நடைப்பெறவிருக்கும் 2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு சமூகவலைதளங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டர் நிறுவனங்கள் தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட்டு தேர்தல் ஆணையத்தின்  உத்தரவுரகளை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.

2019 மக்களவை தேர்தல், வருகின்ற ஏப்ரல், 11 ஆம் தேதி தொடங்கி மே, 19 வரை நாடு முழுவதும் ஏழுகட்டங்களாக நடைப்பெறவுள்ளது. தேர்தல் துவங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரம் செய்ய தடைவிதிக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் அனைத்து விதமான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடை அமலாகியிருக்கும்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் சமூகவலைத்தளங்களுக்காக ஒரு சிறப்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்ஆப், கூகுள், ஷேர்சாட் மற்றும் டிக்டாக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்பொழுது, தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய 48 மணி நேர காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கக்கோரும் பதிவுகளை மூன்று மணி நேரத்தில் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக்கொண்டதையடுத்து தேர்தல் ஆணையத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சமூக வலைதளங்கள் அனைத்தும் சின்கா கமிட்டி பரிந்துரையின் படி சட்டத்திற்கு புறம்பானதாக மேற்கோள் காட்டப்படும் பதிவுகளை மூன்று மணி நேரத்திற்குள் நீக்குவதாக உறுதியளித்துள்ளன. சட்டப்பிரிவு 126 இன் படி தேர்தல் நாளுக்கு முந்தைய 48 மணி நேரத்திற்கு தேர்தல் பரப்புரை செய்வது குற்றமாகும்.