4.புத்தகங்களைத் திருடுகிறவன்
மூன்று பாகங்களைக்கொண்ட ஒற்றைப் புத்தகம் லேவ் தல்ஸ்தோய் எழுதிய புத்துயிர்ப்பு… ஒரு வேலை நீங்கள் எப்போதாவது வாசிக்கக்கூடும். திங்கட் கிழமை காலையில் ஆரம்பித்து புதன் வெள்ளியிரவு முடித்ததாக நினைவு… எங்காவது தனியாக ஓடி அமைதியாக இருக்க மனம்விரும்ப என் சின்னஞ்சிறு வீட்டில் இன்னும் கொஞ்ச நேரத்தில் கறுப்பு வெள்ளை டிவியில் ஒளியும் ஒலியும் பார்க்க வீட்டில் ஆட்கள் நிறைந்துவிடுவார்கள். எங்கள் வீடே சின்ன திரையரங்குபோலாகிவிடும். நான் என் நண்பணின் வீட்டுக்குப்போய் பள்ளிக்கூட மைதானத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டிருக்கிறேன்.
நெஹ்லூதா… மாஸ்லவா அட! எவ்வளவு அற்புதமான மனிதர்கள். அந்த நாட்களில் என் அம்மாவை தவிர இந்த உலகில் வேறு எதுவுமே பெரிதில்லை என்று கருத்து உள்ளவன் நான் என் நோயாளி அம்மாவுக்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்சிக்கொண்டிருக்கிற பலவீனமான பையன், பெண் குறித்தோ, பெண் உடல் குறித்தோ எந்தக் கற்பனைகளும் தோன்றாத காலம் முதல்முறையாக மாஸ்லவா பெண்களின் உலகை, அவர்களது விசும்பலை, அவர்களது சினுங்களை, அவர்களது சீற்றத்தை, என்னை உற்றுப்பார்க்க கட்டாயப்படுத்தினாள். பென்களை வெறும் உடலாகப் பார்க்கும் வழக்கமான பாடங்களில் இருந்து ரத்தமும் சதையுமான ஒரு ஆணைவிடவும் கூடுதலான இயக்கக் கூறுகள்கொண்ட அவர்களுடன் நேர்மையாக உரையாடவும், முகத்தைப் பார்த்துப் பேசவும், அவர்களோடு வெறுமனே தோழமையுடன் கைகுலுக்கவும், முதல் பாடத்தைப் புத்துயிர்ப்பு துவக்கியது.
பெண்களது அனுமதியின்றி அவர்களோடு முதல் வார்தையைத் துவக்க எனக்கு எந்த அருகதையும் இல்லையென கற்றுக் கொடுத்தது. ஆணை கவர்ந்து பாடாய் படுத்தும் எல்லாமும் பெண்ணிடம் இருக்கிறது. அதேபோலதான் ஆணைப் பற்றிய கவர்ச்சியான எல்லாமும் அவளுக்கும் அவளுக்கு இருக்கும். ஆனால் எச்சரிக்கையும், கட்டுபாடும் ஆணுக்கு இல்லாமல் போவதால் நேரும் அதோகதியை பெண்ணிடமிருந்த கிடைக்கப்பெறாத மன்னிப்பற்ற அந்த வாழ்வை மாஸ்லவா வழியாக வாசகனுக்கு கடத்தும் அந்த மாயம் ஒவ்வொரு வாசகருக்குள்ளும் நிச்சயம் நடக்கும்.
பெரும் பணக்கார சீமாட்டிகளின் மாட்டுத் தொழுவத்தில் வேலை செய்யும் பால்காரியின் மகளுக்கு முறையற்று பிறந்த ஆறாவது குழந்தை இந்த மாஸ்லவா… மாட்டு தொழுவத்தில் பிறந்த சில மணி நேரங்களிலேயே அந்த பண்ணையின் சீமாட்டிகள் எதோ காரணத்துக்காகத் தொழுவத்துக்குள் வந்தவர்கள் அப்போதுதான் பிரசவித்த தாயையும், குழந்தையையும் பார்த்துவிட குழந்தையைத் தத்தெடுத்து அவளை சீராட்டி, பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மாஸ்லவாவுக்கு பதினாறு வயது நிரம்புகிறது… இப்போது காலம் தன் மாய வலையை எளிய சின்னஞ்சிறு அனாதை பெண்மீது வீசுகிறது எப்படி?
