சிற்றோடை மீன்கள் (6)

கலையை எத்தனையோ எண்ணற்ற விதங்களில் நாம் அநுபவம் கொள்கிறோம். கவிதையில் துவங்கி எதில்தான் கலை இல்லை என்பது வரை. கலை அநுபவத்தின் சிறப்பு என்பது நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் உங்களால் அதற்கு வெளியே நிற்க இயலாது என்பதுதான். கலையின் வீர்யம் அப்படி.

                                  ***                                                                   ***

1961’ல் மூன்று திரைப்படங்கள் ஒரே நேரத்தில் தேசிய விருதுகள் பெற்றன மூன்றுமே ஹிந்திதான்.

 அப்புறம் 1962ல் ராஜா அவுர் கங்காராம் என்ற ஹிந்தி படம் விருது பெற்றது.1963லும் ஹிந்தி படமே விருது வென்றது. 1965ல் விருது பெற்ற இரண்டு படங்களில் இரண்டுமே ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது.D. KANTHILAL இயக்கிய THE ADVENTURES OF SUGAR DOLL ம் SHANKAR (நம்ம” முதல்வன்” சங்கர் அல்ல) இயக்கிய AS YOU LIKE IT.

                        ***                                                                             ***

1962ல் விருது பெற்ற” ராஜா அவுர் கங்காராம்” என்ற படம் சிறார் திரைப்பட சங்கத்தின் மூலமாக வெளி வந்த படம். 49நிமிட கறுப்பு வெள்ளை ஹிந்திப் படம். இதன் இயக்குநர் D. ERZA MIR.

ஒரு மழை நாளில் ராஜூ என்ற சிறுவன் தனது வீட்டு வராந்தாவில் ஒரு கிளியை கண்டெடுக்கிறான். ஆச்சர்யமான வகையில் கிளி பேசுகிறது. தன் பெயர்” கங்கா ராம் “என்கிறது. இருவருக்குள் சிநேகிதம் துவங்கி ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை என்கிற அளவில் உறவு நகர்கிறது.கிளியை விட்டுவிட்டு பள்ளிக்கு செல்வது கூட ராஜூவுக்கு கடினமாக இருக்கிறது. வீட்டில் வளர்ந்துவரும் ஒரு பூனையை கொன்று தின்ன ஆவல் கொள்கிறது. ஒரு நாள் பள்ளி சென்று திரும்பிய ராஜூ கிளி காணவில்லை என்பதை உணர்ந்து திகைக்கிறான். இப்படி விரைகிறது கதை.கூகுள் வழியாக இப்படத்தை பார்க்க இயலும்.

இந்த இயக்குநர் பற்றி சொல்லியாக வேண்டும். மேடை நடிகராக அறிமுகமானவர். பின் US சென்று யுனிவெர்சல் ஸ்டுடியோவில் பணி புரிந்தார்.அங்கு  சிறுசிறு வேடங்களில் நடித்தார். எடிட்டிங், திரைக்கதையில் தன்னை வளர்த்துக் கொண்டார். இந்தியா திரும்பிய பின்பு நூர்ஜஹான்,ஜரீனா,ரிக்க்ஷாவாலா, சிதாரா என்ற படங்களை தயாரித்து இயக்கினார்.

பிலிம் டிவிக்ஷனிலும் இந்திய சிறார் திரைப்பட கழகத்திலும் பணியாற்றியிருக்கிறார்.

இயக்குநர்,தயாரிப்பாளர்,எழுத்து,காமிரா என 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் இருக்கிறார். அபூர்வமானவர்.

                              ***                                                                                ***

1984 ல்வெளியானது “மை டியர் குட்டி சாத்தான்” மலையாள படம். சிறுவர்களுக்கான பட பிரிவில் தேசிய அளவில் விருது பெற்றது.

இதனை இயக்கியவர் ஜிஜொ புன்னோஸ். அவரது தந்தை அப்பச்சனின் நவோதயா ஸ்டூடியோவில் படமாக்கப் பட்டது. இந்திய சிறுவர் திரைப்பட வரலாறில் இந்தப் படம் முக்கியமான திருப்பு முனை மற்றும் ஒரு மை கல். இதன் சிறப்பு இந்தியாவில் வெளிவந்த முதல் 3 D FORMAT படம். இந்தப் படத்தை 3 டி கண்ணாடி அணிந்துதான் பார்க்க இயலும்.

முதலில் மலையாளத்திலும் பின்பு சில மாற்றங்களோடு தெலுங்கிலும் (சின்னாரி சேத்தனா) ஹிந்தியிலும் (சோட்டா சேத்தன்) வெளியிடப்பட்டது. மலையாளத்திலும் தமிழிலும் இளையராஜாவே இசை.  அசோக் குமார் காமிரா. 90 நாட்களில் தெளிவான திட்டமிடலோடு தயாரிக்கப்பட்டது இப்படம் .தமிழில் பிரகாக்ஷ் ராஜும் சந்தானமும் நடித்திருந்தார்கள். ஆலிப்பழம் பெருக்கு என்ற பாடலை மட்டும் படமாக்க 14 நாட்கள் ஆனது. 35 லட்ச பட்ஜெட் படமாக தயாரித்த இப் படம் முதல் வசூலில் இரண்டரை கோடிகளை அள்ளியது.

 

ஒரு பெண் குழந்தை உள்பட இரண்டு சிறுவர்கள் ஒரு கரும் பூதத்திடமிருந்து குட்டிச் சாத்தானுக்கு விடுதலை பெற்றுத் தருகிறார்கள். பின்பு அந்த குட்டி சாத்தான் குழந்தைகளுக்கு பெரும் உதவிகளை செய்து முடிக்கிறது. தாயற்ற அந்த பெண் குழந்தையின் குடிகாரத் தந்தையை திருத்துகிறது. மேலும் பல சாகசங்களுக்குப் பிறகு தன்னை மறுபடியும் கைப்பற்ற நினைக்கும் கரும் பூதத்தை குழந்தைகளோடு இணைந்து அழித்து விடை பெறுகிறது. திரைக்கதையை பொறுப்பெடுத்துக் கொண்டவர் ரகுநாத் பலேரி.குகூள் வழியாக இந்தப் படத்தை பார்க்க இயலும்

படம் வெளியான புதிதில் பொறாமை கொண்டவர்களால் 3டி கண்ணாடி அணிந்தால் மெட்ராஸ் ஐ போன்ற கண் நோய்கள் வரும் என்று புரளியும் வதந்தியும் பரப்ப பட்டது. இதை தொடர்ந்து தயாரிப்பாளரும் இயக்குநரும் பிரேம் நசீர், ரஜனிகாந்த்,அமிதாப், சிரஞ்சீவியை நேரில் சந்தித்து ஒவ்வோரு தடவையும் கண்ணாடி ஒவ்வொன்றும் ஸ்டெரிலைஸ் பண்ணப் பட்டே விநியோகிக்கப் படுகிறது என்று விளக்கினார்கள்.

                         ***                                                                                             ***

விஞ்ஞான கதைகளை திரைப்படமாக்க ஆர்வம் கொண்டவர் ஜார்ஜ் லுகாஸ். இவர் முதலில் ஆர்வப்பட்டது FLASH GORDEN ஐத்தான். அகிர குரோவின் சாமுராய் படங்களும் பிளாக்ஷ் கார்டென் போன்ற காமிக்ஸ் கதைகளுமே இவரது உந்துதல்.FLASH GORDENனின்  கதாபாத்திரங்களின் உரிமை கிடைக்காமல் போனதால் இந்த STARWARS என்ற கதையை பின்னாளில் STAR WARS EPISODE IV என்ற திரைக்கதையை எழுதினார். பல நிறுவனக் கதவுகளை தட்டியபின் 20 TH CENTURY FOX நிறுவனம் முன் வந்தது. சம்பளமாக $150000 பெற்று கொண்டார். 42 தியேட்டர்களில் வெளிவந்த இப்படம் 3 மில்லியனில் ஆரம்பித்து 10 மில்லியன் வரை ஈட்டித்தந்தது. 6 ஆஸ்கார் அகாதெமி விருதுகளை வென்றது.பல ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு இதுவே முன்னோடி. 1977 ல் வெளியான திரைப்படம் சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து சில மாற்றங்களோடு மறுபடியும் ரிலீசானது.

