லவ் குருவின் ஆசிரமம் மூடப்பட்டது குறித்து ஏரியா பையன்களுக்கு ஏக வருத்தம். அது ஏனென்று பலரும் கேட்டுக் கொண்டதால் இந்த சுய விளக்கம். ஆனால் பாதியில் ஓடக்கூடாது. முழுசாக் கேக்கணும்.. சரியா?

 

பெண்களோடு பேச, பழக எனக்கெல்லாம் யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. ஏனென்றால் அது ஒரு குற்றம். குற்றம் செய்ய யாராவது கற்றுக் கொடுப்பார்களா? 12ம் வகுப்பு வரை ஆண்கள் பள்ளி வேறு. வீட்டிலும் பசங்க மட்டும்தான். பெண்கள் நிறைய இருக்கும் இடத்தில் எப்படியாவது சிக்கிக் கொண்டால் அந்தச் சூழலில் எப்படி முகத்தை வைத்துக் கொள்வது, இடது கை இடுப்பிலா பாக்கெட்டிலா, சிரிக்கலாமா கூடாதா,நேரம் தெரியாமல் அரிக்கும் தலையைச் சொறிவதா வேண்டாமா, நம்முடைய மொக்கை ஜோக்குக்கு அவர்கள் குலுங்கிச் சிரித்து செல்லமாகத் தோளில் தட்டும்போது பதிலுக்கு நாமும் தட்டலாமா, அப்படித்தட்டினால் அவள் அண்ணனோ தகப்பனோ நம்மைத் தேடிவந்து தட்டுவார்களா,  இப்படியெல்லாம் பல சிந்தனைகள் ஓடும். இத்தனை சிந்தனைகள் ஏக நேரத்தில் ஓடுவதாலேயே முகம் இருண்டு ஒரு மேதாவி போல் ஆகிவிடும். யோசிக்கும் எதையும் செயல்படுத்தாததால் ஒரு யோகி போன்ற தோரணையும்இருக்கும்.  இவன் பெண்களின் மீது பற்றற்ற மகா சிந்தனைக்காரன் போல என்று பெண்கள் நினைத்துக் கொண்டு இயல்பாகப் பழகினார்கள். பெண்களை எத்தனை சர்வ சாதாரணமாக டீல் செய்கிறான் என்று ஆண் நண்பர்கள்நினைத்துக் கொண்டார்கள். இந்த விரக்தியில் நாம் எழுதும் புலம்பல் தத்துவக் கவிதைகளை வைத்துக் காதல் செய்பவர்களுக்கு உதவ இவன் தான் சரியான ஆள் என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள்.

 

இப்படியாக ஊருக்கு ஒரு குருவாகவும் உள்ளுக்குள் ஒரு சிங்கிளாகவும் சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம் அது. காதலர் தினம் வருகிறது என்றாலே வயிற்றைப் பிறாண்டும். அதற்குக் காரணம் காதல் அல்ல, ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் வரிசை போல எங்கள் அறையில் வந்து நிற்கும் நண்பர்கள், தங்கள் காதலை எப்படியாவது வெற்றியடையச் செய்யும் மகாப் பொறுப்பை என் தலையில் கட்டி விடுவார்கள். “ஒரே ஒரு கவிதை மட்டும் நீ எழுதிக் கொடு. மத்ததை நான் பாத்துக்கறேன். நானெல்லாம் உன்ன மாதிரி கவிதை எழுதத் தெரிஞ்சிருந்தா எத்தனை பேரை மடக்கியிருப்பேன் தெரியுமா?”என்பதில் தொடங்கி ‘நீதான் தைரியமாதெளிவாபேசுவே, நீயே அவகிட்டே சொல்லிடேன்’ என்பது வரை விதவிதமான விண்ணப்பங்கள். எரிச்சலை மறைத்துக் கொண்டு சேலம் சித்த வைத்தியர் போல ஒவ்வொருவருக்கும் டைம் ஸ்லாட் கொடுத்து அனுப்பி வைப்பேன். வாடிக்கையாளர்களை விட முடியாது. ஏனென்றால் வரும்போது டீயும் தேங்காய் பன்னும் வாங்கித் தருவார்கள். இன்னும் கொஞ்சம் பீறாய்ந்து இரவு உணவு வரை தேற்றலாம். எனவே அறைத் தோழர்களும் கால அட்டவணை போட்டு குருஜியின் கடையை நடத்த உதவிக் கொண்டிருந்தார்கள். பிறகு இது காதலர் தினத்தையும் தாண்டி வாரம் ஒரு நாள் என்று மாறியது. மொபைல்கள் பரவாத அக்காலத்தில் பரவிய பாலியல் வறட்சியால் கூட்டம் கூடிக் கொண்டே போனது.

