காந்தமுள் 4

விகடன் விருது விழா ஒன்றில் எழுத்தாளர் ஜெயமோகன் கலந்துகொண்டார். விழாவுக்கு வந்தவர்களிடம் வாசலிலேயே நிறுத்தி ஒரு சிறு வீடியோ பேட்டி எடுத்தார்கள். அப்போது ஜெயமோகன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான சூழலை முதலில் விளக்கிவிடுகிறேன்.

ஜெயலலிதா இறந்த சில நாட்கள் வரை ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த நேரம். உட்கட்சி பூசல். திடீரென ஒருநாள் ஜெயலலிதா கல்லறையின் முன்பு ஓ.பி.எஸ் தியானம் அமர்ந்தார். முதலமைச்சருக்கு என்ன பிரச்னை? சசிகலா என்ன முடிவு எடுக்கப் போகிறார்? அடுத்து அறிவிக்கப்படப் போகிற முதல்வர் யார் என்றெல்லாம் மீடியா கதறிக்கொண்டிருந்தது.

இந்தத் தருணத்தில்தான் விகடன் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகனிடம் இப்படியொரு கேள்வி.

‘’முதலமைச்சர் தியானம் இருந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

‘’என்ன சொல்றது? 1967-க்குப் பிறகு நாடு மோசமாயிடுச்சு. புதுசா சொல்ல என்ன இருக்கு?’’

சற்றும் எதிர்பார்க்காத பதில். யோசித்துப் பார்த்தால் முற்றும் எதிர்பார்த்த பதிலும்கூட.

இந்த பதிலுக்காக ஓபிஎஸ் பெருமைப்பட வேண்டும். அந்த ஆண்டுதான் இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டது. இன்று வரை இந்திய மாநிலங்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. என்ன நடந்தது 1967-ல்?

1967-க்குப் பிறகு தமிழ் நாட்டுக்குப் பொற்காலம் பிறந்தது என்பவர்கள் ஒரு வகை. அதன் பிறகு நாடு மோசமானது என்பவர்கள் இன்னொரு வகை. 1967-க்குப் பிறகு நாடு கெட்டுப் போய்விட்டது என்பவர்கள் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் முக்கியப் பொறுப்புகளிலும் பிரபலமாகவும் இருக்கிறார்கள். பெட்ரோல் விலை உயர்ந்தாலும் வெங்காயம் விலை உயர்ந்தாலும் சுனாமி வந்தாலும் தி.மு.க ஆட்சிக்கு வந்ததுதான் காரணம் என்று சொல்வதைப் பார்க்கிறேன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய மாநிலங்களில் தமிழகம் பெரும் வளர்ச்சி கண்டிருப்பதை எத்தனை பொருளாதார நிபுணர்கள் சொன்னாலும் இவர்களுக்கு மட்டும் அது புரியவே புரியாது. 1967-க்குப் பிறகு தமிழகம் குட்டிச் சுவராகிவிட்டது என்னும் இவர்களில் பலர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சிகளைக் குறை சொல்வதில்லை. இந்த ஐம்பது ஆண்டுகளில் தி.மு.க சுமார் 20 ஆண்டுகளும் அ.தி.மு.க சுமார் 30 ஆண்டுகளும் ஆண்டிருக்கின்றன. 20 ஆண்டுகள் ஆண்ட தி.மு.க-வைத்தான் குறை சொல்வார்கள். தமிழகத்தில் நிகழ்ந்த பெரிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் அந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்ந்தன என்றாலும் அந்தத் தரப்பினர் அதை அந்தக் காலகட்டத்தைக் குறை சொல்வதை நிறுத்துவதில்லை.

தினமணி நாளிதழில் ஒரு நடுப்பக்கக் கட்டுரை. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்த நேரம். ‘’அண்ணா என்றால் தமிழக மக்களுக்கு அண்ணா துரை தான் நினைவுக்கு வருவார். இனி அண்ணா என்றால் அன்னா ஹசாரே தான் தமிழக மக்களுக்கு நினைவுக்கு வருவார்.’’

எப்படியாவது அண்ணாவின் பெயர் மறக்கடிக்கப்பட வேண்டும். அந்த இடத்தை வேறு ஒருவர் பிடித்துவிட வேண்டும் என்கிற வீணான வேகாத ஆசை.

1967 என்கிற ஆண்டே அவர்களின் ஜாதகக் கணிப்பில் சகிக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டதை உணர்கிறேன்.  50 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிற இந்த வெறுப்பு, இன்னொரு தரப்பினரால் எப்படிக்கொண்டாடப்படுகிறது என்பதையும் கவனித்து வருகிறேன். ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு முன்னால் அண்ணா பெரியாரைச் சந்திக்கிறார். திருச்சியில் அந்த மகத்தான சந்திப்பு நடக்கிறது. உலகில் எத்தனையோ பிரிந்தவர் கூடினால் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இப்படியே பிரிந்தே இருந்துவிட மாட்டார்களா என எண்ணியிருந்தவர்கள் நெஞ்சில் இடி விழுந்தது. ஏனென்றால் அது இருவர் மன இணைப்பு அல்ல. ஓர் இயக்கமும் ஓர் அரசும் கைகோர்த்த மானசீக ஒப்பந்தம்.

மூன்று வயது சிறுவனாக நான் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால், என் போன்றவர்களைப் பார்த்த அன்றைய பெரியவர்கள், ‘பரவாயில்லை… இவர்களின் எதிர்காலம் இனி நன்றாக இருக்கும்’ என மகிழ்ந்திருப்பார்கள்.

 

(அசையும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1970: அண்ணா நகர்,  கலைஞர் கருணாநிதி நகர்- தமிழ்மகன்
  2. 1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்
  3. 1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்
  4. 1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது!- தமிழ்மகன்
  5. 1965- இந்தி எதிர்ப்பின் கனல்- தமிழ்மகன்