லனை அழித்தொழிக்கிறார். இந்த நாடகீயமான முரண் இருக்கிறதல்லவா இது தான் பெரும்பகுதிப் படத்தை முறுக்கேற வைக்கிறது. மாணிக் பாட்ஷா எனும் பாத்திரத்திடத்து ஆர்வம், ஆச்சரியம், எதிர்பார்ப்பு, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றை பார்வையாளனை கொள்ளச் செய்கிறது. இந்த முரணை நாம் துவக்க பத்து நிமிடங்களில் காண்பதில்லை. படத்தின் கிளைமேக்ஸில் பாட்ஷா பாத்திரம் எப்படியாக மாறுகிறாரோ அதற்கான விதையை நாம் துவக்கக் காட்சிகளில் காண்பதில்லை. அதனாலே “பாட்ஷாவின்” துவக்கம் ஆர்வமூட்டும் நச்சென்று ஒன்றே ஒழிய தொழில்நுட்பரீதியாக ஒரு சிறந்த துவக்கமல்ல என்பேன்.

“மகாநதி”:

“மகாநதியின்” துவக்கக் காட்சியானது கமல் எழுதிய பிற திரைக்கதைகளைப் போன்றே கச்சிதமானது. எப்படி “தேவர் மகனில்” துவக்கக் காட்சியில் வரும் ரயில் ஒரு உருவகமோ அப்படியே “மகாநதியின்” துவக்கத்தில் காட்டப்படும் சிறையும். அங்கு புதிதாக வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் சிறைக்கைதிகளுக்கு முடிவெட்டி விடுகிறார்கள். அந்த வரிசையில் இருக்கும் கிருஷ்ணாவின் (கமல்) முடியும் கத்தரிக்கப்படுகிறது. ஏன் இவன் சிறையில் இருக்கிறான் எனும் கேள்வி நமக்குள் எழுகிறது. சிறையில் இரவு தூங்கச் செல்லும் கமல் இக்கேள்வியை தனக்குள் கேட்க அவரது பிளேஷ்பேக்கில் கதை விரிகிறது. கிராமத்தில் செழிப்பாக நிம்மதியாக வாழ்ந்த அவன் ஏமாற்றப்பட்டு சிறைசெல்ல நேர்ந்த, தன் குழந்தைகளைப் பறிகொடுக்க நேர்ந்த அவலத்தை அவரது சிறை நினைவுகளாக பகுதிப்பகுதியாக காட்டுகிறார்கள். இது ஒரு தெளிவான எளிமையான ஆர்வமூட்டும் துவக்கம். எந்த பாசாங்கும் படோடோபமும் இன்றி கதை ஆரம்பித்து விடுகிறது.

 படத்துவக்கத்தில் சிறையின் வெளிமதிலைக் காட்டி, மேலே இருந்து சிறையின் லே அவுட்டை காண்பித்து பின்னர் மெல்ல அதனுள் படக்கருவி நுழைவதைப் பார்க்கிறோம். இது முக்கியம். படம் முழுக்க கம்பிகள், கதவுகள் நாயகன் கிருஷ்ணா தொடர்ந்து தன் சூழ்நிலைக்குள், அவலங்களுக்குள், குழப்பங்களுக்குள் சிறைப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு உருவகமாக வருகின்றன. வெளியே வந்த பிறகு அவன் வில்லன்களால் துரத்தப்பட்டு பொய்ப்பழி சுமத்தப்பட்டு சிறையில் மீண்டும் தள்ளப்படலாம் எனும் நிலை வந்திட, அவன் இனித் தயங்கி அர்த்தமில்லை, தீமையை நசுக்கி அழிப்பதே நெறி என உணரும் தருணம் படத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை. அவன் திருப்பி அடிக்க ஆரம்பிக்கிறான். அதுவரை அவனை வேட்டையாடியவர்கள் இப்போது அவனைக்கண்டு ஓடுகிறார்கள். தன் மகன், மகளை மீட்ட நிலையில அவன், படத்தின் கிளைமேக்ஸில், இந்த சமூகவிரோதிகளை அழிக்கிறான். அவன் ஒன்றை (அமைதி) இழந்து மற்றொன்றை (நிம்மதி) அடைகிறான் என்பதைக் காட்ட அவன் (உருவகமாக) தன் ஒரு கையை வெட்டி விடும் காட்சி வருகிறது. அவன் மீண்டும் சிறை செல்கிறான். இறுதிக்காட்சியில் அவன் சிறையில் இருந்து ஒற்றைக்கையுடன் முதிர்ச்சியான ஆளாக வெளிவந்து தன் குடும்பத்துடன் இணைகிறான். துவக்கத்தில் சிறைக்குள் நம்மை அழைத்து செல்லும் படக்கருவி நம்மை நாயகன் கிருஷ்ணாவாகவே உணரச் செய்கிறது. அவனுடன் நாமும் சிறை செல்கிறோம். இறுதியில் அவனுடன் நாமும் முதிர்ந்து நிதானமாக சிறையில் இருந்து வெளிவருகிறோம். சிறைக்கு வெளியில் இருந்து உள்ளே சென்று ஆரம்பித்த படம் வெளியே வந்து முடிவது காட்சிபூர்வமாய் எவ்வளவு பொருத்தமாக அழகாக இருக்கிறது பாருங்கள்!

