காதல் சரீரத்தை மையமாகக்கொண்டது. இதன் பொருள் உடலுறவு அல்லது காமம் அதற்கு முக்கியமானது என்பதல்ல. அசரீரியைக் காதலிக்கமுடியாது என்பதுதான். காணாமலேயே கடிதம்மூலம் காதல், தொலைபேசிக்காதல் என்பதெல்லாம்கூட ஒருசரீரம் குறித்த யூகம் இல்லாமல்சாத்தியமில்லை. சரீரம் என்பது பெளதிகஉடல், அதில் கிளர்த்தப்படும் உணர்ச்சிகளே காதலின்வெளிப்பாடு. ஒருவரை பாத்தாலே கூட உடல் முழுவதும் பரவசமாகிவிடும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும், இதயம்துடிக்கும்.  பார்வை காணும் சரீரம், பார்வைகாணும் அடுத்தவரின் பார்வை ஆகியவை மிகுந்ததாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. இப்படியான தொடர்பில் சரீரம் தீண்டுதல், அணைத்தல் போன்றவை அளப்பரிய உத்வேகத்தை அளிப்பவை என்பதை மறுக்க முடியாது. காதலின் மையம் தொடுஉணர்ச்சி (tactility) சார்ந்ததுஎனலாம்.

 

உலக சினிமாவின் மிகச்சிறந்த காதல்காட்சிகளில்ஒன்றான சார்லி சாப்ளினின் சிடிலைட்ஸ் படத்தின் இறுதிக்காட்சி இதைத்தான் உணர்த்துகிறது. கண்தெரியாத பூவிற்கும்பெண்ணிடம் கனவானாக தன்னைகூறிக்கொள்வார், வீடற்றநடைபாதை வாசியான ஏழை சார்லிசாப்ளின். தற்செயலாக அவரிடம்கிடைக்கும் பணத்தை அந்த பெண்ணின் கண் அறுவைச் சிகிச்சைக்கு கொடுத்துவிட்டு, அந்தபணத்தை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார். சிறைவாசம்முடிந்து வெளீயேவந்ததும் பஞ்சைபராரிகோலத்தில் சிறுவர்களால் சீண்டப்பட்டு நடைபாதையில்சண்டையிடுவார். அப்போது கண் பார்வை பெற்ற அந்த பூக்காரப்பெண், அவளுடைய சொந்த பூக்கடையினுள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பார். அந்தப் பெண் யாரோ பைத்தியக்காரன் என்றுஅவரைப் பார்த்து சிரிப்பாள். சார்லி வைத்தகண் வாங்காமல் அவளையே பார்க்க அவள் ஒரு பூச்செண்டை தருவாள். சார்லி வாங்க மறுக்க, வெளியே வந்து அவர் கரத்தை பற்றிக்கொடுப்பாள். அப்போது அவரை தொடுகை மூலம் யாரென்று அறிந்துகொண்டு நீங்களா எனக்கேட்க, சார்லி வெட்கத்துடன் ஆமோதித்து தலையசைப்பார். தொடு உணர்ச்சியின் உன்னதமான வெளிப்பாடு இந்தக்காட்சி. எப்போது பார்த்தாலும் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொள்ளமுடியாது.