எல்லாமே எப்போதுமே- 9 

ஒவ்வொரு ஊரும் ஒரு கலாச்சாரம் தனித்த பண்பாடு விசித்திரமாய் விலகி ஒலிக்கும் மொழி எல்லா சமத்துவங்களுக்கும் அப்பால் மிக லேசாக எட்டிப் பார்க்கும் வேற்றுமை தான் சொந்த ஊர் என்கிற உணர்வு.பிரயாணங்களில் யாராவது தெரிந்த முகம் தென்படுகிறதா என்று தேடுவது மனித இயல்பு. சொந்த ஊர் என்பது ஒரு மனோபாவம் தூரம் செல்லச் செல்ல அதுவே நோய்மையாக மாறுகிறது. ஊருக்குள் திரியும் போது நீ எந்த வீதி என்று கேட்கும் அதே மனம் தான் ஊர் தாண்டிச் சென்னையில் அலைபவனை டவுன் சவுத் என்கிறது. விருத்தாச்சலம் தாண்டியதுமே டவுன் சவுத் தொடங்கி விடுகிறது.அதையே வடதிசையில் செல்லச்செல்ல மதராஸி என்கிறான். லண்டனில் இந்திய பாகிஸ்தானிய பங்களாதேஷிய நேபாள மற்றும் இலங்கையைச் சேர்ந்த அண்டைவீட்டார்கள் எல்லோருமே ஆசியர்களாகப் பார்க்கப் படுவது திண்ணம். அண்ணன் ஒருவர் சொல்வது நினைவிலாடுகிறது வாழ்க்கை ஒரு ரேடியோ நாடகம் முடியுற வரைக்கும் தான் சத்தம் என்பார். இந்த இரண்டு வரிகள் கடத்துகிற விஷயகனமும் எளிமையும் பல முறை வியந்த பிறகும் அடங்கிய பாடில்லை.

எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ இருந்தது. அது கீழே சாய்ந்தாலும் விழுந்தாலும் அடிபட்டு உடைந்து விடக் கூடாது என்பதற்காக தலை துவட்டுகிற காசித் துண்டால் அதைச் சுற்றி வைத்திருப்பார் அப்பா. அதைக் கையாளும் போதெல்லாம் சிசுபிராயத்துக் குழந்தை ஒன்றை ஏந்துகிற எண்ணம் தான் வரும்.எந்த ஞாபகம் எப்போது வரும் என்று யாரால் சொல்ல முடியும்? சிறு பிராயத்தில் அடிக்கடி மின்சாரம் தொடர்பறுந்து போகும்.அந்த மாதிரி நாட்களில் எல்லாம் வீட்டின் வாசலில் அமர்ந்து கொள்வோம். எங்கள் ஏரியாவின் சம பிராயத்தவர்கள் இருந்த இடங்களிலிருந்தே பேசத் தொடங்கினால் அனாயாசமாக இரண்டு மணி நேரம் கழிந்ததே தெரியாது.
மின்சாரம் அற்றுத் தனிக்கிற காலங்கள் சப்த நிசப்த சமன்பாடுகளை மாற்றி வைக்கும். எந்த வீட்டிலிருந்தாவது பெருங்குரலில் விவாதிப்பது கேட்கும். அது இன்னார் வீடு என்பதைப் பொறுத்து யார் குரல் என்ன சண்டை என்றெல்லாம் பலவிதங்களில் யூகித்துக் கொள்வோம்.  ரேடியோ உருண்டை பாட்டரியில் இயங்குவதை யார் வீட்டிலாவது சப்தமாக வைப்பார்கள். அதிலிருந்து மாநிலச்செய்திகள் அல்லது மத்தியச் செய்திகள் என்று கேட்கும்.

