எல்லாமே எப்போதுமே  11 

உணவு என்பது எத்தனை மகத்தான விஷயம்..? வகை வகையான உணவுகள் தேவசுகம். முதன் முதலில் ஒரு புதிய உணவை ருசி பார்த்த ஞாபகங்கள் மகத்தானவை. உலகம் முழுவதும் முதன் முதல் மது பருகிய சந்தர்ப்பத்தைப் பற்றிப் பெரிய விவரணைகளுடன் பேசிக்கொள்வார்கள். நட்பும் உறவும் விருந்தோம்பலைப் பெரிதும் போற்றுபவையே. உணவைப் பகிர்வது பள்ளிப் பருவத்தில் சிறுவர்கள் கற்றுத் தேர்கிற பண்பாட்டின் ஆதிவேர்களிலொன்று. எண்பதுகளின் மத்தியில் எல்லாமே கிடைத்த எதுவுமே கிடைக்காத வினோதங்களின் பொற்காலமாய்த் தான் இருந்தது. வாங்கித் தின்பது என்னும் ஆகமத்தை ஒட்டித் தான் பள்ளி சென்று திரும்புகிற சம்பிரதாயத்தின் பல்வேறு காட்சிகள் பிணைந்திருக்கும். எனக்குள்ளே பல்வேறு பண்டங்களின் முதல் வருகைகளும் அவற்றோடு இயைந்த இடம் காலம் சூழல் மனிதர்கள் முன்பின் நிகழ்வுகள் எனப் பெரிய ஞாபகமாலை ஒன்றின் விதவிதமான பூக்களாகவே உணவுகள் குறித்த தரவுகள் ததும்புகின்றன.

அம்மாவுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம். ஒரே அண்ணன் அன்றைய பம்பாயில் வேலை நிமித்தம் ஸெட்டில் ஆகி விட தாயும் மகளுமாய் அம்மாவை அழைத்துக் கொண்டு பாட்டி மதுரைக்கு வந்தது கதையின் முதல் வரி.அம்மா சென்னையில் படித்து டீச்சர் ட்ரெய்னிங் முடித்து அப்போதைய சரஸ்வதி பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தது அடுத்த திருப்பம் என்றால் 1964 ஆமாண்டு மதுரையில் அம்மா வேலை பார்த்த சரஸ்வதி பள்ளி இடிந்து விழுந்து பல மாணவர்கள் இறந்து போனது மறக்க முடியாத வலி. அம்மா உயிர்பிழைத்தது அழகர் மலையான் அருள் என்று தான் பாட்டி எப்போதும் சொல்வாள். அழகர் மலையான் தான் குலதெய்வம். குடும்ப தெய்வமும் அவனே.

நாங்கள் குடியிருந்த புதூர் எனும் தலம் அழகர் கோயிலின் ஆன் தி வே. இப்போது உள்ள மதுரை நகரமானது அப்பன் திருப்பதி வரை தன் கரங்களை நீட்டித்துக் கொண்டிருக்கிறது. எண்பதுகளில் புதூர் அழகர் நகர் வரை தான் டவுன் டச் என்பது மூன்றுமாவடியே பசேலென்று கிராமியம் மணக்கும். அவர் சைக்கிள் எடுத்து சைக்கிள் ஓட்டப் பழகுபவர்கள் சர்வேயர் காலனிப் பக்கம் செல்வார்கள். நானும் சண்முகத்தோடு பின்னால் அமர்ந்து அரை நாள் வெயிலும் நிழலுமாக சுற்றியிருக்கிறேன். என் உலகத்துக்குள் பல உலகங்களைத் திறந்தவன் சண்முகம் தான். பெரிய பசங்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். சண்முகம் சற்று உயரக் குறைவான பையன். அவனை அறியாதவர்கள் என் சமவயது என நினைக்கும் தோற்றம். உண்மையில் அவன் எனக்கு மூன்று வயது மூத்தவன்.கிரிக்கெட் கிட்டிப்புள் எனப் பல ஆட்டங்களில் தேர்ந்தவன்.

