சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 47& 48

47) காற்றினிலே வரும் கீதம்

அந்தக் காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்களிடமிருந்து என்னைப்  பெண் கேட்டபோது , எனக்கு வீணை வாசிக்கத்  தெரியுமா என்று அப்பாவிடம் கேட்டார்கள். வீணை வாசிக்கத்  தெரியாது ஆனால் பாட்டுப் பாடத்தெரியும் என்று சொல்லிவிட்டார். எனக்கு பாட்டும்   பாடத்  தெரியாது . எந்தப் பாட்டைத் தேர்வு செய்து பாடுவது என்று விவாதித்தோம். காற்றினிலே வரும் கீதம் என்ற எம். எஸ் பாட்டைப்   பாடுவது என்று முடிவு செய்தோம். எனக்குத்தான் பாடவே வராதே .குரல் இழுத்துக்கொண்டே  போனது. இந்தப் பாட்டை கற்றுக் கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்தார்கள். அவர் வந்து இந்தப் பாட்டை எம். எஸ் இனிமையாகப் பாடியிருப்பார்; வேறு பாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்றார். அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. வரன் நிச்சயமாவது இந்தப் பாட்டில்தான் அடங்கியிருக்கிறது என்று அவர் நம்பினார் . அதனால் இந்தப் பாட்டைக்  கற்றுக் கொள்வது எனக்கு அவசியமாகிவிட்டது.. ஆசிரியர் ஒரு சந்தேகத்தைக்  கிளப்பினார். ‘காற்றினிலே வரும் கீதம்  ‘ பாடி முடித்ததும் இன்னொரு பாட்டைப்  பாடும்படி கேட்டால் என்ன செய்வது அதனால் ஒரு தெலுங்குக்கு கீர்த்தனையையும் கற்றுக் கொடுக்கிறேன் என்றார், ஆசிரியர். எனக்குப் பெரும் சோதனை ஆகிவிட்டது . தெலுங்கு  வார்த்தைகளை   மனப்பாடம் செய்து  ‘ சமாஜ வர கமனா ‘ என்று பாடுவது .பெரும்  துயரமாக இருந்தது. ‘ தெலுங்குப் பாடல் வரிகள் மறந்து போனாலும் எதையாவது இட்டுக்  கட்டிப் பாடிவிடு. அவர்களுக்குத் தெலுங்கு தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது. இடைவெளி மட்டும் விட்டுவிடாதே ‘ என்று  ஆசிரியர் எனக்கு அறிவுரை சொன்னார். என்னதான் பயிற்சி எடுத்துக் கொண்டாலும் பாட்டு எனக்குச் சரியாகப் பாட வரவில்லை என்பது எனக்கே தெரிந்தது.

பெண் பார்க்கும் நாள் வந்தது. என்னை உட்கார வைத்தாயிற்று. மாப்பிளை நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்தேன். அவர்தான் என்னைப்  பார்த்துக் கொண்டே  இருக்கிறாரே. பாட்டுப் பாடச்  சொன்னார்கள். நான் ‘காற்றினிலே வரும்  கீதம்’ பாட்டை முதலில்

பாடாமல் ‘ சமாஜ வர கமனா  ‘ பாட்டைப்  பாடினேன். இடையில் வார்த்தைகள் மறந்து போனபோது இட்டுக்  கட்டிப்  பாடினேன். மேலும் ஒரு பாட்டைப்   பாடும்படி அவர்கள் கேட்கவில்லை. பெண் பார்க்கும் படலம் முடிந்து அவர்கள் சென்றுவிட்டார்கள். ‘ காற்றினிலே வரும் கீதம் ‘ பாட்டை ஏன் பாடவில்லை என்று அப்பா திட்டிக்கொண்டே இருந்தார். ‘ நல்ல சம்பந்தம், பேங்க் வேலை இந்த மாப்பிள்ளை கிடைக்க வேண்டும் ‘  என்று  அப்பா புலம்பிக்கொண்டே இருந்தார். கடைசியில் மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து சாதகமான பதில் வரவில்லை.’ நீ அந்தப் பாட்டைப் பாடாததுதான் அனைத்துக்கும் காரணம் என்று அப்பா திட்டினார். என் வாழ்க்கையின் துரதிருஷ்டம். பாட்டுப் பாடச்சொல்லிக் கேட்காத தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும்  ஒரு அப்பாவிக்கு வாழ்க்கைப்பட்டு சரியான பொருளாதாரம் இல்லாத நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

பேங்க் மாப்பிள்ளை என்னைப் பெண் பார்க்க வந்த அன்று திட்டமிட்டபடி  ‘ காற்றினிலே வரும் கீதம் ‘ பாட்டைப் பாடாமல் ஏன் மாற்றி பாடினேன் என்று எனக்கு விளங்கவில்லை. அந்தக் கணம் எனக்கு தெலுங்குப் பாட்டைப்  பாட  வேண்டும் என்று ஏன் தோன்றியது என்றும் விளங்கவில்லை.அதனால்தான் எனக்கு பேங்க் மாப்பிளை கிடைக்கவில்லை என்று உயிரோடு இருந்தவரை அப்பா என்னைத்    திட்டிக் கொண்டே இருந்தார். அந்தப் பாட்டு  எதோ ஒரு வகையில் என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டு விட்டது. நான் தனியாக இருக்கும்போது ‘காற்றினிலே வரும் கீதம் ‘ பாட்டை  வாய் விட்டுப் பாடுவேன். ஆனால்  அந்தப் பாட்டு நான் பாடும்போது  சோக கீதமாக  மாறிவிடுகிறது .

48 ) கடல்

அந்தத் தொழில் அதிபர் வருகையை எதிர்பார்த்து இந்த கடற்கரைக்  கோவிலில் உட்கார்ந்திருக்கிறேன். என்னுடன் ஒரு வேலைக்காரப்   பெண், டிரைவர் மட்டும்தான் இருக்கிறார்கள். நான் அந்தத் தொழில் அதிபரை ரகசியத் திருமணம் செய்து கொள்ளக்  காத்திருக்கிறேன். அவர் சொன்ன நேரம் கடந்து விட்டது. அவர் வரவில்லை. இனி வரமாட்டார் என்று எனக்குத் தோன்றியது. வேலைக்காரப்  பெண்ணை அழைத்துக்கொண்டு வெளியேறினேன்.அடுத்த நாள் காலை அவருடைய அலுவலகத்திற்குச் சென்றேன். அவர் இருந்தார். அவருடன் சண்டை போட்டேன். ஏ சி அறை. நான் கத்தி ஓய்ந்து நாற்காலியில் சாய்ந்த பின்னர் அவர் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தார். பிறகு என்னை அணைத்து முத்தமிட்டார். நான் எதிர்ப்பு ஏதும் காண்பிக்கவில்லை. ‘ என்னை கல்யாணம் ஏதும் செய்து கொள்ளாமல் வைப்பாட்டியாக வைத்துக்கொள்ளத்தானே உங்களுக்கு விருப்பம்’ என்றேன். ‘ கோவில் வேண்டாம் சாமி படத்திற்கு முன் உனக்கு தாலி  கட்டி ஏற்றுக்கொள்கிறேன்’ என்றார். ‘ நான் ‘சரி’ என்றேன். அவர் எனக்காக ஒரு பங்களாவை வாடகைக்குப் பிடித்தார். சாமி படம் முன்பாக  .  தாலி கட்டினார். நாங்கள் அங்கே  வாழ்ந்தோம்.

உண்மையில் நான் அந்தக் கடற்கரைக்  கோவிலை விட்டு  வெளியேறவில்லை. எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது, அந்த தொழில் அதிபர் என்னை நம்ப வைத்து ஏமாற்றுகிறார் என்று நினைத்தேன். எனக்கு என்று என்னிடம் அன்பு செலுத்த யாருமில்லை. என் சதைதான் அவருக்கு முக்கியம். பிறகு என்னைத் தூக்கி எறிந்துவிடுவார். அவர் என்னை இப்படி ஏமாற்றுவது இது இரண்டாவது தடவை . அவரை விட்டால் எனக்கு வேறு வாழ்வில்லை என்ற அகந்தையில் அவர் இருக்கிறார். இந்தக் கோவில் கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவில்    கடலுக்குள் உள்ள பெரிய பாறையில் கட்டப்பட்டிருக்கிறது . நான் பாறையில்  கடல் அலைகள் மோதுவதைப்   பார்த்துக் கொண்டிருந்தேன். மனதில் ஒரு கணம் பெரியவெறுமை கவிழ்ந்து இருட்டானது. அடுத்த கணம் கடலுக்குள் நான் பாய்ந்தேன்.