இந்தப் பெரிய பேட்டரி விஷயத்தில் இன்னொரு சுவாரசியம் உண்டு. பல வீடுகளில் ரேடியோவையும் உருளை டார்ச்சையும் அருகருகே வைத்திருப்பார்கள். அப்போது தான் இதிலிருந்து அதற்கும் அதிலிருந்து இதற்கும் பேட்டரிகளை மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால். நாலு வீடு தள்ளி மகேஷ் என்பவனது அப்பாவின் பட்டப் பெயர் மிலிட்டரி. அவர் கனவில் யாராவது தும்மினால் கூட நிசத்தில் அறைவார். பேட்டரிகள் உறை பிரித்த தேதி ஒவ்வொரு நாளும் ரேடியோ ஒலிக்கும் நேரம் என எல்லாவற்றையும் நோட்டுப் போட்டு வைத்திருப்பார்.மகேஷோ ஜெகஜ்ஜாலக் கில்லாடி. சனிக்கிழமை ஸ்கூல் லீவு என்றால் அன்றைக்கு ரேடியோவை எடுத்து தன் இஷ்டத்துக்கு கேட்டு விட்டு வைத்து விடுவான். பேட்டரி விசுவாசமற்றதல்லவா தன் இஷ்டத்துக்குத் தீர்ந்து போகும் இவன் ரேடியோவிலிருந்து டார்ச்சுக்கு பழைய பேட்டரிகளை மாற்றி விட்டு அதிலிருந்து ரேடியோவுக்கு மாற்றியதும் சுபம் என்று நினைத்துக் கொள்வான். கரண்ட் போன ஒரு தினம் மிலிட்டரி அப்பா ரேடியோவைத் திருகினால் அது இயங்கவில்லை.டார்ச் எரியவில்லை. அதன் பிறகு சொந்தக் குரலில் மகேஷ் ஒரு சோகப்பாட்டைப் பாட அதற்கு அவனுடைய அப்பா இசையமைத்தார். மறு நாள் என்னடா மகேஷூ இனிமே இப்பிடி செய்யாம இரேன் என்றதற்கு எவண்டா இந்த பேட்டரியைக் கண்டுபிடிச்சது என்று அலுத்துக் கொண்டான். அன்று ரேடியோவும் பாடல் கேட்கிற வாய்ப்புக்களும் அபூர்வம். இன்றைய நாதவெள்ள நவகாலத்தில் மகேஷை நினைத்துக் கொள்கிறேன்.

பாடல் வாழ்க்கையோடு பல வழிகளில் கலந்தது. எந்தப் பருவத்திலும் தப்பாமல் மலர்ந்து விடுகிற காலமலர்கள் தான் பாடல்கள். இன்பமும் துன்பமும் சோகமும் சந்தோஷமும் எலாவற்றையும் கொண்டாடக் கிடைக்கிற ஒலிக்கலயங்கள் அல்லவா பாடல்கள் காற்றும் காலமும் எத்தனை பாடல்களால் நிரம்பியிருக்கின்றன? விசேஷ வீடென்றாலும் துக்க விலாசமென்றலும் அடுத்த ஏரியாவில் பெரிய குழாய் ஸ்பீக்கர் கட்டி பாட்டு போடுவார்கள். இன்றைக்கு  கிராமங்களில் மட்டும் தான் வீடுகளில் நடக்கிற சுபகாரியங்களானாலும் கடக்கிற துக்கங்கள் என்றாலும் சப்தமாகப் பாட்டுப் போடும் வழக்கம் இருக்கிறது. கண்ணன் அண்ணனும் நானும் சமீபத்தில் மதுரையின் எக்ஸ்டென்ஷன் ஏரியாவில் ஒரு விலாசம் சரிவர வழி புரியாமல் அலைந்து கொண்டிருந்த போது யதார்த்தமாக அண்ணன் சொன்னார் ” இதுக்குத் தாம்யா பாட்டுப் போடுறது. சுத்திச் சுத்திப் பாட்டு கெளம்புற இடத்தை நோக்கிப் போறது ஈஸியில்லா..? என்றார். ஆம். இசைவழி நகர்தல் எளியதாம்.சைக்கிளில் முன்னால் கூடையில் ரேடியோவை ஒலிக்கச் செய்தபடி இப்போதும் யாராவது சஞ்சாரம் செய்தபடி தான் இருக்கிறார்கள்.

