3. மதுரை – எல்லாமே எப்போதுமே

எந்த ஊராக இருந்தாலும் அந்த ஊரில் ஜெனரல் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது என்று தேடி அதை ஒரு எட்டுபோய் பார்த்துவிட்டு வந்து விடவேண்டும் அப்போதுதான் மனிதர்கள் எவ்வாறெல்லாம் கடின பிரயாசையுடன் வாழ்வைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும் என்று எங்கோ படித்த நினைவு அது இருக்கட்டும் சொல்ல வந்தது ஜி.ஹெச். பற்றி அல்ல.

எல்லா ஊர்களுமே தனக்கென்று தனித்த மச்சம்மாதிரி முகவெட்டு ஒன்றை கொண்டிருக்கும் அப்படியான பகுதிகளுக்கு எதார்த்தத்தில் போய்வர வேண்டி வருவது புத்தம் புதிய அனுபவம். அங்கேயே பிறந்து தினங்களை அங்கிருந்து கிளம்பி வந்து திரும்பிச் சென்று அங்கேயே வாழ வேண்டி இருப்பவர்களுக்கு மொத்த ஊருமே வேறொன்றாகத்தான் மாறி இருக்கும் மதுரையிலும் அப்படியான சில பகுதிகள் இருந்தன இன்னும் இருந்து கொண்டிருக்கலாம். ஒரு இடத்தின் பெயரைச் சொன்னாலே அதெல்லாம் பெயர்பெற்ற ஏரியா என கேள்விப்பட்ட அடிப்படையிலான பயம் முதுகெல்லாம் ஜிலீரிடும் அங்கு இருந்து வருபவர்களை எதிர்கொள்ளும்போது ஆரம்ப அச்சம் பிறகு பழகிக் கனிகையில் அதுவே மன பலமாக மாறும்.

பதின் பருவம் என்பதுதான் வாழ்க்கையின் முதல் சன்னலைத் திறந்து சற்று தூரத்தில் பார்க்க வைக்கிறது 17 வயதில் கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும்போது கதை பல கண்டு ஞானத் தெளிவோடு நுழைந்தோம். எத்திசையிலிருந்து எந்த வினா வந்தாலும் பதில் தரக்கூடிய என்சைக்ளோபீடியா மனநிலையில் சுற்றித் திரிந்தோம். எங்களில் சிலர் குடித்தார்கள் சிலர் புகை பிடித்தார்கள். பாக்கு, பீடா போன்றவை இந்திய நிலத்தின் தென்திசையில் அதிகம் புழங்க வந்திருக்கவில்லை. வெகு சிலர் கஞ்சாவின் பிடியில் இருந்தாலும் அது ஒரு ரகசியத் தீமை. பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக் கொள்ள முடியாதது அதன் குற்ற முகம். தேவ மூலிகை, சித்தபாணம் என்றெல்லாம் வசீகரமான பெயர்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் கஞ்சா ஒரு தடைசெய்யப்பட்ட பொருள் அதை வைத்திருப்பதும் உபயோகிப்பதும் குற்றம். அதன் பின்னதான லாபம் அதனை ஒரு வியாபாரமாக செய்து பார்க்கும் தைரியத்தைச் சில பலருக்கு தந்திருந்தது என்பதால் சில சட்டவிரோதிகள் பல பகுதிகளுக்கும் அதனைக் கொண்டு சென்று வியாபாரம் செய்தார்கள்.

கல்லூரிக்குப் பக்கத்தில் ஒரு ஏரியா அங்கு இயற்பெயர் என்னவென்று தெரியாத அளவுக்கு ‘மருந்து மணி’ என்ற நாமகரணத்தோடு ஒருவர் வெளித்தோற்றத்திற்கு நாட்டு மருந்துகள் தயாரிக்கிற முஸ்தீபை கொண்டிருந்தாலும் பார்ட்டி அருளும் பொருளுமாகப் புழக்கத்தில் விடுகிற
கஞ்சா வியாபாரி. கல்லூரி சீனியர் தேவகுரு ஒருமுறை வரியா பொட்டலம் வாங்கிட்டு வரலாம் என்று அழைக்க வெள்ளந்தியாக நானும் முரளியும் கிளம்பி போனோம். நாங்கள் ஏதேதோ பேசிக் கொண்டு வர தேவகுரு சற்று முன்னால் நடந்து கொண்டிருந்தார்