 

அவரவர் நேரத்துக்கு டாண் என்று வந்து விடுவார்கள். வரும்போதே குருஜிக்கு டீயும் தேங்காய் பன்னும் கீழே கடையில் சொல்லிவிட்டு வரும் அளவுக்கு வாடிக்கையாளர்கள் உண்டு. நன்றியுள்ள தடிப்பயல்கள் அவர்கள். தங்கள் ஆளை மாற்றினாலும் குருவை மாற்ற மாட்டார்கள். ‘அந்தப் பொண்ணுக்கு என்னடா ஆச்சு?’ என்றால் ‘கல்யாணம் ஆகிடுச்சு’ என்பதில் தொடங்கி ‘என் ஃப்ரெண்டுக்கு செட் ஆகிடுச்சு’ என்பது வரை சோகக்கதைகள் இருக்கும். அந்த நண்பனும் எனது வாடிக்கையாளனாக இருப்பான். அமைதியாக இருப்பேன். நமக்கு தொழில் தர்மம் முக்கியம். இது புதிய காதலர் தினம். புதிய ஆள். அவர்கள் முகங்களில் நம்பிக்கை சொட்டும். கண்களில் கனவு மிதக்கும். ஆனால் அவர்கள் காதல் கதைகளைக் கேட்கத் தொடங்கும்போது கவனமாக இருக்கவேண்டும். பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டான்கள்.

 

“பாத்துட்டே இருந்தேன்… அவ தெரு முனைக்குப் போயிட்டா.. சரி அவ்வளவுதான்னு இருந்தேன். அப்ப்போ… அப்போ… கடைசியா திரும்பி ஒரு லுக்கு விட்ட்ட்டா பாரு…”இந்த மாதிரி ஆரம்பித்தால் உடனே இருமல் வந்த மாதிரியோ விக்கல் வந்த மாதிரியோ இல்லை பக்கவாதம் வந்த மாதிரியோ நடித்துவிட வேண்டும். மேற்கொண்டு பேச விட்டால் அந்த லுக்கு அவனை என்ன செய்தது, நுரையீரல், கணையம், சிறுநீரகம் வரை எப்படிப் பாய்ந்தது என்று ஆரம்பித்து இயற்பியல் வேதியியல் வாண சாஸ்திரம் வழியாக ஆன்மீகத்தில் வந்து முடிப்பான். சரிப்பா விஷயத்துக்கு வா என்பதை நாசூக்காக சொல்லிவிட்டு ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல் எனது ஆலோசனைகளை ஆரம்பிப்பேன்.

 

“நீ மொதல்ல அந்தப் பொண்ணுக்குப் புடிச்ச மாதிரி நடந்துக்கணும். அவளுக்கு என்ன புடிக்கும்?”

 

“அவளுக்கு எலந்த வடைன்னா உசுரு”

 

“டேய்.. எருமை மாடே.. அவளுக்கு எந்த மாதிரி நடந்துக்கிட்டாப் புடிக்கும்னு கேட்டேன்”

 

“தெரியாதே… அவளுக்கு நாய்னா ரொம்பப் புடிக்கும்… அவ வீட்டுல ரெண்டு நாய் பாத்திருக்கேன்.”

 

“அப்ப உன்னோட இடம் பறிபோயிருச்சு… போ…”

 

“டேய்.. என்னடா இப்படி சொல்றே.. உன்னைத்தான்டா நம்பி இருக்கேன்.. ஏதாவது ஐடியா கொடுடா…”

 

“டீ தீந்து போய் அரை மணி நேரம் ஆகுது.. உன் காதல் எப்படிடா ஒர்க் அவுட் ஆகும்…”

 

அடித்துப் பிடித்து இறங்கிப் போய் வாங்கி வருவான்.

