காந்தமுள் 7

வீட்டு ராஜாவாக இருந்த நான் முதன் முதலாக என்னைப்போன்ற சிறுவர்கள் பலர் இருந்த ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அது, ஜே.எம்.கமலா நர்சரி பள்ளி. அதில் பலரும் அழுதுகொண்டிருந்தார்கள். என்னைப் பள்ளியில் சேர்த்துவிட்டு அங்கே நான் விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்த என் அப்பா திடீரென காணாமல் போய்விட்டார். அப்போது நானும் அழ ஆரம்பித்தேன். எல்லோரையும் போலவே அழுகையும் விளையாட்டுமென எனக்குப் பள்ளிக்கூடம் பழக ஆரம்பித்தது. நர்சரி என்பது முதல் வகுப்புக்கு முந்தைய வகுப்பு. கூட்டாக ரைம்ஸ் சொல்லுவோம். விளையாடுவோம். பள்ளியிலிருந்து நானே தனியாக வீட்டுக்கு வந்துவிட வழி தெரிந்தது.

அண்ணா நகர் தன் தொடக்க நிலையில் இருந்தது. சாலை வசதியோ, பரவலான குடியிருப்புகளோ, கடைகளோ இல்லை. அந்த நாளில் புரசைவாக்கம் பகுதியில் இருந்து அண்ணா நகரில் இடம் வாங்கிக் குடியேறுவது தயக்கமான விஷயமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் அங்கே இடம் வாங்கிக் குடியேறலாம் என நினைத்து கடைசி வரை டெவலப்மென்ட் இல்லாத ஏரியா என்றே அதை நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் பிற்காலங்களில் வீட்டில் புலம்பிக்கொண்டிருந்தார்கள்.

புரசைவாக்கத்துக்கு மேற்கே, ஷெனாய் நகருக்குக் வடக்கே பொட்டல் வெளியாக இருந்த அண்ணா நகரை அப்பா வர்ணிப்பார். அங்கே தான் அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு நடந்தது.

73-ம் ஆண்டிலே வெளி வந்த பிள்ளையோ பிள்ளை பட்த்தைப் பார்த்தால் சென்னை அண்ணா நகரைப் புரிந்துகொள்ளலாம். முக முத்து அண்ணா நகர் ரவுண்டானா அருகே இருந்து பாடிக்கொண்டு போவார். ‘’ஏழையின் சிரிப்பில் இறைவன் இருப்பதைச் சொன்னான் தலைவன்… அண்ணனவன் சொல்லிய சொல்லை நான் எந் நாளும் மறப்பது இல்லை’’ என்பது பல்லவி. அவர் அண்ணா நகர் சாலைகளில் பாடி ஆடுவார்.  சீமை கருவேல மரங்கள் செழித்து வளர்ந்திருந்த இடங்கள் தெரியும். 70-ம் ஆண்டின் தொடக்கத்தில் அது இன்னும் வளர்ச்சியின்றி இருந்திருக்கும்.

அப்பாவுடன் மின் வாரியத்தில் பணிபுரிந்த டைப்பிஸ்ட் வீராசாமி துணிச்சலாக அண்ணா நகரில் இடம் வாங்கிக் குடியேறினார். பின்பு வேலையை விட்டுவிட்டு தி.மு.க-வில் இணைந்து ஆற்காடு வீராசாமி எனப் பிரபலமானார்.

தாத்தா மகளுக்கான சீராக ஐம்பதாயிரத்தில் இடம் வாங்கிப் போட இருந்த நேரம் அது. அண்ணா நகரில் இடம் வாங்க தயங்கியதால் கிராமத்தில் அதே விலையில் ஏழு ஏக்கர் நிலம் வாங்கி அம்மா பெயரில் பதிவு செய்தார். நகரத்தின் வளர்ச்சியைக் கணிப்பதில் அப்போது விவரம் போதவில்லை. இப்போது ஆவடியை, திருவள்ளூரைக்கூட அண்ணா நகருக்கு மிக அருகே என விளம்பரம் செய்வதைப் பார்த்து சில ஜியாகரபிகல் குழப்பங்கள் ஏற்படுவதுண்டு.

குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் என கலைஞர் அனைவருக்கும் வீடு கிடைக்க திட்டங்கள் வகுத்தார்.

கலைஞர் கருணாநிதி நகர் உருவான போதும் ஹவுசிங் போர்டில் விண்ணப்பித்தார் அப்பா. மனை கிடைத்தது. அதுவும் சென்னைக்கு வெளியே இருந்ததால் மாத்த் தவணையை ஒழுங்காகக் கட்டாமல் இடத்தையும் பராமரிக்காமல் விட்டுவிட்டார். அதுவும் கை நழுவிப்போனது. சென்னையில் அப்பா பெயரில் இடம் வாங்கும் முயற்சிகள் அவ்வப்போது நடந்து இறுதிவரை முடியாமலேயே போனது. சென்னையிலேயே எழுபது ஆண்டுகள் வாழ்ந்தும் வாங்கும் வசதிகள் இருந்தும் அவருக்கு அது கைகூடவில்லை.

அவருக்கு மது பழக்கமும் சீட்டு கிளப்பில் பணம் வைத்து ஆடும் பழக்கமும் ஏற்பட்டது. எவ்வளவு பணம் வந்தாலும் விடிவுகாலமே ஏற்படாத இன்னல். எனக்கு ஒரு வேலை கிடைத்து ஓரளவுக்கு சம்பாதிக்கத் தொடங்கிய காலம் வரை நாங்கள் 7, செல்லப்ப முதலி தெருவைவிட்டு மாறவே முடியாத நிலை ஏற்பட்டதற்கு அப்பாவின் பழக்கங்கள் காரணமாகின.

(அசையும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்
  2. 1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்
  3. 1967: அண்ணா கண்ட தமிழகம்- தமிழ்மகன்
  4. 1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது!- தமிழ்மகன்
  5. 1965- இந்தி எதிர்ப்பின் கனல்- தமிழ்மகன்