சிறை எனும் உருவகம் வழியாக கமல் நமக்கு நாயகனின் மையப்பிரச்சனையை (“ஜாங்கோ அன்செயிண்டில்” போன்றே) உணர்த்தி நம்மை மீதிப்படத்துக்காக தயாரிக்கிறார். தமிழில் திரைக்கதையை பொறுத்தமட்டில் கமல் ஒரு மேதை என்பதற்கு இப்படம் ஒரு சான்று.

“யுத்தம் செய்”:

“யுத்தம் செய்யின்” துவக்கக் காட்சி வெகு நுட்பமானது. செறிவானது. படத்தின் நோக்கம், நாடகீயச் சிக்கல், கதைக்கரு எல்லாவற்றையும் இக்காட்சி உணர்த்தி விடுகிறது: முன்பு நடந்தது என்பதை உணர்த்த கறுப்புவெள்ளையில் இக்காட்சி ஓடுகிறது. மிஷ்கினின் பிரிய இயக்குநர் குரசாவோவின் படங்களில் தனிமனிதனைக் கடந்த ஒரு சக்தியை, அவனைக் கண்காணிக்கிற இயற்கையை, பிரபஞ்சத்தை, அவனது துயரத்தை என பலவிசங்களை உணர்த்த புயல் மழை பின்னணியாக சித்தரிக்கப்படும். “யுத்தம் செய்யிலும்”அவ்வாறே ஒரு மழை பெய்கிறது. இங்கும் அது பூமி மீது சொரியும் பிரபஞ்சத்தின் கண்ணீர்த் துணிகளாக இருக்கிறது. மழை மேலிருந்து ஒரு ஆட்டோ மீது பொழிகிறது. ஆட்டோ ரிப்பேராகி நிற்க ஓட்டுநர் அதை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறான். இதை மேலே இருந்து ஒரு பெண் ஜன்னல் வழிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மழை தொடர்ந்து பெய்கிறது. அப்போது அவ்வழியே ஒரு இளம்பெண் வருகிறாள். அவள் ஆட்டோவைக் கடக்கும்போது அதனுள் ஒரு பெண் மயக்கநிலையில் அமர வைக்கப்பட்டிருப்பதை கவனிக்கிறாள். அதைப் பற்றி உள்ளே இருக்கிறவனிடம் விசாரிக்கிறாள். அவன் சொல்லும் சல்ஜாப்பு அவளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அவள் அவநம்பிக்கையுடன் கடந்து செல்கையில் ஆபத்தை உணரும் அந்த ஆள் அவளைத் தாக்கும் பொருட்டு ஒரு கம்பியை எடுத்துக் கொண்டு பின்னால் ஓடுகிறான்.

இந்த காட்சி, ஒன்று, ஒரு குற்றத்தை எதேச்சையாகக் காண நேரும் ஒரு இளம்பெண் அதனால் தாக்குதலுக்கு உள்ளாவதைக் காட்டுகிறது. அவளுக்கு என்னாகிறது என நமக்கு அதற்கு மேல் சொல்லப்படுவதில்லை. அவளது அண்ணன் ஒரு காவல்துறை அதிகாரி. அவன் பெயர் ஜெ.கெ (ஜெ.கிருஷ்ணமூர்த்தியை நினைவுபடுத்தும்படியாய் இப்பெயர் அவனுக்குத் தரப்பட்டுள்ளது) அவன் பல மாதங்களாக தன் தங்கையைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கு மூடப்படுகிறது. ஆனால் அவன் தன் தங்கையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. வேலையைத் துறந்தேனும் விசாரணையைத் தொடர அவன் முடிவெடுக்கிறான். இப்போது ஒரு திருப்புமுனையாக நகரத்தில் தொடர்குற்றங்கள் நடக்கின்றன – சில குற்றவாளிகளின் தலை வெட்டப்பட்டு பொதுவெளியில் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பரபரப்பான இவ்வழக்கு ஜெ.கெவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவன் இப்பொறுப்பை ஏற்க முதலில் மறுக்க அவனது தங்கையின் வழக்கை தொடர்ந்து விசாரிக்க அனுமதி பெற்றுத்தரப்படும் என வாக்குறுதி அளித்து அவனை ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள். இப்படி ஒரு குற்றம், அதன் விளைவான மற்றொரு குற்றம், அதனுடன் நேரடியாகத் தொடர்பில்லாத ஆனால் நிறுத்தப்பட்ட அதன் விசாரணையை எதேச்சையாய் மீண்டும் துவக்கப் போகிற வேறு சில குற்றங்கள் என தொடர்ந்து மூன்று காட்சிகள் படத்தை விறுவிறுவென துவக்கி வைக்கின்றன.

இப்படி பிரதான பாத்திரங்கள், கதையின் பிரதானமான உள்மோதல் ஆகியவற்றை அறிமுகம் செய்வதுடன் இந்த அபாரமான துவக்கம் நிற்பதில்லை – படத்தின் கருவையும் இது காட்சிப்படுத்துகிறது. அது என்ன?

ஜெ.கிருஷ்ணமூர்த்தி தனது விவாதம் ஒன்றில் “பார்க்கிறவர் பார்க்கப்படுகிறார்” எனும் ஒரு அவதானிப்பை வைக்கிறார். கிருஷ்ணமூர்த்தி மனதளவில் நாம் சதா நமது எண்ணங்களாலே, சுயபிரக்ஞையாலே கண்காணிக்கப்படுகிறோம் என்கிறார். அதாவது இதைப்படிக்கும் போது உங்களுக்குள் இதை வாசிக்கிற குரல் ஒலிக்கிறது. உங்களுடைய சுயமான குரல் மறைகிறது (வாசிப்பின் சுகம் கிடைக்கிறது). ஆனால் படித்து முடித்ததும் உங்களுடைய மனக்குரல் மீண்டும் ஒலிக்கத் தொடங்குகிறது (வாசிப்பின் சுகம் மறைகிறது). பிறகு அக்குரல் மௌனமானதும் குறுக்குமறுக்காய் பாயும் எண்ணங்கள் மற்றும் நான் எனும் தன்னுணர்வு (பிரக்ஞை) உங்களைக் கண்காணிக்கின்றன. நீங்கள் யோசிப்பதைப் பற்றி நீங்களே யோசிக்கிறீர்கள். நீங்கள் ஒன்றை மோகிக்கும் போது மோகிக்கும் உங்களை நீங்கள் மோகிக்கிறீர்கள். ஒன்றை வெறுக்கும் போது அப்படி வெறுக்கிற உங்களை நீங்களே வெறுக்கிறீர்கள். ஐஸ்கிரீம் சாப்பிடும் போது எவ்வளவு அற்புதமாக ஐஸ்கிரீம் சாப்பிட வாய்க்கிறது என ஒரு குரல் உங்களையே ரசிக்கிறது (“வாவ்” என சொல்வது இக்குரல் தான்). ஆனால் மோகிக்கும் போது, வெறுக்கும் போது, ஐஸ்கிரீமை சுவைக்கும் போது ஒரே மாதிரியான ஒரு ஈகோ கிளர்ச்சி உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் எப்போது கண்ணாடி முன் நிற்கிற ஒரு மனிதனைப் போல உங்கள் மனத்தின், பிரக்ஞையின் முன் நிற்கிறீர்கள் என ஜெ. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் – இது தான் “பார்க்கிறவர் பார்க்கப்படுகிறார்” எனும் அவரது பிரசித்தமான மேற்கோளின் விளக்கம். மிஷ்கின் இதை சினிமாவின் கதைமொழிக்கு, குற்றங்கள் நிகழும் சமூகத்தளத்துக்கு சாமர்த்தியமாக நகர்த்துகிறார் – இங்கு பரஸ்பரம் நாம் “பார்த்துக்கொண்டிருக்கும்” போது நாம் பரஸ்பரம் ஒருவர் செயலுக்கு மற்றவர் பொறுப்பாக இருக்கிறோம் என்கிறார், இதை நாம் உணரும் போதே சமூக மாற்றம் வரும் என்கிறார். படத்தில் இது எப்படி சித்தரிக்கப்படுகிறது எனப் பார்ப்போம்.

