ராஜா கைய வச்சா -5

இசையை ஏமாற்றுவேலை என்று இசைஞானி அடிக்கடி கூறுவார். இதைக் கேட்பவர்கள் அவர் ஏதோ ஞானச்செருக்கில் (தலைக்கனத்தைத்தான் டீசண்டாகக் கூறுகிறேன்) கூறுவதாக நினைப்பார்கள். ஆனால் கொஞ்சம் இசை அறிந்தவர்களுக்குத் தெரியும் இசை என்பது ஒரு ஏமாற்று வேலைதான் என்று. இசையில் இருப்பது ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்கள்தான். ஏழுஸ்வரங்கள் என்றாலும் அதில் ரி க ம த நி என்ற ஐந்திலும்  தலா இரண்டிரண்டு இருக்கும்.ரி1ரி2 ,2 க1 க2 என்பது போல். ஆக மொத்தம் பன்னிரண்டு ஸ்வர நிலைகள். பியானோ அல்லது கீ போர்டைப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளை மற்றும் கருப்பு கட்டைகள் இருக்கும். ஒரு ஆக்டேவ் என்று சொல்லப்படும் ஸ முதல் நி வரை ஏழு வெள்ளைக் கட்டைகளும் ஐந்து கருப்பு கட்டைகளும் இருக்கும்.

எப்படி எத்தனை கோடி எண்கள் இருந்தாலும் 0 முதல் 9 ஆகிய பத்து எண்களை மட்டும் வைத்துக் கொண்டு குறிக்க முடியுமோ அது போல் எல்லா இசை ஒலிகளையும் இந்த ஏழு ஸ்வரங்களினால் (ப்ளஸ் ஐந்து) இசைக்க முடியும்.. மேற்கத்திய இசையானாலும் நாட்டுப்புற இசையானாலும் சரி ஹிந்துஸ்தானி இசையானாலும் சரி. எத்தனையோ மொழிகள் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒலி அடிப்படை ஒன்று போல்தானே இருக்கின்றன.

ஆக இந்த பன்னிரண்டு ஸ்வரங்களையும் வேறு வேறு கூட்டணிகளில் தருவதே ராகம் ஆகும். ஒரு ராகத்தில் ரி1 வந்தால் ரி2 வராது. அது போல்தான் க, ம, த, நி க்கும் (விதிவிலக்குகள் உண்டு .அவற்றைப் பின்னர் பார்க்கலாம்) . இப்படிப் பல்வேறு கூட்டணிகளில்  ஸரிகமபதநி என அமைப்பதைத் தாய்ராகம் என்கிறார்கள். மேளகர்த்தா ராகம் என்று கர்னாடக இசையில் சொல்கின்றனர். 72 மேள கர்த்தா ராகங்கள் இருக்கின்றன. முன்னர் தமிழிசை மரபில் பாலை என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஹிந்துஸ்தானி இசையில் தாட் என்கிறார்கள். மேற்கத்திய இசையில் ஸ்கேல் என்று சொல்வது ஓரளவுக்கு ராகம் என்னும் இலக்கணத்துக்கு நெருங்கி வரும். உதாரணம் மாயா மாளவ கௌளை என்பது 15 ஆவது மேள கர்த்தா ராகம் இதில் வரும் ஸ்வரங்கள் ஸ ரி1 க2 ம1 ப த 1 நி2 . அதே போல் சங்கராபரணம் என்பது 29 ஆவது மேளகர்த்தா ராகம். இதில் வரும் ஸ்வரங்கள் ஸ ரி2 க2 ம1 ப த2 நி2 .
இந்தத் தாய் ராகங்களிலிருந்து ஓரிரு ஸ்வரங்களை நீக்கி விட்டால் அது சேய் ராகம். உதாரணம் சங்கராபரணம் ராகத்தில் ம வையும் நி யையும் நீக்கிவிட்டால் அது மோகனம். இப்படி ஏழு ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதைத்தான் ஏமாற்று வேலை என்று இளையராஜா சொல்கிறார்.

ஆனால் அவர் தன்னடக்கத்துடன் சொன்னாலும் இது சாதாரண ஏமாற்று வேலை கிடையாது. பயங்கர கில்லாடித்தனமான வேலை. ஒவ்வொரு பாடலையும் புதிது புதிதான மெட்டில் போட வேண்டும். நினைத்துப் பாருங்கள் ஒரே மாவை வைத்துக் கொண்டு தோசையோ இட்லியோ போடுவது போல் இல்லை இது. ஒவ்வொரு தோசையையும் விதவிதமான வடிவத்திலும் விதவிதமான ருசியிலும் சமைக்க வேண்டும். ஒரு நாள் சுட்ட தோசை போல் இன்னொரு நாள் இருக்கக் கூடாது. அப்படி நாற்பது வருடங்கள் தினமும் சமைக்க வேண்டும் என்றால் எப்படி? அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.உதாரணத்துக்கு வசந்தா என்ற ராகத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! கர்னாடக இசையில் பிரபலமான ராகம். திரையிசையில் அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. ராகமாலிகையாகச் சில இடங்களில் வரும். ‘வசந்த ருது மன மோகனமே’ என தியாகராஜபாகவதர் பாடுவார். அதேபோல் மணமகள் படத்தில் வரும் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாடலில் ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற இடம் வசந்தா ராகம்தான்.

இந்த ராகத்தின் பெயரையும் இதில் உள்ள ஸ்வரங்களையும் வைத்து இசைஞானியும் ஒரு பாடலில் பிரமாதப் படுத்தியிருப்பார். ஸ க ம த நி ஸ , என்னும் ஸ்வரங்கள் தான் இந்த ராகத்தில் வரும். ‘கமகமகம வாசம் வருதே’ ‘சாதமாகதாமதமா’ ‘ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா’ என்றெல்லாம் உன்னால் முடியும் தம்பி (1988) திரைப்படத்தில் வரும் ‘என்ன சமையலோ’ என்ற அருமையான பாடலில் அமைத்திருப்பார். ராஜரிஜி (1985) திரைப்படத்தில் வரும் ‘மான் கண்டேன் மான் கண்டேன்’ என்ற பாடலும் வசந்தா ராகத்தில் அமைந்த இனிமையான மெல்லிசைப் பாடல்.

ஆனால் கற்பனைக்கும் எட்டாத மாதிரி இந்த ராகத்தைப் பிரமாதமாக மேற்கத்திய மற்றும் ஹிந்துஸ்தானி ஜாடையில் பயன்படுத்தியிருப்பது ராஜபார்வை (1981)யில்தான். போன கட்டுரையில் பந்துவராளி ராகத்துக்குச் சொன்னது போல் இப்பாடலுக்கு ராஜா பார்வை வசந்தா ராகத்தின் மீது விழுந்தது. அது வசந்தாவின் வசந்த காலம்தான். கர்னாடக இசையின் ராகமான வசந்தாவை எடுத்துக் கொண்டு மேற்கத்திய பாணியில் வயலின்கள் மற்றும் இதர கருவிகளின் இசை ஒருங்கிணைப்பை நிகழ்த்தி இருப்பார்.

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் டாப் 10 பாடல்களில் தயங்காமல் இடம்பெறக் கூடிய பாடல்தான் ‘அந்திமழை பொழிகிறது’. பாடலின் ஆரம்பத்தில் கவனியுங்கள். முதலிலேயே தொம் தொம் என மிருதங்கத்திலிருந்து தொடங்குகிறது. பார்வையற்ற கதாநாயகன் வீட்டுக் கூரையில் சொட்டு சொட்டாக விழும் மழையின் முதல்துளிகளைக் கேட்பது போல் இருக்கும். கூடவே அம்மழைத்துளி தெறிப்பது போன்ற ஒலியின்பத்தைக் கொடுக்கும் சிக் சிக் என்று இன்னொரு ஓசை. பின் ஒரு அற்புதமான கோரஸ்!

