ராஜா கைய வச்சா 15

பெருங்கலைஞன் தீராத அதிருப்தி உடையவன். தனது எல்லைகளை விரிவாக்கிக்கொண்டே செல்பவன். இதுதான் எல்லை என அவன் ஒரு சாதனையை நிகழ்த்தி எல்லோரையும் வியக்க வைத்திருப்பான். எல்லோரும் நிறைவாக உணர்வார்கள்..அவனைத் தவிர. அவன் மனம் பரோட்டா சூரிபோல் மீண்டும் கோட்டை எல்லாம் அழிக்கச் சொல்லிப் புதிதாகப் போடச் சொல்லும். சாதனை என்பதும் போதையைப் போல. பழகிவிட்டால் அளவு கூடிக் கொண்டே போகும். ஆங்கிலத்தில் டாலரென்ஸ் ( Tolerance ) என்பார்கள்.

நாம் எதாவது சாதனை நிகழ்த்தினால் நமது மூளையில் சில ரசாயனங்கள் சுரக்கும். போதையிலும் அதே ஏரியாதான் . ஒரு கட்டத்துக்குமேல் இன்னும் இன்னும் என தீராப்பசியுடன் கேட்கும். அந்த பெரும்பசியைச் சுமக்க முடியாமலேயே பல கலைஞர்கள் கலைவாழ்க்கை முடிவடைந்துவிடும்.  தேடல் மட்டுமல்ல. அந்தத் தீரா தாகத்தைத் தணிக்கக்கூடிய திறமையும் இருந்தாலே அவன் பெருங்கலைஞன் ஆகிறான். கலை இலக்கியத்தில் மட்டுமல்ல, விளையாட்டுத்துறையிலும் இதே விதிகள்தான்.  வெற்றியின் சூத்திரம் வெகு எளிதாகக் கைவரும் என்றாலும் அதையும் தாண்டி எதாவது செய்தே ஆக வேண்டும் என்ற தாகம், உறுபசி உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். கலைப்பசி மணிமேகலையில் வரும் யானைத்தீ என்னும் கொடும்பசி போல். அதற்குப் பசியாற்றும் காயசண்டிகைகளே அசல் கலைஞர்கள்.

இசையிலும் அப்படித்தான். வணிகரீதியாக வெற்றி பெறும் சூத்திரம் எளிதாக வசப்பட்டது இசைஞானிக்கு. ஒரு மோகனம், ஒரு கல்யாணி என எடுத்துக் கொண்டு ஒரு மெட்டமைத்து அதற்கு இசைக்கருவிகளைச் சேர்த்து ஆர்கெஸ்ட்ரா அமைத்துவிட்டால் மினிமம் கேரண்டி எனக் குறைந்தபட்ச ஹிட் கொடுக்க முடியும். இதை அவர் தனது இடதுகையாலேயே செய்திருக்க முடியும். ஆனால் அதில் முழுநிறைவு அடையாமல் புதிது புதிதாக முயற்சிகளைச் செய்த்ய் பார்க்கத் தூண்டியது அவரது கலைத்தாகம்.

கர்னாடக இசையில் 72 விதமான தாய் ராகங்கள் இருக்கின்றன எனப் பார்த்தோம்.  ரி க ம த நி என்னும் ஐந்து ஸ்வரங்களிலும் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு இரண்டு இருக்கும். ஒரு தாய் ராகத்தில் இவை இரண்டில் எதாவது ஒன்றுதான் வரும் .அவற்றின் பல்வேறு வகையான சேர்க்கைகளால் 72 விதமான ராகங்கள் வருகின்றன என்பதையும் பார்த்தோம். உதாரணம் ஸ ரி1 க2 ம1 ப த1 நி 2 என்றால்  மாயாமாளவகௌளை,  ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 என்றால்  சங்கராபரணம். இப்படி அமைந்த ராகங்களில் ஒரு சில மட்டுமே கேட்க இனிமையாக இருக்கும். சில ராகங்கள் வெறும் ஏட்டு வடிவில் இருக்கும். தியரிட்டிக்கலாக.  பேருக்கு அதில் ஒரு பாடல் இருக்கும். கேட்பவர்களைச் சங்கடப்படுத்தும்.

அப்படி இந்த 72 மேளகர்த்தா ராக அமைப்பில் முதலாவதாக அமைந்த ராகம் கனகாங்கி என்பது.  பொதுவாக ஒரு ராகத்தில் ரி 1 யோ  ரி 2 வோ வந்தால் இன்னொரு ரி வராது . க ம த நி யும் அப்படித்தான். ஆனால் விதிவிலக்குகள் இருக்கின்றன. இந்தக் கனகாங்கி ராகத்தில்  க என்னும் காந்தாரமே வராது ரி2 வைத்தான் க வாகப் பயன்படுத்த வேண்டும் . அதே போல் நி வுக்குப் பதில்  த2. அதாவது ஸ ரி1 ரி2 ம 1 ப த1 த2 என வரும். இது போன்ற ராகங்களை விவாதி ராகங்கள் எனச் சொல்வார்கள். கேட்கக் கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் அவ்வளவாகப் பிரபலம் ஆகாத ராகம்.

