இருண்ட காலத்தின் குறிப்புகள்
திரு.ப.சிதம்பரம் முன்வைத்துள்ள ஊரடங்குகால பொருளாதார நிவாரண யோசனைகளைப்பற்றி மெல்ல ஊடகங்களும் பொதுச்சமூகமும் பேச ஆரம்பித்திருக்கின்றன.
ஒரு காட்டுத்தீ புட்டத்தை தீண்டியதும் வரும் கவனம் இது.. பணமதிப்பு நீக்கம் நடந்ததிலிருந்து பொருளியல் தொடர்பாக எல்லோருக்கும் புரியவைக்கும் தொணியில் அவர் தொடர்ச்சியாக பேசிவந்திருக்கிறார்.. தர்க்க நியாயங்களுடன் இந்த அரசின் பொருளாதார முடிவுகள் நெருக்கடிக்குள்ளாக்கும் என தொடர்ந்து எச்சரித்தும் வந்திருக்கிறார். ஆனால் அப்பேதெல்லாம் ஏதோ பேசறார் என்கிற தொனியில் கடந்து செல்லப்பட்டது..
தொடர்ச்சியாக அவர்மீது ஆளுமைத்தாக்குதலை நிகழ்த்தினார்கள்.. அவரின் நிர்வாக மேதமையை எள்ளிநகையாடினார்கள்.. இதில் பொதுச்சமூகத்திற்கும் பெரும்பங்குண்டு.. ஒருபோதும் பொருளியல் மேலாண்மை பற்றிய ஆர்வமோ அக்கறையோ கொண்டவர்களல்ல நாம்.. போகிற போக்கில் உருட்டுபவர்களை சபாஷ் போட்டு அவர்களை கொண்டாடிய அற்பத்தனங்களும் உண்டு.
பணமதிப்புநீக்கம் போன்ற செயற்கையான பேரழிவு முடிவுகளை அந்தக்கணத்தில் சொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான வாய்வித்தைகளை கண்டு மயங்கி கடந்த நம்மால் இந்த ஊரடங்குகாலத்துயரை எளிதாகக் கடக்க முடியாது என்கிற உண்மை துணுக்குற வைக்கிறது.
நாளை உலகப்பொருளாதாரம் எந்த திசைவழி செல்லும் என்பதைகணிப்பது மிக சவாலானது.. இரண்டுமாதங்கள் முன் கொரோனாவுடன் போராடிக்கொண்டிருந்த சீனாவுடன் அந்த நெருக்கடியை வைத்தே தனக்கு சாதகமான வணிக ஒப்பந்தத்தை போட்டது அமெரிக்கா. இன்று அதன் தலைநகரமான நியூயார்க் ஒரு கொடூரமான கொரோனா மையமாக உருப்பெற்றுள்ளது. இது சீனாவின் காலம். மொத்த ஐரோப்பாவின் உற்பத்தித்துறைகளும் முற்றாகமுடங்கியிருக்கும் சூழலில் சீனாவின் இழுப்பிற்கு போயாக வேண்டிய சூழலில் பெரும்பாலான ஐரோப்பியநாடுகள் உள்ளன. ஒரு சிறிய நாடான செர்பியாவிற்கு அனுப்பப்பட்ட சீனாவின் மருந்து மற்றும் உயிர்காக்கும் கருவிகளுக்காக விமானநிலையத்தில் அதன் அதிகார வர்க்கம் முழுமையும் காத்திருந்து பெரும் பவ்யத்துடன் வரவேற்கிறது. இது ஐரோப்பிய யூனியனின் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கிறது..
இன்று சீனா எடுத்திருக்கும் பிரம்மாண்ட வடிவம் சாதாரணமானதல்ல.. அது உலகின் பெரியண்ணனுக்கான இடத்திற்கு நகர்ந்து வருவது வெளிப்படை.அதன் பகாசுர உற்பத்திக்கூடங்கள் இனி உலகம் முழுமைக்குமான தேவைகளை உற்பத்தி செய்து முடங்கியிருக்கும் உள்ளூர் சந்தைகளை அப்படியே விழுங்கிவிடும் அபாயம் இருக்கிறது.
ஏற்கனவே அது இலங்கை, மாலத்தீவு, நேபாளம், மியான்மார், பாகிஸ்தான் என தெற்காசியாவின் மீது தனது பிடியை இறுக்கமாக்கியிருக்கிறது..
ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கத் துருப்புகள் முற்றிலும் விலக்கிக்கொள்ளப்பட்டபின் அங்கும் சீனாவின் கால் வலுவாகவே பதியும்..
எந்த மேற்குலகநாடுகளும் இன்று சீனாவை பகைக்க இயலாது என்பதே நிதர்சனம். அவற்றிற்கு அதற்கு நேரமோ சக்தியோ இப்போது இல்லை.
இதில் இன்றைய இந்தியாவின் நிலைகுலைந்த குடிமைச்சமூகம் இனிவரும் நெருக்கடிகளை தொலைநோக்கும் கூர்உணர்வுமற்ற ஆட்சியாளர்களை நம்பி எப்படி எதிர்கொள்ளும்?
வரலாறு காணாத அளவில் நாடே மொத்தமாக முடங்கிப்போய் நிற்கையில் புதிதாக பாராளுமன்றம் கட்டவும் ராஜபாட்டையை அழகுபடுத்தவும் 20,000 கோடியை செலவிடும் மத்திய அரசு தொற்றுநோய்த்தடுப்பிற்காக ஒதுக்கியுள்ள தொகை வெறும் 15,000 கோடி ரூபாய்.
இந்த தேசம் அரசியல்உணர்வை இழந்து மொன்னையானதற்கு கொடுக்கும் விலை எண்ணிப்பார்க்க இயலாததாகவே இருக்கிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
- அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
- நிலை மாறும் உலகம் - இரா.முருகானந்தம்
- ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
- காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
- சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்
- சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்