 

“சரி.. நீ பாரம்பரிய முறைப்படியே ஆரம்பி. ஒரு வாழ்த்து அட்டையும் ரோசும் எடுத்துக்கோ. அவளைத் தனியாப் பாத்து கொடுத்துடு…”

 

“வாழ்த்து அட்டையா… பொங்கல் இப்பதானே முடிஞ்சுது… “

 

 

“நீ கெளம்பு.. டீக்கும் பன்னுக்கும் நானே காசு கொடுத்துக்கறேன்.. உன் கைய ஏதும் அடிபடாம பத்திரமா பாத்துக்க…போ”

 

இப்படி வித விதமான உரையாடல்கள். வித விதமான ஆலோசனைகள். சில விசித்திர நேரங்களில் காதல் முறிவுகளுக்கும் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

 

“டேய்… வீட்ல கல்யாணம் வெச்சிருக்காங்க.. அவ ரொம்ப ஸ்பீடா இருக்கா.. விட்டா கிளம்பி வந்துடுவா.. எப்படியாவது புரிய வெக்கணும். அது உன்னாலதான் முடியும்…” என்பவர்களை உடனே காவலாளிகளை அழைத்து வெளியேற்றி விடுவோம். “காதல் எத்தனை புனிதமானது தெரியுமா… குருஜியை அந்தப் பாவத்தைப் பண்ணச் சொல்லிக் கேட்க உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று அவர்களை எச்சரித்து அனுப்புவார்கள். கனமான கொள்கை, கோட்பாடுகளுடன் சமரசம் செய்யாமல் வாழ்ந்த காலம் அது.

 

இப்படியாக எமது தொழில் விரிவடைந்து கொண்டிருந்த ஒரு மாலையில் நான் மட்டும் அறையில் இருந்தேன். நண்பர்கள் வேலைக்குச் சென்றிருந்தார்கள். எனக்கு வேலை தரும் அளவுக்கு எந்த நிறுவனமும் தகுதியடைந்திருக்கவில்லை. கீழே டீக்கடையிலிருந்து பையன் வந்திருந்தான்.

 

“அண்ணே.. உங்களைப் பாக்க யாரோ வந்திருக்காங்க… ஏதோ ஐடியா வேணுமாம்.”

 

எனது டைரியில் அப்பாயின்ட்மென்ட் எதுவும் இல்லை. இது குருஜியின் நித்திரை நேரம். மதியம் உண்ட உணவால் கண்களை வேறு சுழற்றிக் கொண்டிருந்தது.

 

“யாருடா.. உனக்கு அவன் பேரு தெரியாதா?”

 

பொடியனுக்குப் பெரும்பாலான வாடிக்கையாளர்களைத் தெரியும். அவ்வப்போது எனக்கு மறந்துவிடும் பெயர்களைக் கூட அவன்தான் நினைவூட்டுவான். ஆனால் எனது கேள்விக்கு ஒரு மாதிரி கோணலாக இளித்தான் அவன். அது நல்ல சகுனமல்ல.

 

“அண்ணே.. வந்திருக்கறது ஒரு பொண்ணுண்ணே…”

 

நித்திரை விடைபெற்றுக் கொண்டது. அறையின் தரையில் விரிக்கப்பட்டிருந்த பாயின் மத்தியில் படக்கென்று எழுந்து அமர்ந்தேன்.

 

“டேய்.. விளையாடாதே…”

 

“சத்தியமாண்ணே… உங்க பேரை சொல்லித்தான் கேட்டுது… மொதலாளிகிட்டே விசாரிச்சுட்டு இருந்தது. எப்ப வேணா மேலே வந்துடும்.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கதவு தட்டப்பட்டது.

