1.அங்கே என்ன சத்தம்
அண்மை காலங்களில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் மற்றும் இஸ்லாமியர்மீது கடுஞ்சொற்களை ஏவுவதை, வன்முறை கொப்புளிக்கும் திராவகப் பேச்சுகளை வீசுவதைப் பார்க்கிறோம். சி.எ.ஏவுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களும் பெருமளவில் சுடப்பட்டதும் மோசமாய் தாக்கப்பட்டதும் கூட அவர் ஆளும் மாநிலத்தில் தான். தேர்தல் பிரச்சாரத்தில் 48 வினாடிகள் அவர் பேசினால் அதில் 9 தடவை பாகிஸ்தான் எனும் சொல்லைக் குறிப்பிடுகிறார் என்கிறார்கள். 2005இல் அவர் 1800 கிறித்துவர்களை இந்து மதத்துக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014இல் அஸாம்கர்ஹில் பேசும் போது “அவர்கள் ஒரு இந்துப் பெண்ணை கவர்ந்தால் நாம் 100 இஸ்லாமியப் பெண்களைக் கவர்வோம். அவர்கள் ஒரு இந்துவைக் கொன்றால் நாம் நூறு இஸ்லாமியரைக் கொல்வோம்‘ என்றார். உடனே கேட்டு நின்ற கூட்டம் “கொல்லுவோம் கொல்லுவோம்” என உரக்கக் கத்தியது. 2014இல் அவர் பேசும் போது கௌரி, கணேஷ் மற்றும் நந்தியின் சிலைகளை ஒவ்வொரு மசூதியிலும் நிறுவுவோம் எனச் சொன்னார். சூரிய நமஸ்காரம் பண்ண விரும்பாதவர்கள் கடலில் மூழ்கிச் சாகட்டும், யோகா பண்ண விரும்பாதவர்கள் இந்துஸ்தானை விட்டு வெளியேறட்டும் என்றார். 2015இல் அவர் நடிகர் ஷாருக்கான் பேசுவதும் தீவிரவாதி ஹபீஸ் சயித் பேசுவதும் ஒரே மொழியே என்றார். அவர் தனது நோக்கமே உ.பியையும் இந்தியாவையும் ஒரு இந்து ராஷ்டிரமாக்குவது என சூளுரைத்தார். 2010இல் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்த யோகி பெண்கள் ஆண்களின் இயல்பைப் பெற்றால் அவர்கள் அரக்கிகள் ஆகி விடுவார்கள் என்றார்.
வெகு அண்மையில் பேசும் போது அவர் தெருவில் போராடும் மக்களுக்குச் சொற்களின் அர்த்தம் புரியாவிட்டால் துப்பாக்கி ரவைகளின் அர்த்தம் புரியும் எனச் சொல்லி உள்ளார். இந்த “அற்புத” கருத்துக்களை நான் பட்டியலிடக் காரணம் வேறெந்த இந்துத்துவ தலைவர் / முதல்வரையும் விட யோகி தன்னை தனியாகக் கொடூரமானவராகக் கட்டமைத்து வருவதைச் சுட்டிக் காட்டவே. அதாவது வேறு காவித் தலைவர்கள் பேசுவதற்குச் சற்று தயங்குகிற மொழியில் இவர் புகுந்து விளையாடுகிறார். ஒரு தெலுங்கு பட வில்லன் கூறும் வசனங்களைத் தான் அணிந்துள்ள காவி உடை குறித்த கூச்சம் இல்லாமல் பேசுகிறார். ஆனால் அவர் சாதாரண வில்லன் அல்ல; மதவாதி வேடம் பூண்ட வில்லன் அல்ல. அவர் துறவாடை அணிந்த வித்தியாசமான வில்லன். நம் அரசியல் வரலாற்றில் இப்படியான ஒரு பாத்திரம் இதுவரை ஏற்பட்டதில்லை.
இப்பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் யோகியின் அறியாமை, முரட்டுத்தனம், தடித்தனத்தின் விளைவானது என நாம் பார்க்கக் கூடாது. ஒரு அரசியல்வாதி தன் ஒவ்வொரு சொல்லையும் தன் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தான் உதிர்ப்பான். அவன் மிக மிகக் கவனமாகவே தன் பிம்பத்தைக் கட்டமைப்பான். யோகியின் இந்த அதீத வன்முறை பிம்பம் என்பது அவர் தெள்ளத்தெளிவாகக் கடந்த இரு பத்தாண்டுகளாக “செங்கல் செங்கல்லாக” வைத்துக் கட்டி அமைத்தது. அவரது இந்த உக்கிர சொரூபம் என்பது ஒரு சாமியார்-அரசியல்வாதி என்பதாலே கூடுதல் உக்கிரம் பெறுகிறது. இது வினோதமானது, ஆனால் உண்மை.
