காந்தமுள் 6

ஒரு மனிதனின் இறப்புக்காக ஏறத்தாழ ஒட்டுமொத்த தமிழகமே அழுத வரலாறு நிகழ்ந்த ஆண்டு. எளிய உருவம். அவர் அப்படியொன்றும் அழகில்லை… எடுப்பான தோற்றமோ, உயரமோ, சிவப்பு நிறமோ இல்லை. வெற்றிலைக் காவியேறிய பற்கள், இன்றைய மினிஸ்டர் வொய்ட் வெண்மையற்ற வெள்ளாடை. இதுதான் அண்ணாவின் தோற்றம். ஆனால் அந்த எளியவரின் மீது மக்களுக்கு இருந்த நாட்டமும் அக்கறையும் அலாதியானது. அவருடைய தமிழ் முழக்கத்துக்குத் தவமிருந்தனர் தமிழர்கள்.

ஐம்பதுகளில் அண்ணாவைச் சந்தித்தது பற்றி என் தந்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.

எம்.ஏ. படித்து முடித்த பிறகு என் அப்பா நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழிலே வேலை பார்த்து வந்தார். அப்போது ஓர் நாள் நெடுஞ்செழியன் அவர்கள் இல்லத்துக்கு அண்ணா வந்தார். அண்ணா எப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். என்னவெல்லாம் பேசினார். எப்படி ஓய்வெடுத்தார். எப்படி சாப்பிட்டார் என எல்லாவற்றையுமே என் தந்தை அவர் இறக்கும் காலம் வரை மறக்கவே இல்லை. எப்போது கேட்டாலும் அந்த சம்பவத்தை உணர்ச்சிகரமாக நடித்துக்காட்டுவார். அதில் அவரே அண்ணா, அவரே நெடுஞ்செழியன், அவரே இரா.செழியன், அவரே அவர். ஓரங்க நாடகம். ஒருவரே அனைவராகவும் நடிப்பார். சொல்வதற்கு அவருக்கு சலிக்கவில்லை. கேட்டு ரசிப்பதற்கு எனக்கு சலிக்கவில்லை.

சாப்பிடும்போது அண்ணா அப்பளத்தை முதலிலேயே சாப்பிட்டுவிட்டார். அண்ணாவுக்கு அடுத்து அமர்ந்திருந்தார் என் தந்தை. உடனே, தன் இலையில் இருந்த அப்பளத்தை எடுத்து அண்ணாவுக்கு வைத்தார். அண்ணா வியப்புடன், ‘’ஏன் அப்பளம் பிடிக்காதா?’’ எனக் கேட்டார்.

‘’எனக்கும் பிடிக்கும் அண்ணா. உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதால் கொடுத்தேன்’’ என்றாராம் என் தந்தை.

பதிலுக்கு அண்ணா சிரித்தாராம்.

‘’என்ன ஊர்? என்ன படித்தீர்கள்?’’

‘’திருவள்ளூருக்கு அருகிலே காரணை என்பது என் ஊர். படித்தது நீங்கள் பயின்ற பச்சையப்பன் கல்லூரியில். தமிழில் எம்.ஏ.’’

‘’மகிழ்ச்சி.’’

அப்பாவுக்கு அது வாழ்நாளுக்குப் போதுமா பேச்சாக இருந்தது.

அண்ணாவிடம் தமிழ் மக்களுக்கு இருந்த வசீகரத்தின் சாட்சியாக அப்பாவை நான் பார்த்தேன்.

புற்றுநோயால் அண்ணா இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்ததும் நாடே துடித்தது. பல லட்சம் பேர் கலந்துகொண்ட சாதனை இறுதி ஊர்வலமாக அது இன்றும் சொல்லப்படுகிறது. கலைஞர் எழுதிய இரங்கற்பா அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக ஒலிபெருக்கிகளில் உணர்வு பெருக்கிக்கொண்டிருக்கிறது.

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி பத்திரிகை கட்டுரை வேண்டி, நடிகர் எஸ்.எஸ்.ஆரை சந்தித்தபோது அண்ணா மறைவு அவரை எப்படி வாட்டி வதைத்த்து என்று சொன்னார். ‘’அண்ணா புதைக்கப்பட்ட கல்லறையில் தினமும் போய் அமர்ந்துவிடுவேன். எழுந்துவர மனமே இருக்காது. கல்லறைக்குப் பக்கத்திலேயே படுத்து தூங்குவேன். சரியான உறக்கமோ, உணவோ இல்லாமல் என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. என் நிலையை அறிந்து பெரியார் அவர்கள் என்னைத் தேடி வந்தார். ‘எங்களுக்கெல்லாம் ஆறுதலாக இருக்க வேண்டிய நீங்கள் இப்படிச் செய்யலாமா?’ என்றார். அந்தத் தள்ளாத வயதில் அவர் தேடி வந்து அக்கறையுடன் அறிவுரை சொன்னதன் பின்னரே நான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.’’

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அண்ணா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது அடையாற்றில் கி.வீரமணி அவர்கள் இல்லத்தில் தங்கி தினந்தோறும் சென்று பார்த்துக்கொண்டிருந்தார் பெரியார். ‘’அண்ணா இன்னும் சில ஆண்டுகள் இருந்திருந்தால் நாட்டுக்கு நன்மை விளைந்திருக்கும்’’ என பெரியார் மனப்பூர்வமாக நினைத்தார்.

அன்றைக்குத் திரையிலே முன்னணியில் மின்னிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் போன்ற பலரும் அண்ணா என்ற சாமானிய மனிதனின் புகழுக்குப் பின்னால் இருந்தார்கள்.  வரலாற்றில் செலிபிரிட்டிகள், அலங்கார நாயகர்களைப் பின்னுக்குத் தள்ளிய ஆற்றல் அண்ணாவின் அறிவுக்கு இருந்தது.

அண்ணாவின் அறுபதாவது பிறந்த நாளுக்கு எஸ்.எஸ்.ஆர் அறுபது பொருட்களைப் பரிசளித்தார். வெள்ளித் தட்டு, பேனா, குடை, வேட்டி, சட்டை என 59 பொருட்கள் இருந்தன.

‘’அறுபது பொருட்கள் என்றாயே?’’ என்றார் அண்ணா.

எஸ்,எஸ்.ராஜேந்திரன் தன் சட்டைப் பையில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக்கொடுத்தார். ‘’இதுதான் என் அறுபதாவது பரிசு…’’

நான்காக மடிக்கப்பட்டிருந்த அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்க்கிறார் அண்ணா.

அதிலே, ‘என் உயிர்’ என்று எழுதியிருந்தது.

எஸ்.எஸ்.ஆரை கட்டியணைத்துக்கொண்டார்.

அண்ணனின் தம்பிமார்கள் பலர் அவருக்காக உயிரையே தருபவர்களாக இருந்தனர். அதுவும் சினிமாவில் பிரபலமாக இருந்தார்கள். அதனால்தான் என் தந்தை அவருடைய அண்ணன் மகன்கள் மூவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்.

மூத்தவர் பெயர், எம்.ஜி.ஆர்., இரண்டாமவர் பெயர் எஸ்.எஸ்.ஆர்., மூன்றாமவர் பெயர் கே.ஆர். கூடவே நல்ல தமிழிலே பெயர்கள் வைக்கிற பழக்கமும் இருந்தது. அமுதா, மலர்விழி, செல்வி, வெற்றி, மாறன் என்றெல்லாம் எங்கள் குடும்பத்தில் பெயர்கள் புழக்கத்துக்கு வந்தன.

இவை அனைத்துமே அண்ணாவுக்காக நிகழ்ந்த மாற்றங்கள்.

(அசையும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1970: அண்ணா நகர்,  கலைஞர் கருணாநிதி நகர்- தமிழ்மகன்
  2. 1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்
  3. 1967: அண்ணா கண்ட தமிழகம்- தமிழ்மகன்
  4. 1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது!- தமிழ்மகன்
  5. 1965- இந்தி எதிர்ப்பின் கனல்- தமிழ்மகன்