காந்தமுள் -5

அன்றைய செங்கல்பட்டு மாவட்டம்தான் எங்கள் மூதாதையரின் வாழ்விடம். அவை இன்றைய திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குள் இருக்கின்றன. என் தந்தையின் தந்தை கந்தசாமி கோடுவெளி காரணி கிராமத்தைச் சேர்ந்தவர். தந்தையின் திருமணத்துக்கு முன்பே இறந்துவிட்டதால் அவரைப் புகைப்படமாகத்தான் அறிந்திருந்தேன். தைரியமும் நல்ல உடற்கட்டும் உள்ளவர் என என் தந்தை வர்ணிப்பார். அது வீண் புகழ்ச்சியில்லை என்பதை என்னுடைய 25-வது வயதிலே இன்னொருவர் மூலமாக அறிந்தேன். என் அப்பா பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்திலேயே சென்னைவாசி ஆகிவிட்டவர். அதனால் ஊரில் இருந்த நிலங்களை குத்தகை விட்டிருந்தோம். படித்து முடித்த கையோடு நான் அந்தக் கிராமத்திலே சில காலம் கோழிப் பண்ணை வைத்திருந்தேன். அப்போது அங்கே மாடு மேய்த்தபடி வந்து அமர்ந்து என்னைப் பற்றி விசாரித்தார் ஒரு பெரியவர். என் தாத்தாவின் பெயரைச் சொன்னேன். அவருக்கு வந்ததே ஆவேசம்… ‘’அவர் பெயரைக் கெடுப்பதற்கென்றே வந்திருக்கிறாயா?’’ என்றார்.

அப்படி என்ன தவறு செய்தேன் எனத் தெரியவில்லை.

அவரே தொடர்ந்தார். ‘’அவரோட தொடை கனம்கூட இல்லையே நீ… அசிங்கமா இல்ல உனக்கு?’’ நான் ஒல்லியாக இருந்ததை அவர் கேவலமாகப் பார்த்தார். இரண்டு ஊர் கலவரத்தின்போது அவர் குறுக்கே வந்து நின்று சண்டையை சமாதானமாக்கியதைச் சொன்னார்.

கந்தசாமி தாத்தாவுக்குப் பெண்ணெடுத்தது பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கத்தில். ஆயாவின் பெயர் கமலா.

என் தாயார் பார்வதி. அவருடைய ஊர் காரனோடையை அடுத்த ஜெகநாதபுரம். என் அம்மா வழி தாத்தா பெருமாள். இராமகிருஷ்ண பரமஹம்சரின் தீவிர பக்தர். கல்கத்தா மடத்தில் தீட்சை பெற்றவர். அதே சமயத்தில் கலைஞரின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர். அந்த நாளில் எத்தனை மாட்டு வண்டி வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுடைய செல்வச் செழிப்பு அளக்கப்படும். இன்றைக்கு கார் வைத்திருப்பவர்கள் போல. என் தாத்தா வீட்டில் நான்கு மாட்டு வண்டியும் மூன்று ஜோடி எருதுகளும் ஒரு பொட்டி வண்டியும் இருந்தன. அதனால் அவர்களுக்கு ‘வண்டிக்கார மூடு’ (வண்டிக்காரர் வீடு)  என்ற அடையாளம் இருந்தது. ஜெகநாதபுரத்துக்கு அருகில்தான் சின்னகாவனம் என்ற ஊர் உள்ளது. திராவிட இயக்கங்களின் ஆதி விதையாக இருக்கும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தோற்றுவித்த நடேச முதலியாரின் சொந்த ஊர் அதுதான்.

பெருமாள் தாத்தாவுக்குப் பெண்ணெடுத்தது திருவள்ளூர் அருகே உள்ள கொப்பூரில். ஆயா பெயர் ஆண்டாள்.

கடந்த பத்து தலைமுறைகளாகப் பெண்ணெடுப்பது, பெண் கொடுப்பது எல்லாமே கிழக்கே மீஞ்சூர், மேற்கே ஊத்துக்கோட்டை, வடக்கே மாதர் பாக்கம், தெற்கே மயிலாப்பூர்… இவற்றைத்தாண்டி நகரவில்லை என்பதை என்னால் அறிய முடிகிறது. என் வெட்டுப்புலி நாவலில் இந்த கிராமங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கின்றன. இவர்கள் அனைவருமே காங்கிரஸ்காரர்களாகவோ, காங்கிரஸில் இருந்து தி.மு.க-வுக்கு மாறியவர்களாகவோ இருந்தனர். அடர்த்தியான விவசாயப் பின்னணி இருந்தது. இப்போதும் இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த என் மகன் திருமணத்தில் அன்புடன் வரவேற்கும் உறவினர்களின் பட்டியலை அழைப்பிதழில் போட்டிருந்தேன். அனைவருமே விவசாயிகள் என்று குறிப்பிட்டிருந்தேன்.

என் தாய் வழி தாத்தா ஊர்தான் என் சொந்த ஊர் போல பாவிப்பேன். எல்லா விடுமுறை நாட்களும் எனக்கு ஜெகநாதபுரத்திலேயே கழிந்தது. சனி, ஞாயிறு விடுமுறைகளில்கூட அங்கு சென்றுவிடுவேன். அதனால் ஆண்டில் பாதி நாட்கள் சென்னையில் இருந்தால் பாதி நாட்கள் ஜெகநாதபுரத்தில் இருப்பேன். 1968- ல் எங்களூருக்கு தொடக்கப் பள்ளிக்கூடம் வந்தது. என் தாத்தா பெருமாள் அதற்கு நன்கொடை வழங்கிய கல்வெட்டொன்று அந்தப் பள்ளியின் சுவற்றிலே பதிக்கப்பட்டிருக்கும். அந்தப் பள்ளிக்கூடத்தை அன்றைய அமைச்சர் என்.வி.நடராசன் திறந்துவைத்தார். கிராமம் விவசாயச் செழுமையினால் பெருமைகொள்கிறது. கல்விச் சாலையால் நிமிர்ந்து நிற்கிறது. இந்த ஆண்டு நிகழ்ந்த நீட் தேர்வில் 604 மதிப்பெண் எடுத்த பெண் அந்தப் பள்ளிக்கூடத்தில் தன் தொடக்கக் கல்வியைத் தொடங்கியவர்தான். இத்தனைக்கும் அவர் எந்த கோச்சிங் சென்டருக்கும் செல்லவில்லை என்பதையும் அழுத்தமாகத் தெரிவிக்கிறேன்.

முதல்வர் அண்ணாவுக்கு தொண்டையிலே கேன்சர் என்ற அமில செய்தி பரவியதும் இந்த ஆண்டில்தான்.

(அசையும்)

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1970: அண்ணா நகர்,  கலைஞர் கருணாநிதி நகர்- தமிழ்மகன்
  2. 1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்
  3. 1967: அண்ணா கண்ட தமிழகம்- தமிழ்மகன்
  4. 1966 அண்ணாவின் குரல்: நாடு மாறியது… வீடு மாறியது!- தமிழ்மகன்
  5. 1965- இந்தி எதிர்ப்பின் கனல்- தமிழ்மகன்