ஒரு திரைப்படத்தில் பிம்பங்கள் ஒன்றின் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன – ஒரு ஆண் துப்பாக்கியுடன் நிற்கிறான், பேண்ட் சட்டை அணிந்த ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், சேலையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் நிற்கிறாள், காவி உடையில் ஒரு பெண் துப்பாக்கியுடன் உக்கிரமாகப் பார்த்து நிற்கிறாள். இந்த கடைசி பிம்பம் தான் ரொம்ப தாக்கம் செலுத்துவதாக இருக்கும்; ஏனென்றால் அதில் ஒரு உள்முரண் உள்ளது – ஒரு பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் முரணுக்குள் சேலையணிந்த சாத்விகப் பெண் துப்பாக்கி ஏந்துகிறாள் எனும் கூடுதல் முரண் வந்தமர்கிறது. இதனுள் காவியுடை அணிந்த துறவி துப்பாக்கி ஏந்துகிறாள் என்பது முரணுக்குள் முரணாக பொதியப்பட்டுத் தோன்றுகிறது. இப்போது பெண்ணின் இடத்தில் ஆண் துறவியை வையுங்கள். அதே தாக்கம் பலமடங்காக அமையும்.
அமைதியாக சாத்வீகமாகத் தோன்றக் கூடியவரின் கோபமான பேச்சு நம்மை அதிகமாகத் தாக்கும். மேலும் ஒரு துறவியின் கோபம் எப்போது தனிப்பட்ட நோக்கத்தில் ஆனதாய் பார்க்கப்படாது. சமூகத்துக்காக, பண்பாட்டுக்காக, தான் நம்பும் ஒரு மேம்பட்ட கொள்கைக்காக அவர் கொதிப்பதாகவே மக்கள் பார்ப்பார்கள். மேலும் நமது கீதை சொல்வதென்ன? பற்றற்றவன் கொலை செய்தால் அது கொலை அல்ல, அது உன்னதமானது, அது ஆத்மிகமானது, அது விடுதலை மார்க்கமானது; அப்படித் தான் அர்ஜுனனின் கொலைகளை, உறவுகளைக் கொல்லும் பாதகங்களைக் கிருஷ்ணர் மகிமைப்படுத்துகிறார். நமது அரசியல் களத்தில் யோகி தான் நவீன அர்ஜுனன். அவரது கோபாவேசம் தூய்மையானதானதாக, அவரது சொற்களில் மினுக்கும் குற்ற மனப்பான்மை யோக்கியமானதாகப் பெருவாரியான வாக்காளர்களுக்குத் தொனிப்பது சுலபம். அவரது கோபாவேசம் கூடுதலான கூர்மையும், தாக்கமும் பொருந்தியதாக, அச்சமூட்டுவதாகத் தொனிப்பதும் சுலபமே.
வேறெந்த அரசியல் தலைவரையும் விட யோகியால் எந்த வன்முறைப் பேச்சையும் பேசி விட்டு அதன் பாவக்கறை தன் மேல் படியாமல் தாண்டி சென்றுவிட முடியும். ஏனெனில் அவர் சாதாரண பிரஜையோ சட்டத்துக்கு உட்பட்ட எளிய மனிதனோ அல்ல. அவர் ஒரு “யோகி”, ஒரு “துறவி”, சமூகத்தின் விளிம்பில் இருப்பவர். அவருக்கு சமூகத்தின் நீதிநெறிகள் பொருந்தாது என நமது இந்தியக் கூட்டு மனம் நம்புகிறது. அதேநேரம் இவர் ஒரு முதல்வராக இருப்பதால் ஒரே சமயம் மதத்தின் தொல் நம்பிக்கைகள் தரும் பாதுகாப்பும், சட்டத்துக்கு அப்பாலான அதிகாரமும், அந்த சட்டத்தைக் கையில் வைத்துச் சிலம்பமாடும் தகுதியும் படைத்தவர் ஆகிறார் (இதே தர்க்கம் தான் கார்ப்பரேட் சாமியார்களுக்கும் உதவுகிறது. அவர்கள் கொள்ளையடித்தால் அது கொள்ளை அல்ல. அவர்கள் பலாத்காரம் செய்தால் அது பலாத்காரம் அல்ல. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்கள் குற்றவாளிகள் அல்ல).
யோகி ஒரு சராசரி முதல்வரும் அல்ல, அரசியல் தலைவரும் அல்ல, அவர் ஒரு சராசரி துறவியும் அல்ல. இது தான் யோகி எனும் ஆபத்தான கலவை பிம்பம்.
