ராஜா கைய வச்சா
இன்று 77 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
இன்று முகநூல் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் ராஜாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர் பலர். தங்கள் வாழ்வின் மகிழ்ச்சி, சோகம், ஏமாற்றம் , இழப்பு, உற்சாகம், காதல், நட்பு, உறவு, பிரிவு என எல்லாத் தருணங்களுக்கும் சாட்சியாக இருந்ததாக இசைஞானியின் இசையைப் பலரும் உணர்வதை வெளிப்படுத்தியுள்ளனர்.
“பல நாட்கள் விடுதி ,லாட்ஜ் என பல நாட்கள் விடுதி ,லாட்ஜ் என இருந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் ஒரு உணர்வு தோன்றுமே
கடும் வெயிலில் அலைந்துவிட்டு ஏசி அறைக்குள் வந்ததும் ஒரு நிம்மதி தோன்றுமே
பளபள ஜிகுஜிகு ஆடைகள் கோட் சூட், பட்டுப்புடவை எல்லாம் கட்டிக் கொண்டு விழா முடிந்ததும் வேட்டி, நைட்டிக்கு மாறும்போது ஒரு அமைதி தோன்றுமே
விருந்தில் பேர் தெரியாத உணவுகளையெல்லாம் வாயில் திணித்துவிட்டு வயிறு குமட்டும் போது தயிர்சாதத்தையும் ஊறுகாயையும் சாப்பிடும்போது ஒரு சாந்தி தவழுமே
அதுதான் பல்வேறு சானல்களில் பல்வேறு பாடல்களைக் கேட்டுவிட்டு இடையே எங்கோ இவரது பாடலைக் கேட்கும்போது தோன்றும்”
என நான் என்னுடைய முகநூல் பக்கத்தில் நான் பதிவிட்டிருந்தேன்
அதே சமயத்தில் சிலர் தங்களது பதிவுகளில் ‘ இளையராஜாவை அளவுக்கு மீறித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் தமிழர்கள் ‘ எனப் பதிவிட்டுள்ளனர். அவர்களது கருத்து அது என நாம் எடுத்துக் கொண்டாலும் உண்மையிலேயே இவ்வளவு கொண்டாடப் படுவதற்குத் தகுதியானவர்தானா இளையராஜா என்று ஒரு பருந்துப் பார்வை பார்க்கலாம் என நினைக்கிறேன்.
இளைையராஜவுக்கு முன்னர் சீ. ஆர். சுப்பராமன், ஜி.ராமநாதன் , எம் எஸ் வி, கே.வி மகாதேவன் என எத்தனையோ இசை மேதைகள் தமிழ்த் திரையுலகில் கோலோச்சியிருந்தனர். இளையராஜாவின் சமகாலத்தில் சங்கர் கணேஷ், சந்திரபோஸ் எனப் பல திறமையானவர்கள் இருந்திருக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா தொடங்கி அனிருத்வரை ஏராளமான இளம் இசையமைப்பாளர்கள் இன்றைய காலகட்டத்தில் இசையமைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கும் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கெல்லாம் ராஜாவுக்கு இருக்கும் அளவுக்குக் காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கி உயிரையே விடும் ரசிகர்கள் குறைவுதான். இதற்கு என்ன காரணம்?
கலைஞர்கள் வெற்றி பெருவது திறமை மற்றும் உழைப்பின் கலவையினால். அறிவியல் போன்ற பிறதுறைகளில் திறமை என்பது தொழில்நுட்ப ரீதியான அறிவை மட்டுமே குறிக்கிறது. பல்லாண்டுகள் உழைத்துப் பல்வேறு நூல்களைப் படித்தால் நல்ல அறிஞனாகலாம்.
ஆனால் கலையில் இது போல் இல்லை . வெறும் அறிவு மட்டும்தான் தேவை என்றால் தமிழ் இலக்கண அறிவு இருந்த யாருமே பாரதி போல் கவிதை எழுதலாமே ? ஏன் முடியவில்லை? கலையைப் பொறுத்தவரை திறமை என்று சொன்னால் அறிவு மட்டுமல்ல கற்பனைவளம் என்ற ஒன்றும் தேவைப்படுகிறது.
அதற்காக அறிவு என்பதைப் புறம்தள்ள முடியாது. நல்ல மொழிவளம் இல்லாதவன் நல்ல கவிஞனாக முடியாது. இந்த இடத்தில் இளையராஜாவின் அறிவு மற்றும் கற்பனைவளம் இரண்டையும் பற்றிக் கொஞ்சம் பேசலாம். கவிதைக்கு மொழி அறிவுபோல் இசைக்கு இசை, ஒலி, தாளங்கள், ராகங்கள் போன்ற அறிவு. உலக இசை மரபுகளில் மேற்கத்திய செவ்வியல் இசை, இந்திய செவ்வியல் இசை வடிவங்களான கர்னாடக சங்கீதம் மற்றும் ஹிந்துஸ்தானி, தமிழரின் நாட்டார் வழக்கிசை எனப் பல்வேறு பாணி இசை வடிவங்களைப் பற்றிய நுண்ணிய அறிவு மிக்கவர் இசைஞானி. அந்த வெவ்வேறு இசைவடிவங்களைப் பல்வேறு புதுமையான வடிவங்களில் தந்தவர். அச்சு அசலான பந்துவராளி, மாயாமாளவகௌளை, சண்முகப்பிரியா போன்ற ராகங்களை மேற்கத்திய சிம்பனி பாணியில் பல்வேறு திரைப்படங்களிலும் ஹௌ டு நேம் இட் போன்ற ஆல்பங்களிலும் பயன்படுத்தி இருப்பார். சிம்மேந்திர மத்தியமம் என்னும் ராகத்தை ‘ ஆனந்த ராகம் கேட்கும் காலம்’ ( பன்னீர் புஷ்பங்கள்) என்று மாற்றியமைப்பார். வசந்தா ராகத்தை அந்தி மழை பொழிகிறது (ராஜ பார்வை) என வேறு பாணியில் தருவார்.
அதே போல் செவ்வியல் ராகங்களை நாட்டார் இசைவடிவிலும் சுவை மாறாமல் தருவார். சாரமதி ராகத்தைப் பாடறியேன் படிப்பறியேன் ( சிந்து பைரவி) என்றும் சண்முகப்பிரியா ராகத்தை ‘ ஊருவிட்டு ஊரு வந்து (கரகாட்டக் காரன்) என்று எளிமையாக மாற்றவும் முடியும். அதே போல் ரீதிகௌளை, கனகாங்கி, ராமப்ரியா, வாசஸ்பதி என எண்ணற்ற அபூர்வ ராகங்களைப் பயன்படுத்தி இருக்கிறார்.
ராகங்கள் மட்டுமல்ல . பல்வேறு வகையான தாளங்களையும் புதுமையான வகையில் திரைப்படங்களில் பயன்படுத்தியிருப்பார். ஐந்து தாள அளவுகளை வைத்து வரும் கண்டஜாதி என்னும் தாளத்தில் அமைந்த அழகுமலராட( வைதேகி காத்திருந்தாள்) பார்த்தவிழி பார்த்தபடி ( குணா) போன்ற பாடல்களையும் ஏழு தாள அளவுகளை வைத்து அமைந்த மிஸ்ர தாளத்தில் பொட்டுவைத்த ஒரு வட்ட நிலா (இதயம்), நதியில் ஆடும் ஓவியம் ( காதல் ஓவியம்) போன்ற ஏராளமான பாடல்களையும் உதாரணமாகச் சொல்லலாம்.
அதுவும் இனிமை கெடாமல்
பல இசையமைப்பாளர்களும் பாடல்களுக்கு இசை அமைக்கும் போதும், பின்னணி இசை அமைக்கும் போதும் அவர்களது உதவியாளர்கள் மூலம் பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கச் செய்து, மெருகேற்றி பின் அவற்றில் சிறந்த இசை வடிவங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான நோட்ஸ் என்னும் குறிப்புகளை எழுதிப் பின்னர் இசைக்கருவிகளை வாசிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்வார்கள். ஆனால் இளையராஜா அவர்கள் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கான வயலின், புல்லாங்குழல், கிதார், சிதார், கீ போர்டு எனப் பல்வேறு இசைக்கருவிகளுக்கான நோட்ஸ்களையும் தனது மனதிலேயே கற்பனை செய்து பார்த்து மளமளவென்று தாளில் குறிப்புகள் எழுதி இசைக் கருவி வாசிப்பவர்களிடம் கொடுப்பார். அதை அவர்கள் வாசித்தால் மைக்ரோவினாடி துல்லியமாக அந்தப் பாடல் வந்து விழும். இந்தத் திறமையை அவர் அருகில் இருப்பவர்கள் பலரும் கண்டு வியந்திருக்கின்றனர். அதுவும் அபார வேகத்தில். தளபதி படத்தின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி ‘ பாடலுக்கான மொத்த இசையமைப்பையும் முக்கால்மணி நேரத்தில் அமைத்துவிட்டாராம் .
இவையெல்லாம் அவரது இசை அறிவுக்குச் சாட்சிகள்.அதனால்தான் அவரை இசைஞானி என்கிறோம்
ஆனால் வெறும் இசை அறிவு மட்டுமல்ல அபாரமான கற்பனை வளமும் இருப்பதால் தான் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு சலிப்படைய வைக்காமல் இசையமைக்க முடிந்தது.
மேலும் உணர்வுகளை இசையாக மாற்றும் அபாரத் திறமை அவரிடம் இருந்தது. அதனால்தான் நாயகன், மௌனராகம், முதல்மரியாதை , காதலுக்கு மரியாதை என ஏராளமான திரைப்படங்களின் பின்னணி இசையைக் கேட்டதுமே நமது மனக்கண்களில் அப்படங்களின் காட்சிகள் விரிவடைகின்றன.
இளையராஜாவுக்கு முந்தைய காலகட்டத்தில் பாடல்கள் அவற்றின் இசைக்காக மட்டுமன்றி அவற்றின் வரிகளுக்காகவும், கருத்துக்களுக்காகவும் புகழடைந்தன. இளையராஜவின் பல பாடல்கள் இசைக்காகவே நினைவு கூரப்படுகின்றன. இது பாடலாசிரியர்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டது என்ற கூற்றில் உண்மை இருந்தாலும் பாடல்வரிகளே இல்லாமல் இசைக் கருவிகள் மூலம் இசைக்கப்பட்டாலும் ரசிக்கப்படுகின்றன. பாடல்களின் முன்னேயும் இடையிலயும்ம் வரும் ப்ரீலூட், இண்டர்லூட் போன்ற இசைக்கருவிகளின் இசையும் ஒவ்வொரு பாடலிலும் தனித்தன்மையோடு நினைவுகூரப்படுகின்றன. அந்த அளவுக்கு அவரது இசையின் ஒவ்வொரு அணுவும் ரசிகர்கள் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
தமிழர்கள் மட்டுமின்றித் தென்னிந்திய இசை ரசிகர்கள் பலரும் அவரை இசைஞானியாக மதிக்கின்றனர் என்பதை அவர் இசையமைத்த
பிற மொழிப் பாடல்களின் யூட்யூப் வீடியோக்களில் பிறமொழி ரசிகர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்களைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
வாழும் காலத்தில் ஒரு கலைஞனைக் கொண்டாடத் தெரியாத சமூகம் இது என்பது தமிழ்ச்சமூகம் மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு. அதுமட்டுமல்ல தகுதியே இல்லாத பலரும் குறுகிய காலத்திலேயே உச்சங்களை எட்டும் துறையான திரையுலகைச் சார்ந்தவர் இளையராஜா. திரைத்திறையில் இருக்கும் பலரும் தங்கள் துறைதாண்டி அரசியல், சமூகவியல் போன்ற பிற துறைகளிலும் தங்களைத் திறமையானவர்கள் போல் காட்டித் தங்களது ஆளுமையை விரிவாக்கிக் கொள்வார்கள் . ஆனால் இசைஞானியைக் கொண்டாடுபவர் எல்லோரும் அவரது இசை திறமைக்காக மட்டும்தான் கொண்டாடுகின்றனர். அப்படிப் பார்க்கும் பட்சத்தில்
என்னுடைய சிறிய இசை அறிவுக்கு எட்டிய அளவில் இன்னும் அதிகமாகவே கொண்டாடப்பட அவரது இசைக்கு நிச்சயம் தகுதி இருக்கிறது.
இளையராஜா அவர்களுக்கு மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
- ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
- சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
- கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்
- பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
- "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
- 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
- “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
- 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
- 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
- என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
- இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்