1.

அப்பாவின் கைகள்

I

Dirty Male Hands After Hard Physical Work In A Black And White Shot Stock Photo - Download Image Now - iStockநீரில் மூழ்கியவை மட்டும் வாழும் குளமாக

மௌனத்தை வைத்திருக்கும் என் தந்தை

அவருக்கென்று தனித்த விருப்புகளின்றி

நகரும் மரத்தைப் போல இருந்ததை

யாரும் கற்பனை செய்து பார்த்ததில்லை.

குரலை அடிக்கோடு இடுவதற்காக

ஒருபோதும் சத்தமாகப் பேசியதில்லை

எனினும்மழைக்கு ஒதுங்குவது போல

எப்போதாவது அவரருகில் போவோம்.

II

ஒரு நாள் அவருடைய காப்பேறிய கைகளை விரித்தார்

சில சொற்கள் சொற்றொடர்கள் வேண்டுதல்கள்

கசங்கிக் கிழிந்த கனவுகள் இருந்தன

அதில் ஒரு வாக்கியத்தையேனும் வரைபடமாக்க

எவ்வளவு உழைக்க வேண்டும்?

அக்கைகளை இன்னும் உற்றுப் பார்த்தேன்

பத்து மெட்டு கிணற்றில் இறங்கும் வடகயிறு

இன்னும்சற்று உயரமாக இருந்தால் ஓங்கும் போது சூரியனை இடிக்கும் கடப்பாறை

பனங்கருக்கு காம்பு போட்ட சம்மட்டி

அழிஞ்சிமிறால் பின்னிய தட்டிகள் இருந்தன

இன்னும் உற்றுப் பார்த்தேன்

அந்தக் கைகள் மிருதுவான பாறைகள்

கையிலிருந்த ஒரு தூறு நெற்கதிரைக்கை மாற்றியதும்

கையால் நுமிட்டி : ஊதி ஒரு வாயளவு அரிசி தந்தார்

கண்ணாடியை பார்த்து தொப்பி அணிந்து கொள்வதுபோல

சுவைநெல்தாளின் வாசத்தோடு இருந்தது.

அப்பா என்று உச்சரித்தால்

இப்போதும் அதே சுவை.

2.

அரை இனிப்பில் அரை புளிப்பில் ஒரு பாடல்

என் தந்தை ஒரு பாடலுக்காக

பகல் முழுவதும் உட்கார்ந்திருப்பார்

மகிழ்ச்சியானபேயின் அளவிலும்

வீங்கியசோகத்தின் அளவிலும்

சமகனமாக இருக்கும் சொற்களைச் சேகரிப்பார்

அவரின் எடையைப் பூஜ்யமாக உணரும் நேரத்தில் பாடுவார்

பிடுங்கிய கலக்காய் செடியிலிருந்து உதிர்வதுபோல

பாட்டிலிருந்துமண் உதிரும்

அப்போதுஇனிப்புக்குப் பக்கத்தில் இருக்கும்

பழுத்த சிறுநெல்லிக்காய் ஒன்றை அம்மா எனக்குத்தருவாள்

உலக உருண்டை போல வாயில் உருட்டுவேன்

உச்சஸ்தாயிபொழுதில் அழுந்தகடிக்கும் போது

அரை இனிப்பு அரை புளிப்பில்

ஒரு பாட்டைநான் மட்டும்பாடுவதை அம்மா அறிவாள்.

3.

Lexotan 12ம்~காந்தியாரும்

Bromazepam Addiction | UK Rehabமனநலமருத்துவர் என்னிடம் கேட்டார்:

உங்கள் மூளையில் இருக்கும் அனைத்தையும் சொல்லுங்கள்.

நான் கஷ்டப்பட்டேன்: நான் அமைதியாக இருந்தேன்.

அவர் மீண்டும் கேட்டார்:

நீங்கள் இப்போது என்ன நினைக்கிறீர்?