)

அணைத்தலின் எதிர்ச்செயல் தான் எதிர்த்தல். ஒரு இடத்தில் தினமும் கூடி அரட்டை அடிப்பதற்கென்று காலமொன்று உண்டு.பதினாலு வயதிலேயே முழு உலகமும் காலடியில் வந்தாற் போல் நினைக்கத் தொடங்கினோம்.இதில் உன் வயசென்ன என்று கேட்டால் பள்ளிகாலத்தில் தொடங்கி கல்லூரி வரைக்கும் ஓரிரு வயதுகளைக் கூட்டி அதிகரித்துச் சொல்வது பலரிடமும் காணப்பட்டது.அதென்னவோ மூப்பது சிறப்பு என்று யார் வகுத்த ஆகமநியதி என்று தெரியவில்லை எல்லோருமே அனேகமாகப் பொய் சொன்னோம்.பொய் சொல்வதில் உள்ள முதல் சிரமம் உண்மையை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. அது மறக்கவே மறக்காது.ஆனால் பொய் பல்லிளிக்கும் தன்மை கொண்டது. மறந்து தொலைவதைப் பக்கத்திலேயே பயணிப்பவன் நினைவில் வைத்திருந்து அன்னிக்கி வேற சொன்னியே என்று ஆட்டம் கலைப்பான். அது பெரிய தொல்லை ஸார்.

திடீரென்று சிலர் நம் வாழ்வினுள் நுழைவதும் வெளியேறுவதுமாக யார் இந்தத் திரைக்கதைக்கு இன்சார்ஜ் என்பது முற்றிலும் புரியாத புதிராகவே இருந்து வந்தது. அவனுக்கு மனு என்று பெயர் வைக்கலாம். இரண்டு சகோதரிகளுக்கு நடுவே பிறந்தவன். ஆண் வாரிசு என்பதால் அம்மாவுக்குச் செல்லம். அப்பா ரொம்பக் கறார் என்பதால் வெகு சிறு பிராயத்திலிருந்தே தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிசகிவிட்டது. மனுவின் தோற்றத்தைப் பார்க்கும் யாருக்கும் அவனா ரொம்பப் பாவம் என்று ஆட்டோமேடிக் அபிப்ராயத்தை உதிர்ப்பார்கள். அதைத் தனக்கு சாதகமாகக் கொண்டான். மனு இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்துக்கும் நல்லவன். தன் சொந்த வீட்டில் அப்பாவின் பெட்டகத்தில் மட்டும் அவ்வப்போது கை வைப்பவன். சமயம் பார்த்து காசைத் தேற்றுவது என்று அதற்குப் பெயர் சூட்டினாலும் ஒன்று விட்ட திருட்டு என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை அல்லவா அதனால் அது திருட்டுத் தான்.அடிக்கடி பணம் காணாமற் போகிறதே என்பதை அறிந்தும் நேராய்க் கேட்பதற்கு மனமின்றி சிலபல முறைகள் பொறுத்துப் பார்த்த தந்தையானவர் ஒரு நூதன வழிமுறை செய்தார்.

அவருடைய கல்லூரித் தோழர்   லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலை பார்ப்பவரின் ஐடியா படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பீரோவில் வைத்து விட்டுக் காத்திருந்தார். வழக்கமாக சம்பளம் வாங்கிய ஓரிரு தினங்களுக்குள் மனு தன் கைவரிசையை காட்டிவிடுவான். இந்த முறை ஐந்து நாட்களாகியும் எந்த சம்பவமும் நடக்காமற் போகவே ஆறாம் தினம் மனுவின் அப்பா தன் நண்பரிடமே அந்த ரசாயன நோட்டுக்களைத் திரும்பத் தந்து சாதாரண நோட்டுக்களை வாங்கிக் கொண்ட பிறகு அதிலிருந்து ஒரே ஒரு நூறு ரூபாயை மட்டும் தொழில் பக்தி காரணமாக சுட்டு விட்டு வந்தான் மனு. தன் அப்பா ரசாயனம் கலந்த நோட்டுக்களை வைத்தது அவனுக்குத் தெரியவில்லை அப்புறம் ஏண்டா எடுக்கலை என்று கேட்டதற்கு “இல்ல சிங்கம் எங்கப்பா எப்பமும் பழைய நோட்டா தான் வச்சிருப்பாரு..சம்மந்தமே இல்லாமல் புத்தம் புதுத் தாளா இருந்திச்சா கள்ள நோட்டா இருந்தா தர்ம அடி வாங்க வேண்டியிருக்குமேன்னு தான் தொடல்லை என்றான். இது தெரிந்திருந்தால் பழைய நோட்டுல ரசாயனம் தடவிருப்பனே என்று அந்தத் தந்தையானவர் நொந்திருப்பார். பின் நாட்களில் மனம் திருந்திய குமாரனாக மாறினான் மனு. பரீட்சை எழுதி வங்கி வேலை கிடைத்து வட நாட்டுக்குச் சென்றவன் ரிடையர் ஆன தந்தையானவரைக் கண் இமை போலக் காப்பதாக ஊருக்கு வந்த போது கேபிடல் லெட்டரில் தெரிவித்தான்.”அதெப்படி மனு டக்குன்னு திருந்திட்டே” என்றதற்கு அவன் சொன்ன காரணவிசித்திரம் தான் இங்கே இத்தனையும் எழுதத் தூண்டியது.


“இல்லய்யா ஒரு தடவை காலங்காத்தால பணத்தை அடிச்சி கொஞ்சத்தை செலவுக்கு வச்சிகிட்டு மிச்சத்தை தோட்டத்துல தொட்டிச் செடிக்கு கீழ மறைச்சி வச்சிருந்தேன்யா பாலிடெக்னிக் போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள காவாசி கரன்சியைக் கரையான் அரிச்சிடிச்சிய்யா மாத்தவும் முடியாது செல்லவும் செல்லாது..அந்தக் காசை தூர எறிஞ்சிட்டு வெறிச்சி பார்த்திட்டிருந்தேன். மனுஷ வாழ்க்கை எம்புட்டு அற்பத்தனம்னு என்னமோ தோணிச்சி. எங்கப்பா நான் ஒரு கிரிமினலா ஆயிட்டேன்னு கிட்டத் தட்ட நம்பிட்ட மொமண்ட்ல அப்டி இல்லைன்னு நிரூபிக்கணும்னு தோணுச்சி. அதான் கைவைக்கிறதை விட்டுட்டேன் என்றான். அதன்பிறகு எங்கெல்லாம் கரையான் அரித்த காட்சியைக் காண நேர்கிறதோ உடனே மனுவின் முகமும் வந்து போகும்.ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு தொட்டிச் செடி தான் இல்லையா..? உலகமாவது பெருவனம். தோட்டம் முழுவதும் பூக்கள் என்பது மறுப்பதற்கில்லை

ஒரு நடிகர்

கிருஷ்ணன் நாயர் என்ற இயற்பெயரிலான ஜெயன் மரணிப்பதற்கு நான்கு மாதங்கள் முன்னால் அவர் நாயகனாக நடித்து ஜே.மகேந்திரன் இயக்கிய பூட்டாத பூட்டுக்கள் படம் வெளியானது.பொன்னீலன் எழுதிய உறவுகள் நாவலின் அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது போன்ற காலத்தால் சிதைவுறாத நல்ல பாடல்கள் நிரம்பிய படம். அதுவும் அந்த ஆனந்தம் பாடல் ஆரம்பிக்கிற இடத்தில் தன் முகபாவங்களை அதில் தொனிக்கும் சந்தோஷங்களை மறைத்துக் கொள்ளத் தெரியாத வெள்ளந்தி கிராமத்து மனிதனை அச்சுப் பிசகாமல் கண்களின் முன் தோற்றுவித்தார் ஜெயன். இருந்திருக்க வேண்டிய அபாரமான திறன்சாலி. நாற்பத்து ஓரு வருடங்களே வாழ்ந்த ஜெயன் அவரது புதிய படப்பிடிப்பில் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்.

அவரது மறைவை ஒட்டி ஜெயனின் தீவிர ரசிகர்கள் சிலர் மனப்பிறழ்வு அடைந்தது நிகழ்ந்தது. மலையாள சினிமாவின் முழு முதல் ஆக்ஷன் ஹீரோவான ஜெயன் ரசிகர்களின் கரகோஷங்களைத் தனியே அறுவடை செய்தவர். அதன்மீது கொண்ட ஒப்புக்கொடுத்தலில் அசாதாரணமான ஆக்சன் காட்சிகளில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டவர். ஹெலிகாப்டரில் தொங்கிய படி ஒரு மயிர்க்கூச்செறியும் சண்டைக் காட்சியைத் தன் புதிய படத்திற்காகப் படமாக்கிய போது போதும் என ஒளிப்பதிவாளர் சொல்லியும் இயக்குனர் தடுத்தும் தான் மட்டும் திருப்தி அடையாமல் ரீ-டேக் எடுத்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார் ஜெயன். அந்த ரீடேக்கின் போது ஹெலிகாப்டர் தன் கட்டுப்பாட்டை இழந்து ஜெயன் மீதே விழுந்து அவர் மரணமடைந்தார். கேரள திரையுலகமும் ரசிகலோகமும் அல்லோலகல்லோலப் பட்டது. சென்னை சோழவரத்தில் படப்பிடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து ஜெயனின் ஊரான கொல்லத்தில் அவரது இறுதி அஞ்சலி நிகழ்ந்த போது பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் மல்க விடை தந்தனர். தமிழ் சினிமாவுக்கெல்லாம் முன்பாகவே எழுபதுகளின் இறுதிக் காலத்திலேயே பலவிதமான பன்ச் டயலாக்குகள் பேசி அதன் மூலமாகவும் தனக்கென்று பெருங்கூட்டத்தை கொண்டிருந்த நல்நடிகர் ஜெயன்.

ஒரு புத்தகம்

குமாரசாமி குடும்பம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கக் காலத்தைய இலங்கை தேசத்தில் மிகுந்த அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்த குடும்பம். ஆனந்த குமாரசாமி என்கிற ஆனந்த கெண்டிஷ் முத்துக் குமாரசாமி இந்திய ஓவியக் கலையை மேற்குத் திசைக்கு அறிமுகப் படுத்திய மிக முக்கியமான கலை இலக்கிய மத தத்துவவாதி ஆவார்.எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்த ஆனந்த குமாரசாமியின் The Dance of Shiva -fourteen essays rupa publications வெளியீடு. ரூ195 இதன் விலை கலையின் மீது தேட்டம் கொண்ட யார்க்கும் இந்த நூல் வனசஞ்சாரிகள் எப்போதும் தங்களோடே கொண்டிருக்க வேண்டிய முறிமருந்தைப் போன்றது. வீரியமான குமாரசாமி கலைக்கு நேர்த்தித் தந்த பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

ஒரு கவிதை

இரவெல்லாம் பெய்த மழையில்
மிதந்து மிதந்து
எங்கோ வந்து சேர்ந்திருக்கிறது
வீடு
**
தேவதேவன்

பக்கத்தில் தான் இருக்கிறது வீடு
என்.சி.பி.ஹெச் வெளியீடு
விலை ரூ 80

தொடரலாம்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
 2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
 3. அன்பென்ற பொருளாதல்
 4. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
 5. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
 6. சினிமா பித்து- ஆத்மார்த்தி
 7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
 8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
 9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
 10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
 11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி