எல்லாமே எப்போதுமே 7 

“பெயல் புறந் தந்த பூங்கொடி முல்லைத்–
தொடு முகைஇலங்கு எயிறு ஆக
நகுமே–தோழி! நறுந் தண் காரே”

ஒக்கூர் மாசாத்தியார்  
குறுந்தொகை 126

எல்லா ஊர்களிலும் கைவிடப்பட்ட தியேட்டர்கள் பல உண்டு. என் ஞாபகத்தின் முதல் விள்ளலாக விரிந்து கொள்வது நடிகன் படம். அதை மதுரை அமிர்தம் தியேட்டரில் பார்த்தேன்.அது தான் வீட்டார் அறியாமல் நான் மட்டுமாய் உலாவித் திரும்பிய முதல் சினிமா. அப்புறம் அது எனக்குப் பிடித்த நற்பழக்கமாக மாறிற்று. தூரத்து உறவினர் ரஜினி குமார் புண்ணியத்தில் அண்ணாமலை படத்தை ரிலீசான இருபத்தோராம் தேதியே அதிகாலையில் ஒரு மன்ற ஷோவும் அன்றிரவே மீண்டும் இரண்டாம் ஆட்டமும் பார்த்தேன். ரிலீஸ் தினத்தில் ரெண்டு முறை ரஜினி படம் எல்லாம் விலை உயர்ந்த அராஜகம். அமிர்தம் தியேட்டர் இன்னமும் இயங்குகிறது அது செல்லும் வழியில் மீனாட்சி எனும் பெரிய தியேட்டரும் மீனாட்சி பாரடைஸ் மினி என துக்ளியூண்டு தியேட்டரும் இருந்தன. அந்த மினி தியேட்டர் மதுரையின் சின்னஞ்சிறிய அரங்கங்களில் ஒன்று. அங்கே தான் பெரிய தியேட்டரில் தேவர் மகன் பார்த்தேன். அந்த தியேட்டர் பன்னெடுங்காலமாக ரீ ரிலீசுக்குப் பெயரோடு இருந்தது. தற்போது இயக்கத்தில் இல்லை.

சந்தையின் அருகே ஸ்ரீதேவி தியேட்டரில் பாட்ஷா ரிலீஸானது. மதுரையின் பெரும் கொண்ட அரங்கங்களில் ஒன்று ஸ்ரீதேவி. அதற்கென்று தனித்த சம்பவங்கள் பலவற்றைக் கொண்டது அங்கே இருந்து வெளிப்பட்டால் சிம்மக்கல் செல்லும் வழியில் தீபா ரூபா என மதுரையின் அதிமுதல் காம்ப்ளெக்ஸ்களில் ஒன்று இயங்கிற்று. அழகான இணை தியேட்டர்கள். எப்போதும் பெரும்பாலும் இங்கிலீஷ் படம் தான் திரையிடப்பட்டன. ஒரு கட்டத்தில் தியேட்டர் சவுண்டு சிஸ்டம் எல்லாம் புதுப்பிக்கப் பட்டு கருப்பு ரோஜா தமிழின் முதல் டீடீஎஸ் திரைப்படம் என்ற பேர் தாங்கி வெளியானது. தீபா ரூபா தியேட்டருக்கென்று மறக்க முடியாத சம்பவங்கள் பல உண்டு. ஒரு மாபெரும் மழை தினத்தில் அங்கே மதியக் காட்சி பேய் என்ற ராம்கோபால் வர்மா படம் முடித்து விட்டு வெளியே வரமுடியாமல் வெகு நேரம் நின்று கொண்டிருந்தோம்.அடுத்த காட்சிக்கு ஆளே இல்லாமல் வெறிச்சோடும் வரை அங்கேயே நின்று பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் ஐந்து நிமிடத்தில் அடுத்த காட்சி படம் திரையிடப்பட இருக்கையில் மழை நின்றது. நாங்கள் வெளியேறும் போது எதிரே ஒரு பத்துப் பேர் வந்து கொண்டிருந்தனர். சூர்யா சொன்னான் பாவம்டா பேயி ஆளே இல்லாட்டி யாரைப் பிடிச்சு ஆட்டும் நல்ல வேளை பத்து பேராச்சும் வந்தானுங்க என்றான்.உலகத்தில் பேய்க்காகப் பரிதாபப் படவும் ஆட்கள் இருப்பதை அறிந்து கொண்டது அன்று தான்.

நான் சிறுபிராயம் வளர்ந்த வீடு கல்பனா தியேட்டர் தெருவில் இப்போது உருமாறி விட்டது. அந்தத் திரையரங்கமும் லேசான மாற்றங்களோடு அண்ணாமலை என இரண்டு தியேட்டர்களாக மாறி இருக்கிறது. மதுரையின் மாபெரும் ஷா தியேட்டர் அதன் இணையாக ஹாஜீரா என்ற இரண்டும் ஆற்றங்கரையோரத் தொடுதலோடு அமைந்த அரங்கங்கள். நான் சென்று பார்த்த ஜெயராஜ் தியேட்டர் ஜேசி ரெஸிடென்ஸி ஆகி விட்டது. பத்மா தியேட்டரில் சின்னத்தம்பி சக்கைப் போடு போட்டது அது இன்றைக்கு திருமண அரங்கமாக வேறு தோரணையில் மின்னுகிறது. பழங்காநத்தத்தில் ஜெகதா என்ற அரங்கம் பஸ் நிலையத்துக்கு அருகே இருந்த ஒன்று பிறகு ஹரி விக்னேஷ் என பேர் மாறி அதுவும் நிலையாமற் போயிற்று. நட்ராஜ் என்று பழங்காநத்தம் மெயினில் நாலு வழி திருப்பத்தில் ஒரு அழகான தியேட்டர். அங்கே தான் இதுதாண்டா போலீஸ் சத்ரு ஜெண்டில்மேன் தொடங்கி பருத்திவீரன் வரை பல படங்கள் பெருமளவு வசூல் அள்ளிய வரலாறு உண்டு. அங்கே ஜெண்டில்மேன் படத்துக்கு செல்வதற்காக நானும் மார்லன் பிராண்டோவும் ஆளாளுக்கு தன்னால் ஆன தியாகங்களைச் செய்து படம் பார்க்க சென்றோம். மார்லன் என் அழகான நண்பன். மாபெரும் ரஜினி ரசிகன். அடுத்த படம் வரும் வரைக்கும் முன் பட ரஜினியாகவே மனதார மாறி வேடம் பூணுவான். பணக்காரன் தொடங்கி பாட்ஷா வரைக்கும் அத்தனை படங்களின் எல்லா ரஜினிகளையும் டாப் டு பாட்டம் அப்படியே கண்முன் நிறுத்துவான். விரல் நுனி வரை ரஜினியை அப்படியே பிரதிபலிப்பான். அதற்காகவே பொறாமை கலந்து விரும்பப் பட்டான். ராஜாதி ராஜா படத்தின் கதையை எங்களுக்கு முன்பாக அப்படியே இயக்குனர் பட அதிபருக்குக் கதை சொல்வது போல் சொல்லி இருக்கிறான். பலமுறை அப்படி ரசித்தோம்.

இன்றும் சில அரங்கங்கள் மட்டும் இயங்குகின்றன. அவையும் பழைய ஞாபகத்தை முற்றிலும் இழந்த முதுமையின் ஊர்தலோடு தான் நிற்கின்றன. இந்தியாவின் மாபெரும் தங்கம் என்ற பேரில் விளங்கிய பெரிய அரங்கம் இப்போது சென்னை சில்க்ஸ் துணிக்கடையாகி டாலடிக்கிறது. ஹரிதாஸ் ஓடிய சிந்தாமணி அரங்கம் இன்றைக்கு ராஜ்மகாலாகி விட்டது. தினமணி தியேட்டர் இருந்த இடம் இப்போது ஒரு ஜவுளி குடோவ்ன். ராம் விக்டோரியா செயல்படாமல் நிற்கிறது, வெள்ளைக்கண்ணு தகர்க்கப்பட்டு மனையாகி விட்டது. ஒரு காலத்தில் மதுரையின் மாபெரிய ஸ்டார் பார்க் என விளிக்கப் பட்ட நடனா நாட்டியா நர்த்தனா மூன்று அரங்கங்கள் இருந்த இடம் இன்னும் இருக்கிறது. இருந்த தடம் நெஞ்சங்களில் மாத்திரம் நீடிக்கிறது.ந்யூ சினிமா மதுரை மீனாட்சி கோயிலுக்கு மிக அருகே நின்றுகொண்டிருந்த அரங்கம் இப்போது மூடப் பட்டு விட்டது.இவற்றில் பல  விலை பேரத்தில் இடையில் நின்று கொண்டிருப்பவை எந்த நேரமும் விற்பனையாகி வேறு உருக் கொள்ளக் கூடிய வாய்ப்புண்டு. பல அரங்கங்கள் தங்களது நெடுங்கால ரூபங்களை இழந்திருக்கின்றன. எல்லாம் காலம் செய்கிற மாற்றம் என்பதெல்லாம் புரிந்தாலும் மனம் என்பதே ஞாபகசினிமா நாளும் ஓடித் திளைக்கிற நிறமற்ற திரை தான் இல்லையா..?

நட்சத்திரங்கள் மாற்றலாகிச் சென்ற காலி வானம் போல் கழற்றி வீசப்பட்ட இத்தகைய திரைகள் மதுரைவாசிகளின் ஞாபகத்தில் மட்டும் ததும்புகின்றன. பல நடிகர்களின் ரசிகர்கள் திரைப்படங்களின் வருகை வெற்றி தோல்வி என திரை அரங்கங்கள் சார்ந்த சித்திரங்கள் அலாதியானவை. நான் முதலில் திட்டமிட்ட நாவல் சதுரம். இன்னும் சிறிய பூர்த்திப் பணிகள் மிச்சம். அந்த நாவல் முழுவதும் மதுரை திரை அரங்கங்களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப் பட்டது தான். என் சிறு பிராயம் முதல் என்னை மிகவும் வசீகரித்த இரண்டாவது பண்டம் சினிமா முதலாவது புத்தகம். ஆகவே இதனுள் அதனை வைத்தெழுதுகிறேன் போலும்.

மாற்றம் எனும் இரக்கமற்ற ஒற்றைச்சொல்லைத் தேக்கியபடி எத்தனை அழிவுகளை மேற்கொண்டபடி நகர்கிறது மனிதவாழ்வு.நானும் கவிஞர் ஸ்ரீ ஷங்கரும் ஒரு நாள் டவுன் ஹால் ரோடில் நடந்து சென்றோம். அப்போது பெருமாள் தெப்பத்தைச் சுற்றி இருக்கிற கடைகளின் வழியாக நடக்கும் போது அவர் நிறைய தகவல்களைச் சொன்னார்.பெருமாள் தெப்பத்தின் இன்றைய தோற்றத்தைப் பார்க்கலாம் என்று அருகே சென்றோம். உள்ளே கிரிக்கெட் டோர்ணமெண்ட் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிந்த நண்பன் நாகராஜ் சொல்லிவிட்டு சிறிது நேரம் பேசிய பிறகு கிளம்பினார். நாங்களும் அங்கே இருந்து ந்யூ சினிமா பகுதியை நோக்கி நடந்தோம். ஒரு குளத்தை நீரற்ற நிலையில் பார்ப்பது கொடுமை.எந்த நீர் நிலைக்கும் இது பொருந்தும் தான். கோயிலும் குளமும் ஒன்றோடொன்று இயைந்த ஞாபகங்கள். ஒரு முறை திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்ற போது  பக்கவாட்டில் ஒரு மனிதர் அனேகமாக வயது ஐம்பது இருக்கலாம் காலிடறி குளக்கரையில் தடுமாறி விழப்போனவரை அருகே நின்றவர்கள் சட்டென்று பிடித்து விட்டனர்.  நல்லவேளை என்று எல்லோரும் முணுமுணுத்தோம். கோயிலிலிருந்து வெளியே வந்து உடுப்பி ஓட்டலில் டிஃபன் சாப்பிடும் போது பார்த்தால் எதிரே ரெண்டு டேபிள் தாண்டி அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து சங்கடமாய்ப் புன்னகைத்தார். இன்னமும் அந்தப் படியில் வழுக்கிய படபடப்பின் மீதம் அவரது உடலில் அனிச்சையான நடுக்கமாக எஞ்சியிருந்தது. ஏனோ பெருமாள் தெப்பத்தின் நீரற்ற குளத்துப் படிகளை உற்று நோக்கும் போது அந்த மனிதரின் நினைவும் சேர்ந்தே வந்தது. ஒன்றுக்கொன்று தொடர்பற்ற திவலைகள் தானே வாழ்வெனும் பெருங்கனா

இந்த நிழல்

எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
 
பாதத்தின் விளிம்பிலிருந்து தானா?
அல்லது அதன் அடியிலிருந்தா?

பூமியில் காலூன்றி நிற்கும் போது
நிழல் மேல்தான் நிற்கிறோமா?
 
காலை தூக்கி பார்க்கலாம் தான்.

அந்த யோசனையை நான் ஏற்கவில்லை
பூமியில் நிற்கும் போது
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்
என்பதுதான் எனக்கு தெரியவேண்டும்

பசுவய்யா
—-
யாரோ ஒருவனுக்காக
கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை

தொடரலாம்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. குஸ்கா பிரியாணியும் சால்னா பரோட்டாவும் - ஆத்மார்த்தி
 2. அழகர் கோயில் தோசையின் அழியாத சுவை
 3. அன்பென்ற பொருளாதல்
 4. ஜெயன் என்னும் மறக்க முடியாத நடிகர் - ஆத்மார்த்தி
 5. வேடத்திலிருந்து வெளியேறுதல் -ஆத்மார்த்தி
 6. சினிமா பித்து- ஆத்மார்த்தி
 7. நகரத்தின் கண்கள்- ஆத்மார்த்தி
 8. மெலிய மறுக்கும் யானை - ஆத்மார்த்தி
 9. கனவான் குணவான் - ஆத்மார்த்தி
 10. பெஸ்டியை இழத்தல் - ஆத்மார்த்தி
 11. வயலட் விழியாள் - ஆத்மார்த்தி