(வாசகர்கள் பயப்பட வேண்டாம். இந்த நாவலைப்பற்றி இருபது பக்கம் எழுதினாலும் என்னால் கதையை சொல்லிவிட முடியாது)
சீமாட்டிகளின் மருமகன் படைபிரிவுக்குப் போகும் வழியில் தன் அத்தைகளின் வீட்டுக்கு வருகிறான். அங்கே அவனெதிரே நிற்கும் புத்திளம் குமரியும் தன் அத்தைகளின் வளர்ப்பு பெண்ணுமாகிய வேலைக்காரியைப் பார்க்கிறான் அவளது அழகு அவனுக்கு மூச்சு திணறலைத் தர பட்டாம்பூச்சிகளைப்போல தோட்டத்தில் ஓடி விளையாடுகிறார்கள். அவனது இளமைமிக்க மூர்க்கத்தில் திணறுகிறவளை ஓர் இரவு அவளது முழு சம்தமின்றி தன் அரவணைப்பில் சிக்கவைத்து உறவுகொள்கிறான். அதற்குப் பரிசாக 100 ரூபில்களை அவள் கையில் திணித்துவிட்டு அவன் தன் படையணிக்கு போய்ச் சேர்கிறான். அந்த சீமான் இப்போதும் புத்திளம் இளைஞன் மட்டுமே ஓய்வுக்கு இளைபாறிவிட்டு போகும் பறவைபோல திளைப்பின் சிறகசைப்புடன் தன் வழியே பறந்துவிட்டான். அவன் தந்துவிட்டுப்போன 100 ரூபில் அப்படியே பெட்டியில் சுருண்டு கிடக்கிறது. ஆனால் அவனது அறமற்ற உறவால் விளைந்த உயிர் மாஸ்லவா வயிற்றில் வளரவளர மாஸ்லவா படாத பாடுபடுகிறாள் சீமாட்டிகளுக்குத் தெரிந்தால் என்னாவது ஒருபுறம் தன் வாழ்வின் அடுத்த நிலைபற்றிய சிந்தனை அவளை ஒவ்வொரு நொடியும் துன்புறுத்த தொடங்குகிறது.
இத்தனை காலமும் அவள் வளர்ப்பு மகளைப்போல சொகுசாக தானே வாழ்ந்தாள். இப்போதைய மாற்றங்கள் அவளை எரிச்சல்மிக்கவளாய் மாற்ற சீமாட்டிகளிடம் பண்பு குறைவாய் நடந்துக்கொள்ள தன்னை வீட்டைவிட்டு வெளியேற்றும்படி அவளே கேட்டுக்கொள்கிறாள்… சீமாட்டிகள் வீட்டிலிருந்து வெளியேற்றுகிறார்கள். வயிற்றில் பிள்ளையுடன் ஒரு சாராயக்காரியின் வீட்டில் தங்கி பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்த்த பொழுதே இறந்து போகிறது. கையிலிருந்த 100 ரூபில் பணமும் கறைந்து, பல வேலைகளில் மோசமான அனுபவங்களைப் பெற்று புயலில் சிக்கி கந்தலாக்கப்பட்ட பாய்மரம் போல அவள் வாழ்வு சூரையாடப்பட அவள் தன் வாழ்க்கையை நகர்த்த ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறாள் மஞ்சள் சீட்டு வாங்கி ஓரிடத்தில் தங்கி (பாலியல் தொழிலுக்கான அனுமதி சீட்டு) பெற்று வாழ்க்கை நடத்துகிறாள் இப்படியே எட்டு ஆண்டுகள் ஓட…
ஒரு நாள் கொலை குற்றம்சாட்டப்பெற்று அவளை நீதிமன்றம் அழைத்துச் செல்கிறார்கள்.
