உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின், 5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த 10
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.

கார்த்திகை மாதம்.

மழை பாட்டம் பாட்டமாகப் பெய்து கொண்டிருக்கிறது.

எங்கள் வீட்டில் எங்கள் திருணைக்கு நேர் மேலே எங்கள் கூரையில் ஊர்க்குருவி ஒரு கூடு கெட்டிருக்கு. கூட்டுக்குள்ள இரண்டு பெரிய குஞ்சுகள் இருக்கு. கூட்டின் வாசலில் அம்மாக்குருவி உக்காந்துக்கிட்டுருக்கு.

வெளியே போன அப்பாக்குருவி இப்பத்தான் வந்துருக்கு. அப்பாக் குருவி உடம்பில் மொரண்டை மணம் மணந்து கொண்டிருக்கிறது.

அப்பாக்குருவி கூட்டுக்குள் வேகமாக நுழைகிறது.

அம்மாக்குருவியும், பிள்ளைக்குருவிகளும் சேர்ந்து கொண்டு அப்பாக்குருவியைக் கூட்டுக்குள் நுழையவிடாமல் கொத்தித் துரத்துகின்றன.

அப்பாக்குருவிக்கு ‘சின்னவீடு’ இருக்கு. இவ்வளவு நேரமும் சின்ன வீட்டில் தங்கிட்டு சொந்தக் கூட்டுக்கு இப்பத்தான் வந்துருக்கு இந்த அப்பாக்குருவி.

கணவனின் ஒழுக்கக் கேட்டை மனைவி மோப்பம் பிடித்துவிட்டது.

கணவனுக்குப் பாடம்புகட்ட கணவனைக் கூட்டைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறது மனைவி.

அப்பாக்குருவி அவமானப்பட்டுக்கிட்டு நொந்துபோய் ஒத்தீல உக்காந்துக்கிட்டுருக்கு.

அப்பாக்குருவி மழையில நனைந்திருக்கிறது. அப்பாக்குருவியைத் தூவானம் நனைத்துக் கொண்டிருக்கிறது. அப்பாக்குருவி குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது.

குளிரில் நடுங்கிக்கொண்டும், தூவானத்தில் நனைந்து கொண்டும், அவமானத்தோடும் தனியாக உட்காந்திருக்கிற கணவனை அம்மாக் குருவி கருணையோடு பார்க்கிறது. கணவன் மேல் அம்மாக்குருவிக்கு இரக்கம் ஏற்படுகிறது. கணவனைத் தன்னிடம் வரும்படி ஈரநெஞ்சோடு அழைக்கிறது அம்மாக்குருவி.

எங்கள் வீட்டில் எங்கள் திருணைக்கு நேர்மேலே எங்கள் கூரையில் ஊர்க்குருவிகள் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிற சிர்ப்புச்சத்தம் அழகாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

உம்பர்காட்டு இளங்கண்ணனார்
நற்றிணை 181