இந்த ராகத்தில் திரைப்படப் பாடல் ஒன்றை அமைக்க முடியுமா?  அப்படி அமைத்தாலும் இனிமையாக இருக்க முடியுமா ? முடியும் என நிரூபித்திருக்கிறார் இளையராஜா. அதற்கான சூழல் அவருக்கு அமைந்தது சிந்துபைரவி (1985) திரைப்படத்தில். இசையிலேயே உழன்று கொண்டிருக்கும் நாயகன் இசை தொடர்பாக விவாதிக்கும் ஒரு இணையிடம் மனம் லயித்து அது மோகமாகி அந்த மோகத்தை வெல்ல முடியாமல்  ‘ மோகத்தைக் கொன்றுவிடு .அல்லால் எந்தென் மூச்சை நிறுத்திவிடு’ என பாரதி பாடியது போல் கடற்கரையில் அலைகளில் கொந்தளிப்பில் அகக்கொந்தளிப்பைப் பாடுகிறான்.

அதற்குக் கனகாங்கி ராகத்தை எடுத்துக் கையாள்கிறார் இசைஞானி. இதற்கு முன்னும் பின்னும் திரை இசையில் இந்த ராகத்தை யாரும் கையாண்டதே இல்லை.

பராசக்தியிடம் இறைஞ்சிக் கேட்பது போன்று அப்பாடலைப் பாடவேண்டும். ராகமும் கொஞ்சம் வில்லங்கமானது. கொஞ்சமும் சுருதி மாறக்கூடாது . அப்படியென்றால் யேசுதாஸைத்தானே அழைக்கவேண்டும். தாஸேட்டனின் கந்தர்வக்குரலில் இப்பாடலை அமைத்திருக்கிறார் ராஜா. பாடலில் நிறைய இசைக்கருவிகளெல்லாம் கிடையாது. வெறும் ஒரு தம்புரா, ஒரு மிருதங்கம். அவ்வளவுதான். ஆரம்பத்தில் கொந்தளிக்கும் மனதோடு போட்டிபோட்டுக் கொண்டு அலைகடல்கள் ஆர்ப்பரிக்கப் பாடல் ‘ தொம் தொம் ‘ என ஆரம்பிக்கிறது. சுருதியும் லயமும் கூடி வராமல் அலைபாய்ந்து தேடுவதுபோல் மனம் சுருதி சேராமல் தவிக்கிறது.ஆனால் யேசுதாஸின் குரல் சுருதியோடு பொருத்தமாக இணைந்து ஒத்திசைவில் ஒலிக்கிறது.

‘மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் ‘ என வைரமுத்துவின் வரிகளில் பாடல் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக தொம் தொம் என மிருதங்கம் ஒலிக்கத் தொடங்குகிறது. காப்பாய் தேவி எனச் சரணடையும்போது அங்கு மிருதங்கம் முழுவேகம் எடுத்து டேக் ஆஃப் ஆகிறது. சரி! அபூர்வமான ராகத்தில் மெட்டுப் போட்டுவிட்டோம் எனச் சும்மா விட்டுவிடவில்லை.

ராகம் ,தானம், பல்லவி என்று சொல்வார்கள். தொம், தானம், ஆனந்தம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி அந்த ராகத்தினைப் பாடுவதைத் தானம் ( தாளம் அல்ல) என்பார்கள். அப்படி இந்த ராகத்தில் அமர்க்களமான  தானம் ஒன்று அமைத்திருப்பார் இப்பாடலில். மிருதங்கத்தின் லயமும் குரலும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து அமைந்திருக்கும். பாடல் உச்சகட்டத்திற்குச் சென்று நாயகனின் உள்ளம் போல் தம்பூராவின் தந்திகளும் அறுந்து சுருதி இல்லாமல் போய்விடும். ‘மனிதன் எவ்வளவு மகத்தான சல்லிப்பயல் ‘ என எழுத்தாளர் ஜி.நாகராஜன் சொன்னது போல் அபாரத் திறமை கொண்ட ஒரு பாடகன் தனது கீழ்மையை நினைத்து நொந்து கொள்ளும் இப்பாடலை ஒரு மிகச் சிரமமான ராகத்தில் அமைத்து நாயகனின் திறமையை வெளிப்படுத்த இசை ஞானி நினைத்திருக்கலாம். ஆனால் திறமையை மட்டுமல்ல அவனது உணர்வு நிலையையும் மிகச்சரியாக அப்பாடல் கொண்டு வந்திருக்கும்.

மொத்தத்தில் அபூர்வமான ராகத்தில் மினி மீல்ஸ் விருந்தே கொடுத்திருக்கிறார் இளையராஜா. இதுபோன்ற முயற்சிகள் பொதுத்தளத்தில் பரவலாகப் பேசப் பட்டிருக்க வேண்டும். இன்னும்கூட அவ்வளவாகப் பேசப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.ஒருவேளை சிந்துபைரவி திரைப்படத்தில் அமைந்த பிற நல்ல பாடல்கள் , இப்பாடலின் புகழை மறைத்து விட்டனவோ என்னவோ!

  இதுபோன்ற கடினமான முயற்சிகளை எல்லாம் செய்ய அவரைத் தூண்டுவது அவரது தணியாத தாகமா அல்லது தனது திறமைமேல் கொண்ட அபார நம்பிக்கையா ? இரண்டும்தான் என நினைக்கிறேன். இதுமட்டுமல்ல இது போல் 72 ஆவது மேளகர்த்தா ராகத்தையும் ஓரிரு பாடல்களுக்குப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்தி இருப்பார். இன்னும் இதுபோல் பல அபூர்வமான ராகங்களை எல்லாம் பயன்படுத்தியிருப்பார். அவை பற்றி அடுத்த கட்டுரையில்

https://youtu.be/wqNWBnlB_C4

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
  2. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
  3. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
  4.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
  5. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
  6. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  7. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
  9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
  10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
  11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
  12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
  13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்