அதே நாளில் நெஹ்லூதவ் முன்பைவிடவும் செழிப்புடன் சமூகத்தில் மதிப்புக்குரிய சீமானாக அவரைவிடவும் பெருஞ்செல்வம் கொண்ட ஒருவரின் மகளை மணப்பது பற்றிய திட்டங்களுடன் இருக்கிறார். அதைவிட சிறப்பான செய்தி நிகழ்காலத்தில் பிரபுகள் குல முதல்வரின் மனைவியிடனும் அவருக்கு ரகசிய உறவு இருக்கிறது. இந்தச் சூழலில் அவர் நீதிமன்றத்தில் மதிப்பிற்குரிய சமூகத்தின் சார்பாக சான்றாயராக செல்ல அதே நீதிமன்றத்தில் மாஸ்லவா குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுகிறாள். இங்கிருந்துதான் தல்ஸ்தோய் அவர்களின் படைப்பின் வழியே உலகிலுல்ல ஒவ்வொரு மனசாட்சியையும், அறமுமற்று ஒரு பெண்ணை நாசம் செய்து தவிக்கவிட்டுவிட்டு எந்த மன உறுத்தலுமற்று உலவும் ஒவ்வொரு மனிதனையும் மன விசாரனை செய்ய தொடங்குகிறது…
நெஹ்லூதவ் கம்பீரமாக மதிப்பிற்குரிய சான்றாயர்களுடன் உட்கார்ந்திருக்க, குற்றவாளி கூண்டில் நின்றிருக்கும் அவளைக் கண்டுக்கொள்கிறாள் . அவளோ அவரைக் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. தன்னை தன் தன் உடலை வழக்கமாக கூர்ந்து பார்க்கும் ஆண்களில் ஒருவனாக மட்டுமே பார்க்கிறாள். அவள் செய்த குற்றங்கள் அங்கு விசாரணைக்கு வருகிறது. பண்பற்று ஒருத்தியின் வாழ்வில் கேடு செய்து அவளைப் படுகுழியில் தள்ளியது குறித்த எல்லா நினைவுகளும் பசுமையாக வந்து அவரைத் துன்புறுத்துகிறது.
நீதிபதிகளுக்கு அருகில் அமர்ந்து சான்றாயராகப் பெருமித்ததுடன் உட்கார்ந்த நிமிடம் வரை மாஸ்லவா என்கிற ஒருத்தியைத்தான் நாசம் செய்தது பற்றியோ அவள் கையில் 100 ரூபில் பணத்தைத் திணித்தது பற்றியோ அவர் சுத்தமாக மறந்துவிட்டிருந்தார். இப்போது அவளை எதிர்பாரத இடத்தில் சந்தித்ததாலோ என்னவோ அவரது உள்ளம் விழித்துக்கொண்டு அவரை உலுக்கு உலுக்கு என உலுக்கி விழிக்க வைத்தது. ஒரு அபலைப் பெண்ணை நாசமாக்கி குற்றவாளி கூண்டில் கொண்டு வந்து நிறுத்தியதற்கு தனது அசடான கயமைதனம்தான் என்று சட்டென விழித்துக்கொண்டவர்போல வெதும்புகிறார். அவருக்கு வாழ்வே மூச்சு திணறும் ஒன்றாக மாறிவிட்டது.
பிரபுகுல சீமான் என்பதற்காகத் தனக்கு மதிப்பளித்து நீதிபதியின் அருகாமையில் சான்றாயராக அமர்த்தியுள்ளார்கள். ஆனால் நனோ ஒருத்தியை குற்றவாளி கூண்டில் குற்றவாளியாக நிறுத்த காரணமானவன் இதில் என்னுடைய பங்கே அதிகமாக இருக்கிறது… பலவிதமாக அவரது நெஞ்சு துடிக்கிறது.
எந்த கட்டாயமுமின்றி அவர் தன் அவலமான வாழ்வைப் பரிசீலித்து தன்னால் நாசமானவளின் மன்னிப்புக்காக ஓயாமல் போராடும் ஒரு மனிதனாக நெஹ்லூதவ் புத்துயிர்ப்பு கொள்ள துடிக்கிறார்.
அவள்மீது விசாரணை நடக்கிறது நெஹ்லுதவ் அவளது வழக்கை ஆராய்ந்து சொல்லத் தவறிய ஒரு வார்த்தையாலும், நீதிபதியின் அலட்சியத்தாலும், மாஸ்லவாவுக்கு சைபீரிய கடும் உழைப்பு தண்டனை கிடைக்கிறது. இது அவரை மேலும் துன்பத்துக்காளாக்குகிறது… பிறகு அவளை எப்படியாவது தண்டனையிலிருந்து காப்பாற்ற முயல்கிறார்…. நீதிபதியின் ஆலோசனைபடி வழக்கறிஞர் மூலம் நிலைமையை சரி செய்யப் போராடுகிறார்.
