1

இன்னும் எவ்வளவு காலம்

 

இன்னும் எத்தனை

வீதிகளில் அமர வேண்டும்?

இன்னும் எத்தனை

அடையாளங்களைக் காட்ட வேண்டும்?

இன்னும் எத்தனை

கோஷங்கள் இட வேண்டும்?

இன்னும் எத்தனை

சாலைகளில் ரத்தம் சிந்த வேண்டும்?

இன்னும் எத்தனை

கண்ணீர்த் துளிகள் கேட்பாரற்ற தரைகளுக்கு

காணிக்கையாக வேண்டும்?

இன்னும் எத்தனை

பெண்களின் தலைமுடிகள்

அக்கிரமக்காரர்களின் விரல் இடுக்கிற்குள் சிறைபட வேண்டும்?

இன்னும் எத்தனை

பாதங்கள் வெயிலில்

மண்ணோடு கதை பேச வேண்டும்?

இன்னும் எத்தனை முறை

அகதிகள் என்ற வேடமிட வேண்டும்?

இன்னும் எத்தனை முறை

தேசப்பற்றை உரக்கச் சொல்ல வேண்டும்?

இத்தனையும் செய்வதற்குமுன்

சற்று நேரம் ஓய்வு கிடைக்குமா?

ஒரு இந்தியனாக….!

 

2

சிகை கோதும் வேளையில்

 

சாத்திரங்கள் அறியேன்…

சரித்திரங்கள் அறியேன்…

உன்னை அறிகிறேன்

உன்னால் தான் என்னை அறிகிறேன்…!

 

உன் கன்னக் குழிகள் வற்றாமல்

உன் கண்ணில் நீர் தேங்காமல்

உன் முகத்தில் சோகம் படராமல்

உள்ளங்கையில் தாங்கிட நினைக்கிறேன்…

 

விரல்கொண்டு ஒருமுறை

உன் கன்னம் பற்றிட வேண்டும்

என் நெஞ்சோடு சாய்த்து

உன் நெற்றியில் ஒரு முத்தமிட வேண்டும்…

 

என் சுவாசம் உந்தன் உயிரை

மழையாய் நனைக்க வேண்டும்..

காதலால் கண்கள் சிந்தும் துளிகள்

உன் தோளில் உராய வேண்டும்

 

உந்தன் சிகை கோதும் வேளையில்தான்

என் ஆயுளை நானும் காண்கிறேன்…

உன்னில் காணும் சிரிப்பில் தான்

எந்தன் வாழ்வை நானும் மீட்கிறேன்…

3

அன்பின் சவால்

 

இனியொரு முறை உன்னை

விட்டுச்செல்ல நேர்ந்தால்

ஒரு சவால் ஒன்று விடுக்கிறேன்…

அதில் யார் ஜெயித்தாலும்

நீ என்னோடு வந்துவிட வேண்டும்…!

என்னுடனே இருந்துவிட வேண்டும்…!

 

 

4

அன்பின் சமாதானங்கள்

 

சமாதானமாக இருக்கின்ற நாட்களில்

பெரும் பிரச்சனை இருக்கின்றது..!

சண்டைகளின் வைராக்கியத்தை

சண்டைக்காரர்களிடமே அடகுவைத்துவிடுவது..

அவர்களிடமே அடைக்கலம் புகுவது…

அவர்களிடமே நம்மை அர்ப்பணித்துவிடுவது….

அவர்களிடமே அரவணைப்பை எதிர்பார்ப்பது…

மீண்டும் காயப்படுவதற்காக

மனதை ஆயத்தப்படுத்துவது….

சண்டையிடுவதற்கான காரணங்களை நாமே உருவாக்குவது…

அவர்களின் கோபங்களைக் கூட வாங்கி

புத்தாடையாக அணிந்துகொள்ளத் துணிவது….

இவையனைத்திற்கும் காதல் தான்

காரணமென்று

நம்மை நாமே சமாதானம் செய்து கொள்வது…!

 

5

எனதல்லாத எனது காதல்

 

ஒவ்வொரு குறுந்தகவல்

செய்தியிலும்

சிறிது சிறிதாகக் காதலை

அனுப்புகிறேன்….

வேறு நான் எவ்வாறு அனுப்புவது?

உனக்குச் சொந்தமான ஒன்றை

நான் வெகுநாட்கள் என்னிடமே

வைத்திருப்பது தவறல்லவா…!?