சந்தடியான தெருக்களில் குறுக்குமறுக்காக நுழைந்து புகுந்து ஒருவழியாக அந்த தெருவை அடைந்தோம். எங்களை ஒரு கண் பார்வை தூரத்தில் நிறுத்திவிட்டு குருதான் மாத்திரம் அந்த முகவரியை சமீபித்தார். சற்றைக்கெல்லாம் தொங்கிய முகத்தோடு திரும்பி வந்தார். திரும்ப காலேஜ் வந்து சேரும்வரை எதுவுமே பேசாமல் தன் தலையை மாத்திரம் அடிக்கடி ஆடிக்கொண்டார் கேண்டீனுக்கு பக்கவாட்டில் படுக்கை வசமாக ஒரு மரம் கிடத்தப்பட்டு இருக்கும். ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளை நோக்கிக்கொண்டு பத்து பேராவது அதன்மேல் அமர்ந்துகொள்ள முடியும் முதல் வருடம் படிப்பவர்களை அந்த மரத்தில் அமரவிடாமல் ஒரு ராகிங் கொடுமை கடைப்பிடிக்கப்பட்டு வந்திருந்தது அதை மாற்றியவர் தேவகுருதான் “நீ உட்காரக்கூடாது” என்று எங்களை யார் தடுத்தாலும் அப்படிச் சொன்ன அத்தனைப்பேரையும் அடித்தார். சண்டையை நளினமாக செய்தவர் தேவகுரு கரிய மேனி பெரிய கண்கள் சுருள்முடி பார்க்க சாதுவான முகம் அவர் ஒரு கருப்பு புரூஸ்லி.

அந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொண்டவர், நான் கேட்காமலேயே “பொட்டலம் வித்த மணியை போலீஸ் பிடிச்சிருச்சாம். வெளிய வர எப்படியும் மாச கணக்காகும்” எனச் சொன்ன அவரது கரங்கள் லேசாக நடுங்கின. கைரேகை பரப்பை அதன் அசையாத நதிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர் சட்டென்று எழுந்தார்.

“ஏன் இந்த கருமம் இல்லாமல் என்னால இருக்க முடியாதா..?” என காற்றை பார்த்துக் கேட்டவர், அந்த கணத்துக்கு பின்னால் பொட்டலத்தைத் தேடவே இல்லை. இங்கே ஒரு மணி இல்லாவிட்டால் இன்னொரு ஏரியாவில் வேறு ஒரு மணி என்று எளிதாகத் தேடிப் போயிருக்க முடியும். எந்த ஒரு பழக்கத்தையும் பற்றி கொள்ளும்போது அதன் பரவச முகம் மட்டும்தான் தெரியும். ஆனால் விடுபட முயற்சிக்கையில்தான் பழகிய மிருகத்தின் கொடிய கரங்கள் புலனாகத் தொடங்கும்.

தேவகுரு மகா உறுதியுடன் அதிலிருந்து வெளியே வந்தார் ஒரு திசையைப் புறக்கணிப்பதுபோல் கடுமை காட்டி உறுதிபட நின்றார் வென்றார்.

டைட்டானிக் திரைப்படம் உலகளாவிய காதல் சித்திரம். நீர் ஊடாடிய கண்ணீர்க்கதை. பல துறைகளில் இருந்தும் 40க்கும் மேற்பட்ட பசங்கள் மாப்பிள்ளை விநாயகர் ஏசி தியேட்டரில் அந்தப் படத்தை பார்க்கப் போனோம். இன்னும் வந்து சேராத சத்யா உள்ளிட்டவர்களுக்காக லட்சு நான் தேவகுரு மூவரும் வாசலில் காத்திருக்க மற்றவர்கள் அவரவர் இருக்கைக்கு சென்றார்கள். அப்போதெல்லாம் செல்போன் கிடையாது இருந்திருந்தால் ஏன் வரல எங்க இருக்க எப்ப வருவ என்ன ஆச்சு என்றெல்லாம் அனர்த்தம் பொங்கும் கேள்விகளை அழைப்பில் கேட்டு குறுஞ்செய்திகளை தட்டி என்னென்னவோ செய்திருப்போம். முடியாதல்லவா ஆகவே காத்திருந்தோம்

நளினமான தோற்றம் பாலிஷ் செய்யப்பட்ட ஷூஸ் கழுத்தில் வரிவரியாய் டை எண்ணை பூசி வெளிச்சத்தில் கரும்பொன்னாய் மின்னும் படிய வாரிய தலை.

