அசைவறு மதி 12

என் மகள் ப்ரீகேஜி வகுப்பில் படித்தபோது ஒருமுறை பெற்றோர்களுக்கானக் கூட்டம் நடந்தது. அப்பொழுது வந்தப் பெற்றோர்களுக்கு , பள்ளியில் குழந்தைகளுக்கு எப்படியெல்லாம் பயிற்சி தந்திருக்கிறார்கள் , மற்றும் அப்படியானப் பயிற்சியின்போது குழந்தைகளின் செயல்திறனை, கற்றல் திறனை, பொதுவான அறிவுத்திறனை வெவ்வேறு அளவைகளில் அளவிட்டு மதிப்பிட்டு இருந்தார்கள். இப்பொழுது எல்லாம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மார்க் போடுவதில்லை. நன்று மிகநன்று கவனம் இப்படியும்,

நட்சத்திரம், ஐஸ்க்ரீம், ஸ்மைலி இப்படியும்சில அலங்கார வார்த்தைஜாலத்திலும் தான் சொல்வார்கள். இது ஒரு மாதிரியான நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்குப் பரப்பும் என்ற நம்பிக்கை . உதாரணத்திற்குக் கணக்குப் பாடம் சம்பந்தமான விளையாடல்களில் நல்ல முறையில் செயல்படுகிறாள், சிறப்பான முறை, பரவாயில்லை, இன்னும் கவனம் செலுத்தினால் சிறப்பாய் மாறுவாள் போன்ற அலங்கார வாக்கியங்களில் திறனாய்வு செய்து ஒரு பட்டியல் தந்திருந்தார்கள்.

வண்ணம் பூசுதல் நிகழ்வு ஒன்று வைத்திருந்திருக்கிறார்கள். அதில் வண்ணம் பூசுதல் மற்றும் வரைதல் மூலமாகக் கலையில் எவ்வளவு ஆர்வம் செலுத்துகிறது குழந்தை என்று காண்பிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால்,  சில பெற்றோர்களுக்கு அவர்கள் குழந்தை அவ்வளவு வரைகிறதா என்றே தெரியவில்லை.

சில பெற்றோர்களுக்குக் கொடுத்தப் பணத்திற்கு வேலை நடந்துவிட்ட திருப்தி, அவ்வளவே அவர்களது மன நிலை.

கதை சொல்லல் நிகழ்வு பற்றிய ஒரு திறனாய்வு. கதையைச் சொல்கிறார்கள். குழந்தைகள் எப்படிக் கவனிக்கிறார்கள் என்று திறனாய்வு செய்கிறார்கள்.அந்தக் கதையைக் குழந்தைகளிடம் திரும்பிக் கேட்டு இருக்கிறார்கள். கதையைப் பாதியில் சொல்லாதக் குழந்தைகளுக்குக் கவனத்தில் ஈடுபாடு பற்றிப் பேசுகிறார்கள்.

எனக்குத் தெரிந்து வகுப்பில்  பாதி குழந்தைகள் கதையை நீட்டித்தோ அல்லதோ மாற்றியோ சொல்லியுள்ளனர்.

அதை சைக்காலஜியின் அடிப்படையில் creativity  கற்பனைத்திறன், படைப்புத்திறன் என்பதன் அடிப்படையில் திறனாய்வு செய்துள்ளனர்.

தானாகவே கதைகளைச் சொல்லும் திறனை எப்படி எல்லாம் யோசிப்பது.  பொதுவாகக் குழந்தைகள் குறிப்பாய் ,மூன்று நான்கு வயதுகளில் நிறைய பேசுவார்கள். நம்முடன், பொம்மைகளுடன், விலங்குகளுடன் இப்படி. ஒரு பொம்மையை ஒரு மாணவியாகப் பாவித்து தன்னை அவளது ஆசிரியையாகப் பாவித்து தனக்கு வந்த ஆசிரியையை வெளிக்கொணர்வார்கள்.இது எல்லாம் ஒரு திறன். ஆர்வத்தின் வெளிப்பாடு. ஒரு கற்பனையில் தனக்குத் தெரிந்தவற்றைச் செய்து அந்தக்கற்பனையை உயிர்ப்புடன் வைத்துக்கொள்வர்.

அப்படியானக் கற்பனைத் திறன்,படைப்புத்திறன் அதனுடன் சேர்ந்து மிகவும் அற்புதமான இன்னொரு ஒரு குணம் இருக்கிறது. அது குழந்தைகளிடம் சாத்தியப்படுகிறது. அது என்ன குணம் என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன் அந்தக் குணத்தை வெளிப்படுத்துவதற்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு வியாபாரி இருந்தார். அந்த வியாபாரி தன்னுடைய பணம் எல்லாத்தையும் கொள்முதலா போட்டு வியாபாரம் பண்ணக்கூடியக் காலகட்டம்.

நல்ல வியாபாரம் போய்க்கொண்டிருந்தச் சமயத்தில் அவருக்கு முதலீடு செய்ய பணம் இல்லை.  அந்த வியாபாரி,அந்த ஊர்ல இருந்த ஒரு வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு நிலச்சுவாந்தாரிடம் பணம் கேட்டார்.  அந்த நிலச்சுவான் தார் ஒரு தந்திரம் படைச்சவன். குள்ளநரிக்காரர் என்று சொல்வோமே அப்படியான ஆள்.

கொஞ்சம் வயசானவன். பார்க்கவே அசிங்கமானவன். அவனுக்குக் கல்யாணம் ஆகாமல் இருந்தது. இந்த வியாபாரிக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள் மீது இவனுக்கு ஏற்கனவே கண் இருந்தது.

வியாபாரிக்குப் பணம் கொடுத்து மகளைக் கடன்காரன் ஆக்கி, அந்த அழகான மகளைக் கல்யாணம் செய்யலாம்னு மனதிற்குள் கணக்குப் போட்டு வியாபாரிக்குக் கடன் கொடுத்தான். அவன் நேரம், ஊருக்குள் பஞ்சம் வந்து வியாபாரம் குறைந்து வியாபாரியினால் வாங்கியக் கடனைக் கொடுக்கமுடியாமல் போனது.

கடனிற்கான வட்டியை வசூலிக்க வந்தவனிடம் அடுத்தமுறை தருவதாகவே ஒவ்வொருமுறையும் கூறிக்கொண்டு வந்தார் வியாபாரி. இந்தச் சமயத்தை எதிர்பார்த்தத் தந்திர நிலச்சுவான் தார் , பணத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக உன் மகளைக் கொடு என்றுவிட்டான்.

அப்பாவிற்கும் , மகளுக்கும் கவலை அதிகமாகிவிட்டது. ஊருக்குள் பலவாறு பேச ஆரம்பித்தார்கள். பணக்காரனைக் கல்யாணம் செய்துகொண்டு, அப்பாவின் கடனை அடைக்கலாம் என்று சிலர் பேசத் தொடங்கினர். சிலர் , அப்பா தன்னுடையக் கடனை அடைத்து தன் மகளைக் காப்பாற்றி ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டுமெனப் பேசினர்.  ஒரு நாள் கடன் கேட்டு வந்த நிலச்சுவான் தார் அவர்கள் முன் ஒரு விளையாட்டு விளையாட முடிவு செய்தான். மகளைக் கல்யாணம் செய்ய இதை விட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்று முடிவு செய்து வந்திருந்தான். அவர்கள் தோட்டத்திற்குள் கற்குவியலாக இருந்த ஓர் இடத்திற்கு  அப்பாவையும் மகளையும் வேறு சில அவனுக்கு ஆதரவான  பொதுமக்களையும் அழைத்து ஒரு பையை எடுத்தான்.

அங்கு இருக்கும் கருப்பு மற்றும் வெள்ளைக் கற்களை எடுத்து அதில் போடுவானாம். மகள் கண்களை மூடிக்கொண்டு கற்களில் ஒன்றை எடுக்க வேண்டும்.

கருப்புக் கல்லை எடுத்தால், அவள் அவனை மணம் முடிக்க வேண்டும், கடன் எல்லாம் தள்ளுபடி.

வெள்ளைக் கல்லை எடுத்தால் கடனும் திரும்ப வேண்டாம், மகளும் வேண்டாம். இந்த விளையாட்டிற்கு வரச்சொல்லி, தந்திரம் படைத்த நிலச்சுவான் தார்  யாரும் கவனிக்காத நேரத்தில், கீழிருந்து இரண்டு கற்களுமே கருப்புக்கல்லாய் எடுத்து பைக்குள் போட்டான்.

அதை மகள் கவனித்து விட்டாள். இப்பொழுது பையை நீட்டி கண்ணை மூடி ஒரு கல்லை எடு என்றான் நிலச்சுவான்தார்.

இப்பொழுது அந்த மகளுக்கு இருந்த வாய்ப்புகள் என்னென்ன என்று பார்க்கலாமா

  1. உள்ளுக்குள் இருக்கும் கற்களைப் பாருங்கள் என்று ஊரைக்குக் காண்பிக்கக் கத்தலாம். நிலச்சுவான்தாரின் ஏமாற்றுவேலையைக் காட்டிக்கொடுக்கலாம். ஆனால் கடன்?
  2. எந்தக் கல் எனத் தெரிந்துவிட்டது. அதை ஏற்றுக்கொண்டு அப்பாவின் மனக் கஷ்டத்தை நீக்க, அந்த ஏமாற்றுக்காரனைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கொள்ளுதல். ஆனால் வாழ்க்கை?
  3. ஆனது ஆகட்டும் எந்தக் கல்லையும் எடுக்கப்போவதில்லை என நிராகரித்தல்.

இது தவிர வேறு என்னென்னலாம் செய்யமுடியும். ஆனால் அந்த மகள் செய்தது தான் மாயாஜாலம்.

பைக்குள் கையை விட்டாள்.

கண்களை மூடிக்கொண்டாள்.

நிலச்சுவான் தாருக்கு மனதிற்குள் சந்தோஷம் கூத்தாடியது. அவனது குள்ளத்தந்திரம் ஜெயிக்கப்போகிறதென்று.

பைக்குள் கையை விட்ட மகள் வேகமாக எடுத்தக் கல்லை காலுக்குக் கீழிருக்கும் கற்குவியலில் தவறவிடுவதாய் பாவ்லா செய்து , ஐயோ கல் கீழே விழுந்துவிட்டது எனக் கத்தினாள். அங்கு நிறைந்த நிறையக் கற்குவியலில் எந்தக் கல் எனத் தெரியவில்லை.

ஆனால் பைக்குள் எந்த நிறத்தில் கல் இருக்கிறது என்று பாருங்கள். உள்ளே கருப்பு இருந்தால் நான் எடுத்தது வெள்ளைக் கல் , உள்ளே வெள்ளை இருந்தால் நான் தவறவிட்டது கருப்பு என்றாள்.

ஆச்சர்யமாக அப்பா உள்ளே எட்டிப் பார்த்து உள்ளே கிடப்பது கருப்பு எனக் கத்தினார்.  பொதுமக்கள் அனைவரும் கடனும் இல்லை பொண்ணும் இல்லை அந்த வெள்ளைக் கல்லுக்கு எனக் கத்தினர்.

நிலச்சுவான் தாரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

இந்தக் குணத்தைத்தான் think out of box  என்று உளவியல் உலகம் கதை கூறி விளையாடுகிறது.  கட்டத்திற்கு வெளியே யோசித்தல்.

கற்பனைத்திறன் படைப்புத்திறன் மற்றும் கட்டத்திற்கு வெளியே யோசித்தல் போன்ற குணங்களுடன் தான் குழந்தைகள் இன்று பிறக்கின்றன. நாமும் அப்படித்தான் பிறந்தோம். ஆனால் காலம் செல்லச்செல்ல நாம் எப்படி மாறுகிறோம்.நமக்குள் இயற்கையாக இருக்கும் சில குணங்கள் குழந்தைமையிலிருந்து நாட்கள் ஆக ஆக, எப்படி மாறுகின்றன. வெகு சிலர் மட்டும் தான் அப்படியானக் குணங்களைத்  தக்கவைத்து வாழ்கின்றனர். அப்படித் தக்கவைத்து வாழும் அந்தச் சிலர் தான் வாழ்க்கையில் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள். பலர் பலசூழ்நிலைகளில் என்னென்னமாதிரி முடிவு எடுக்கவேண்டும் என்பதில் குழப்பமுற்று தோல்விகளைச் சந்திக்கிறார்கள்.

அப்படி என்றால் குழந்தைகளாகவே இருக்கமுடியுமா? சாத்தியமா அது. இல்லை அல்லவா. குழந்தைகளிடம் இருக்கும் அசாத்தியக் குணநலன் களை மறுபடியும் மீள் பார்வையில் என்றாவது நாம் பார்த்திருக்கிறோமா, அல்லது அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள விரும்பியிருக்கிறோமா. ஒரு படத்தைப் பார்த்த மாத்திரத்தில் வரையத் துடிக்கும் சிறு குழந்தையாகத்தானே நாமும் இருந்திருக்கிறோம். ஏன் ஒரு புது முயற்சியை நாம் எடுப்பதற்கு இவ்வளவு யோசிக்கிறோம். எந்த விதத் தடங்கலும் யோசனையில் அற்று குழந்தைகள் ஒரு விசயத்தைப் புதியதாக ஆரம்பிப்பதைப்போல ஏன் நம்மால்  ஆரம்பிக்கமுடியவில்லை .வழங்கப்பட்ட அல்லது கதையை நீட்டிப்பதற்கும் அதிலிருந்து இன்னொரு படைப்புத்திறனை உபயோகப்படுத்தி எப்படி குழந்தைகளால் சாத்தியப்படுகிறதோ அப்படித்தானே நாமும் இருந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் நாம் பிறழ்வாய் மாறினோம்.

கட்டத்திற்கு வெளியே யோசித்தல் பற்றியும் அதாவது think out of box and lateral thinking  பற்றியும் இப்பொழுது இவ்வளவு வகுப்பு நடத்தி உரை நிகழ்த்தி நாமும் செலவளித்து அந்தந்த வகுப்புகளைக் கவனிக்கிறோமே , குழந்தையாயிருக்கும்பொழுது நமக்குள்ளே இருந்த அந்த அற்புதமானக் குணங்கள் எப்படி அழிந்தன. அல்லது எப்படி அழித்தோம். கொஞ்சம் குழந்தைமைக்கு நகர்வோமா..

உங்களுக்கு ஒரு கேள்வி.

உங்களுக்குக் குழந்தைகளிடம் பிடித்து நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் ஏதாவது மூன்று குணங்கள் யாவை?

அதை கமெண்ட்டாக பதிந்து வையுங்கள்.

அசைவறு மதியும் குழந்தைமையும் இனி பகிர்வோம்……..