மேலும் ஒரு அதிர்ச்சியை பாஜக இந்த நாட்டிற்குப் பரிசளித்துள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட சாந்த்வி ப்ரக்யாவை பாஜக சார்பாக போபால் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது. முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌகான், “சாந்த்வி இந்தியாவைப் பாதுகாப்பதற்கென்றே பிறந்தவர்” என்று புகழாரம் சூட்டினார்.

பாஜகவின் மற்ற தலைவர்கள், “இந்துக்களை அவமதிப்பதற்கென்றே சாந்த்வி மீது போலியான

குற்றம்சாட்டி காங்கிரஸ் சதி செய்துள்ளது.” என்றனர். கடந்த மாதம் வர்தா மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் மோடி, “காங்கிரஸின் இந்த செயலுக்கு ஹிந்துக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.

இதில் என்ன ஒரு முரண்பாடு என்றால் ஹிந்துத்வாவின் காவலராக பாஜகவின் முகமாகச் செயல்படும் சாந்த்வியை தீவிரவாத குற்றங்களுக்காக முதலில் கைது செய்தது பாஜக தான். இது சௌகான் மத்தியப் பிரதேச முதல்வராகா இருக்கும்போது நடந்தது.

செப்டம்பர் 23, 2008 இல் சாந்த்வியுடன் மொத்தம் எட்டு பேரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷியை கொலை செய்த குற்றத்திற்காக முதல்வர் சௌகான் உத்தரவின் பேரில் காவல்துறை கைது செய்தனர்.

“முன்னாள் முதல்வர் சௌகான், சாந்த்வியை வேட்பாளராக அறிவிக்கும் முன்பு அவர் வெடிகுண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவந்தவர் என்பதை மறந்து அவர் தான் இந்த தேசத்தின் பாதுகாவலர் எனறு சொல்கிறார் போலும்” என் காங்கிரஸின் பிரதிநிதி பங்கஜ் சதுர்வேதி தெரிவித்தார்.

மேலும் அவர், “சாந்த்வி, சுனில் ஜோசியின் கொலைக்காக 2008 மற்றும் 2011 என இரண்டுமுறை சௌகான் ஆட்சியில் இருக்கும்போது தான் கைது செய்யப்பட்டார். வெடிகுண்டு மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி இந்த தேசத்தின் பாதுகாவலராக இருப்பார் என சௌகான் கண்டிப்பாக இந்த மக்களுக்கு விளக்க வேண்டும்” எனக் கேள்வியெழுப்பினார்.

போபால் தொகுதியில் காங்கிரஸின் பலமிக்க வேட்பாளர் திக்விஜய் சிங்கை எதிர்த்து சாந்த்வி ப்ரக்யாவை நிறுத்தியுள்ளது பாஜக.

1989 இல் இருந்து இது வரை பாஜக போபால் தொகுதியில் தோற்றதே இல்லை. இங்கு இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம். தற்போதைய முதல்வர் கமல்நாத் காங்கிரஸ் பலவருடங்கள் ஜெயிக்காத இந்த தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து திக்விஜய் இந்த சவாலான பணியை ஏற்றுக்கொண்டார்.

சுனில் ஜோஷி கொலை வழக்கு

மெக்கா மஜ்ஜித், சம்ஜெளதா, மாலேகான் போன்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான சுனில் ஜோஷி, டிசம்பர் 29, 2007 அன்று கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லி சாந்த்வி மற்றும் சிலரை தேவாஸ் காவல்துறை அக்டோபர் 23, 2008 இல் கைது செய்தது. ஆனால் மார்ச் 25, 2009 இல் தேவாஸ் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அந்த வழக்கு மூடப்பட்டது. சாந்த்வியுடன் மற்றவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

ஜூலை 9, 2010 இல் மத்தியப் பிரதேச காவல்துறை கொலை வழக்கை மீண்டும் விசாரித்து, சாத்வி தாக்கூர் மற்றும் நான்கு பேரை சம்ஜெளதா, மாலேகான் குண்டுவெடிப்புகளுக்குக் குற்றம் சாட்டினார்.  இந்த சதித்திட்டத்தை சுனில் ஜோஷி அம்பலப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

சாத்வி தாக்கூர் குற்றம் சாட்டப்பட்ட அந்த மாலேகான் குண்டுவெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குற்றப்பத்திரிக்கையில் ஜோஷி கொலையான அன்று  சாத்வி தாக்கூர் இந்தூரில் இருந்தார் அவருடைய செல்போனில் அதில் சம்பந்தப்பட்டவர்களுடன் அவர் தொடர்ந்து பேசி இருக்கிறார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி 2014 இல் பிரதமரான பிறகு இந்த வழக்கு தேவாஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அதன் பின் பிப்ரவரி 1, 2017 நீதிமன்றம் அனைவரையும் குற்றமற்றவர்கள் என்று விடுவித்தது.

குண்டு வெடிப்பு என்பது தீவிரவாதிகளின் செயல். அப்படிப்பட்ட ஒரு கொடுஞ்செயலில் மூன்று முறை ஈடுபட்டு குற்றவாளி என நீதிமன்றம் தண்டித்த ஒருவரை எந்த தயக்கமும் இன்றி பாஜக தனது வேட்பாளராக நிறுத்துகிறது என்றால் அது மக்களின் மீதும் இந்த நாட்டின் சட்டம் ஜனநாயகத்தின் மீதும் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.