அவரது உள்ளம் அசட்டையான பிரபுத்துவ உறக்கத்திலிருந்து சட்டென விழித்துக்கொண்டு தான் செய்த அய்யோக்கிய தனத்துக்காக கதறுகிறது. அவளுக்கு இழைக்கப்பட்ட அத்தனைத் துயருக்கும்மூலம் நானே அதை எப்படியாவது துடைத்து அவளைக் காப்பது மட்டுமே இனி தன் வேலையென தனக்குள் உறுதியாகச் சொல்லிக்கொள்வதுடன் அதற்காக ஓயாமல் போராடவும் செய்கிறார்.
அடிப்படையில் அந்தக் கொலை குற்றத்தை அவள் செய்திருக்கவில்லை. தவறாக சந்தர்ப்ப சூழலை வைத்தது குற்றம்சாட்டப் பட்டிருக்கிறாள். சரியாக வாதிட்டிருந்தால் அவள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அவளுக்கு விதிக்கப்பட்ட சைபீரிய கடும் உழைப்பு தண்டனை அவளை அதிர்ச்சியடைய வைக்கிறது.
அதே நேரம் மாஸ்லவாவை சிறையில் சந்தித்து அவளிடம் மன்னிப்பு பெறவும், அவளையே மணந்துக்கொள்ளவும் அவர் மனம் விரும்புகிறது. அவளைத் தேடி சிறைக்குச் செல்கிறார். நாவலில் அந்த முதல் சந்திப்பின் காட்சிகளை தல்ஸ்தோய் அவர்கள் மானுட மாண்புகளை அற்புதமாகத் தீட்டியிருப்பார்…
இத்தனைக்கும் அந்த மகத்தான எழுத்தாளர் வறியவர் கிடையாது மிகப்பெரிய சொத்து படைத்த பிரபுக்கள் வழிவந்தவர்… பல்லாயிரம் ஏக்கர்கள் நிலமுள்ள ஒரு மனிதர். கிருத்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர் ஆனால் பேசுகிற உண்மையோ… அடடா மானுட மாண்புகளில் அப்பட்டமானது.
நெஹ்லூதவ் சிறைக்கு அவளைத் தேடிப் போகிறார். சிறையிலிருப்பவர்களுக்கு ஆச்சரியம் அதிலிருந்து மாஸ்லவாவுக்கு மரியாதை கூடிவிடுகிறது. அட! ஒரு பிரபுவே இவளைத் தேடி வருகிறாரே என்று. ஆனால் அவளோ நெஹ்லூதவ்வை முன்பின் தெரியாதவள் போலவே பார்க்கிறாள். அதுதான் அந்தப் பணக்கார பிரபுவுக்கு அவள் தந்த மிகப்பெரிய தண்டனை.
சிறையில் அவளைச் சந்திக்கும் நெஹ்லுதா கேட்பார்,
“நமக்குப் பிறந்த குழந்தை என்ன ஆனது”
அவள் சொல்வாள்
“கடவுள் புண்ணியத்தில் அது அப்போதே இறந்துவிட்டது”
“நிலைமையை சரி செய்ய விரும்புகிறேன்”
“இல்லை… சரி செய்வதற்கு ஒன்றுமேயில்லை… கடந்த காலம் போய்விட்டது”
மாதம் 3000 ரூபில் வருவாய் பெறக்கூடிய கோமகன் அவர் (அன்றைக்கு ருஷ்யாவில் பால்தரும் ஒரு பசுவை 40 ரூபிலுக்கு வாங்க முடியும்)
மாஸ்லவா அவரை நிராகரிப்பாள் என்பதை சிறையில் அவளுடன் இருப்பவர்களால் கற்பனைகூட செய்ய முடியவில்லை.
பெருஞ்செலவு செய்து வழக்கறிஞரை நியமிக்க அவர் அவளிடம் அனுமதி கேட்க அதற்கு ஒத்துக்கொள்கிறாள்… அவர் சந்திப்பு நேரம் முடிந்து விடைபெறும்போது அவரிடம் எனக்கு ஒரு பத்து ரூபில் பணம் தரமுடியுமா என்று கேட்கிறாள். அவரோ அவளுக்காக தன் வாழ்வையே அர்பணிக்க காத்துக்கிடக்கிறார் என்பது அவளுக்குத் தெரியாமல் இல்லை, நெஹ்லூதவ்வின் இந்த மனப்போக்கு உறவினர்களுக்கு தெரிந்து அவரை எச்சரிக்கிறார்கள்… எதற்காக தெரிந்தும் பாழும் கிணற்றில் குதித்து அழியப்போகிறாய். நீயோ வாலிபன் பெரும் சொத்துக்கு அதிபதி வசந்தமான வாழ்க்கை உனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது… போயும் போயும் சிறை கைதியாக இருக்கும் ஒன்றுமில்லாத பணத்துக்கு உடலை விற்கும் பெண்ணையா என்று அவரைக் கேள்வி கேட்கிறார்கள்…
ஊரார் பேச்சுகளை உதறிவிட்டு மீண்டும் அவளைத் தேடிச் சிறைக்கு வருகிறார்.
அவளுக்கு அந்தப் பழைய வசந்தமான நினைவுகளைப் பற்றி நினைவுபடுத்துகிறார்.
“மறைந்து ஒழிந்துவிட்டதை நினைவுபடுத்தி என்னவாகப் போகிறது” என்று கண்டிப்பான தொனியில் மாஸ்லவா கேட்க,
“ நான் உன்னை மணக்க விரும்புகிறேன்” என்று அவர் சொல்ல
“அதைவிட நான் தூக்குபோட்டு சாவதே மேல்” என்பாள்.
இப்படியாக முதல் பாகம் முடியும்.
மூன்று முறை சிறைக்கு வந்து அவர் மன்றாடி கேட்டு அவள் நிராகரித்துவிடுவாள்…. ஆனால் அவருக்கோ அவள்மீது அன்பு கூடியபடியே இருக்கிறது. ஒருமுறை அவளது பழைய புகைப்படம் ஒன்றை எப்படியோ கண்டுபிடித்து கொண்டு வந்து காட்டுவார்.. அவள் எதற்க்கும் அசையமாட்டாள்… அவளுக்கு ஒரு ஆண் பிரபுவாக இருக்கிறான், பிச்சைக்காரனாக இருக்கிறான் என்பதையெல்லாம் தாண்டி அவன் என்னவாக இருக்கிறான். உண்மையான மனிதன் யார் என்பதையும் அறிந்திருந்தாள்… மஞ்சள் அட்டை பெற்று அவள் விடுதிகளில் தங்கியிருந்த போது பலதரபட்ட மனிதர்களை அவள் பார்த்தவள்… அவளுக்குத் தீர்ப்பு வழங்கிய நீதிபதியே அவளிடம் படுத்து புரண்டவர்தான்… இப்படியான கொடுந்துயர் மிக்க வாழ்க்கைக்குள் தள்ளியவனல்லவா இந்த கோமகன் இந்த நெஹ்லூதவ்….
நெக்கலூதவ் ஏற்பாடு செய்த வழக்கறிஞர்கள் வாதங்கள் எதுவும் நீதி மன்ற தீர்ப்பு உறுதியாகிறது… அவளுடனே அவர் சைபீரியா செல்ல முடிவெடுக்கிறார் என்றாலும் அவளை அக்கொடிய சிறை தண்டணையிலிருந்து காப்பாற்ற மாமன்னருக்கு ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கிறார்.. இந்த சூழலில் அவரை மணக்க பிரபுகுல பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு காத்திருக்கிறார்கள். அவரோ மாஸ்லவா சிறைக்குப் போகும் ரயிலுக்கு அடுத்த ரயிலிலேயே கிளம்பிவிடுகிறார்.
நீண்ட நெடுந்தொலைவு ரயில் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள் அவர்களது வாழ்வு, அர்பணிப்பு எல்லாம் அவரை நெகிழ செய்து மேலும் மேலும் அவரை மனிதனாக்குகிறது.
சைபீரியச் சிறையில் அவளைப் பார்க்கப் போகிறார்…. சிறை காவலன் அவரிடம் இப்படி சொல்லுவான் “அவள் உங்களுக்காக இங்கே காத்திருந்தாள் அந்த நேரம் வாலிபனான சிறை மருத்துவ உதவியாளுடன் அவள் சல்லாபிப்பதை பார்த்து தலைமை மருத்துவர் அவளை இங்கிருந்து துரத்திவிட்டார்” இதைக் கேட்டதும் அவர் அவள்மீது கடும் வெறுப்படைவார் ஆனாலும் தான்கொண்ட லட்சயத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லையென முடிவெடுத்து, சிறை காவலனுக்கு கையூட்டு கொடுத்து அவளது அறையிலேயே அவளைச் சந்திக்கப் போவார்.. உண்மையில் அவள் அப்படியான தவறு எதுவுமே செய்யவில்லை. அதே நேரம் அவரது விடாபிடியான அன்பில் அவள் மயங்கவே செய்கிறாள். ஆனால் அந்த மனிதனுக்குத்தான் தீங்கு செய்துவிட கூடாது என்பதாக நினைத்து அவரை வெறுப்பதாக காட்டிக்கொள்வாள்.
இந்த சூழலில் சிறையில் இருக்கும் வேறொரு அரசியல் கைதி அவளை விரும்புவான். அதை அந்த அரசியல் கைதி நெஹ்லூதாவிடமே சொல்லி தனக்காக அவளிடம் தூது போக சொல்லிக் கேட்க அதையும்கூட அவர் செய்வார். இந்த சூழலில் மாமன்னருக்கு விண்ணப்பித்திருந்ததால் அவளுக்குத் தண்டனை குறைப்பு செய்து உத்தரவு வரும். அவளிடம் அவர் கடைசி முயற்சியாக தன்னோடு சேர்ந்து வாழும்படி கேட்பார். மாஸ்லவா தன்னுடனே சிறையிலிருக்கும் அரசியல் கைதியுடன் சேர்ந்து வாழப்போவதாகச் சொல்லுவாள். அதைக் கேட்டு அவர் வெறுமனே புன்னகைப்பார். கடைசி வரை அவளிடமிருந்து அவரால் மன்னிப்பை பெறவே முடியவில்லை என்பதும் மாஸ்லவா விரும்பியது பணத்தைப் பவுசுகளை அல்ல ஒரு மனிதனை, அவனது அன்பை மட்டுமே எவ்வளவு முயன்றும் அவளது இதயத்தில் இடம்பிடிக்க முடியவில்லை என்றாலும் அவரால் தனது உள்ளத்தைப் புத்துயிர்ப்பு பெற வைக்க முடிகிறது.
1899 எழுதப்பட்ட இந்த நாவல் இப்படி முடியும். ஆக இதோ இருக்கிறது என் வாழ்வின் பணி…. ஒரு பணி இப்போதுதான் முடிவுற்றது. அதற்குள் இன்னொன்று ஆரம்பிக்கிறது அந்த இன்னொன்று எது? அதை வரும்காலம்தான் தெளிவுபடுத்தும்.
உலகில் எந்த மூலையில் பிறந்தால் என்ன? கோட்டீஸ்வரனோ, பிச்சைக்காரனோ புத்தகம் வாசிக்கிறவனாய் இருந்தால் இந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்று சொல்வேன். மண்ணில் புதைந்து துருவேறிப்போன செப்பு நாணயத்தை அமிலத்தில் தோய்த்தெடுத்தால் எப்படி? செப்பு நாணயம் ஒளிருமோ அதுபோல மனிதனும் இந்தப் புதினத்தை வாசித்தப்பிறகு சின்ன மாற்றத்தையாவது நிச்சயம் உணர்வான்.
முந்தைய தொடர்கள்:
3.நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல – https://bit.ly/3b7r09O
2.லெனினுக்கு மரணமில்லை – https://bit.ly/2IXJU79
1.புத்தகங்களைத் திருடுகிறவன் – https://bit.ly/3baGDNO
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சகோதரிகள் : கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
- அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
- ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
- உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
- ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ - கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
- நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
- லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
- 1. புத்தகங்களைத் திருடுகிறவன்