ந்த டிஜிட்டல் யுகத்தில் ஃபேஸ்புக் பதிவோ அல்லது வாட்ச்ஸ்ஆப் செய்தியோ அதன் சக்தி என்னவென்று தெரியவேண்டுமா?

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசாரை புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியா விடுத்த கோரிக்கைக்குச் சீனா முட்டுக்கட்டை போடுவதாகச் செய்தி வெளியானது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூட இதைத் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தது. ஆனால் இவையனைத்தும் தீயகப் பரவும் ஒரு போலியான செய்தியை அடிப்படியாக வைத்துத்தான் என்பதுதான் அதிர்ச்சியே.

நமோ (NAMO) எனப்படும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றில் இந்தச் செய்தி வெளியானது. சீனா அப்படியேதும் அறிவிக்கவில்லை இந்தச் செய்தி பொய்யானது என்று ‘தி குயிண்ட்’ பத்திரிக்கை தெரிவிக்கிறது.

உண்மையென்னவென்றால் சீனா இந்த விவகாரத்தில் எந்தநிலையும் எடுக்காமல் இதுதொடர்பாக முடிவெடுக்க காலவகாசம் தேவை என்ற காரணத்தை ஐ.நா சபையில் தெரிவித்துள்ளது.

இதே ஃபேஸ்புக் பதிவு, மக்களை வரும் தேர்தலில் பாஜகவிற்கு எதிரான கட்சிகளுக்கு ஓட்டு போதும் முடிவைப் பரிசீலிக்கச் சொல்கிறது. இதை விக்ரமா சர்மா என்பவர் எழுதி இருப்பதாகத் தெரிகிறது.

யார் இந்த விக்ரமா சர்மா? இவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் நமோ பக்கத்தின் ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் செய்தி மட்டுமல்ல இதே போலப் பல போலியான செய்திகளை இந்த பக்கம் பலமுறை வெளியிட்டுள்ளது.

இன்னொரு பதிவில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் பாலகோட்டில் 200 பேர் இறந்ததாக வீடியோ பதிவிட்டு அது இணையம் முழுக்க வேகமாகப் பரவியது. ஆனால் அது வேறெங்கோ எப்போதோ நடந்த வீடியோவாகும்.

அதே போலக் கேரளா பல்கலைக்கழக மாணவ தேர்தலில் ஆர்‌எஸ்‌எஸ் அங்கீகரிப்பட்ட மாணவ அமைப்பான ABVP வெற்றிபெற்றதாகப் போடப்பட்ட பதிவும் போலி.

இந்த விக்ரமா சர்மா நமோ ஃபேஸ்புக் பக்கத்தில் மட்டுமல்லாது PMO india ரிபோர்ட் கார்ட் மற்றும் BJP4UP என்று பல ஃபேஸ்புக் பக்கங்களை நடத்துகிறார்.

தி குயிண்ட் பத்திரிக்கை விக்ரமா சர்மாவிடம் இது பற்றிக் கேட்டபோது, தான் இடும் பதிவுகளுக்கான எல்லா தகவலும் பாஜகவின் ஐ‌டி பிரிவிலிருந்தே தரப்படுவதாக தெரிவித்தார். என்னுடைய பதிவுகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து இரு மாதங்களுக்கு முன்னர் PMO india  பக்கத்திற்குத் தன்னை எழுத அழைத்ததாகக் கூறினார். இப்போது பாஜகவின்‌ ஐ‌டி பிரிவு தரும் தகவல்களை நான் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப்பில் வெளியிடுகிறேன். ஏனெனில் என் பதிவுகள் தினமும் 1 கோடி பேரைச் சென்றடைகிறது என்றும் தனக்கு 6 ஃபேஸ்புக் பக்கங்கள், 30 வாட்ஸ்ஆப் குருப்கள், 15 ஃபேஸ்புக் பக்கங்களும் உள்ளதாகக் கூறினார்.

ஆனால் தனக்கு வரும் பல தொல்லைகளால் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்கிவிட்டதாகச் சொன்னார். மேலும் அவர் பாஜகவின் அடிப்படை கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிவிட்டதாகச் சொன்னார்.

தன்னுடைய இந்த சமூக வலைத் தள வெற்றியால் இவர் பாஜகவில் பல தலைவர்களின் நெருக்கத்தைப் பெற்றார். இவரது பக்கத்தில் கமல் சர்மாவை இவர் அணைத்தபடி இருக்கும் படம் உள்ளது. கமல் சர்மாவும் இவரைப் பற்றி விக்ரமா எங்களின் தீவிரமான சமூக வலைத்தள போராளி என்று குறிப்பிடுகிறார்.

விக்ரமா சர்மா தனது ஒரே லட்சியமாகக் குறிப்பிடுவது மீண்டும் மோடியைப் பிரதமராக்குவதுதான் என்றார்.

 

ஒரு கட்சி அது எவ்வளவு மோசமான ஆட்சியைக் கொடுத்தாலும் மக்களுக்கு  மறக்கவியலாத துன்பங்களைக் கொடுத்தாலும் மீண்டும் அரியணையேற இது போன்ற வதந்திகளையும் போலிச் செய்திகளை பரப்புபவர்களையும் இந்த அளவுக்குத் தீவிரமாக நம்புகிறது என்றால் அது நம் மறதியின் மீதுள்ள நம்பிக்கையா அல்லது மக்கள் அவ்வளவு அறியாமை கொண்டவர்களா என்பதை வரும் தேர்தல் சொல்லிவிடும்.