யோகி ஆட்சி செய்யும் பாணியையும் நாம் கவனிக்க வேண்டும். இப்போதைக்கு உ.பியில் அவர் பின்பற்றுவது மோடியின் பாணி – 36 அமைச்சர்களின் பொறுப்புகளை முதல்வராக ஒரே ஆள் அவர் கையில் வைத்திருக்கிறார். அதாவது அங்கு ஒட்டுமொத்த அமைச்சரவையும் முதல்வர் தான். மோடியின் ஒற்றைப்புள்ளி அதிகார மையமாக்கலின் ஒரு கற்பனைக்குப்பாலான வடிவமாக யோகி தன்னைக் காட்டிக் கொள்கிறார். New York Times பத்திரிகையின் கணிப்புப்படி 2024இல் இந்தியப் பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தச் சாத்தியமுள்ளவர் யோகி. அதாவது அமித்ஷாவின் செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் அதிருப்தியானால் அவரை விட அதிக வெடிமருந்துக் கொள்ளளவு கொண்ட ஆயுதக்கிடங்காக யோகி இருப்பார்.
அமித்ஷா என்பவர் மோடி 2.0 என்றால் யோஷி 3. 0. மோடி கைத்துப்பாக்கி என்றால் ஷா மெஷின் கன். ஆனால் யோகி ஒரு அணுக் குண்டு. ஷாவின் பிரசித்தம் (கட்சிக்குள்ளோ மக்களிடையிலோ) குறைவதாக ஆர்.எஸ்.எஸ் நினைத்தால் அவரை விட மோசமான ஆயுதத்தையே அடுத்து கையில் எடுக்கும். அது யோகியாகவே இருக்கும். அந்த தருணத்துக்காகவே யோகி தன்னை இத்தனை ஆண்டுகளாகக் கூர்தீட்டி வருகிறார். யோகி பிரதமர் ஆகும் நாள் ஒன்று வருமானால் அன்று இந்த தேசம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் சென்று விடும். அன்று நாடு முழுக்க பொருளாதாரம், முன்னேற்றம், வளர்ச்சி (சமத்துவம், மதசார்பின்மை ஆகியவற்றை எல்லாம் நான் கணக்கில் கொள்ளவே இல்லை) ஆகியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு விதவைகளைச் சிதையில் இட்டு எரிக்குச் சதி போன்ற பிற்போக்கு வழமைகள் முன்னெடுக்கப்பட்டாலும் நாம் ஆச்சரியப்படத் தேவையிருக்காது. ஆர்.எஸ்.எஸ் மையத்தின் ஒரு பிரச்சனை அது – நாம் அவர்களின் தேர்வுகளில் ஒவ்வொருவரையாய் நிராகரிக்கையில் அவர்கள் மேலும் மேலும் மோசமான வதைக்கருவிகளை நம் முன் நீட்டுவார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தியலை மொத்தமாய் நிராகரிப்பதே இப்போது மக்கள் முன்புள்ள ஒரே வழி.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- திரைக்கதையில் கமல் ஒரு மேதை என்றால் மிஷ்கின் ஒரு கடவுள் - ஆர். அபிலாஷ்
- கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும்? - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை - ஆர். அபிலாஷ்
- ’காட்ஃபாதரி’லிருந்து ’தேவர் மகன்’ மற்றும் ’நாயகன்’: கமல் எனும் மேதை - ஆர். அபிலாஷ் (பெங்களூர்)
- கொரோனோ பயங்கரமும் பா.ஜ.க அரசின் கார்பரேட் பயங்கரவாதமும் - ஆர். அபிலாஷ்
- முராகாமியின் நாவல்களை எப்படி வாசிப்பது?- ஆர். அபிலாஷ்
- காட்ஃபாதர் முதல் முள்ளும் மலரும் வரை: கதைக்குள் இருக்கும் கதை- ஆர். அபிலாஷ்
- சினிமாவில் போதனை இருக்கலாமா?- ஆர். அபிலாஷ்
- பொறுப்பைத் துறக்கிற அவலமான அரசியல் - ஆர். அபிலாஷ்
- ‘அலைபாயுதே’ - திரைக்கதை நுணுக்கங்கள் - ஆர். அபிலாஷ்
- தனிமையின் காதலே நட்பு- ஆர். அபிலாஷ்
- ஏன் சமத்துவம் இதயங்களைக் கல்லாக்குகிறது?- ஆர். அபிலாஷ்
- பாய் பெஸ்டியும் கவிதைக்குள் நிகழும் விமர்சன வன்முறையும்- ஆர். அபிலாஷ்
- அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்- ஆர். அபிலாஷ்
- காதலர்களுக்கு பத்து பரிந்துரைகள்- ஆர். அபிலாஷ்
- எனது நண்பன் எனது நண்பன் அல்ல- ஆர். அபிலாஷ்
- ஒரு நண்பன் விரோதியான பின்னரும் ஏன் ‘நண்பனாகவே’ தொடர்கிறான்?- ஆர். அபிலாஷ்
- நிழல் நிஜமாகிறது - ஆர்.அபிலாஷ்
- சத்யன் அந்திக்காடு: தமிழ் மனத்துக்கு இணக்கமான மலையாள இயக்குநர் - ஆர். அபிலாஷ்