காந்தமுள் -3

‘’காமராஜர் அண்ணாச்சி… கடலைப் பருப்பு விலை என்னாச்சி?’’

‘’பக்தவத்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி?’’

என தி.மு.க-வினரின் முழக்கம் தெருவெல்லாம் தினந்தோறும் முழங்கியது. கடுமையான வறட்சி. அண்ணா ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி திட்டத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் ஏற்கெனவே தமிழக மக்கள் மனநிலை காங்கிரஸ் எதிர்ப்பின் உச்சத்தில் இருந்தது.

பெரும் நிலச்சுவாந்தார்களும் தொழிலதிபர்களும் காங்கிரஸ் பக்கமிருந்தனர். சாமானியர்கள் தி.மு.க-வின் பக்கமிருந்தனர். இந்திய வரலாற்றில் மாபெரும் எழுச்சியை உருவாக்கியிருந்தது. தி.மு.க-வினரின் பிரசாரம். பத்திரிகைகளின் பலமற்ற, பணபலமற்ற தி.மு.க-வினருக்கு மக்கள் ஆதரவு எப்படியிருக்கும் என்ற எதிர்பாராத மனநிலை அரசியல் வானில் நிலவியது.

ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.க-வோடு கூட்டணி வைத்திருந்தது. ராஜாஜி, அண்ணா, காயிதே மில்லத், ம.பொ.சி போன்ற காங்கிரஸுக்கு எதிராக நின்ற தலைவர்கள் கழுதைமீது அமர்ந்து சட்டசபைக்குச் செல்வதாக கார்ட்டூன் வரைந்தது ஆனந்த விகடன்.

‘’யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். காங்கிரஸை எதிர்க்க குதிரையில் ஏறிச் செல்ல வேண்டியதில்லை. கழுதையில் போனாலே போதும் என்றுதான் போட்டிருக்கிறார்கள்’’ என ராஜாஜி கிண்டலடித்தார்.

காங்கிரஸ் மக்களுக்கு எப்படியெல்லாம் லஞ்சம் கொடுத்து வாக்கு கேட்கிறார்கள் என அண்ணா பதறாமல் கிண்டலடித்தார். வெங்கடாஜலபதி படத்தையும் ஐந்து ரூபாய் நோட்டையும் கொடுத்து மக்களிடம் வாக்கு கேட்டு சத்தியம் வாங்குவதை அண்ணா பேசுவதை யூடியூபில் இப்போதும் கேட்கலாம். இந்த நேரத்தில் நடிகர் எம்.ஜி.ஆரைச் சுட்டுவிட்டார் எம்.ஆர்.ராதா. அனுதாப ஓட்டு அணிதிரள ஆரம்பித்தது. இந்திய அரசியலையே புரட்டிப் போடும் ஒரு தேர்தலாக அந்தப் பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது. 1966- ஆம் ஆண்டு எங்கள் வீட்டில் எப்படியிருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

அப்போது எனக்கு மூன்று வயது. அப்போது நாங்கள் சென்னை குயப்பேட்டை வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவில் குடியிருந்தோம். மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள்தான் எனக்கு இருந்த பொழுதுபோக்கு. நெரிசலான அந்தத் தெருவின் இரண்டு முனைகளையும் என் சைக்கிளால் வலம் வந்துகொண்டிருப்பேன். நான் லாவகமாக ஓட்டினேனா… என் எதிரில் வந்தவர்களிடம் அந்த லாவகம் இருந்ததா என்பது தெரியவில்லை. மேற்படி தேர்தல் பிரசார கோஷ்டிகளுக்கு இடையேதான் நான் சைக்கிள் ஓட்டியிருப்பேன்.

காமராசருக்கு ஆதரவாகப் பெரியார் களமிறங்கியிருந்தார். ‘கண்ணீர் துளி பசங்களை’ அவர் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார். அண்ணாவின் பேச்சுக்குக் கட்டுப்பட்ட தம்பிமார்கள் தந்தையை எதிர்த்துப் பேச சங்கடப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

அண்ணா கட்சியை ஆரம்பித்து 10 ஆண்டுகள்கூட ஆகியிருக்கவில்லை. எதிரே இருப்பதோ கோகலே, காந்தி, நேரு, படேல், லால் பகதூர் சாஸ்திரி நீண்ட பாரம்பர்யம் உள்ள காங்கிரஸ் கட்சி. அந்நியர்களிடமிருந்து தேசத்தை மீட்டுத்தந்த கட்சி என்ற பெயரும் பெருமையும் மிச்சமிருந்தது. வெள்ளையனை வெளியேற்றிய கட்சி என்ற காங்கிரசின் முழக்கங்கள் பிரகாசம் இழக்கத் தொடங்கியிருந்த நேரம். மொழிவாரி மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு இந்திய அளவில் வலிமையான குரலாக ஒலித்தது தி.மு.க.

தி.மு.க-வினரோ, தமிழ், திருக்குறள், மண்ணின் பெருமை, திராவிட இனம், மத்திய அரசு எப்படி தமிழர்களை வஞ்சிக்கிறது என்ற புதிய பிரச்னைகளைப் பேசினர். பல்வேறு மொழிகளைக் கொண்ட ஒரு தேசத்தை ஒரு மொழியால் ஆள நினைத்த அடாவடித்தனத்தை கடுமையாக எதிர்த்தனர். அண்ணாவின் பணத்தோட்டம் பேசிய அரசியல் நியாயம் இளைஞர்களைக் கவ்விக்கொண்டது.

நான் மூன்று சக்கர சைக்கிளை ஓட்டி வீட்டின் தரையைப் பாழாக்குவதாக வீட்டின் முதலாளி சண்டைக்கு வந்தார். உடனே வேறு வீடு பார்க்க வேண்டியிருந்தது. அப்பா ரோஷத்துடன் இரண்டு தெரு தள்ளி ஒரு வீட்டைப் பார்த்துவிட்டு வந்தார். நாடு மாறிய நாளில் நாங்கள் வீடு மாறிய நிகழ்வு. வீட்டுக்கு முன்பணம்கூட கேட்கவில்லை அந்த புதிய வீட்டு உரிமையாளர். மாதத்தின் நடுவில் வந்ததால் அந்தப் பாதி நாட்களுக்கு வாடகையும் வேண்டாம் என்று கூறிவிட்டார் அவர். அந்த வீட்டில் இருந்துதான் நான் பள்ளிப் படிப்பை, கல்லூரிப் படிப்பை முடித்தேன். எனக்குத் திருமணமாகி எனக்கு ஒரு குழந்தை பிறந்த பிறகும் அதே வீட்டில்தான் இருந்தோம். என் இரண்டு கவிதைத் தொகுதிகள் அங்கிருந்தபோதுதான் வெளியாகின.

ஓட்டேரியில் இருக்கும் அந்த நம்பர் 7 செல்லப்ப முதலி தெரு என் எல்லா வசந்தங்களையும் வருத்தங்களையும் விநாடிதோறும் வேடிக்கைப் பார்த்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. 1970: அண்ணா நகர்,  கலைஞர் கருணாநிதி நகர்- தமிழ்மகன்
  2. 1969 அண்ணா மறைந்தார் -தமிழ்மகன்
  3. 1968 : இந்த அத்தியாயத்தில் சிறிய முன்கதை சுருக்கம். - தமிழ்மகன்
  4. 1967: அண்ணா கண்ட தமிழகம்- தமிழ்மகன்
  5. 1965- இந்தி எதிர்ப்பின் கனல்- தமிழ்மகன்