அம்மா பக்தியில் ஊறியவள்.அதிலும் ஒவ்வொரு வருடத்தின் நிறைவையும் அழகரை சந்திப்பதில் கழிக்க வேண்டும் என்று எங்கள் குடும்பத்துக்குப் பழக்கினாள்.டிசம்பர் 30 அல்லது 31 குடும்பமாகக் கிளம்பி அங்கே செல்வோம்.வருட நிறைதலுக்காக நன்றி சொல்லி விட்டு கொண்டு சென்ற உணவுவகைகளை ஓய்வாக அமர்ந்து உண்போம். ஒவ்வொரு வருடமும் எங்களோடு இந்தச் சின்னஞ்சிறு பயணத்தில்   குடும்ப நண்பர்கள் யாராவது சேர்ந்து கொள்வார்கள்.   மதுரைக்கு அருகே திகழும் அழகர் கோயில் இன்றைக்கு லேசாய் மாறி இருந்தாலும் கூட முந்தைய காலத்தின் சாளரமாகத் திகழ்வதென்னவோ உண்மைதான்.

அழகர் கோயில் தோசை என்றொரு தின்பண்டம்.அடை சைஸில் பொறித்து எடுக்கப் பட்ட வெள்ளையப்பத்துக்கு நிகரான சுவையில் மிளகெல்லாம் போட்டு மொறுமொறுக்க அங்கே மட்டும் கிடைத்த பிரசாத பட்சணமாக முன்பிருந்தது. இப்போது மதுரையைச் சுற்றிய பல கோயில்களிலும் கிடைக்கிறது.முதன் முதலில் அழகர் கோயிலில் அந்த தோசையை சாப்பிட்டு வந்து நாலைந்து நாட்கள் அதன் நினைவாகவே இருந்தது வரலாறு .எது கிடைப்பதற்கரிதாக உள்ளதோ அது சுவை மிகுந்ததாகவும் தனிக்கும் வாய்ப்புகள் அதிகம்.செண்டிரல் தியேட்டரில் மட்டும் கிடைக்கும் கிரேப் கிரஷ் எனும் பானம் புதூரின் பல கடைகளில் கிடைக்கும் ஃப்ரூட் மிக்சர் ரஸ்னா குச்சி ஐஸ் என அவ்வப்போது மனசை எழுதி வைக்கும் பெனிஃபீஷியரி பெயரை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தாலும் ஸ்கூல் தோழனான மைக்கேலின் அக்கா திருமணம் மதுரையின் மாபெரும் ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. வழியெல்லாம் விசாரித்து ஒருவழியாக மாவட்ட நீதிமன்றம் செல்லும் பேருந்தில் ஏறி டெர்மினஸில் இறங்கி அந்த மண்டபத்தை அடைந்ததுமே ஹாவென்று வியந்தேன். மதுரையில் அத்தனை பெரிய மகாலை எண்ணிப் பார்த்திராத சிறுவயது எனக்கு. இன்றைக்கும் அதனை அடித்துக் கொள்ள இன்னோர் தலம் உருவாகவில்லை எனலாம். மதுரையின் பல்வேறுபட்ட நிகழ்வுகள் அங்கே தான் நடந்தேறுகின்றன.

 சைவம் அசைவம் என இரண்டு தனி இடங்களில் விருந்து நடைபெற்றது. மணமகளின் தம்பியின் ஆஸ்தான நண்பர்கள் என்கிற மகா தகுதியோடு அந்த இடத்தில் வளைய வந்துகொண்டிருந்தோம் நான் மார்லன் அறிவு மூன்று பேரும். மார்லன் கறிவிருந்துக்குச் சென்று விட நல்ல வேளையாக அறிவு எனக்கு துணைக்கு வந்தான். சும்மா சொல்லக் கூடாது. இது நடந்தது 1989 என்று அறிக. அந்தக் காலகட்டத்தின் மாபெரிய ரசனைமிகுந்த விருந்துகளில் அது ஒன்று என இடம்பிடிக்கும். அப்படி விதவிதமாக சிற்பி செய்த பர்பி ஆயாசம் தரும் பாயாசம் என்றெல்லாம் அறிவு ஓட்டியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எங்களை கவனிக்க மைக்கேல் அங்கேயே நின்றுகொண்டிருந்தானா எங்களுக்குக் கேட்டதெல்லாம் கிடைத்தது. அதில் பாருங்கள் சினேகிதரே…பாலை சுண்டக் காய்ச்சிய பாயாசத்தில் குலோப் ஜாமூனின் தேன் ஜீராவைக் கொஞ்சம் கலந்து பால் திரட்டுப் பாலையும் கலந்த சேர்மானத்தின் மீது ஸ்பெஷல் ஐஸ்க்ரீமை வார்த்துக் குழைத்தால் அதுவல்லவோ தேவாமிர்தம்..? இன்னும் கொஞ்சம் என மூன்று தடவைகள் வாங்கி சாப்பிட்ட அறிவு அடுத்து வந்த மூன்று தினங்கள் எம்.ஆர். ராதா குரல்ல அப்டியே மிமிக்ரி பண்றடா என்று சொன்னபோது முறைத்தது வேறு கதை.