 

வாரிச் சுருட்டி எழுந்தேன். அறையெங்கும் சிதறிக் கிடந்த ஐட்டங்களை ஒதுக்க நேரமில்லை. சில பல உள்ளாடைகள், நியூஸ் பேப்பர்கள், கில்மா புத்தகங்கள், அழுக்கான போர்வைகள் இத்தனையும் பாயின் நடுவில் போட்டு சுருட்டினேன். அதை அப்படியே தூக்கி உள் அறையில் வைத்துவிட்டு வருவதற்குள் கதவு மீண்டும் தட்டப்பட்டது.

 

பொடியன் அதே இளிப்புடன் சென்று கதவைத் திறந்தான். பிறகு ஒரு சர்ப்பம் போல கிடைத்த இடைவெளியில் நழுவினான்.

 

அவள் அழகாக இருந்தாள். அவளை இதுவரை பார்த்ததில்லை. அதனால் இன்னும் அழகாக இருந்தாள். ஆனால் என்னைப் பார்த்த பார்வையில் நட்பு இல்லை.

 

“உள்ளே வாங்க..” என்னும் வார்த்தை என்னிடமிருந்து ஈனஸ்வரத்தில் வந்தது.

 

முகத்தில் விழுந்த கற்றை முடியை ஒதுக்கியவாறே உள்ளே வந்தவள் உயரமாகவும் இருந்தாள்.

 

“செருப்பு.. வெளியே.. ” என்று சொல்ல வந்தவன் அவள் அறையைப் பார்த்து முகம் சுளித்ததைக் கண்டு “கால்ல கூட போட்டிருக்கலாம்.. தப்பில்லை… அதுக்குதானே செருப்பு?” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

 

நின்றபடியே என்னைத் தலைமுதல் கால் வரை பார்த்தாள். ஒன்று மட்டும் புரிந்தது. அவள் ஐடியா கேட்க வந்தவள் இல்லை.

 

“டேய்… நீதான் ஊருக்கே இந்த மாதிரி உருப்படாத ஐடியா எல்லாம் கொடுக்கறதா?”

 

என்னது ‘டேய்’யா? எனக்கும் கொஞ்சம் கோபம் வந்தது.

 

“மொதல்ல நீ யாருன்னு சொல்லு” என்று ஒருமையில் இறங்கினேன். அவளும் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

 

“உங்க ஏரியாவுல நீ எப்படி மாமாவோ.. எங்க ஏரியாவுல நான்…” என்றாள்.

 

“என்னது மாமாவா?”

 

“நீ பண்றது அந்த வேலைதானே?” எனது கொள்கை கோட்பாடு எல்லாம் நினைவுக்கு வந்தது. ஒரே நொடியில் அசிங்கப் படுத்திவிட்டாளே. ஆனால் அவள் செருப்பு அணிந்திருந்த ஒரே காரணத்தால் அவளை மன்னித்தேன்.

 

“ஆமாண்டா… இத பாரு.. உன்கிட்டே ஐடியா கேட்டுட்டு அந்தப் பசங்க ஏரியா பொண்ணுங்களையெல்லாம் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. அவங்க உதவிக்கு என்கிட்டே வராங்க… அவங்களுக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்றேன்.”

 

 

“ஹெல்ப்னா?”

 

“போனா போவுதுன்னு பையனை ஒரு வாட்டி வார்ன் பண்றது… அப்படி மசியலைன்னா கையக்கால உடைக்கிறது. பை தி வே.. நான் கராத்தேல ப்ளாக் பெல்ட்.. அதுக்கும் அடங்கலைன்னா போலீஸ்ல புடிச்சுக் குடுக்கறது.. பை தி வே.. எங்க மாமா போலீஸ் எஸ்பி.. இப்படி ஏதாவது பண்ணுவேன்…”

 

கையில் ஸ்கூட்டி சாவியை சுழற்றியபடி அவள் சொல்லிக் கொண்டே போனாள். போலீஸ் என்றதும் எனது குண்டலினி, சப்த நாடி, சப்தமில்லாத நாடி எல்லாம் ஒடுங்கிவிட்டது. குருஜி வீரமாக மலையேறும் நேரம் வந்துவிட்டது.