மனிதக் குரலையும் ஹம்மிங்கையும் , கோரஸையும் ஒரு இசைக் கருவி போன்று மிகத் துல்லியமாகக் கையாண்டவர் இசைஞானி. அப்படிக் கையாண்ட பாடல்களுக்குச் சிறந்த உதாரணம் இப்பாடல். ஆரம்பத்தில் ‘பாப்! பாப்! பாப்!பாப்!பபப்பா’ என கோரஸ் குரல் ஒலிக்கும் . இது வசந்தா ராகத்தின் மா மா மா மா க ம தா’ என்னும் ஸ்வரங்கள் .கூடவே கிட்டாரும். இரண்டும் சேர்ந்து லேசாக ஊளையிடும் காற்றுடன் மழைத் துளிகள் வேகம் பிடிப்பது போல் ஒலிக்கின்றன. பின்னர் கீ போர்டும் கிட்டாரும் சடசடவெனப் பொழியத் துவங்கும் மழையைக் காதுகளில் கேட்க வைக்கின்றன.

பின் இப்பாடலின் நாயகனான வயலின் தோனி போல் களமிறங்கப் பாடல் ஆரம்பிக்கிறது. வழக்கம்போல் உணர்ச்சிக் கொதிப்பாக எஸ் பி பி பல்லவியைப் பாடுகிறார். பல்லவி முடிந்தபின் சரணத்துக்கு முந்தைய இண்டர்ல்யூட் என்னும் இசைத் தொகுப்பு ஒரு அற்புதம். வயலின்கள் கொஞ்சம் கொஞ்சமாக முழங்க அப்படியே மேகக் கூட்டங்கள் கூடிக் கூடிக் கலைவது போல் ஏதோ ஒரு பிரிதலும் சேர்தலுமான உணர்வுகளை எழுப்புகிறது. அதன் பின் இளையராஜாவின் ஆசான்களில் ஒருவரான டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆஆ… என்று வசந்தா ராகத்தில் ஹிந்துஸ்தானி பாணியில் ஒரு ஆலாபனையைத் தபேலா துணையோடு பாடுவார். நெஞ்சில் இனம்புரியா சோகத்தை உருவாக்கும் ஆலாபனை அது. ஒவ்வொரு சரணத்திலும் அது தொடரும்.

சரணத்தில்தான் ஜானகியின் குரல் முதலில் ஒலிக்கிறது. விரகமும் வேதனையும் கலந்த ஒரு உணர்ச்சியைக் குரலில் துல்லியமாகக் கொண்டுவர இசைஞானியின் படையில் முக்கிய தளபதி அவரே. அதேபோல் வைரமுத்துவின் அபார வரிகளையும் இங்கே குறிப்பிட வேண்டும். ‘தேனில் வண்டு மூழ்கும் போது’ ‘தண்ணீரில் மூழ்கிக் கொண்டே தாகம் என்றாய்’ ‘ என்பது போன்ற மறக்கமுடியாத வரிகள் பாடல்முழுதும் நிறைந்துள்ளன.

இரண்டாவது சரணத்திற்கு முந்தைய இசையில் கீ போர்டும் பியானோவும் கொஞ்சம் கொஞ்சமாக மழைத்துளிகளைப் பொழிய பின் வயலின் வழியே அந்த மழை தரையில் வழிந்து வளைந்து நெளிந்து போய் ஒரு பேராற்றில் மூழ்குவதைப் போன்ற ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
அந்திமழை துளித்துளியாய் பெய்து பெருவெள்ளமாய் இசையாறாய் நம் முன் ஓடுகிறது. அந்த ஆற்றின் பெயர் தேம்ஸ் நதியென்றாலும் கங்கையென்றாலும் வைகையென்றாலும் நீர் ஒன்றுதானே! அது போல் மேற்கத்திய ஹிந்துஸ்தானி கர்னாடகஇசை என எந்தப் பாணி என்றாலும் அதன் அடிப்படை ஒலி ஒன்றுதான்.

அதுதான் ராஜா பாணி!! அதற்கு உதாரணம்தான் ராஜ பார்வை!!

முந்தைய தொடர்கள்:

4.‘ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!’ – https://bit.ly/2WBErej
3.‘தலையைக் குனியும் தாமரையே’ – https://bit.ly/2IUS4gv
2.என்றைக்குமே இந்த ஆனந்தமே! – https://bit.ly/39YlZAa
1. இசையில் தொடங்குதம்மா… – https://bit.ly/3b6w7H7

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 9. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்