ராஜா கைய வச்சா-13
கலை என்றால் என்ன என்பதற்கு யாரும் சரியான விளக்கம் இதுவரை அளித்ததில்லை. Art என்னும் சொல்லிருந்து தோன்றிய artifact என்னும் சொல்லுக்கு மனிதனால் செய்யப்பட்டது என்று பொருள். ‘கலை என்பது உண்மையை உணர்வதற்காகச் செய்யப்படும் பொய் ‘என்று பிக்காசோ ஒருமுறை கூறியுள்ளார். ஆக இல்லாத ஒரு விஷயத்தை உருவாக்கி இருக்கும் ஒரு விஷயத்தையோ உணர்ச்சியையோ உணர்த்துவதே கலை.
இதில் இலக்கியத்தில் கவிதைகளில் வார்த்தைகள் மூலமும் ஓவியத்தில் கோடுகள் மற்றும் வண்ணங்களை வெளிப்படுத்தியும் உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துவது போல் இசை ஒலி மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை.
இலக்கியம், ஓவியத்தை விட இது தன் அமைப்பிலேயே மிகவும் வடிவ நெகிழ்ச்சி தன்மை கொண்டது (Abstract). அதாவது ஒரு உணர்வை , கருத்தை எழுத்துக்கள் மூலமாகச் சொல்வதை விட கோடுகள் வண்ணங்கள் மூலம் சொல்வதைவிட இசை மூலம் உணர்வை எழுப்புவது கடினம். இந்த ஒலியமைப்பு இந்த உணர்வைத் தூண்டும் என்பதற்கு எந்தவித இலக்கணமும் இல்லை. கேட்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உணர்வு தோன்றும். நவீனத்துவ ஓவியத்தை விடவும் நெகிழ்வுத்தன்மை உடையது.
அதே நேரம் பிற கலைகளைவிட இசைக்கலைஞராக ஆவதற்குத் தொழில் நுட்ப அறிவும் பயிற்சியும் அதிகம் தேவை. இசையைக் குறிப்புகளாக மாற்ற, காலப் பிரமாணத்துடன் இசையை ஒருங்கிணைக்க தொழில்நுட்ப அறிவு தேவை. எத்தனையோ பிரமாதமான இசைக்கலைஞர்கள் ,இசையறிவுடையவர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் தலைசிறந்த இசையமைப்பாளரானவர்கள் மிகச்சிலரே. ஒரு அபார திறமையான இசைக்கலைஞன் மிகக் கடினமாக பயிற்சி செய்து கடினமான இசைத் துணுக்கைப் பிரமாதமாக வாசிக்கலாம். ஆனால் அதைச் செயல்திறன் அல்லது தொழில்நுட்பம் எனச் சொல்லலாமே தவிர கற்பனைத்திறன் ( க்ரியேட்டிவிட்டி) எனச் சொல்ல முடியாது. இசையில் அறிவுத்திறனோடு கற்பனைத் திறனும் இருப்பவர்களே ஆகச்சிறந்த இசையமைப்பாளர் ஆக முடியும்.
அப்படித் தொழில் நுட்பமும் கலைமனமும் ஒருங்கே கூடிய ஒரு மேதமை இளையராஜாவினுடையது.
தொழில்நுட்பரீதியாக நம் நாட்டுச் செவ்வியல் இசையைவிட மேற்கத்திய செவ்வியல் இசை அதிக நுட்பங்களைக் கொண்டது. குறிப்பாக ஆர்கஸ்ட்ரா எனப்படும் பல்வேறு இசைக் கருவிகளை ஒருங்கிணைப்பது மற்றும் நொட்டேஷன் எனப்படும் இசைக் குறிப்புகள் எழுதுவது ஆகியன. நம் நாட்டுச் செவ்வியல் இசையில் பாடல்வரிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றன. அதனாலேயே குரலிசைதான் முக்கிய இடம் வகிக்கிறது. மேற்கத்திய செவ்வியல் இசையில் குரலிசை இல்லாமலேயே இசைக்கருவிகளுக்கான இசைத் தொகுப்புகள் ,சிம்பொனிகள் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளன.
மேற்கத்திய இசை நுணுக்கங்களை நன்கு அறிந்தவரான இளையராஜாவுக்கு மொசார்ட், பீத்தோவன்,பாக் போன்ற மேற்கத்திய இசைமேதைகளின் இசையமைப்பு மிகப் பெரும் ஆதர்சம். அந்த பாணியில் அவர் திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போது பாடல் வரிகளுக்கும் குரலுக்கும் இருக்கும் அதே முக்கியத்துவத்தை இசைக் கருவிகளுக்கும் கொடுப்பார். அதனால்தான் அவரது பல பாடல்களின் இசைத் துணுக்குகளும் அவரது ரசிகர்களுக்கு அத்துப்படியாக நினைவிருக்கும். பாடலின் இடையில் வந்த ஒரு இசைத்துணைக்கைக் கேட்டதுமே என்ன பாடல் என நம்மால் கூற முடியும்.
அப்படி அவர் இசையமைத்த ஆகச்சிறந்த இசை ஒருங்கிணைப்புகள் கொண்ட பாடல்களுள் தளபதி திரைப்படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி ‘என்னும் பாடல். 1991 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்த திரைப்படத்தைக் காலை நான்கு மணியிலிருந்து காத்திருந்து நெல்லை பேரின்பவிலாஸ் தியேட்டரில் பார்த்த போதுதான் முதன்முதலில் இப்பாடலைக் கேட்டேன். அந்த பிரமிப்பு இன்னும் நினைவிருக்கிறது.
பாடல் போர்க்களத்தின் மத்தியில் காதலின் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்று பழந்தமிழ் திணை மரபு கூறுவதுபோன்ற சூழலின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. பாடல் ஆரம்பிக்கும்போது மெல்லிதாக மனதை உலுக்கும் குழலைத் தொடர்ந்து வயலின்கள் மெதுவாக ஆர்ப்பரிக்க போரின் எக்காளம்போல் ட்ரெம்பெட்டுகளும் வயலின்களும் முழங்குகின்றன. இவற்றின் ஊடேயே லயமாகக் குதிரைக் குளம்புகளின் ஓசை . மேற்கத்திய செவ்வியல் இசையமைப்பில் பாடல் தொடங்குகிறது.
பாடலுக்கு இசைஞானி தேர்ந்தெடுத்த ராகம் கல்யாணி. ஜனனி ஜனனி( தாய் மூகாம்பிகை), நதியில் ஆடும் ( காதல் ஓவியம்) அம்மா என்றழைக்காத( மன்னன்) எனப் பல்வேறு பாடல்களில் பிரித்து மேய்ந்திருக்கும் இந்த ராகத்தை முற்றிலும் வேறு ஜானரில் மேற்கத்திய பாணியில் இப்பாடலில் பயன்படுத்தி இருக்கிறார். சில இடங்களில் ராகத்தின் இலக்கணத்தையும் லேசாக மீறுகிறார்.
வழக்கம்போல் தனது படையில் இருப்பவர்களில் குரல் மூலம் பாவங்களை அதிதுல்லியமாகத் தரக்கூடிய பாடகர் இணையான எஸ்பிபி- ஜானகியை இப்பாடலுக்குப் பயன்படுத்தி உள்ளார். பல்லவியின் ஒவ்வொரு வரியையும் குழந்தைபோல் குழல் பின்தொடர்கிறது. பாடலின் முதல் சரணத்துக்கு முந்தைய இண்டர்ல்யூடைக் கேளுங்கள். பல்வேறு வகையான ட்ரம்ஸ் ஒலிக்க, வயலின்கள் முழங்க போரின் சூழலை நமக்கு ஒரு மினி சிம்பொனியாக அளித்திருக்கிறார். சட்டென்று அதிலிருந்து மாறி மெல்லிசையாய் கல்யாணி ராகத்தில் ” வாய்மொழிந்த வார்த்தை யாவும்” எனச் சரணத்துக்குப் போகும் விந்தையும் நடக்கிறது. இரண்டாவது இண்டர்ல்யூடிலும் அப்படித்தான் . போர் முரசுபோல் ட்ரம்ஸ் ஒலிக்க வயலின்கள் ,ஹம்மிங் துணையோடு இறுதியில் ஆம்புலன்ஸின் சைரன் ஒலிபோல் வயலின் ஒலிக்கப் போரின் கொடூரச் சூழலை நமக்கு இசையிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். பிற்காலத்தில் சிறைச்சாலை போன்ற படங்களில் ஹங்கேரிய இசைக்கலைஞர்களை வைத்து இதே போன்ற இசையமைப்பை அளிப்பதற்கு அச்சாரமாக அமைந்திருக்கிறது இப்பாடல். வன்முறையையும் விரகத்தையும் பிரிவுத்துயரையும் வேதனையையும் இசை மூலமாக துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
நினைத்துப்பாருங்கள் ! வழக்கமாகப் பாடலின் மெட்டை இசையமைப்பாளர் முடிவு செய்வார். அதன் பின் பாடல் ஒலிப்பதிவின் போது பாடலுக்கான பல்வேறு இசைக்கருவிகளையும் வாசிக்க வைத்து ஒத்திகை பார்த்து இசையமைப்பாளரது உதவியாளர்கள் அந்தந்தக் கருவிகளுக்கான குறிப்புகளைக் கொடுப்பார்கள். இதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அதன் பின் ஒலிப்பதிவு நடக்கும். ஆனால் இசைஞானி எல்லா இசைக் கருவிகளுக்குமான நோட்ஸையும் மனதிலேயே வாசித்து அரை மணி நேரத்தில் எழுதிக் கொடுத்துவிடுவார். இந்த மைக்ரோ வினாடி இந்த இசைக் கருவி என்பது முதற்கொண்டு துல்லியமாக வந்து விழும்.
இந்தப் பாடல் மும்பையில் ஒலிப்பதிவானது. வழக்கமாக அரைமணி நேரம் எடுத்துக்கொள்ளும் இளையராஜா இந்தப் பாடலுக்குக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொண்டார். ஆம்! முக்கால் மணி நேரம்! இத்தனை இசைக் கருவிகளுக்குமான நோட்ஸை எழுத அவ்வளவு நேரம்தான். பாடல் ஒலிப்பதிவு முடிந்ததும் பிரமிப்பில் அங்குள்ள இசைக் கலைஞர்கள் எழுந்து நின்று கைதட்டினார்களாம்.
வாலியின் வரிகளும், சந்தோஷ் சிவனின் ஒலிப்பதிவும் மணிரத்னத்தின் இயக்கமும் இசையோடு துணைசேர்ந்து பாடலை அழியாப் புகழ் பெற வைத்திருக்கின்றன.
பலமுறை கேட்டிருப்பீர்கள்.இப்போது மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
- ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
- இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
- கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்
- பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
- "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
- “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
- 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
- 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
- என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
- இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்