பூங்காவில் புல் வெட்டுகிறான்
புல் வெட்டும் இயந்திரத்தால்
புற்களின் மேற்பரப்பை
சீவிக்கொண்டிருக்கிறான்
அறுபடும் புற்களின் பச்சைய வாசனை
நாசியைத் துளைக்கிறது
புல்வெட்டும் இயந்திரம்
கண்முன்னால் திடீரென
ஒரு புல்டோஸராக மாறுகிறது
அது பிரமாண்டமான சக்கரங்களால்
உருளத் துவங்குகிறது
புல் வெட்டுபவனைக் காணவில்லை
ஆனால் புல்டோஸர் மேல்
பூதம் ஒன்று அமர்ந்து செலுத்துகிறது
பச்சைய வாசனைக்குப் பதில்
இப்போது ரத்த வாசனை
புல்டோஸர் இப்போது
தேர்ந்தெடுத்த வீடுகள் மேல்
ஊர்ந்து செல்கிறது
அந்த வீடுகள்
சீட்டுக் கட்டுகள்போல சரிகின்றன
எங்கும் புழுதி பறக்கிறது
செம்மண் நிற புழுதி
காவி வண்ணப் புழுதி
இடிபாடுகளில்
நாட்டுத்துப்பாக்கிகள்
நடப்பட்டு கண்டெடுக்கப்படுகிறன
இதெல்லாம் எப்போதும் நடக்கும் நாடகம்தான்
அந்த வீட்டின் மகள் கூறுகிறாள்
’’நாங்கள் துப்பாக்கிகளை
திரைப்படங்களில் மட்டும்தான்
பார்த்திருக்கிறோம்
எங்கள் இடிக்கப்பட்ட வீட்டில்
எங்கள் பாடப்புத்தகங்களும்
சான்றிதழ்களும்
தொழுகை விரிப்புகளும்தான் இருந்தன’’
அஃப்ரீன் பாத்திமா
புல்டோஸர் முன் நின்று முழங்குகிறாள்
‘எங்கள் வீடு இடிக்கப்பட்டது
ஒரு பழிவாங்கும் செயல்
அநீதியே இங்கு சட்டமாகும் எனில்
எதிர்ப்பு எங்கள் புனிதக் கடமையாகும்’
அவளும் இந்தியாவின் மகள்தான்
ஹிஜாப் உரிமைக்காக முழங்கிய
முஸ்கானும் இந்தியாவின் மகள்தான்
அஃப்ரீன் பாத்திமாவுக்காவும்
முஸ்கானுக்காகவும் நிற்போம் என
முழக்கங்கள் பரவுகின்றன
நீதிக்காக நிற்பவர்கள் குரல்கள்
இன்னும் முற்றாக மரித்துபோய்விடவில்லை
நீதிக்கான போரில்
மரித்துபோகிறவர்கள் நடுவே
நீதிக்கான குரல்கள்
இன்னும் மரிக்காதிருக்கின்றன
புல்டோஸர் உற்சாகமுடன்
வரலாற்றின் பக்கங்களில் முன்னேறுகிறது
பாடப்புத்தகங்களின் மீது,
அரசியல் சட்டத்தின்மீது,
நீதிமன்றங்களின்மீது,
மசூதிகளின்மீது,
வரலாற்றுச் சின்னங்களின் மீது,
இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும்
பண்டிகைகளிலும் திருவிழாக்களிலும்
பரஸ்பரம் பிணைந்து நின்ற
மகத்தான அன்பின்மீது,
துலுக்க நாச்சியார்களின்
வழித்தடங்கள்மீது,
கபீரின் பாடல்கள்மீது,
ஆயிரம் கிளைகளால் பரந்து கிடக்கும்
இந்தப் பண்பாட்டின் ஆலமரத்தின்மீது,
எளிய மனிதர்கள் சட்டத்தின் மேல்
கொண்ட நம்பிக்கையின்மீது,
அசோகரின் தர்மச் சக்கரத்தின் மீது,
நான்கு சிங்கங்கள் காட்டும் நீதியின்மீது
’ஈஸ்வர அல்லா தேரே நாம்’
என்ற பிரார்த்தனையின்மீது
புல்டோசர் முன்னேறிச் செல்கிறது
எங்கும் செம்மண் நிற புழுதி
புல்டோஸர்களுக்கு ஒரு தத்துவம் இருக்கிறது
அது ஒன்றை அடியோடு நீக்கும்போது
சமரசமற்ற ஒரு வழிமுறையை மேற்கொள்கிறது
ஹிட்லரின் ஆஷ்ட்விச் முகாம்கள் போல
ஒரு முழுமையான வழிமுறை அது
புல்டோஸர்கள் சொல்கின்றன
‘போராடாதே
மீறினால் உன்னை லத்தியால் அடிப்போம்
ஜாமீன் இன்றி உன்னைச் சிறையில் சாக விடுவோம்
துப்பாக்கியால் சுடுவோம்
உன் சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்
உன் புகைப்படத்தை கலவரக்காரர்கள் என
முச்சந்தியில் பதாகைகளாக வைப்போம்
உன் வீட்டை இடிப்போம்’’
புல்டோஸர்கள்
கண்மூடித்தனமாக முன்னேறுகின்றன
அவை எதைப்பற்றியும்
கவலைப்படுவதில்லை
தன் சக்கரங்களுக்கு கீழ் இருக்கும் எதன்மீதும்
அவை கருணைகாட்டுவதில்லை
புல்டோஸர்கள்
சிந்திக்கும் திறன் அற்றவை
அவை தன் பாதைகளை
ஒருபோதும் மாற்றிக்கொள்வதில்லை
நிச்சயித்த பாதையில்
எல்லாவற்றையும் தகர்த்துக்கொண்டு
அவை முன்னேறுகின்றன
பெரும் பாறை ஒன்றில் முட்டிக்கொண்டு
புல்டோஸரின் இரும்புப் பற்கள் உடையும்வரை
அதன் பயணம் எங்கும் நிற்கப்போவதில்லை