 இந்த படத்தின் ஒவ்வொரு சட்டகத்திலும் ஒருவரை அவரறியாமல் மற்றொருவர் கண்காணித்தபடி இருப்பார்; இவர்களையெல்லாம் மேலே காலம் கண்காணித்தபடி இருக்கும். இப்படத்தின் குற்றமே கூட பெண்களை ஒளிந்து பார்த்து சுகம் அனுபவிக்க முயல்வதே. இந்தக் கருவை முதல் காட்சியில் அந்த ஆட்டோவுக்குள் கடத்தப்பட்டிருக்கும் பெண்ணை கவனிக்கிற மற்றொரு பெண், அவளை அவள் எதிர்பாராதபோது பின்வந்து தாக்கும் மற்றொருவன், அவர்களை மேலிருந்து கண்காணிக்கும் ஒரு பெண், அவர்களையெல்லாம் கண்காணிக்கும் பிரபஞ்சம் (மழை) என ஒரு சில நிமிடங்களில் மிஷ்கின் நிலைநாட்டி விடுகிறார். இரண்டாவது மூன்றாவது காட்சிகளில் ரேஸிங் நடக்கும் இடத்தில், மக்கள் நடைபழகும் பூங்காவில் குற்றவாளிகளின் தலையை வெட்டி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இது படத்தின் அடுத்த பிரதான பாத்திரங்களாக சீரியல் கில்லர்களின் அறிமுகம் மட்டுமல்ல அவர்கள் இந்த சுரணைகெட்ட சமூகத்தை கண்காணிக்கிறார்கள் என்பதற்கான அறிகுறியும் தான்.

தமிழ் சினிமா வரலாற்றில் எழுதப்பட்ட மிகச்சிறந்த துவக்கக் காட்சிகளில் ஒன்று என “யுத்தம் செய்” படத்தை சொல்வேன். ஏனென்றால் அது இக்கதையின் கருதுகோளை, கதை துவங்கும் நொடியை, கதை சொல்லப்படப் போகிற பாணியை, கதையின் கருவை, அதன் சமூக விமர்சனத்தை, இச்சமூகப் பிரச்சனைக்கு மிஷ்கின் சொல்லுகிற நுட்பமான தீர்வை என எத்தனை எத்தனையோ விசயங்களை பத்து நிமிடங்களுக்குள் உணர்த்தி விடுகிறது. அதுவும் காட்சி வடிவில்.

கச்சிதமாக அதே சமயம் செறிவாக, காட்சிபூர்வமாக ஒரு திரைக்கதையை அமைப்பதில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் என்பேன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
  2. ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
  3. கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ் 
  4. முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
  5. காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
  6. சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
  7. பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
  8. ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
  9. தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
  10. ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
  11. பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
  12. அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
  13. காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
  14. எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
  15. ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
  16. நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
  17. சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்
  18. யோகி ஆதித்யநாத் எனும் தெலுங்குப் பட வில்லன் - ஆர்.அபிலாஷ்