காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்கு இரண்டாவது முறையாகக் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை “பெரும்பான்மையான மக்களிருக்கும் தொகுதியில் போட்டியிடத் தைரியமில்லாதவர்” என்று பிரதமர் மோடி விமர்சித்தார். வயநாட்டில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 50% கீழே உள்ளது. ராகுல் காந்தி தன் தொகுதியான உத்தர பிரதேசத்திலுள்ள அமேதி தொகுதியுடன் சேர்த்து வயநாட்டில் போட்டியிடுகிறார். “அவர்கள் பெரும்பான்மையினர் எங்கு சிறுபான்மையினராக உள்ளாரோ அங்குத் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்.” என்று மோடி கூறினார்.  

மகாராஷ்டிராவிலுள்ள வார்தாவில் நடந்த பேரணியில் இந்த உரையை மோடி நிகழ்த்தினார். முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சராசரியாக அதிக எண்ணிக்கையிலுள்ள வயநாட்டின் மத மக்கள்தொகைக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் மோடி, காங்கிரஸ் தலைவரை மட்டும் தாக்கவில்லை இதன் மூலம் அவர் இந்தியாவின்   மதச்சார்பின்மையையும் தாக்குகிறார்.

மோடியின் இந்த கூக்குரலைக் கேட்டு பாரதீய ஜனதா கட்சியின் முழு தலைமையும் மதப் பிளவுகளை அதிகரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை வேகப்படுத்துகிறது. ஒரு பாஜக வேட்பாளரின் வேண்டுகோளைப் பாருங்கள் “மத, ஜாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையில் எந்தவொரு நபருக்கும் வாக்களிக்கவோ கூடாது.”

“2015 இல் மாட்டிறைச்சி சாப்பிட்ட ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் ஒரு கும்பல் அடித்தே கொன்றது. இதற்கான மக்கள் ஆதரவை முன்னாள்  சமாஜ்வாதி அரசு அடக்கியது” என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரி ஆதித்யநாத், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஒரு பேரணியில் குற்றம் சாட்டினார். மேடையில் இந்த உரையை அவர் நிகழ்த்தும்போது அந்தக் கொலையின் முக்கிய குற்றவாளி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்.

இதற்கு ஒரு நாள் முன்னதாக, பாஜக தலைவர் அமித் ஷா தான் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது கட்சி இன அடிப்படையிலான குடியுரிமையை இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு சாதகமாக அமைத்துத் தரும் என்றார். இந்த மூன்று மதங்களும் இந்தியாவிலிருந்து தோன்றியதால் அதற்கே முன்னுரிமை தரப்படும் எனும் பாஜகவின் கருத்தியல் நிலைப்பாட்டின் இது இருக்கும், ஆனால் இஸ்லாமியம் மற்றும் கிறித்துவம் அன்னிய தேசங்களிலிருந்து வந்தவை என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

பாஜக வின் இந்த விஷம பிரச்சாரம் அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக, பாஜக இந்தியாவில் ஒரு இந்து பெரும்பான்மை அரசியலை வடிவமைப்பதற்கு முயன்று வருகிறது. அதற்காக அது பல தந்திரங்களைக் கையாண்டு வருகிறது குறிப்பாகப் பசு பாதுகாப்பு எனும் போர்வையில் இஸ்லாமிய மக்களை ஒடுக்க முயல்கிறது. பொதுத் தேர்தலில் வாக்குகளைப் பெற பா.ஜ.க. வெளிப்படையாக “பெரும்பான்மை இனவாதத்தை” ஒரு யுக்தியாகப்  பயன்படுத்துகிறது.

2014 தேர்தலில் பாஜகவின் பிரச்சார கரு “இந்தியாவின் வளர்ச்சியாக” இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளில் அந்த வாக்கு படு தோல்வியடைந்ததைக் கண்கூடாக கண்டோம். வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகளின் வருமானம் பாதாளத்திற்குச் சென்றது.

2019 தேர்தலானது உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவின் ஆளும் பாஜக-வோ புதிய புதிய பிரச்சினைகளை உருவாக்குவதற்குக் கடுமையாக உழைக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போதாவது அனைத்து தரப்பு மக்களிடம் குழைந்து நல்ல பெயரை வாங்கவேண்டும் என்றே எல்லா அரசியல் கட்சிகளும் நினைக்கும் ஆனால் பாஜகவின் தலைவர் உட்பட அனைவரும் இவ்வளவு துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் மத மற்றும் இன கோஷங்களை முன்னிறுத்துவது இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமோ என்ற கடும் அச்சத்தையே விதைக்கிறது.