 

“அவனுங்களை ஒவ்வொருத்தனா அடிக்க முடியலை.. வந்துட்டே இருந்தானுங்க… அதுதான் யாரு மாஸ்டர் மைண்டோ அங்கேயே வந்துட்டேன்…” அவள் கைகளைப் பார்த்தேன். நீளமாக சாட்டை போலிருந்தன. கராத்தே இல்லாமல் அடித்தாலே எக்கச்சக்கமாக வலிக்கும். சிங்கிள் டீக்கும் வறண்ட பன்னுக்கும் எதற்காக அடிவாங்க வேண்டும்.

 

“உங்களுக்கு என்னங்க வேணும்?” இப்போது மரியாதை திரும்பியிருந்தது.

 

“நீ தீனி திங்கணும்ங்கறதுக்காக இந்த மாதிரி பசங்களை உசுப்பேத்தி விடறதை நீ நிறுத்தணும். ” என்றாள். தொழில் ரகசியத்தை எவனோ லீக் செய்து விட்டான் ராஸ்கல்.

 

“இதோ பாருங்க.. இங்கே எதையும் நிறுத்த முடியாது. என்னைப் பொறுத்த வரைக்கும் காதல்ங்கிறது பீர் பாட்டில் மாதிரி.. ஒரு தடவைதான் திறந்துட்டா குடிக்காம விட முடியாது… ஏன்னா அப்புறம் கேஸ் போயிடும்…” இப்படியெல்லாம் தொடங்கி நீளமாகப் பேசினால் அடித்துவிடுவாள் என்று தோன்றியதால் “சரிங்க” என்றேன் மின்னல் வேகத்தில்.

 

“மறுபடி எவனுக்காவது ஐடியா கொடுத்தேன்னு கேள்விப்பட்டேன்னு வையி.. ” என்று கையைக் கத்தி மாதிரி வைத்து கராத்தே ஸ்டைலில் ஏதோ காண்பித்தாள்.

 

“வன்முறையெல்லாம் எதுக்குங்க.. நான்தான் இனி யாருக்கும் ஐடியா தரமாட்டேன்னு சொல்லிட்டேனே.. தேவையும் இல்லை..” என்றவாறு கதவைத் திறந்து அவளுக்கு வழிவிட்டேன்.

 

அவள் வெளியேறத் தயாரானாள். நான் அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வியைக் கேட்டேன்.

 

“ஆமா.. நீங்க எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுத்து இதெல்லாம் செய்யறீங்க?”

 

அவள் என்னை ஒரு வினாடிதான் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு அடிபட்ட மென்சோகம் எட்டிப்பார்த்தது. என் கண்களிலும் அவள் அதைப் பார்த்திருக்கக் கூடும். உடனே சுதாரித்துக் கொண்டு தலைமுடியை ஒதுக்கினாள். ஆனால் பதில் சொல்லவில்லை.

 

“விடுங்க.. எனக்கு எல்லாம் தெரியும்… உங்களுக்குன்னு ஒருத்தன் பொறக்காமலா இருந்திருக்கப் போறான்..? கவலைப்படாம போங்க..”

 

அவள் பதில் பேசாமல் படி இறங்கத் தொடங்கினாள்.

 

“ஏதாவது ஐடியா வேணும்னா தயங்காம வாங்க…” என்று கூவினேன். அவள் திரும்பாமல் நடந்தாள். ஆனால் ஒரு புன்னகையை அவள் முதுகின் வழி காண முடிந்தது போலிருந்தது.இருந்தாலும் சந்தேகமாக இருந்தது.

 

பால்கனி வழியா பாத்துட்டே இருந்தேன்… அவ தெரு முனைக்குப் போயிட்டா.. சரி அவ்வளவுதான்னு இருந்தேன். அப்ப்போ… அப்போ… கடைசியா திரும்பி ஒரு லுக்கு விட்ட்ட்டா பாருங்க… அதுல ஒரு பத்தாயிரம் வோல்ட் மின்சாரம்.. ஹைட்ரோ குளோரிக் அமிலம் எல்லாமே இருந்த்…

 

ஹலோ.. பாஸ்..என்ன ஆச்சு?ஏன் உங்க வாய் ஒரு பக்கமா கோணுது?ஏன் மயங்கி விழறீங்க?ஹலோ..