ஒரு கனவான் குணவான் தோற்றத்தோடு அந்த மனிதர் தேவகுருவை நெருங்கினார். இருவரும் சின்ன சின்ன வாக்கியங்களாகப் பேசிக்கொண்டார்கள். குரு என்னிடம் திரும்பி 20 ரூபாய் கொடு என்று கேட்டார். நான் தந்ததை வாங்கி அப்படியே அந்த மனிதரிடத்தில் கொடுத்தார் அதைப் பெற்றுக்கொண்ட அவர் கட்டுப்படுத்த முடியாத முகப் பிரகாசத்தை மேலாண்மை செய்தபடி ஆங்கிலத்தில் நன்றி என்று சொன்னவாறு கை கொடுத்து விட்டு சல்யூட் செய்கிறாற்போல் தன் முகவாய்க்கட்டை வரை கத்திபோல் கையை அசைத்து விட்டுத் திரும்பி தன் வழியே சென்று மறைந்தார். அடுத்த நிமிடமே வர வேண்டியவர்கள் வந்துசேர எல்லோரும் தியேட்டருக்குள் சென்றோம் அந்த மனிதனைப் பற்றி கேட்க வேண்டும் என்பதை உடனே மறந்து போனேன்

வேறு ஒரு நாள் கேன்டீன் மரத்தில் வீற்றிருந்தபோது சட்டென ஞாபகம் வர “அன்னைக்கு அந்தாளுக்கு எதுக்கு காசு கொடுத்தீங்க… உங்களுக்கு தெரிந்தவரா” என்று கேட்டேன். உதடுகளை பிதுக்கி “யாருக்கு தெரியும்?” என்றார் சரியாக அப்போது வந்து விட்ட லச்சு “யாருன்னே தெரியாதவனுக்கு 20ரூபாய் குடுப்பியா நாங்க கேட்டா ரெண்டு ரூபாய்க்கு அழுவே என்ன மாமா இது அநியாயமா இருக்கு?” என்று பேசவேண்டிய வசனத்தைப் பேசிவிட்டு மேடையில் இருந்து மறையும் நாடக உப பாத்திரத்தைப் போல் காணாமல் போனான்.

எங்கோ பார்த்த தேவகுரு “ரொம்ப நல்லா படிச்சு நல்ல வேலைக்கு வந்து பாதுகாப்பான ஒரு வாழ்க்கை வாழ ஆரம்பித்த அந்த மனுஷன் எப்படியோ ஆரம்பிச்ச குடிப்பழக்கத்தை எந்தப் புள்ளியில் நிறுத்தி வைக்கணும்னு தெரியல. மெல்ல அதிகமாகி ஒரு நாளோட எல்லா நேரமும் குடிக்கிற அளவுக்கு அடிக்ட் ஆகிவிட்டார். பீல்டு விசிட் வந்த மேலதிகாரி குடிச்சிட்டு வேலை பார்ப்பதற்காக இவரை வேலையைவிட்டு நீக்கிட்டாராம். மனசு வெறுத்துப் போயி அலையுறாப்டி…

சினிமா பார்க்க வந்தேன் கை நடுங்குது காலையிலேயே சரக்கு அடிச்சேன். படம் பார்க்க காசு இல்ல அப்படின்னு டென் ருபீஸ் கேட்டார், அதான் கொடுத்தேன் என்றவர் நான் எதுவும் சொல்லாமல் அவரையே பார்த்துக் கொண்டிருப்பதை குறித்துக் கொண்டவராய் “மாப்பிள யார்னே தெரியாதவன்னு யாருமே இல்லைடா… இவன்லாம் நமக்கு சக பிரயாணி டா நாம ஒரு கம்பெனி நடத்தினா அதோட ஷேர் ஹோல்டர்ஸூக்கு லாப நட்டத்தைப் பிரிச்சு கொடுப்போம். இல்லை இது அந்தமாதிரிதான் இது. எப்படி நெளிவு சுளிவ யாசகம் கேட்கணும்னு கூட அவனுக்குத் தெரியல. ரொம்ப சமீபத்து நிலமை இது. போதையை பழக்கப்படுத்திக் கொள்ளும்போது ஜாலியா இருக்கும் அதை பகைக்க ஆரம்பிக்கும் போதுதான் தன் குரூரத்தை காண்பிக்கும். தான் பார்க்கிற வேலை படிச்ச படிப்பு நுனிநாக்கு இங்கிலீஷ் இது எல்லாத்தையும் நம்ம முன்னாடி கொட்டி கொஞ்சோண்டு காசு குடுன்னு கேக்குறப்ப எவ்ளோ வேதனைப் பட்டிருப்பான்… இப்படிப்பட்டவனை ஆதரிக்கிறது தப்பா இருக்கலாம் ஆனால் மறுக்கிறது அதைவிட தப்புன்னு நினைக்கிறேன் மாப்பிள தனக்கு என்ன வேணும்னு நேர்மையாக கேட்கிறான் முடிஞ்சா குடு முடியாட்டி விடு அட்வைஸ் பண்றேன்னு சொல்லி அவன சாவடிக்க கூடாதுல்ல” என்றார். நான் அமைதியாக ஆமோதித்தேன்.

பிறிதொரு நாளில் குருவிக்காரன் சாலையில் நெடுங்காலம் இயங்கி ரிலையன்ஸின் முகத்தை தன் முகமூடியை அணிந்துகொண்டு இன்னும் இயங்கி வருகிற கணேஷ் தியேட்டரில் ஓபனிங் ஷோவாக தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ஆரண்யகாண்டம் திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்தபோது எடுத்த எடுப்பிலேயே “எது தேவையோ அது தர்மம்”
என்கிற வசன கார்டு கதைகள் நிகழும் தொடர்ந்து ஓடினாலும் அந்த வசனத்திலேயே கடந்த காலத்தின் பிரதி மனம் உறைந்து போயிருந்தது இப்போது தேவகுரு வடக்கில் இருக்கிறார் லட்சு மதுரையின் இன்னொரு புறத்தில். அந்த டைட்டானிக் திரைக்காட்சி நுழைவாயிலில் குருவிடம் கரம் குலுக்கிச் சென்ற அந்த நளின மனிதர் பிறகு என்னவாகி இருப்பார் என யோசிக்கவே பயமாக இருந்தது. திசைகள் அற்ற முட்டுச் சந்தில் ரிஸ்க் எடுக்க சிரமப்படும் அளவிற்பெரிய வாகனத்தை சம்பளத்துக்கு ஓட்டுகிற புதிய டிரைவரின் படபடப்போடு சற்றுநேரம் திகைத்துக்கொண்டிருந்தேன்.

ஆல்கஹாலிக் ‘fillers’ என ஒரு வகை

பொழுது விடியும் நேரத்தில் தொடங்கி நடு இரவு வரைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டே இருப்பார்கள் அதிகமாக குடித்துவிட்டு தள்ளாடுவது பேச்சு குழறுதல் மாதிரியான எந்த விஷயமும் வெளியே தெரியாது. நாளெல்லாம் சதா சர்வ காலம் ஒரு குறிப்பிட்ட அளவு மதுபானத்தை நுகர்ந்து கொண்டே இருக்கும் இப்படியானவர்கள் உடைந்த மனம் சிதைந்த உடல் இந்த இரு வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டு விரைந்து வருகிற மரண ரயிலில் ஏறிச் சட்டென்று காணாமற் போய்விடுவார்கள்.

மது புகையைவிட பரமசாது என்பது மாதிரியான ஒரு தோற்ற கட்டமைப்பு சமீபகாலங்களில் சமூக வெளியில் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது மதுவை சமூக திரவமாகப் பார்க்க வைப்பதற்கான முயற்சிகள் பல. எப்போதுமே மது கொடியது போதை எந்த ரூபத்தில் வந்து நின்றாலும் அது அடிமை வேடத்தில் ஆளைக்கொல்லும் என்பதில் மாற்று இல்லை. மனிதன் தனக்குத்தானே செய்து கொள்ளக்கூடிய சுய வஞ்சகங்களில் தலையாயது போதை.

ஒரு கவிதை

ஊழிக்கூத்தெனப் பெருந்தீ

யட்சியின்
வலது கூர்ப்பல்
உடைந்து கிடக்கிறது.

மிக அருகில்
ரத்தச் சிவப்பில் பூ

வேல்கண்ணன்
பாம்புகள் மேயும் கனவு நிலம்
யாவரும் பதிப்பக வெளியீடு ரூ 65

முந்தைய தொடர்கள்:

2.பெஸ்டியை இழத்தல் – https://bit.ly/2Uk5uHX
1. வயலட் விழியாள் – https://bit.ly/2xREA2L

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  8. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  9. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
  11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி