சிற்றோடை மீன்கள் (5)
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாதான் உலகின் மிகப் பெரிய திரைப்பட விழா. இதற்கு அடுத்தபடியாக வெனீஸ் திரைப்பட விழா மிகப் பெரியது. மூன்றாவது இடம் சிட்னி திரைப்பட விழாவிற்கு. இந்த திரைப்படங்கள் விழாக்கள் நடந்து முடிந்ததும் இந்தியாவில் முதலில் மும்பை திரைப்பட விழா நடக்கும். அடுத்து கொல்கத்தாவில். பின் கோவாவில் நடக்கும் “இந்திய பனோரமா “. இதை தொடர்ந்து கேரளாவில் விழா. கடைசியாக சென்னை திரைப்பட விழா.மேலும் ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வ தேச சிறுவர் திரைப்பட விழாவும் உண்டு.
*** ***
1960ல் அகில இந்திய அளவில் விருது வாங்கின திரைப்படங்கள் மூன்று. மூன்றுமே ஹிந்தி திரைப்படங்கள்.
1)” பூல் அவுர் கலியான்”. இதில்தான்” ஜெயஜெய கிருக்ஷ்ண முராரே” என்ற பிரபல பாடல் இடம் பெற்றது. படத்தை இயக்கியவர் ராம் நாரயணன் கோபாலே என்பவர். ஆனாலும் இப்படத்தை வி. சாந்தாராமின் ”பூல் அவுர் கலியான் “ என்றே குறிப்பிடுகிறார்கள். தயாரித்த நிறுவனம் ராஜ்கமல் கலாமந்திர்.ஹேமன்த முகர்ஜியும் ரமேக்ஷ் தால்வாரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
2)” ஈத் முபாரக் “. இது ஒரு கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட 21 நிமிக்ஷ திரைப்படம். இதை இயக்கியவர் க்வாஜ அஹமது அப்பாஸ். ஆமாம் ஆளுமைமிக்க K.A. ABBAS தான்.
இவர் எழுதிய “நீச்சா நகர் “1946ல் CANNES FILM FESTIVEL ல் விருது பெற்றது. மேலும் ராஜ் கபூரின் ஆவாரா,ஸ்ரீ 420, மேரா நாம் ஜோக்கர், பாபியிலும் திரைக் கதையை அமைத்தவர் என்ற பங்களிப்பும் இவருக்கு உண்டு.
இந்த “ஈத் முபாரக் “என்ற சிறுகதையை எழுதியவர் முன்க்ஷி பிரேம்சந்த். இயக்கியவர் கே ஏ அப்பாஸ்.
ஹமீது என்றொரு ஏழை சிறுவன் தன் பாட்டியிடம் வளர்ந்து வருகிறான். பணக்கார குழந்தைகள் வைத்திருக்கும் பொருட்கள் தன்னிடம் இல்லையே என்று அவனுக்கு அவ்வப்போது ஏக்கம் உண்டு. ஒரு விக்ஷேக்ஷ நாளில் பாட்டி அவனுக்கு கொஞ்சம் பணம் ( pocket money ) தருகிறாள். அந்த பணத்தோடு கிராம சந்தைக்குள் நுழைகிறான். ஒவ்வொரு பொருளாக அவன் வாங்க ஆசைப்பட்ட பொருட்களை கவனிக்கிறான். அப்போது அவனுக்கு பாட்டி சமையல் செய்யும்போது கையில் ஏற்பட்ட தீக்காயங்கள் நினைவுக்கு வருகிறது பாட்டியின் அளவில்லா அன்பும் தியாகமும் உழைப்பும் உணரப் பெறுகிறது. நீண்ட யோசனைக்குப் பிறகு அவன் தன் பாட்டிக்காக ஒரு இடுக்கியை வாங்கிக் கொண்டு திரும்புகிறான். அது பாட்டிக்கு அவன் வாங்கிக் கொண்டு போன” ஈத் முபாரக் “பரிசு.
நெகிழ்சியான கதை அப்பாஸின் கைவண்ணத்தில் மேலும் நெகிழ்வு.
3) DELHI KI KHANI. இதை இயக்கியவர் ராஜேந்திர சர்மா. சிறுவர் திரைப்படக் கழகமே தயாரித்தது. ஒரு விதத்தில் இது விவரணை (DOCUMENTARY FILM) படமோ என்று நினைக்க வைக்கிறது.
யமுனை கரையில் “இந்திரபிரஸத் “டெல்லி நகரம் தோன்றிய வரலாறை படம் சொல்கிறது.அதன் பல இனம் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் சொல்கிறது. அன்றைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் மனமுவந்து பாராட்டிய படம். குழந்தைகளோடு இது பற்றி மிகவும் உரையாடியிருக்கிறார். இப்படம் முதன் முதலில் மத்திய பிரதேசத்திலுள்ள பழக்குடிமக்களின் மியூசியத்தில் திரையிடப்பட்டது.
இயக்குநர் ராஜேந்திர சர்மா சட்டம் பயின்றவர். பின் கல்கத்தா சென்று திரைப்படத்தில் பணியாற்றினார். முதலில் ரஞ்ஜித் ஸ்டுடியோவில் பணியாற்றிய இவர் CHILDREN FILM SOCEITY OF INDIA வில் சேர்ந்து பல குழந்தைகளுக்கான படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார்.
*** ***
1927ல் நிர்மாணிக்கப்பட்ட ACADEMY OF MOTION PICTURE ART AND SCIENCE (AMPAS) லிருந்துதான் ஆஸ்காரின் சரித்திரம் துவங்குகிறது.
முக்கியமான 36 ஹாலிவுட் திரைப்பட பிரபலங்களால் துவங்கிய இந்த அகாதெமியின் முதல் தலைவராக இருந்தவர் நடிகர் டக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ்.இந்த அமைப்பின் முதல் விழா 16.05.1929ல் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் பொதுமக்கள் இல்லாமல் 270 விக்ஷேக்ஷ விருந்தினர்களைக் கொண்டு ஐந்து டாலர் கட்டணத்தில் நடந்தது.
அகாதெமி அவார்டு ஆஃப் மெரிட் என்பதுதான் ஆஸ்கார்.
ஆஸ்கார் விருதுக்கான சிலை” திரைப்பட சுருள் மீது வாளுடன் நிற்கும் ஒரு போர்வீரன் “ஆக வடிவமைக்கப் பெற்றிருக்கிறது. 13.5 இன்ச் உயரமும் 3.8 கிலோகிராம் எடையுமானது இது. இதை வடிவமைத்தவர் கிப்பன்ஸ் ஜார்ஜ், அதுவும் மெட்ரோ கோல்ட் மேயர் (MGM ) ன் கலை இயக்குநரான CEDRIC GIBBONS ன் ஆலோசனையோடு.
*** ***
இனி இப்போது சத்யஜித்ரேயின் “JOI BABA FELUNATH “1979ல் தேசிய விருது படம் பற்றி பார்க்கலாம்.
சத்யஜித்ரே என்றால் இந்திய சினிமாவின் முகவரி என்றே ஒரே வரியில் சொல்லவிட முடியும். பத்மஸ்ரீ, பத்ம விபூக்ஷன்,பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே விருது முதலான கௌரவங்களை பெற்றவர். திரைப்படம், ஆவணப்படம், குறும் படம் என 36 படைப்புகளை படைத்தவர். இந்திய தேசத்திற்கு ஆஸ்காரை பெற்றுத் தந்தவர். இவர் படமாக்கும் விதம் குறித்து நிறைய கட்டுரைகள் புத்தகங்கள் விமர்சனங்கள் உண்டு.
சௌமித்ரா சட்டர்ஜி, சர்மிதா பானர்ஜி போன்றவர்கள் நடித்த படம்.ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது.
பனாரஸ் அல்லது காசி நகரம்தான் கதையின் பின்புலம். படம் முழுவதும் நூறாண்டுகளுக்கும் குறையாத வயதுடைய கட்டிடங்கள்.காசியின் குறுகலான சந்துகள், சாதுக்கள். பசுக்கள், நம்பிக்கையை சுமந்து செல்லும் மக்கள்.
துப்பு துலக்குவதில் பிரபலமான ஃபெலூட் என்பவர் தனது எழுத்தாளரான நண்பர் மற்றும் அவரது உதவியாளரோடு விடுமுறை மன நிலையில் துர்க்கா விழாவை காண காசிக்கு வருகிறார். ஆறு தலைமுறையாக அங்கே வாழ்ந்து வரும் உமாநாத் கோக்ஷல் அறிமுகமாகி தனது வீட்டில் ஒரு அபூர்வமான சின்னஞ் சிறிய விநாயகர் சிலை காணாமல் போனதை சொல்லி கண்டு பிடித்து தரச் சொல்கிறார். அவர் தந்தை. அவரது சிறு வயது மகன், வீட்டு பணியாள், மதன்லால் என்ற நிழல் உலக தாதா. சாது, இன்ஸ்பெக்டர் என்று நிறைய பேர்கள். கடைசியில் துப்பு துலக்குகிறது.
கதையை விட்டு அங்கே இங்கே நகரவில்லை சத்யஜித்ரே. எந்த ஒரு ஃபிரேமிலும் சின்ன மில்லி மீட்டரைக் கூட ரே வீணடிக்கவில்லை.ஃபிரேமுக்குள் இருக்கும் ஒவ்வொரு முகத்தின் உணர்வுகளும் தனித்துவம். நிழல் கூட ஒளிப்பதிவில் அர்த்தம் பெறுகிறது.இன்னும் இன்னும் நிறைய சொல்ல முடியும். கூகிளில் (சப் டைட்டிலோடு) இது கிடைக்கிறது. தவறாமல் பார்க்க வேண்டிய படம். ரேயின் ஆளுமையை உணர கிடைக்கும் சந்தர்ப்பம் இது.
*** ***
அடுத்து THE SOUND OF MUSIC என்றொரு படம். இப்படம் மிக அருமையான படம் என்றாலும் குழந்தைகள் தங்களது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் குழந்தைகள் தவிர மற்றைய கதா பாத்திரங்களும் உண்டு. இது ஒரு ஆஸ்கார் விருது பெற்ற படம். ஐந்து விருதுகள் பெற்ற படம் விருது பெற்றதிலிருந்து சுமார் ஐந்து வருடங்கள் ஊடகங்களில் இதுதான் முக்கியத்துவம் பெற்ற படம்.
இது ஒரு AMERICAN MUSICAL FILM. “MY FAVORITE THINGS “என்ற பதின் பருவத்துப் பாடல் பிரபலமானது. இதன் இயக்குநர் ராபர்ட் வைஸ். இந்த படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்து ஆஸ்கர் விருது பெற்ற JULIE ANDREWS ஏற்கனவே MARY POPPINS என்ற படத்திற்காகவும் இவர் ஆஸ்கார் பெற்றிருக்கிறார்.
இப்படத்தின் கதை: மடலாயத்தில் NUN ஆக விரும்பிய ஒரு சிறு பெண்ணை ஒரு பெரிய குடும்பத்திற்கு பொறுப்பாளராக கான்வென்ட் அனுப்பி வைக்கிறது. வீட்டில் 7 குறும்பும் வெகுளியுமான குழந்தைகள். தாய் இல்லை. தந்தை ஒரு நேவி கேப்டன். நாஸிகள் மீது வெறுப்பு கொண்டவர். இவரை தங்களுக்கும் பணிபுரிய வைக்க வேண்டுமென ஹிட்லரின் அரசாங்கம் விரும்புகிறது. இவர் எப்படி தானும் தன் 7 குழந்தைகளோடு படத்தின் முக்கிய பாத்திரமான சிறு பெண்ணோடும் ஆஸ்திரியாவிலிருந்து தப்பிக்கிறார் என்பது கதை. அருமையான ஒளிப்பதிவு. கிறக்கும் உரையாடல்கள். பார்க்க தவற விடக் கூடாத அபூர்வமான படம்.
இப்படத்தின் தாக்கக்தை தமிழ் படமான “சாந்தி நிலையத்” தில் திரைக்கதையின் ஆரம்ப கட்டுமானத்திலும் பார்க்கலாம். சாந்தி நிலையம் 1969 ல் ஜி. எஸ் மணியின் இயக்கத்தில் வெளி வந்த படம் இப்படத்தில் எம் எஸ்வியும் கண்ணதாசனும் இணைந்து தந்த ‘இயற்கை யென்னும் இளைய கன்னி “என்ற பாடல்தான் எஸ் பி பி யின் முதல் தமிழ் பாடல் என்று சொல்பவர்கள் இன்றும் உண்டு.
—- தொடரும்