உலகில் தூக்கம் தொடர்பாக நடத்தப்படும் ஆய்வுகள் எண்ணற்றவை, அந்த ஆய்வுகள் அனைத்தும் மனிதனுக்கு ஏற்படும் மிக முக்கிய நோய்கள் யாவும் தூக்கமின்மையின் காரணமாகவே வருவதாக தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக இன்றைய காலக்கட்டத்தில் பெரியவர்களை விடவும் குழந்தைகளே தூக்கமின்மை நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் எனும் அதிர்ச்சியளிக்கும் செய்தியையும் பல ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இந்த ஆய்வுகளின் முடிவில் இதற்கான காரணங்களாக ஆய்வாளர்கள் தெரிவிப்பது என்னவெனில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சரியாக கவனிக்காததும், தொழில்நுட்ப வளர்ச்சியுமே இதற்கு காரணம் என கூறுகிறது.

தகவல் தொழில்நுட்பங்கள் அதீத வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலத்தில் அதன் நன்மைகள் பல இருந்தாலும் அதன் தீமைகளும் ஏராளமே. அந்தவகையில் குழந்தைகள் விரைவில் அதற்கு அடிமையாகிறார்கள்.

தூக்கமின்மையின் அபாயங்கள்:

ஒரு குழந்தை சராசரி ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். அதற்கு குறைவாக தூங்கும் குழந்தைக்கு மூளை மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குனர் திரு.பாலசுப்பிரமணியன் கூறும் போது, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இரவில் தாமதமாக வருவதால் அந்த குழந்தை தூங்கும் நேரம் முறையாக இல்லாமல் தூக்கம் பாதிக்கப்பட்டு, தொலைக்காட்சிக்கும், சமூகவலைதளங்களுக்கும் அடிமையாவதாக தெரிவித்தார்.

மேலும் ராமச்சந்திரா மருத்துவமனையின் நுரையீரல் மற்றும் தூக்க நிபுணர் திரு. முத்துராஜா கூறுகையில், ஒரு குழந்தைக்கு போதிய தூக்கம் இல்லாமல் போனால் நுரையீரல் மற்றும் இருதயம் விரைவில் பாதிக்கப்படுவதோடு, காலை நேரத்தூக்கம், மூளை மங்குதல், சோர்வு, எரிச்சல், மன அழுத்தம் ஏற்ப்படுவதோடு படிப்பிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு அக்குழந்தையின் எதிர்காலம் பாழாகும் அபாயமும் உள்ளதாக’ பல அதிர்ச்சியளிக்ககூடிய தகவல்களை அவர் தெரிவித்தார்.

பெற்றோர்களின் பங்கு:

பெரும்பாலும் மாநகரங்களில் வாழும் பெற்றோர்கள் தங்கள் பொருளாதாரத்தையும் சமூக அந்தஸ்தையும் மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே தமது கவனம் முழுவதையும் செலுத்தி வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் போதிய நேரத்தை செலவழிக்காததும், சரியான பழக்க வழக்கங்களை கற்றுத்தராததன் விளைவே குழந்தைகள் இது போன்ற  விஷயங்களுக்கு அடிமையாகிறார்கள் என்பதே பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

இன்றைய காலத்தில் கணவன் – மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள்,அப்படி செல்லும் பெற்றோர்கள் முடிந்த அளவு தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி அவர்கள் நடவடிக்கைகள் பற்றி குழ்ந்தைகளிடமே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். நல்ல பழக்க வழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டும். தூங்குவதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி அதே நேரத்தில் தூங்கவும் குழந்தைகளை பழக்கப்படுத்த வேண்டும். சமூக ஊடகங்கள், வீடியோ கேம்ஸ் போன்ற  விளையாட்டுகளுக்கு பதிலாக புத்தகங்களை படிக்க அறிவுருத்த வேண்டும். இவ்வாறு நல்ல சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதன் மூலம், மனதளவிலும், உடலளவிலும் அக்குழந்தை அரோக்கியமாக வளரும். அச்சூழலை ஏற்படுதுவது பெற்றோரின் முக்கிய கடமை.