சிற்றோடை மீன்கள் (2)

எழுபதின் பிற்பகுதியிலேயே எழுதவந்துவிட்டேன் என்றாலும் எண்பதின் எழுத்தாளனாகவே நான் வகைப் படுத்தப்படுகிறேன்

இந்த நாற்பது ஆண்டுகளில் நான் பதிமூன்று சிறுகதைகளையே எழுதியிருக்கிறேன். அவைகளில் ஒன்பது கதைகள் சிறு குழந்தைகளின் உலகத்தை பின்ணணியாக கொண்டவைகள் அல்லது சிறுகுழந்தைகளின் மனநிலையை ஆதாரமாகக் கொண்டவைகள். இது போலவே இத்தனை ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளும் ஐநூறை தாண்டி விரைகிறது. கவிதைகளிலும் இருபது சதவிதமானவைகள் சிறுவர் மனநிலையிலிருந்துதான் எழுதப் பட்டதுதான்.

அன்றாடம் வீட்டில், பக்கத்து வீட்டில், பூங்காக்களில், கோவில்களில், பேருந்து ரயில் பயணங்களில், பண்டிகைக் கூடுதல்களில் சுற்றுலாத் தலங்களில் நான் சிறுவர்களால் பெரிதும் ஈர்க்கப் படுகிறேன்.

இங்கே நான் சிறுவர்களென்பது பத்து அல்லது பதினொன்று வயதுக்கு உட்பட்ட ஆண் பெண் குழந்தைகளையே.

இந்தக் குழந்தைகளுக்குள் இருக்கும் குழந்தமையை (INNER CHILD) தேடியே நான் என் காலடிகளை அமைத்துக் கொள்கிறேன்.

இதன் பொருட்டே சிறுவர்களுக்கான அகில இந்திய மற்றும் சர்வதேச சிறார்களுக்கான திரை ஓவியங்களை எனது பின் தொடருதல்.

***                                                                     ***

என்னிடம் இருக்கும்“அகில இந்திய  சிறுவர்களுக்கான திரைப்படங்கள் ( list of National film award for Children Films )“க்கான  விருதுகள்  பெற்ற  அட்டவணைப்படி விருதுகள் 1954 லிலிருந்து துவங்குகிறது . 2018 வரை என்னிடம் தரவுகள் உண்டு.

இந்த விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டாலும் அவைகளிலும் சில வினோதங்கள் உண்டு. A)  சில ஆண்டுகளில் தேர்வுக்குரிய வகையில் படங்கள் அமையாத போது அப்படிபட்ட 19 ஆண்டுகளில் 1954, 55, 64, 66, 67, 69 70, 72 ,73, 74, 75, 76, 79, 80, 81, 82, 86, 90, & 2001) விருதுகள் எதுவும் தரப்படவில்லை. B) சில சமயங்களில் ஒரே ஆண்டில் 3 படங்களையும் (1960, 1961), சில சமயங்களில் ஒரே ஆண்டில் 2 படங்களும் (1957, 65 ,89, 94 & 2014) விருதுகளுக்காக தேர்வாயிருக்கின்றன. C) இந்தியாவில் தயாரான ஆங்கில மொழி படங்களும் தேர்வாயிருக்கிறன.

முதல் விருது 1953 க்காக 54 ல் வழங்கப் பெற்றது. இந்த 66 வருடங்களில் மொத்தம் 57 விருதுகள் தரப் பெற்றிருக்கின்றன.

1 ) ஹிந்தி மொழிப் படங்கள் 27– (1957 , 1960 ல் 3 படங்கள் , 1961 ல் 3 படங்கள் , 62 , 63, 77 , 85 , 87 , 89 , 92, 94, 95, 98, 99, 2002, 04, 05,,07,11,12,,13, 15,16 )

2 ) பெங்காலிப் படங்கள் 7 – ( 1953,56,57,,68,78,83,96 )

3 ) மலையாளம் 6 — (1984, 88,91, 94, 2000,09 )

4 ) கன்னடம் 6 – ( 1989 , 2006, 08, 09,,10,18 )

5 ) ஆங்கிலம்  5 –1958, 59,65 ல் 2 படங்கள், 71 )

6 ) மராத்தி 2 ( 2014, 17 )

7) அசாம் 1 — ( 2003 0

8) தெலுங்கு 1 ( 1997 )

9 ) தமிழ்  1–  ( 2014 )

ஒவ்வொரு ஆண்டிலும் யார் யார் ஜூரிகள் அவர்களில் யார்யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள், அப்போது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு யார் மந்திரி என்றல்லாம் தெரியவில்லை.

அதனால் தேர்வுகளில் அரசியல் நிகழ்ந்திருக்கிறதா இல்லையா என்று உறுதியாக சொல்ல இயலவில்லை.  நிகழ்ந்தும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.

ஒன்று இந்தியாவில் எதில்தான் அரசியல் இல்லை என்பதால் அரசியல் நிகழ்திருக்க வாய்ப்பிருக்கிறது. என்றாலும் வணிக ரீதியான வெற்றி நிச்சயமில்லை என்பதால் சிறுவர்களுக்கான திரைப்படங்களை தயாரிக்க போட்டா போட்டி இல்லை. இதனாலும் இதில் அரசியல் செய்பவர்களுக்கு ஆர்வம் இல்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

எல்லாத் துறைகளிலும் –திரைப்படத் துறை உள்பட –தினம் தினம் நாம் சந்திக்கும் அநேகர்களில் அநேகர்கள் “பிழைப்புவாதிகள்“தான் .

அதையும் மீறி எத்தனை தகுதியான இயக்குநர்கள் தமிழில், எத்தனை தகுதியான திரைக்கதையாளர்கள் தமிழில், எத்தனைத் தகுதியான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் தமிழில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

இருந்தும் இத்தனை ஆண்டுகளிலும் விருது பெற தகுதியான தமிழ் மொழித் திரைப்படம் – காக்கா முட்டை – ஒன்றே ஒன்றுதானா.  வருத்தம் தருகிறது.

***                                                           ***

இது தவிர சர்வதேச அளவில் சிறுவர்களுக்கான திரைப்பட விழா ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அதிலும் விருதுகள் உண்டு. இது பற்றி பின்னர் பார்ப்போம்.

***                                                             ***

முதலில் நான் பட்டியலிட்ட இந்தியவிருது பெற்ற படங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். கூடவே வெளி நாட்டு குழந்தைகள் படங்களையும் அவ்வப்போது தெரிந்து கொள்வோம்.

சுதந்திர இந்தியாவில் விருது பெற்ற முதல் குழந்தைகள் திரைப்படம் “KHELA GHAR “இது பெங்காலி மொழி படம்.

நாம் பாலிவுட், கோலிவுட்,சாண்டல்வுட் என்றுஇப்போது அழைத்துக் கொள்வது போல  மே. வங்கத்து சினிமா உலகத்தை அப்போதிலிருந்தே டோலிவுட் (TOLLY WOOD) என்று அழைத்தார்கள். தமிழ் சினிமா மசாலாக்களை யோசித்து கொண்டிருந்தபோதே டோலிவுட் உலகம் மாற்று சினிமாக்களை (PARALLEL CINEMA) 1950 ல் துவக்கி வெற்றிகளை சர்வ தேச அளவில் குவித்தது. அவைகளை ஒரு இயக்கமாகவே தடம் பதித்தது.

நம்மை சர்வதேச பார்வைக்கு அழைத்துச் சென்ற சத்யஜித்ரே (ACKNOWLEDGED MASTER OF PARALLEL CINIMA). மிருணாள் சென் (மார்க்ஸிஸ்ட்), ரித்விக் கட்டெக் போன்ற ஆளுமைகளால் நிரம்பியது மே. வங்கம்.

இங்கிருந்துதான் இந்தியாவின் முதல் சிறுவர்களுக்கான திரைப் படம் KHELA GHAR 1954 ல் வில் வந்து விருதும் பெற்றது. 1953 ல் வெளிவந்த திரைப்படங்களிலிருந்து 7 ஜூரிகள் கொண்ட குழு திரு.மங்கள் தாஸ் பக்வாசா தலைமையில் விருதுகளுக்கான பட்டியலை வெளியிட்டது . அவர்கள் அன்றைய ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களால் தங்க பதக்கமும் பாராட்டுப்பத்திரமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்

இருந்தும் இந்த திரைப்பட (KHLLA GHAR) சம்பந்தமான தகவல்களில் இப்படத்தை தயாரித்தது அரோரா பிலிம்ஸ் என்பது தவிர இதன் இயக்குநர். பங்கு பெற்ற கலைஞர்கள், என்ன கதை என்பது எல்லாம் நமக்குத் தெளிவாகக் கிட்டவில்லை.

இதை காலத்தின் பகடி என்றுதான் சொல்ல வேண்டும்

எந்த ARCHIEVES ஐ அணுகி இப்படத்தை பெறலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

 

தொடரும்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. டோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி
  2. நீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. ’ ஸ்டார் வார்ஸ்’படங்களின்  துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?-பூமா ஈஸ்வரமூர்த்தி