கடவுளையும்,

பிரதமரின் உடை அலங்காரத்தின் ஒரு பகுதியையும் நினைத்துக் கொண்டிருந்தேன்-

ஆனால் திடீரென காந்தியிடமிருந்த காகாகலேல்கரின் கைத்தடி ஞாபகம் வந்தது.

அடுத்து கேட்டார்: எதைப் பற்றி கவலைப்படுகிறீர்?

இந்திய நகரங்களின் பழைய பெயர்களுக்கும் எனக்குமான தூரம் குறித்து கவலைப்படுகிறேன் என்பதை மறைத்து

இரண்டு நதிகளுக்கு இடையேயான குறைந்த தூரம் கண்ணீர் வழியும் இரு விழிகளுக்கு இடையேயானது என்றேன்.

அவர் உத்திரபிரதேசத்தில் வீடுகளை இடித்த JCB போல மூச்சு விட்டார்.

எனக்குக் குழப்பமாக இருந்தது.

கண்களை மூடும் போது உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவரை ஒருவேளை கண்டுபிடிக்கலாம் என்றார்.

கண்களை மூடினேன்

கல்கத்தாவின் ஒரு தெருவில்

காந்தியின் ஒரு துளி கண்ணீர் உலர்ந்த ஓர் இலையின் மீது விழுந்தது**.

மருத்துவர் சொன்னார்:

யாரையும் அவர்களின் அழுக்கு கால்களால் உங்கள்மனதில் நடக்க விடாதீர்*.

காந்தியின் குரல் அவருக்கு எப்படி வந்தது?

எனக்குப் புரியவில்லை.

காந்திஒரு பாதி மனநல மருத்துவர் மேலும் அவர் என் காதில் சொன்னார்

இந்த ஆண்டிலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத இரண்டு நாட்கள் உள்ளன:

நேற்று மற்றும் நாளை*.

நான் கண் விழித்து நிமிர்ந்தேன்.

எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது*என்ற

சுவரில் இருந்த நாட்காட்டியைப் பார்த்தவாறே

மருந்து சீட்டைப் பார்த்தேன் Lexotan 12 , காந்தி என்று எழுதி இருந்தது.

( *  காந்தியடிகள்எழுதியவை

** 14.8.1947 அன்று நடந்த நிகழ்வு )

4.

நியூட்டனின் பாதி காதலி

அவ்வப்போது காலம்

அந்த ஜன்னலுக்கு எதிராகக் கூழாங்கற்களை வீசியது

ஆய்வகத்தை எரித்த டயமண்ட் நாய் ஆறாவது கூழாங்கல்*

முன்புஆப்பிள் பூக்கள் விழும்போதும் நியூட்டன் அதே சன்னலோரம் இருந்தார்.

ஒரு கன்னியாஷ்திரியுடனான அவரின் loose relationship போல*

மனதால் தண்ணீரை உருவாக்க முடியும் என்றால் தாகம் இன்னும் கொஞ்சம் மோசமாகும்

மேலே உள்ளது ஒரு கருதுகோள்.

கண்களில் ஊசியை அவரே குத்திய பிறகு*

கிட்டத்தட்ட சமமான மனநிலையுடன் இருந்தாலும்

ஒவ்வொருகாதலர் தினத்திலும் பூக்கள் வாங்கக் காத்திருக்கும் அழகான வரிசைகளைப் பாராமல் கடந்தார்

நமது கைகள் கால்கள் அல்லது உடைகள் போன்ற நம்பிக்கையாக ஆய்வகத்தையே நம்பியவர்

எப்படி 57பாவங்களைச் செய்திருப்பார்?*

செய்திகளை வடிகட்டுவதற்கும் அவற்றை நம்புவதற்கும் ஓர் அழகான மற்றும் வசதியானஅடுத்த தடம் எங்கே இருக்கும்?.