தெளிவான கதைமைப்பு. புரிந்து கொள்வதில் எந்த சிரமும் கிடையாது.நல்லதுக்கும் கெட்டதுக்குமான போட்டி GATACTIC EMPIRE  நிர்மாணிக்கப்பட்டு 19 வருடங்களுக்குப் பிறகு சோதனை துவங்குகிறது. LUKEம் HAN SOLOவும் சேர்ந்து PRINCESS LEIA வை எதிரிகளிடமிருந்து மீட்டு மொத்தப் பிரபஞ்சதிற்கும் விடுதலை பெற்றுத் தருகிறார்கள். இது கதையின் ஒரு வரி. இந்தக் கதையின் திரை ஆக்கமும் உள்ளார்ந்த திகிலும் கண் முன் விரியும் பிரமாண்டமும்தான் இயக்குநர் GEORGE LUCAS. HOTSTAR வழியாகஇப்படத்தை பார்க்க முடியும்.

                    ***                                                                                               ***

அடுத்த படம் சமீபத்தியது.அதாவது 2017ல் டிஸ்னியில் வெளியானது. படத்தின் பெயர் TOY STORY 4.  பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்தது

குழந்தைகளுக்கும் பொம்மைகளுக்குமான உறவு தொன்மை மிகுந்தது.இதை நாளும்  வாழ்வில் உணர்ந்து வருகிறோம். காலையிலிருந்து இரவு வரை ஏன் உறங்கும் போதும் தன்னருகில் பொம்மைகளை வைத்துக் கொள்ளும் குழந்தைகள் உண்டு.

திரைக்கதையில் ஒரு புதிய சிந்தனை.குழந்தைகள் பொம்மைகள் மீது உணர்வுகள் கொள்வது போல  பொம்மைகளும் குழந்தைகளும் மீது அன்பு கொண்டு அதற்காக அதீதமாக மெனக்கிடுவதுதான் இங்கே காட்சி படுத்தப் படுகிறது. கார்ட்டூன் படம் என்றே நினைக்க முடியாதபடி உருவ நகர்வுகளின் தத்ரூபம்.

போனி என்ற பெண் குழந்தை அவளது குடும்பம், பிளாஸ்டிக் போர்க்கில் செய்த ஃபோர்க்கி,பொம்மைகளின் வாய்ஸ் பாக்ஸ்,குழந்தைகள் கவனம் கவர சாகசங்கள்,வளர்ந்த குழந்தைகளால் தவிர்க்கப் படும் பொம்மைகளின் துயரம்,தனக்கென ஒரு ஓனரை தேடும் தவிப்பு.வூடி என்ற கௌபாய் ஹீரோ பொம்மை, ஒரு ஆன்டிக் கடை, சுற்றுலா விறு விறுப்பு என்று திரைக்கதை விரிகிறது.நாம் திரைப்படத்துக்கு வெளியே இருக்குறோமா  அல்லது உள்ளே இருக்குறோமான்னு திகைப்பு.

இது HOT STAR ல் கிடைக்கிறது.இந்த நிறுவனம் ஸ்டார் இந்தியாவின் துணை நிறுவனம்.இதன் தலமையகம் மும்பை. இன்றைய நிலவரப்படி இதன் பயனாளிகள் 300 மில்லியன்கள் என்பது தலை சுற்றுகிறது. குழந்தைகளின் குழந்தைகளுக்கான விருந்து.

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. டோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி
  2. நீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. நல்லது என்றால் என்ன? கெட்டது என்றால் என்ன?-பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. குழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி