சிற்றோடை மீன்கள் (8)

LABANYA PREETI

1993 ல் தேசிய விருது வாங்கின சிறார் படம். இது ஒரிய மொழிப் படம். ஒரிய திரைப்பட உலகை OLLY WOOD என்கிறார்கள்.

மிக அழகிய வனாந்திர கிராமியச் சூழலில் காட்சி படுத்தப்பட்ட படம். ஒரு சிறுவனையும் சிறுமியையும் பற்றின கதை. ஒரு சிறுகதையை அடிப்படையாக கொண்டு தயாரித்த படம்.கிராமம், ஆடு மாடு கோழி வாத்துகள், மூங்கில் காடுகள்,அருவி , ஏரி, ஒரே ஒரு பாம்பு, மானை பார்த்தீர்களா என கேட்கும் வேடன், பள்ளி, ஆசிரியர்கள், அம்மா, கண்டிப்பான அப்பா, பாட்டியென விரியும் உலகம். பரஸ்பர அன்பைத் தவிர வேறெதையும் சொல்லாத கதை.

இந்தப் படம் Best Asian Film Award ம் பெற்றது.

இதன் இயக்குநர் A.K BIR.புனே பிலிம் இன்ஸ்ட்டுயூட்டில் பயின்றவர். நிறைய விவரணை படங்கள், விளம்பர படங்கள் எடுத்தவர். இவர் இயக்கிய 27 டௌன் என்ற படம் மிகவும் பிரபலமானது.பல ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் சென்ற “ GANDHI “ படத்தின் Richard Attenborough க்கான  காமிரா குழுவில் இருந்தவர்.

இப்படம் கூகிளில் கிடைக்கிறது இது நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய படம்.

                                 ***                                                                            ***

TORA (2003)

இது அஸ்ஸாமிலிருந்து வெளி வந்த படம். 2003 க்கன சிறார் விருது பெற்ற படம். சின்னஞ் சிறிய எளிமையான கதைஅமைப்பு.

டோரா என்ற சிறுமி. விளையாடுவதற்கு தோழர்கள் தோழிகள் இல்லை. பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி.அம்மா பாட்டியை நன்றாக கவனித்துக் கொள்கிறாள் பாட்டி வீட்டில் ஒரு பசு மாடு சினையாகி கன்று ஈனுகிறது. டோராவுக்கு கன்று சிநேகமாகிறது.

அப்பா அம்மா பக்கத்து வீட்டு பாட்டி அவர்களின் இரண்டு வளர்ந்த பையன்கள் என்று நன்றாகப் போய்கொண்டிருந்த வாழ்க்கையில் சிறு புயல்.இரண்டு வீட்டுக்குமான நில அளவையில் தகராறு ஏற்படுகிறது.இரண்டு குடும்பமும் பிரிகிறது. நில அளவயில் டொராவின் அப்பா பக்கமே நியாயம் இருந்தாலும் பக்கத்து வீட்டுக்கார்கள் ஒத்துக் கொள்ளாமாட்டேன் என்கிறார்கள்.அடிதடி ஏற்படுகிறது. இடையில் அஸ்ஸாமின் அடையாளமான மூங்கிலால் வேலி அமைக்கிறார்கள். டோராவுக்கும் அவள் அம்மா ஜானகிக்கும் தனியாக இருக்கும் பாட்டியை பிரிய வேண்டிய நிலை. டோராவின் அப்பா புமா போலீஸுக்கு நுறு ரூபாய் லஞ்சம் கொடுத்து பக்கத்து வீட்டு நகா மற்றும் தபாவை கைது செய்ய வைக்கிறான். அம்மாவுக்கும் டோராவுக்கும் வேதனை.

கனவில் வந்து தைர்யம் சொல்லும் தேவதையின் ஆலோசனைப்படி டோரா தைரியமாக அம்மாவை தயார் செய்கிறாள். முதலில் தயங்கினாலும் பின்பு அம்மாஜானகி பாட்டிக்கு வழக்கம் போல சாப்பாடு எடுத்துப் போகிறாள் டோராவோடு. கூடவே மாட்டுக்குத் தீனியும்.

அங்கே பாட்டி கீழே விழுந்து கிடக்கிறாள். அம்மா முதலுதவி செய்து காப்பாற்றுகிறாள். அன்றே அப்பாவிடம் அம்மாவும் மகளும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.பாட்டியின் நிலமையை சொல்கிறாரார்கள் . ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டிய அவஸ்யம் பற்றி அம்மா அப்பாவுக்குச் சொல்கிறாள்.

அப்பாவும் புரிந்து கொண்டு போலீஸிடம் இருநூறு ரூபாய் லஞ்சம் கொடுத்து பக்கத்து வீட்டு நகாவையும் தபாவையும் மீட்டு வருகிறார். வேலி அகற்றப்படுகிறது. கன்றோடு விளையாடுகிறாள் டோரா. இது கதை.

நிலச் செழிப்பு, குழந்தையின் அபாரமான நடிப்பு, எளிமையான குடும்பச்சூழ்நிலை,கண்டிப்பான வாத்தியாரோடு பள்ளி என்று ஒவ்வொரு ஃபிரேமிலும் குளுமை இனிமை எளிமை.

இதுவும் நமது சேகரிப்பில் இருக்க வேண்டிய படம்.

                   ***                                                                             ***

அடுத்து CARE OF FOOT PATH என்ற கன்னடப் படம். 2006 ல் தேசிய விருது பெற்ற படம். மிக அதிக வசூலை அள்ளிய படம்.

இந்தப் படத்தின் அதிசயம் என்பது படத்தை இயக்கிய இயக்குநருக்கு ஏழே வயதுதான். கிக்ஷன் ஸ்ரீ காந்த் என்ற இவரை கின்னஸ் உலகம் மிக குறைந்த வயது இயக்குநர் என்று அங்கீகரித்திருக்கிறது.

பிச்சை எடுக்க உபயோகப்படுத்தப்பட்ட ஒரு சிறுவன் அங்கிருந்து தப்பி ஒரு சேரியை சார்ந்த ஒரு பெண்மணியிடம் வந்து சேர்கிறான். அங்கேயே வளர்கிறான்.கல்வியை கற்க நினைத்து வெற்றியும் பெறுகிறான் இதுதான் கதை.

மேலும் ஒரு படம்,கன்னடத்து மண்ணிலிருந்து. படத்தின் பெயர். HEGEEGALU.

 2010 ல் விருது பெற்ற படம்.P.R . Ramadas naidu என்பவர் இயக்கிய படம்

புத்திசாலியான ஒரு சிறுமி. தகப்பனோ குடித்து சூதாடி போலீஸில் அகப்பட்டுக் கொள்கிறான். சிறுமி ஒரு போட்டியில் கலந்து வெற்றி பெற்று தகப்பனை மீட்கிறாள்.தகப்பனும் திருந்துகிறாள். இவ்வளவுதான் கதை.

                                     ***                                                             ***

சிறார் திரைப்பட அமைப்பு துவங்கிய பின் சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்துதான் தமிழில் விருது பெற முடிந்தது. அந்தப் படம்தான் எம், மணிகண்டன் இயக்கிய “காக்கா முட்டை “. இவரே ஒளிப்பதிவும் கூட. இந்த திரைப்படத்தை தயாரித்தவர்கள் தனுக்ஷும் வெற்றி மாறனும். இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருந்தால் படைப்பு நன்கு அமையும் என்பது கவனிக்கத் தக்கது.

கதை எளிமையானது மற்றும் நேர்கோட்டுக் கதை. சேரிப்பகுதியில் வசிக்கும் இரு சிறுவர்கள் பீஸா சாப்பிட விரும்புகிறார்கள்.இதனால் அவர்கள் பல அநுபவங்களை கடந்து செல்ல நேருகிறது.

கூவம் ஆறு, டிவிக்கு கிடைக்கும் திருட்டு கனெக்க்ஷன்,சாப்பாட்டை காகங்களுக்கு கொடுத்துவிட்டு காகத்தின் முட்டைகளை திருடும் சிறுவர்கள்,சிம்புவை கண்டு மெய் சிலிர்க்கும் சிறுவர்கள், கடந்து செல்லும் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து செல்பவர்களிடம் செல்போனை வித்தியாசமாக அபகரிக்கும் சிறுவர்கள்,லோக்கல் எம்மெல்லே, ரயில்வே யார்டில் பணிபுரியும் மத்திய வயது நபர், ஆயா, குழந்தைகளின் தாய்……. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர்.

சரியான மொழிப் பிரயோகம், உடல் மொழிகள்,தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்கான களம் . நம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென என்னென்ன நடக்கிறதென பதிவிட்ட மிக இயல்பான படம்.சர்வ தேச தரத்தில் அமை ந்திருக்கிறது என்பது நமக்குப் பெருமையே.

நமது சேகரிப்பில் இருக்கவேண்டிய பெருமைக்குரிய சிறார் திரைப்படம்.

                                      ***                                                        ***

நிறைவாக நான் சொல்ல விரும்புவது இதுதான். சுதந்திர இந்தியாவில் மிகமிக வளர்ந்த இயக்கம் சினிமாதான்.மனிதர்களின் பல்வேறு தரப்பினரையும் தனது பிடிக்குள் வைத்திருக்கும் இயக்கமும் இதுதான்.

வணிக ரீதியாக தயாரிக்கப்படும் படங்களை ஒப்பிடும் போது கலைப் படங்கள் மிகவும் குறைவான சதவீதமே.அது போலவே சிறார் திரைப்பட இயக்கத்திற்கு 1954 லிருந்தே தனியாக கவனிப்பு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்தாலும் இங்கேயும் நமக்கு ஆதங்கமே மிஞ்சுகிறது.

இது வரைக்கும் நூற்றி ஐம்பதுக்கும் குறைவான படங்களே இந்தியாவில் சிறார் பிரிவில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.ஹிந்தியில் அதிகப் படங்கள் தயாரிக்கப்பட்டு விருதுகளும் பெற்றிருக்கின்றன. பெங்காலி, அஸ்ஸாம், ஒரிஸா,மலையாளம் , தமிழ் மொழிகளில் விருது பெற்ற படங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக அமைந்து இருக்கின்றன.அவைகளிலும் சர்வதேச அளவில் குறிப்பிட்டுச் சொல்லும் படியான படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இங்கே மொத்தக் கட்டுரையில் அங்கங்கே சர்வதேச அளவில் வெளி வந்த அயல் தேசத்து சிறார் படங்களையும் குறிப்பிடிருக்கிறேன்.அதிலிருந்து அவர்கள் எவ்வளவு தூரம் நம்மை விட கதைகளை தேர்ந்தேடுப்பதிலும் காட்சிப் படுத்துவதிலும் சிறப்பாக இயங்கி இருக்கிறார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது.

நம்மிடம் கதைகள் இருக்கின்றன. சிறப்பான கதை சொல்லிகளும் இருக்கின்றார்கள்.

ஆளுமையுள்ள இயக்குநர்கள் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இருகின்றார்கள்.ஆனால் அவர்களின் கவனம் மட்டும் சிறாருக்கான திரைப்படங்களை தருவதில் இல்லை. வருத்தம் தருகிறது.

வருங்காலத்தில் சிறாருக்கான, குறிப்பிட்டுச் சொல்லும் படியான, இந்திய சர்வ தேச கவனத்தை ஈர்க்கும் படியான திரைப்படங்களை இந்திய திரை உலகம் தரும் என்றே நம்புவோம். எதிர்பார்ப்போம்.

முற்றும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. நீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி
  2. ’ ஸ்டார் வார்ஸ்’படங்களின்  துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?-பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. குழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி