1. மதுரை: எல்லாமே எப்போதுமே

முனிகளின்
கமண்டலத்து நீரை
காக்கைகள் குடிக்கச் செய்யும்
மிருது நீ

கவிஞர் இசை
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் தொகுதியில்
காலச்சுவடு வெளியீடு விலை ரூ.90

மாற்றமே கடவுள். எந்த ஊரும் முற்றிலுமாக அழிவது காலத்தின் கரங்களில் இருக்கிறது. எல்லாமே எப்போதுமே கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக் கொண்டிருக்கின்றன. ஊரோடு தானும் தேரோடு வடக்கயிறென வாழ்பவர்களுக்கு அதன் படிப்படியான மாற்றங்கள் மெல்ல மனதினுள் பழக்கமாகி இருக்கும். அதுவே வெளியூர் அல்லது அயல்தேசம் சென்று திரும்புகிறவன் கண்ரெண்டும் விரிய ‘ஹா…’ என்று தேங்கித் தன் மனதின் முந்தைய சித்திரத்தை எடுத்து தற்போதுடன் பொருத்தித் தன்னுள் ஆழ்வானல்லவா அது ஒரு அனுபவ ஜாங்கிரி.

என் பால்ய கால சகாவான ராஜா தற்போது சிங்கப்பூர்வாசி. பள்ளிப்பிராயத்தில் ஸ்கூலிலிருந்து திரும்புகையில் புதூர் பஸ் ஸ்டாண்டில் இறங்குவோம். அதுதான் டெர்மினஸ். ட்ரைவர் கண்டக்டர் எல்லாம் நீங்கிச் சென்ற பிறகு மெல்ல எழுவான், இறங்கியதும் அவன் செய்வதுதான் ஹைலைட். வெகுகாலம் கழித்து நாடு திரும்பும் நாயகன்போல, ‘என்னடா ஊர் இவ்ளோ மாறிடுச்சி’ என்பான். ‘காலையில பார்த்த மாதிரியே தானே இருக்கு’ என்று யார் சொன்னாலும் முறைப்பான். இந்த ஓரங்க நாடகத்தை ஒரு நாள் ரெண்டு நாளில்லை பல தினங்கள் தொடர்ந்து செய்தான். எங்களுக்கும் அது விலையில்லா கேளிக்கையாக இருந்தது. காலம் ஆளுக்கு ஒரு திசையாக எங்கள் கதைகளைப் பிரித்துப் போட்டது சமீபத்தில் ஒரு தினம் எல்லோரும் மைக்கேலின் வீட்டில் மறுபடி சந்தித்தோம். ராஜாவிடம் மேற்படி பேராகிராஃபை நினைவுபடுத்திச் சிரித்தபோது “இதுல என்ன சிரிக்க வேண்டிகிடக்கு இத்தனை நாளானா எல்லாமே மாறத்தான் செய்யும்” என்றான் இரக்கமே இல்லாமல்.
ஜெகன் அவனைப் பார்த்து “புதூர் மாறுனது இருக்கட்டும். நீ ரொம்பவே மாறிட்டடா” என்றதே நிஜம்.

ஒவ்வொரு ஊரிலுமே சில விலாசங்கள் மட்டும் நெடிய காலத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்ளாமல் அப்படியே இருக்கின்றன. அதன்மூலம் முன்காலத்தின் சாட்சிகளைப் போல் திகழ்கின்றன. “அது மட்டும் அப்படியே” என்றாற்போல் வெகு சில இடங்கள் அப்படி இருப்பதும் ஓரழகுதான். சில ஓட்டல்கள் அல்லது காபிக்கடைகள் பேக்கரி அல்லது மருந்துக்கடை என அவையும் மெல்லக் காலத்தின் கரங்களுக்குத் தங்களைத் திரும்பத் தந்துவிட்டு புதிய மற்றொன்றுக்கு வழிவிட்டுச் செல்லும்போது மனம் சுக்கு நூறாக உடைகிறது. எல்லாமே மாறும் என்பதே ஒரு இரக்கமற்ற காருண்யம்தானே?

மதுரையில் ஒரே நேரத்தில் இரண்டு பறக்கும் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரை அதன் உச்சபட்ச வாகன நெரிசலில் தவிக்கிறது. எதிர்காலத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையே இதுபோன்ற கட்டுமானக் காலம் இருள் மிகுந்தது. நாளைய ஞாபகங்களினூடே என்னவாகத் தங்கும் இந்தக் காத்திருப்புக் காலம்? பத்து வருடங்களுக்கு முன்பு அரசரடிக்கு வருவதற்கான பாலம் வேலை நடந்ததும் பிறகு திருப்பரங்குன்றத்தில் நுழையவும் வெளியேறவும் இரு பாலங்கள் அமைத்ததும் அப்போது பெரிய பேச்சாக இருந்தது. பிறகு மெல்ல மனம்பழகிய வஸ்துவாக மாறினாற்போலவே தற்போதைய பாலங்களுக்கான இடர் ஏற்புக்களும் மெல்ல நினைவினின்றும் அகலும். அதற்கும் இப்போதைக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. இந்தமுறை பறக்கும் பாலங்கள் கட்டும்போதே கூடுதல் வேலையாக மதுரை பெரியார் நிலையத்தினை மாற்றி அமைப்பதும் நடந்தேறுகிறது.

பெரியார் பேருந்து நிலையம் மதுரையின் பிரதான முகவரி. ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நகரின் இதயமாகவே இயங்கிய பிரதேசம். சில வருடங்களுக்கு முன்பாக வெளியூர் பேருந்துகளும் உள்ளூர் பேருந்துகளும் வேறொரு திசையருகே மாட்டுத்தாவணிக்கு இடம்பெயர்ந்தது. நகரம் என்ற ஒரு சொல்லின் பின்னே இருக்கக்கூடிய விசித்திரங்களில் இதுவும் ஒன்று. எதுவுமே குறையாதது போலத்தான் அதன் உட்புற மாற்றங்கள் அமையும். மதுரையின் இரயில்வே ஸ்டேஷன் மீனாட்சி அம்மன் கோயில் திருமலை மன்னர் மகால் எனப் பலஸ்தலங்களுக்கும் முகாந்திரமாக பெரியார் நிலையமே தொடர்ந்தது. கடந்த ஒருவருட காலமாக பழைய பேருந்து நிலையங்கள் இரண்டும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு ஒருங்கிணைந்த புதிய நிலையத்துக்கான வேலை நடக்கிறது.

“கனவில் கன்ஸ்ட்ரக்சன் உள்ள மிருகங்களாகவே” பிதுங்கி வழியும் வாகன நெரிசல் எப்போதும் புதிய கூடுதல் காத்திருப்பு நேரம் தலை தெறித்து விரையும் சகமாந்தர்கள் என மதுரை தன் பற்களைக் கடித்துக் கொண்டிருக்கிறது.

முந்தைய பெரியார் நிலையத்தின் சிருங்காரமே தனி அழகு எண்பதாம் ஆண்டுகளில் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்டுக்கு எதிர்ப்புற சதுரத்தின் மூன்று முனைகளும் ஜிகினா கட் அவுட்டுக்களால் நிரம்பி இருக்கும். அவற்றைப் பற்றி ஏற்கனவே சில இடங்களில் எழுதியும் இன்னும் எழுத நிறைந்து தொடர்கிறது. ஃப்ளெக்ஸ் என்ற அடுத்தகால அரக்கனைப் பற்றி எதுவும் தெரியவராத எண்பதுகளின் மாந்தர்களுக்கு மாபெரிய கட்அவுட் அதன் பெரும்பாலும் கதாநாயகனுக்கான திறந்தவெளி வழிபாடாகவே அவை விளங்கின. மாபெரும் ஓவியமுகத்தில் நட்சத்திரங்கள் வெயிலுக்கும் மழைக்கும் தாங்கி நின்றுகொண்டார்கள். தினமும் கடந்து செல்லக்கூடிய இடமாதலால் இது இதற்கடுத்து அது எனத் தொடர்ந்து என்னென்ன படங்களின் கட்அவுட்டுக்கள் இருக்கும் என்பதை மனப்பாடம் செய்திருப்போம். இப்போதுபோல இரண்டு வெள்ளிக்குத் தாங்காத படவருகைகள் அல்ல அப்போதெல்லாம் ஆறுமாதம் ஓடுவது வெள்ளிவிழா நூறு நாட்கள் மினிமம் 50 தினங்கள் ஓடும் படங்கள் அதிகம். கரகாட்டக்காரன் ஹம் ஆப்கே ஹெயின் கோன் சின்னத்தம்பி கேப்டன் பிரபாகரன் எனப் பல படங்கள் நானறிய ஒருவருடத்துக்கு மேலாக ஒரே இடத்தில் கட்அவுட்டாக நின்ற பெருமைக்குரியவை. இதில் ஃபர்ஸ்ட் ரன் ஓடி முடித்த பிற்பாடும் ஜாயிண்ட் என அடுத்த திரையிடல் முடியும் வரைக்கும் ஒரே இடத்தில் அகலாமல் நின்ற கட்டவுட்டுக்கள் இருந்தன. கனவெல்லாம் கட் அவுட்டுக்கள் என்றாற்போல் ஞாபக நாட்களின் வீதிகளில் உலா வருகின்றன.

ஒரு மாபெரிய கட் அவுட்டுக்குப் பின்னால் அந்த நடிகரின் அச்சுஅசல் பிம்பத்தைக் கூடியவரைக்கும் சிதிலமாகாமல் வரையக்கூடிய ஓவிய எத்தனம் போற்றுதலுக்குரியது. பெரும்பாலும் ஆடைகளுக்கு ஜிகினாமலர்களைச் செருகி அடிக்கிற காற்றுக்கு மெல்லிய ‘ர்ரீம்ம்ம்ம்…’ என்ற சத்தத்தோடு அத்தனை நட்சத்திரங்களும் ஒருங்கே புன்னகைக்க நவராத்திரி வீற்றிருத்தலாகவே அந்தப் பிரதேசமே ஜொலிக்கும். இதில் கீழே எந்தெந்த தியேட்டர்கள் என்ற விபரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அபூர்வமாகவே நடிகைகளுக்குத் தனித்த கட் அவுட்டுக்களைக் கண்ட நினைவு. நடிகையை முதன்மை கொண்ட படங்களுக்கு மட்டும்தான் தனியாக அவர்களது தோன்றுதலை கட்அவுட் வைப்பதற்கான தேவை எழும். மற்றபடிக்கு ஜோடியாகவோ அல்லது நாயகர்கள் மட்டுமோதான் தரிசனம் தருவார்கள். சில்க்ஸ்மிதாவுக்கு ‘அன்றுபெய்தமழையில்’ படத்துக்குக் காணக்கிடைத்த ஒரு கட்அவுட் மறக்க முடியாத ஒன்று. வேறாருக்கும் இல்லாத செருகும் ‘வயலட் விழிகள்’ அவருடையது. எத்தனையோ பள்ளிகால தினங்களை அந்தக் கட்அவுட் கண்களை இமைக்காமல் பார்த்தபடி பேருந்து சன்னலில் லயித்துக் கடந்திருக்கிறேன்.

ஜிகினா ஆடைகளும் சதுரங்கக் கட்டங்கள் பின்னணி டிசைனில் ஒளிர்ந்து மறைய கிட்டத்தட்ட எழுபதுகளின் ஆரம்பம் தொடங்கி எண்பதுகளின் இறுதிவரைக்கும் சினிமாக்கள் பளீரெனப் பிரகாசித்த பல பாடல்களைப் பிரசவித்தன. டிஸ்கோ என்பதன் இந்திய வடிவத்துக்கென்று இருக்கும் உபகதையாகவே இப்படியான நடனவெளிச்சப் பாடல்களைக் கருதமுடிகிறது. இப்படியான பாடல்களை வருவிப்பதற்கென்றே சிச்சுவேஷன்கள் உருவாக்கப்பட்டன. ஒரு டிஸ்கோ டான்ஸ் பாட்டு இந்த இடத்துல என்று தீர்மானித்து அதை யார் ஆடுவது ஏன் அங்கே ஆடப்படுகிறது என்பதைத் தாண்டி பிரதான கதையில் அந்தப் பாடலினூடாக என்ன நிகழப் போகிறது என்பதை எல்லாம் பேசி முடிவு செய்துகொண்டு மிஸ்டர் ரசிகர் இது உங்களுக்காக நாங்க பண்ற உபதியாகம். இது உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்றெல்லாம் சத்தியத்தைத் திருப்பி ஜல்லி அடித்தார்கள். மாறுவேசத்தில் ஆடிப்பாடும் கதாநாயகன் நாயகி மற்றும் சில படங்களில் ஜனகராஜ் மாதிரியான காமெடியனும் ஆடி முடித்து நகரும்வரை எப்பிடி இவ்ளோ ஸ்ருதி விலகாம ஆடிப் பாடுறீங்க என்று குறைந்தபட்சம் கூட ஆடிய குழு நடனக்காரர்கள் கூட ஒரு கேள்வியும் கேட்காமல், வெல்… சினிமா என்பதே வாழ்வின் மாபெரிய அபத்தத்தை நிஜமாக்குவதுதானே!

என்னளவில் கருப்புவெள்ளை கேவாகலர் ஈஸ்ட்மென் என்று பாரபட்சமில்லாமல் இப்படியான டான்ஸ் பாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அத்திப் பூத்தாற்போல் சில பாடல்கள் மனதில் கசடற்ற நன்னெய் போலப் படிந்து விடுவதை அதிசயித்திருக்கிறேன். மாபெரிய காலத்தினின்றும் விலக்கி எடுக்கப்பட்ட இப்படியான அபூர்வமான நடனவொளிப் பாடல்களைக் கொண்டு மனதுக்குள் ஒரு கேஸட் தயாரிக்கலாம்.

‘வசந்தம் பாடி வர, வைகை ஓடிவர இளமை தேடி வர, இனிமை கூடி வர ஆராதனை செய்யட்டுமா…’ என்கிற பாடல் டி.ராஜேந்தரின் ஆரம்ப கால உச்சம். சட்டம் என் கையில் படத்தின் ‘சொர்க்கம் மதுவிலே… சொக்கும் அழகிலே’ என்ற பாடல் கமலின் அழகான கிளப் பாடல் என்றால் பட்டிக்காட்டு ராஜா படத்தில் வரும் ‘உன்னை நான் பார்த்தது’ பாடலும் நாம் பிறந்த மண் படத்தில் இடம்பெறும் ‘ஆசைபோவது விண்ணிலே…’ பாடலும் எனக்கு மிகவும் பிடித்த மூன்று கமல் க்ளப் டான்ஸ் பாடல்கள்.

நிழல் தேடும் நெஞ்சங்கள் என்ற படத்தில் ‘பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள்…’ என்ற பாடலும் வாழ்க்கை படத்தில் ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு…’ பாடலும் ஐஸ்க்ரீம் க்ளப் சாங்க்ஸாக்கும்.

‘வான் மீதிலே அதிகாலை நேர ராகம்’ என்ற பாடல் ராகங்கள் மாறுவதில்லை படத்தில் வரும். ‘என்றென்றும் ஆனந்தமே எங்கெங்கும் ஆரம்பமே…’ என்ற கடல்மீன்கள் படப்பாடல் ஒரு சூப்பர் சாய்ஸ். சகலகலாவல்லவன் படத்தில் இளமை இதோ இதோ பாடலை கமல் பாட்டு என்று மேற்சொன்னவைகளோடு சேர்த்துப் பார்க்கவிடாமல் அதை நியூஇயர்க்கான பாடலாக வருஷா வருஷம் ஆக்கி வைத்திருக்கிறது தமிழ்ச்சமூகம் என்ன இருந்தாலும் அந்தக் காலத்தின் உச்சமான பாடல் ரஜினிகாந்தம் மின்னிப் பரவசப்படுத்திய ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா…’ அந்தக் கடைசி சொல்லான ‘வா’ என்பதை ‘வ்வா…’ என்று பாடினார் மலேசியர். எதிர்பாராத இன்னொரு ரஜினி க்ளப் பாடல் தாஸண்ணா பாடிய ‘வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ளே…’ பாடல்.

இன்னும் நிறைய கேஸட்டுக்களைத் தயாரிக்கலாம்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
  2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
  3. அன்பென்ற பொருளாதல்
  4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
  5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
  6. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
  7. சினிமா பித்து- ஆத்மார்த்தி
  8. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
  9. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
  10. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
  11. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி