அத்தியாம் – 1
முன் கதை : 1982, மாஹே, பாண்டிச்சேரி.
பெருமழை பெய்ந்து ஓய்ந்திருந்திருந்தது. இலைகளில் நீர் சொட்டும் சத்தமும் அவ்வப்போது யாரோ சேற்றில் வேகமாக கால் பதிய நடக்கும் சத்தமும் கேட்டவாறு இருந்தன. ஒரு சிறிய மண்ணெண்ணெய் விளக்கின் அருகில் நாராயணி மடியில் அழுதுகொண்டே படுத்திருந்த தன் மகனின் தலையைக் கோதிவிட்டவாறே உட்கார்ந்திருந்தாள். அழுது அழுது சிவந்த அவளது கண்கள் லேசாகக் காற்றில் ஆடிக்கொண்டிருக்கும் விளக்கின் ஜுவாலையைப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த நெருப்பின் ஒவ்வொரு அசைவும் அவளின் ஞாபகத்தின் ஏதோ ஒரு பக்கத்திற்கு வெளிச்சத்தைப் பாய்ச்சி முழுக்க வற்றிப்போயிருக்கும் அவளது கண்களை மீண்டும் அழத்தூண்டிக்கொண்டிருந்தது. ஆனால், அவளது மகன் இன்னும் அழுதுகொண்டேயிருந்தான். அவனது கண்ணீர்த் துளிகளை அவளால் தன் தொடைகளில் உணர முடிந்தது.
அது ஒரு சிறிய குடிசை வீடு. அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து இடது பக்கம் சற்று தள்ளி நான்கடியில் ஒரு வாசலும் வலது பக்கம் சில அடிகளில் சுவரும் அதற்கு முன் சிறிது இடைவெளி விட்டு சமையலுக்காக ஒரு தடுப்பும் இருந்தது. மேலே ஓலை வேயப்பட்டிருந்தன. அது நன்றாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. இந்த மழைக்கு எங்கேயும் ஒழுகவில்லை. நாராயணியின் வீடும் கிட்டதட்ட இதே போன்றதொன்று தான். ஆனால், சில வருடங்களாகப் பராமரிக்கப்படவில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அவள் கணவன் இறந்ததிலிருந்து. இப்போது அந்த வீடும் இல்லாமல் போய்விட்டது. உண்மையில் அது கடனுக்காக அவளிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது. அன்றைய மழை நாளில் அவளும் அவளது மகனும் துரத்தப்பட்டனர். அவர்கள் அழுதுகொண்டே கெஞ்சிப் பார்த்தனர். அவர்கள் ண் முன்னே அது சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. விடிந்தால் அந்த நிலத்திற்குள் நுழைய முடியாதபடி ஒரு வேலி இருக்கலாம். எல்லாம் முடிந்துவிட்டது, இனியென்ன என்று நாராயணிக்குத் தோன்றியது. அவள் மகனைப் பார்த்தாள். அவன் கொஞ்சம் வளர்ந்துவிட்டான். எப்படியாவது பிழைத்துக்கொள்வான் என்று அவளுக்குத் தோன்றியது. மழையின் காரணமாக தாங்கள் துரத்தப்பட்டது இன்னும் ஊர் முழுக்க பரவாமல் இருக்கலாம். ஆனால் விடிந்ததும் பரவிடும். சிறிய ஊர். குறைந்த மக்கள். அவர்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பொழுது போகும். இதையெல்லாம் பார்க்க அவள் விரும்பவில்லை.
சூழ்ந்திருந்த இருளும் எப்போதும் வேண்டுமானாலும் அணைந்துவிடக்கூடிய சிறிய விளக்கும் நாராயணிக்கு எதையோ உணர்த்துவது போல் இருந்தது. இனியென்ன? ஒன்றுமில்லை என்ற வெற்றிடத்திற்குத் தான் தள்ளப்பட்டுவிட்டதை அவள் உணர்ந்தாள். இனி இந்த ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் வதைபட்டு கண்ணீர் விட்டு சாராய போதையில் எச்சில் ஒழுகத் தான் போகும்போதும் வரும்போதும் சிரிக்கும் ஆண்களுக்கு நடுவிலும் குருட்டுத் தைரியத்தில் தன் வீட்டினுள் நுழையப்போகும், கடைசி வார்த்தையை அவள் மனதிற்குள் நுழைந்து வெளியேறிய நொடியில் அவள் சிந்தனைப் பறவைகள் திசைமாறின. வீட்டினுள், வீட்டினுள். இனி ஏது வீடு. இனி ஏது வாழ்வு.
நினைவுகள் கலைந்து சட்டென நாராயணி தலையைக் குலுக்கிக்கொண்டாள். வெளியே பார்த்தாள். முழுக்க இருட்டு. எல்லாம் முடிந்ததும் நாராயணி தன் மகனை இழுத்துக்கொண்டு தன் கணவனின் தங்கை வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் ஏதோ விசேஷத்திற்கு வெளியூர் சென்றிருக்க, அவள் கணவன் மட்டும் இருந்தான். அவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலை. இவர்களை இருக்கச் சொல்லிவிட்டு அவன் வெளியே சென்று நீண்ட நேரமானது. நாராயணி ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். தன் மகனை எழுப்பினாள்.
“கோபி”
“ம்”
“நீ போயீ, மாமா எங்கன்னு பார்த்துட்டு வா”
“வெளியே இருட்டு, எனக்கு பயம்”
“அந்த விளக்க எடுத்துகிட்டு போ”
“அம்மா…”
“என் ராஜால்ல… போயி எங்கன்னு பாத்துட்டு வந்துடு”
அவன் சலித்தவாறே மெல்ல எழுந்தான். அவன் கண்கள் லேசாக வீங்கியிருந்தன. வாசலில் தட்டிக்கு அருகே இருந்த கோணியை எடுத்து தலைக்குப் போட்டுக்கொண்டு விளக்கை எடுத்துக்கொண்டு வெளியேறினான். நாராயணி மேலே கட்டப்பட்டிருந்த சவுக்கு கழியையே பார்த்துக்கொண்டு மெல்ல எழ முற்பட்டாள். அப்போது தூரத்திலிருந்து ஒரு குரல், “டேய்… எங்கடா போற” என்றது. அது கோபி மாமாவின் குரல். அதைக் கேட்டதும் அவள் அப்படியே மீண்டும் சரிந்து உட்கார்ந்தாள். திறக்கப்பட்ட அணையைப் போல மீண்டும் அவள் கண்களில் நீர் பொங்கி வழிந்து ஓடியது. கோபிப் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் உள்ளே வந்து கோணியையும் விளக்கையும் அதனதன் இடத்தில் வைத்துவிட்டு அம்மாவின் அருகில் உட்கார்ந்துகொண்டான். வெளியே காலடிச் சத்தம் மெல்ல மெல்ல அதிகரித்து மிக அருகில் வந்ததும் தேய்ந்து வார்த்தைகளாக மாறியது, “ஏன்டா… உங்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன். உங்க அம்மா விட்டு எங்கயும் நகரக்கூடாதுன்னு தானே. எங்கடா போற”
“அம்மா தான் உங்கள எங்கன்னு பாத்துட்டு வர சொன்னாங்க”
அவர் நாராயணியைப் பார்த்தார். அவள் தலையைத் தாழ்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவருக்கு அவள் எண்ணம் ஒருவாறு புரிந்துவிட்டது. சட்டென முகத்தில் கோவத்தின் ரேகைகளைப் படரவிட்டவர் சத்தமாகக் கத்தினார், “சாவறதுனா வேற எங்கனா போயி சாவ வேண்டியது தானே, எதுக்கு இங்க வந்த. ஆயுசுக்கு நான் அத அனுபவிக்கனுமா”.
கோபிக்கு அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை. அவன் இருவரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு கோபிக்குச் சற்று தள்ளி உட்கார்ந்துகொண்டார். அவருக்குள் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது சொல்லலாமா வேண்டாமா என்று தயங்கினார். கொஞ்ச நேரம் ஆகட்டும் எனக் காத்திருந்திருக்கத் தொடங்கினார்.
சிறிது நேர அமைதி அவர்களுக்கு ஏதோ நீண்ட நேரக் காத்திருப்பு போல் தோன்றியது. ஒவ்வொருவரின் மனதிலும் ஏதேதோ எண்ணங்கள் நிலையில்லாமல் சோழிகளைப் போல மாறி மாறி உருண்டுகொண்டிருந்தன. அவர்களும் அதைத் திரும்ப திரும்ப எதாவது ஒருவழியில் தங்களைத் திருப்திப்படுத்துமா என்று உருட்டிக்கொண்டேயிருந்தனர். வெளியே காலடிச்சத்தம் கேட்டுத்தான் மூவரும் சுயநினைவிற்கு வந்தனர். வெளியே வந்துகொண்டிருந்த ஆளைப் பார்த்ததும் மூவருமே எழுந்து நின்றனர். வந்தவர் நேராகக் கோபியின் மாமாவைப் பார்த்து பேசினார்.
“ஐயப்பா… நான் அவன் பேசிப்பாத்தேன். அவன் முடியவே முடியாதுன்னு பிடிவாதமா இருக்கான். நாளைக்கு போயி அவன் கேக்கற மாதிரி கையெழுத்து போட்டுட்டு மிச்சம் மீது எதாவது பாத்து குடுக்க சொல்லிருக்கேன், அத வாங்கிட்டு பொழைக்கற வழியப்பாருங்க.”
யாரும் எந்த பதிலும் சொல்லவில்லை. அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு சற்று அமைதியாக இருந்தார். பின் ஏதோ யோசித்தவராக கோபியைக் காட்டி “இவன் என்னப் பன்றான்” என்றார் ஐயப்பனிடம்.
“பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தான். இப்ப கொஞ்ச நாளா போல”
“என்ன வயசு?”
“பதினொன்னு இருக்கும்”
“பன்னெண்டு” என்றான் கோபி.
இருவரும் அவனைப் பார்த்தனர்.
“மணி நாளைக்குக் காலையில் ஊருக்கு போறான். கூட வேலைக்கு ஒரு பையன் வேணும்னு சொன்னான். இவன வேணா அனுப்பிடலாமா”
நாராயணி சட்டெனப் பதறினாள். “அய்யோ… எனக்குன்னு இருக்கறது இவன் மட்டும் தான், இவனையும் அனுப்பிட்டு, என்னால முடியாது. எதாவது செஞ்சி நான் என் புள்ளய காப்பாத்திக்கிறேன்.”
“உன் புள்ளய என்ன ஒரேடியாவா பிரிச்சி அனுப்பப்போறோம். இப்ப கொஞ்ச நாளுக்குப் போய் வேல செய்யட்டும். நீயும் வேலப்பாத்து எதாவது ஒரு வழிக்கு வந்துட்டா, அவனும் இங்க வந்து உங்கூட இருந்துடப் போறான். இப்ப இவன வெச்சிக்கிட்டு என்னப் பண்ணப் போற. மணி ரொம்ப நல்ல மனுஷன். உன் புள்ளயப் பத்திரமா பாத்துப்பான். அவனுக்கும் உலகம் தெரியட்டுமே.”
நாராயணி அழுதாள். கோபி எதுவும் புரியாமல் முழித்தவாறு இருந்தான். அவர் ஐயப்பனிடம் “சொல்லிப் புரிய வை. மணி நாளைக்குக் காலையில் போறதா சொன்னான். நான் அவங்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வெக்கறன். காலையில விட்டுல வந்து எதுவா இருந்தாலும் சொல்லு” என்று சொல்லிவிட்டு அவர் வேகமாக மறைந்தார். மீண்டும் குடிசை அமைதிக்குத் திரும்பியது. நாராயணி தன் மகனை இழுத்து அணைத்துக்கொண்டாள். ஐயப்பன் எதுவும் பேச விரும்பவில்லை. “சரி… விளக்க அணைச்சிட்டுப் படுங்க, காலையில பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டுப் படலை மூடிக்கொண்டு வெளியே சென்றார். சிறிது நேரத்தில் கோபி உறங்கிவிட்டான். நாராயணி இரவு முழுக்கத் தத்தளித்துக்கொண்டிருந்தாள். அவள் ஒரு முடிவு எடுக்கும் வரை அவளுக்கான இரவு நீண்டுகொண்டேயிருந்தது.
காலையில் நாராயணி கோபியிடம் பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்கு அவள் பேசுவது எதுவுமே புரியவில்லை. தன்னை இந்த ஊரிலிருந்து அனுப்புகிறார்கள் என்று மட்டும் புரிந்துகொண்டான். அவன் அம்மா அழ ஆரம்பித்தவுடன் அவனும் அழ ஆரம்பித்தான். ஆனால், தனக்குப் போக விருப்பமில்லை என்று அவன் சொல்லவில்லை. உண்மையில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. தான் எங்கே போகப் போகிறோம், தன்னை என்ன செய்யப் போகிறார்கள் என்று எதுவும். ஆனால், இனி அம்மாவுடன் இருக்கப் போவதில்லை என்பது மட்டும் அவன் அழுகையை அதிகப்படுத்தியது. அவன் தன் அம்மாவையும் உடன் வரும்படி அழைத்தான். அவள் மேலும் அழுதாள். பையில் துணிகளைத் திணித்துக்கொண்டு ஐயப்பன் கோபியை அழைத்தார்.
“கோபி, அம்மாகிட்ட சொல்லிட்டு வா போலாம்”
“அம்மா” என்றான் கோபி. நாராயணி கண்களைத் துடைத்துக்கொண்டாள். “போயிட்டு வா, தைரியமா இரு” என்றாள். ஐயப்பன் கோபியின் கைகளைப் பிடித்துக்கொண்டு வேகமாக வெளியேறினார். அந்த நாடகத்தருணத்தையும் அங்கு நிகழ்த்த ஐயப்பன் விரும்பவில்லை. இருவரும் போவதையே நாராயணி பார்த்துக்கொண்டிருந்தாள். அவர்கள் கண்களை விட்டு அகலும் வரைக் காத்திருந்தவள், அவர்கள் மறைந்ததும் ஓவென கதறி அழ ஆரம்பித்தாள்.
ஐயப்பன் ஊர்த் தலைவர் வீட்டிற்குச் சென்று விஷயத்தைச் சொல்லிவிட்டு கோபியை அழைத்துக்கொண்டு மணியின் வீட்டை நோக்கி நடந்தார். வழியில் கோபி வழக்கமாக விளையாடும் இடத்தில் அவனது நண்பர்கள் விளையாடிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்ததும் கோபி உற்சாகமானான். கூட்டத்திலிருந்து ஒருவன், “கோபி எங்கடா போற” என்று கத்தினான்.
“ஊருக்கு போறண்டா” என்று கோபியும் பதிலுக்குக் கத்திவிட்டுச் சட்டென நினைவிற்கு வந்தவனாய் ஐயப்பனிடம், “மாமா… எந்த ஊருக்கு போறோம்” என்றான்.
“பாண்டி டா”
“பாண்டியா”
“பாண்டிச்சேரி டா”
“அது வேற ஊருல, அங்க பேசறது எனக்கு எப்படிப் புரியும்”
“அதெல்லாம் சீக்கிரம் புரிஞ்சிடும், அதுவும் நம்ப ஊரு தான்டா”
“அது எப்படி நம்ப ஊரு ஆவும், நம்ப ஊருனா நம்பப் பாஷை தான பேசனும்”
“அங்கயும் நம்பப் பாஷை பேசுவாங்க”
“அப்படியா”
“ஆமா, பேசாமா வா”
கோபி குழப்பத்துடன் ஐயப்பனின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.
தொடரும்…