அறியாமையிலிருந்து அறிதலை நோக்கிய பயணமே வாழ்வின் சுவாரசியமாகிறது. எந்த விளையாட்டாக இருக்கட்டுமே அதன் விதிகளைப் பூரணமாக அறிந்து முடித்தவுடன் மனசுக்குள் ஒருவிதமான உணர்வு புகைபோலப் படரும். அதே ஆட்டம் பலமுறை ஆடிச் சலிக்கிற தினம் வரை அந்தப் புகையின் மூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கியே விலகும். குடும்பமாக உட்கார்த்து பல்லாங்குழி பரமபதம் போலவே ரம்மி விளையாடினோம். ஒரு சீஸனில் பாட்டி பலமாக ஆட்சேபிப்பாள் லட்சுமி எப்படி வீட்டில் தங்குவாள்? என்றெல்லாம் பயமுறுத்தினாள். அம்மாவுக்கு எந்தப் பக்கம் சப்போர்ட் செய்வது எனத் தெரியாமல் முழுப் பரீட்சை விடுமுறையில் மட்டும் விளையாடிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள். பாட்டி தனி ஒருவளாக எதிர்க்கட்சியானது தான் மிச்சம்.அப்பா பிரமாதமாக விளையாடுவார். ஃப்ளூக் எனப்படுகிற குருட்டு அதிர்ஷ்டத்தின் ஆட்டம் ரம்மி. அப்பாவோ மாபெரும் சூதுவானாகத் திகழ்ந்தார். அவருடைய அறிவின் அபாரம் தேவையற்ற திருப்பங்களை நிர்ப்பந்திக்கவே பல ஆட்டங்களில் வென்றும் தோற்றும் புதிராகவே இருந்தார். யோசித்துப் பார்த்தால் அவர் தனது மொத்த வாழ்க்கையையுமே ரம்மி போல ஆடி பாதி ஆட்டத்தில் ஸ்கூட் செய்தவர் என்று தோன்றுகிறது.ஆசை அறுபது நாள் என்றாற் போல் அம்மாவுக்குள் ஒளிந்திருந்த அன்னியள் ஒரு நாள் விழித்துக் கொண்டு சனியனாட்டம் சீட்டு மோகம் எல்லா வேலையையும் கெடுத்துரும் போலருக்கு..ஒழுங்கா சீட்டுக்கட்டுக்களை தூக்கி கடாசிட்டு வாங்க என்று கர்ஜித்தாள். அப்புறம் கம்ப்யூட்டரின் ஆதிகாலத்தில் சொற்ப நாட்கள் சாலிடேர் என்று திரையில் சீட்டாடினேன். மனசு பழசு தேடும் தினுசு புரியவே அதையும் கைவிட்டேன்.இப்போது இந்த கொரோனா க்வாரண்டைன் காலத்தில் சீட்டுக்கட்டை எடுத்துவிடலாமா என்று ஐம்பது நாட்களாக யோசனையில் நன்றாகக் கழிகிறது காலம்.

ஒரு கவிதை
**************

நீச்சல் தெரியாது எனக்கு
கரை நின்று ஆறு கண்டேன்
அந்த மீன்கொத்திக் கவிதை என்னுடையதே.