அல்லது வரலாறு எப்போது கணக்கிடப்படும்?  என்ற எதுவும் தெரியாத அவரின் இரண்டு பிறந்தநாளுக்கும்* வாழ்த்து சொன்னேன்

ஆற்றின் மீதிருக்கும் பாலமாக

நாங்கள் இருவரும் கை குலுக்கிக்கொண்டோம்

ஜூலியன் காலண்டரில் அவரும்

கிரிகோரியன் காலண்டரில் நானும் நின்று.

(* நியூட்டன் வாழ்வில் நடந்தவை )

5.

இனி

 

ஒரு மலை

பனிக்கட்டியாகி உருகப் போகிறதென்றால்

அதற்கான கரையைக் கட்டுவதற்கு

எங்கள் பெற்றோர்கள் தயாராக இருக்கிறார்கள்

அதோ பாருங்கள் அவர்கள் கையில் மண்வெட்டி கடப்பாரை.

அவர்களுக்கான தினக்கூலியை

நீங்கள் பார்க்கும் புதுப்படத்திற்கான ஒரு டிக்கட் விலையைவிட

அதிகமாகக் கொடுங்கள்

எப்போதும் எங்களால்

ஏக்கமாகவோ அல்லது சோகமாகவோ இருக்க முடியாது.

6.

அவளது வெள்ளைக் கோட் தும்பைப்பூவிலும் வெண்மை

செடி முழுவதும் மருத்துவகுணம் கொண்ட தும்பை பூ !!வீட்டின் உள்ளே வந்த வெயிலை அப்பா ஒருபோதும் பார்த்ததில்லை

அவர் சொந்த காயங்களை மதிக்காமல்

மழையிலும் வெளியிலும் எறவானத்துக்கு கீழே தூங்கி எழுவார்.

அதே வெயிலை முப்பட்டகத்தில் செலுத்தி

ஏழு வண்ணங்களின் நிறப்பிரிகையைப் பார்த்த நான்

அதை பாட நோட்டில் வைத்து மூடினேன்

என் சொந்த காயங்களை ரசித்தேன்.

இன்று என் மகள் வெளியில் செல்லும்முன்

தனது வெயில் தடுப்பு முகப்பூச்சில் SPF50 இருக்கிறதா என்று சோதிக்கிறாள்

பிறரது காயங்களுக்கும் அவளிடம் மருந்து இருக்கிறது.

வழியில் ஒருவர்

தாத்தாவின் பெயரைச் சொல்லி

அவளை யாருக்கோ அடையாளம் காட்டுவதை

நான் சிரித்தபடி வேடிக்கைப் பார்க்கிறேன்.

அவளது வெள்ளைக் கோட் தும்பைப்பூவிலும் வெண்மை.

7 .

வாய்ப்பு

ஓரங்களுக்கு அப்பால் எதுவுமே இல்லை என்பது போல

உங்கள் தெருவை எல்லா நாளும் அவர்கள் துப்புரவு செய்கிறார்கள்

உங்களிடம் இருந்து ஒருநாளும் ஒரு கையசைப்பு இல்லை

கைகளைப் பூங்கொத்தாக மாற்றும் வாய்ப்பை

ஏன் இத்தனை நாளாகத் தவறவிட்டபடி இருக்கிறீர்கள்?.

8.

உரையாடல்

இந்தத் தெரு முக்கில் எப்போதாவதுதான்

யாராவது வருவார்கள்

அதுவும் அவசரமாகச் செல்லும் போது

அறுந்துவிடும் செருப்போடு.

தூக்கியெறியும் மதிப்பிலிருந்த செருப்பை

மீண்டும் ஆயிரம் ரூபாயாக மாற்றியதும்

இருபது ரூபாய்கூலி தருகிறீர்கள்.

அவன் குடும்பத்தைப் பற்றி

அவன் குழந்தைகளைப் பற்றி

அவன் மதிய உணவு பற்றி நாலு வார்த்தை உரையாடுங்கள்

அவன் எந்த பதிலும் பேசாத வெயிலோடும் காற்றோடும்

காலையிலிருந்து பேசிக்கொண்டிருந்தான்.