ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என வேதாந்தா நிறுவனத்திற்க்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தூத்துக்குடி பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் கூறிய தூத்துக்குடி கிராம மக்கள்,  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்திவந்தனர். கடந்த ஆண்டு மே 22ஆம் தேதியன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100ஆவது நாள் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் கோரிக்கை எழுப்பினர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு தமிழக அரசு கடந்த மே 28ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. ஸ்டெர்லைட் தொடர்பாக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கலாம்

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து, ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது. விசாரணையின் முடிவில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 18) இறுதி தீர்ப்பினை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இறுதி தீர்ப்பு

வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் அளித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.