கல்யாண்ஜி
அந்தரப்பூ
சந்தியா பதிப்பக வெளியீடு விலை ரூ 100

ஒரு நடிகர்
***********
ஷங்கர் நாக் கன்னட சினிமாவின் ஆகச்சிறந்த பெயர்களில் ஒன்று. சினிமாவைத் தன் சுவாசமாகவே கொண்டவர் ஷங்கர். அழகிய திருமுகம் தாமிரமும் தங்கமும் அளவே சேர்ந்தாற் போலொரு ஆபரணக் குரல் துடிக்கும் இதழ்களின் மந்தகாசப் புன்னகை சற்றே செருகிய பார்வை என இந்தியாவின் அழகான கதாநாயகர்களில் ஒருவர். கன்னட சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்ற இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஷங்கர் தன் 36 ஆம் வயதில் கார் விபத்தில் மரணமடைந்தார். நடிகர் என்பதைத் தாண்டி இயக்குனராகவும் மிளிர்ந்தவர் ஷங்கர்நாக். இவர் இயக்கிய எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. ஜென்ம ஜென்மதா அனுபந்தனா கீதா மற்றும் ஆக்சிடெண்ட் ஆகிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ஆக்சிடெண்ட் இந்திய அளவில் பேசப் பட்ட படம். பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஷங்கர் நாக் ராஜ்குமார் அர்ச்சனா நடிக்க ஒந்து முத்தின கதே (ஒரு முத்தின் கதை) என்ற படத்தை  இயக்கினார். இன்றளவும் கர்நாடகத்தின் கலாபூர்வ சிகரங்களில் ஒன்றென பெரும் கூட்டத்தாரால் கொண்டாடப் படுகிற படம் இது.கீதா படத்திற்காக இளையராஜா கன்னடத்தில் இசைத்த பாடல்களைப் பிறகு வந்த காலத்தில் தமிழின் வெவ்வேறு படங்களில் பாடலாக்கினார். தேவன் தந்த வீணை விழியிலே மணி விழியில் மௌனமொழி பேசும் அன்னம் தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி ஆகியவை கீதாவின் கீதங்கள்.ஷங்கர் நாகின் உடன்பிறந்த ஆனந்த் நாக் இன்றும் கன்னட நிலத்தில் செல்வாக்குள்ள நடிகர் மற்றும் அரசியல்வாதியாக விளங்குகிறார்.

ஒரு கேஸட்
************
நட்பின் பெருமையை விளக்கும் கேஸட் ஒன்றை உண்டுபண்ணலாம். நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் என்ற பாடல் முதலாவது. காட்டுக்குயிலு மனசுக்குள்ளே என்கிற தளபதி மெகா ஹிட் அப்புறம் சோழர் குலக் குந்தவை போல் சொர்ணக்கிளி நான் தரவா என்கிற உடன்பிறப்பு படப் பாடல் வாழுமட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா வாழ்வு யார் பக்கம் அது நல்லவர் பக்கம் பெண் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்ற பாடல் அதிரசகானம்.முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒரி முஸ்தபா பாடல் நவீனத்தின் வாசல் அலைபாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி என்ற ஆதலினால் காதல் செய்வீர் படப் பாடல் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் குயிலுக்கு கூகூகூ என்ற பாட்டு என் ஃபேவரிட் மனசே மனசே மனசில் பாரம் என்ற பாடல் ஏப்ரல் மாதத்தில் படத்தின் சிறப்பு என்றென்றும் புன்னகை படத்தின் எலே எலே தோஸ்துடா நண்பனே எனது உயிர் நண்பனே நீண்ட நாள் உறவிது என்ற சட்டம் படப்பாடல் ஒரு ஆல் டைம் ஹிட்.

ஒரு சந்தேகம்
***************
வாட்ஸ் அப்பில் வருகிற ஜோக்குகளை எல்லாம் யார் யோசிக்கிறார்கள்..? ஒரு ஒழுங்கான சித்திரத்தின் பின்னால் இருக்க வேண்டிய யதார்த்தத்தின் அத்தனை கோடுகளும் பொருந்தி வருவதன் அழகை வியக்காமல் இருக்க முடிவதில்லை. கோருவாரற்ற குழந்தைகளாகவே இப்படியான துணுக்குகள் எங்கே இருந்து கிளம்புகின்றன என்பதை அறிவதற்காகாமல் சுற்றுகின்றனவே.இது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பத்திரிகைகளில் ஜோக்ஸ் எழுதி அதன் சன்மானத்திலேயே ஒருவர் வீடு கட்டினார் என்றொரு துணுக்கு எங்கோ வாசித்த ஞாபகம். இந்த நூற்றாண்டு நம்மிடமிருந்து பறித்துப் போட்டதில் மிக முக்கியமானது இந்த ஜோக்ஸ். கையெழுத்தில்லாத ஓவியங்களாகக் காற்றில் கலக்கின்ற இவற்றை உருவாக்கிய மனங்கள் போற்றப் படவேண்டும் தானே  இனியாவது இவற்றை உருவாக்குவோர் இப்படிக்கு ராமமூர்த்தி என்று அவரவர் கையொப்பத்தை இடுவார்களா.?செய்வார்களா..?

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
 2. அன்பென்ற பொருளாதல்
 3. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
 4. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
 5. மதுரையில் மறைந்த திரையரங்குகள் -ஆத்மார்த்தி
 6. சினிமா பித்து- ஆத்மார்த்தி
 7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
 8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
 9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
 10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
 11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி