சிற்றோடை மீன்கள் (3)

பொதுவாக என்றாலே விதிவிலக்குகளும் உண்டு என்றுதானே பொருள். இப்போது பொதுவானவை பற்றி பார்க்கலாம்.

சிறுகதையோ நாவலோ கவிதையோ காவியமோ திரைப்படங்களோ கார்ட்டூன் சித்திரங்களோ கதையாடல்களில் கதைசொல்லிகள் ஒரு வழக்கமான பழகினப் பாதைகளிலேயே நம்மை அழைத்துச் செல்கிறார்கள்

அதுதான் நல்லது VS கெட்டது (GOOD VS BAD) என்பது.

“நல்லது vs கெட்டது “என்ற கண்ணோட்டத்தில் கவனிக்கும் போது நடராஜர் ஆனந்ததாண்டவமோ ருத்ரதாண்டவமோ நிகழ்த்தும் சிற்பங்களைக் கண்டால் அவர் காலுக்குக்கீழ் முயலகன் அவஸ்தையோடு நெளிவதை காணலாம்.அதே போல துர்க்கையின் காலடியில் மகிக்ஷனும் அவஸ்தையோடு நெளிவதைப் பார்க்கலாம் .ஆனால் சூரபத்மனை கந்தக்கடவுள் வேலாகவும் மயிலாகவும் மடை மாற்றம் செய்கிறார்

இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டியது நல்லதுக்கும் கெட்டதுக்குமான யுத்தத்தில் சில சமயங்களில் நல்லது கெட்டதை முற்றிலும் அழித்து விடுகிறது. சில சமயங்களில் முற்றாக அழிப்பதில்லை, தனக்குக் கீழ் அடக்கிக் வைத்துக் கொள்கிறது சில சமயங்களில் கெட்டதை நல்லதாக மடைமாற்றம் செய்து தனது மாறா அடையாளமாக அமைத்துக்  கொள்கிறது

இது இங்கு மட்டுமல்ல உலக முழுவதிலும் எல்லா மொழிகளிலும் கதையாடல்களில் இதுதான் நடக்கிறது. திரைப் படங்களிலும் இதுதான் நிகழ்கிறது.

இப்போது இந்திய  சிறார் திரைப்படங்களுக்கு வருவோம் .

1953க்குப் பிறகு 1954,55 களில் எந்த படமும் தேர்வாகவில்லை அதன் பிறகு ”ஜெய் தீப்“ என்ற பெங்காலிப் படம் இது 1956 ல் அகில இந்திய விருது பெற்றது. இதனை கிதால் சர்மா என்பவர் இயக்க சிறார் திரைப்பட கழகமே தயாரித்திருக்கிறது.

அடுத்து 1957 ல்   அகில இந்திய விருது பெற்றது, ‘HUM PAANCHI EK DALL KE’ (we are birds on a same tree) என்ற ஹிந்தி திரைப்படம். இது ஒரு சென்னையை சேர்ந்த   AVM நிறுவனம் தயாரித்தது. கண்ணுக்கு இதமான கறுப்பு வெள்ளை.  சென்னையிலேயே தயாரித்த முதல் சிறுவர்களுக்கான திரைப்படம். மாருதிராவ் டெய்ஸிரானி நடித்து பி எல் சந்தோக்ஷ் அவர்கள் இயக்கியது. மொத்த 10 பாடல்களில் 7 பாடல்கள் ஆக்ஷா போன்ஸ்லே பாடியது. மாருதிராவ் காமிரா இயக்கமாகவும் சாந்தா ராம் கலை இயக்குநராகவும் பங்களித்திருக்கின்றர்.

இந்தத் திரைப்படத்தை காணும் பொழுது இது 1956ல் எடுக்கப்பட்டப் படம் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். மிக வசதியான வீட்டின் ஒரே பையன் ராஜூ. இவனை வைத்துதான் மொத்த கதையும் நகருகிறது. பையன் படிக்கும் பள்ளியில்  எல்லாத் தட்டு குழந்தைகளும் படிக்கிறார்கள் அப்பாவுக்கு தன் பையனை தனியான ஒரு டியூட்டர் வைத்து படிக்க வைக்க ஆசை . அம்மாவின் உதவியோடு பள்ளியிலேயே தொடர்கிறான். உல்லாச பயணம், ஸ்கூல் டிராமா,ராஜுக்கு உதவும் நண்பர்கள், என்று அங்கே யிங்கே அலைவுறாமல் நகரும் ஒரு நேர் கோட்டு எளிமையான கதை.

மொத்தப்படமும் கூகிளிலேயே கிடைக்கிறது.

சிறார் திரைப்பட இயக்கம் அல்லது சரித்திரம் இந்தியாவில் எப்படி மெல்ல மெல்ல தனது ஆரம்ப புள்ளிகளை உருவாக்கியது என்பதை புரிந்து கொள்ள இப்படம் மிகவும் உதவும்.

 

அடுத்து ஒரு சர்வ தேச குழந்தைகள் திரைப்படம். படத்தின் பெயர் “QUEEN OF KATWE” சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற திரைப்படங்களை இயக்கிய MIRA NAIR ன் படம்    இவர் குழந்தைகளை இயக்குவதில் திறமை பெற்றவர்.

இந்தக் கதை ”கேத்வே“ சேரிகளில் ( உகாண்டா )  வாழ்ந்து சதுரங்கத்தில் ஒரு உயர்ந்த இடம் பிடித்த ஒரு பத்து வயது சிறுமியின் உண்மைக் கதை.

வீட்டிற்கும் மற்றவர்களுக்கும் நீர் சேந்தி வருவதும் தின்னும் வகையில் தின் பண்டமாக மாற்றின சோள கதிர்களை விற்று வருவதும் இவளது வேலை. படிப்பு இல்லை. தாய்க்கு நான்கு குழந்தைகளில் ஒருத்தி. தாய் மரியாதைகுரிய வகையில் வாழும் பொருட்டு மெனக்கெடுகிறாள். அப்போது ராபர்ட் என்ற சதுரங்க பயிற்சியாளர் கண்ணில் படுகிறாள், இந்தச் சிறுமி.அவரின் ( இவரின் தாரகமே Never surrender என்பதே ) முயற்சியால் இவள் சதுரங்க வீரராக மாறுவதும் தாய்க்கு ஒரு வீட்டையே பரிசளிப்பதுமாக அமைந்திருக்கிறது கதை.

வில்லியம் வீலரின் சிறப்பான திரைக் கதையமைப்பு முப்பந்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு சர்வ தேச திரைப்பட விழாவை காணும் பொருட்டு லேனாகுமார் தலைமையில் மும்பை தராவியில் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்தேன். அந்த தராவியை அதனிலும் raw வான தராவியை ஞாபகப் படுத்துகிறது இந்தக் கதைக்களம். மனிதர்களின் அடிப்படை நற்பண்புகளை சிதையாமல் அள்ளி தந்திருக்கிறார் இயக்குநர். வாடகை தர முடியாத போது காலி செய்ய வற்பறுத்தும் ஒரு பெண் பாத்திரம் மட்டுமே சற்று கடுமை காட்டினது. மற்றபடி எல்லா பாத்திரமே வெள்ளந்திதான். சிறுமியாக நடித்தவர் திரைக்கு புதியவர். படத்தின் ஒவ்வோரு பிரேமிலும் ஒவ்வோரு குழந்தையின் அசைவிலும் MIRA NAIR இருக்கிறார்.

செழுமையான அர்த்தமுள்ள உரையாடல்கள். ஒவ்வொரு சிறு குழந்தையும் அற்பதமான த் தேர்வு. ஒரு சிப்பாய் (pawn) கடைசிக் கட்டம் வரை சென்று சர்வ வல்லமை பொருந்திய ராணியாக மாற்றம் பெறுவது சதுரங்கத்தில் சாத்தியம் எனபதை இன்னொரு சிறுமி இவளுக்கு சொல்கிறாள். குழந்தைகள் இயல்பாக உரையாடுகிறார்கள். தவற விடக் கூடாத குழந்தைகளுக்கான இந்த சர்வ தேசப்படம்.  நிறைய விருதுகளைக் குவித்த இந்த படம் DISNEY- HOTSTAR லும் கிடைக்கிறது.

அடுத்து இன்னுமொரு அமெரிக்கன் படம், ‘AKEELAH AND THE BEE “. இதன் இயக்குநர் DOUG ATICHON. முக்கிய 11 வயது சிறுமியாக நடித்தவர், KEKE PALMER

இது ஒரு மொழி சார்ந்த படம். இந்த மாதிரி படம் தமிழிலோ அல்லது இந்திய மொழிகளிலோ வருவது சுலபமில்லை

மொழியின் வார்த்தைகளை அதன் தனித் தன்மையோடு அதன் மூலத்தையும் புரிந்து குழந்தைகளுக்கான “உச்சரிப்புப் போட்டி” தான் கதைக்கான களம். அபூர்வமான களம் . கதை முழுவதும் “கற்றல் இனிமை “என்பதை உணர வைக்கிறது

அகீலாவின் தாய், சகோதரி, சொல்லிக்கொடுக்க முன் வரும் இருவர், பள்ளிச் சூழ்நிலை, படிப் படியாக வென்று ஃபைனலுக்கு வரும் அகீலாவின் மன நிலையில் ஏற்படும் நேர்மறை எண்ணங்கள, சக போட்டியாளர்களின் (முக்கியமாக ஜாவிர்) அனுசரணை, குழந்தைகளின் பெற்றோர்களின் கோபம் சுயநலம் என்று உளி கொண்டு கதை செதுக்கப்பட்டிருக்கிறது. குறைந்த வாக்கியங்களில் செழுமையான உரையாடல்கள். இதன் கதைக்களம் குறித்து நிறைய THESIS களும் உண்டு. இப்படம் https://yts.ms/ ல் கிடைக்கிறது என்று அனுமானிக்கிறேன்.

விருதுகளை குவித்த இந்த திரைப் படத்தை தவற விடக் கூடாது.

குழந்தைகள் எப்போதும் நம் விருப்பத்தின் குறியீடுகள், நம் அன்பிற்கான குவியல்.

 

தொடரும் 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. டோராவின் கனவு தேவதை- பூமா ஈஸ்வர மூர்த்தி
  2. நீலப்புறாவைத் தேடி - பூமா ஈஸ்வரமூர்த்தி
  3. ’ ஸ்டார் வார்ஸ்’படங்களின்  துவக்கம்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  4. சத்யஜித்ரேயின் குழந்தைகள் உலகம் - பூமா ஈஸ்வரமூர்த்தி
  5. குழந்தைகளின் கனவு மிருகங்கள்- பூமா ஈஸ்வரமூர்த்தி
  6. குழந்தைமையைத் தேடி- பூமா ஈஸ்வரமூர்த்தி