1.ராஜா கைய வச்சா…

1998 இல் ஜீன்ஸ் திரைப்படம் வந்தபோது நான் பயிற்சி மருத்துவன். தினமும் இரவுக் காட்சி சென்று அப்படத்தைப் பார்த்துவிடுவேன். முக்கியக் காரணம் எல்லோருக்கும் தெரியும். ஷங்கரின் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, அசோக்குமாரின் ஒளிப்பதிவு – இவை எல்லாம் அல்ல. ஐஸ்வர்யா ராய்! அப்போது உடன் மருத்துவம் படித்த பெண் என்னிடம் கேட்டாள் ‘ஐஸ்வர்யாராய் மட்டும் ஏன் அவ்வளவு அழகு?’ என.

நாயகன் கமல் போல் ‘தெரியலைம்மா’ என்றுதான் பதில் சொன்னேன்.

எல்லோரும் ஒரு கருத்தை உண்மை என்று ஒத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அதை ஏன் அவ்வாறு நினைக்கிறார்கள் என்று விளக்க நினைத்தால் முடியாமல் போய்விடும். அதிலும் ரசனைசார்ந்த விஷயங்களாக இருந்தால் இன்னும் கடினம். இன்னாரைப் பிடிக்கவில்லை என்று சொல்ல ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஏன் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்குப் பெரும்பாலும் அறிவின் துணை நமக்கு உதவாது.

அதிலும் இசை மிகவும் சிக்கலானது. ஆலிவர் சாக்ஸ் என்னும் மூளை நரம்பியல் துறை பிஸ்தா ஒருவர் ம்யூசிக்கோஃபிலியா (இசைப் பித்து) என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் மனிதனுக்கு ஏன் இசை பிடிக்கிறது என்பதற்கான காரணம் இன்னும் அறிவியலாளர்களுக்குச் சரியாகப் புலப்படவில்லை என்று கூறுகிறார். இசை என்பது பறவைகள் போன்ற சில உயிரினங்களின் பாலியல் தேவைக்காக எழுப்பப்படும் ஓசை, ஆகவே அது மனிதருக்குப் பிடித்திருக்கிறது என்பது மிக மேலோட்டமான ஒரு கருத்தே. அதையும்தாண்டி இசை என்பது மனதின் பல்வேறு அடுக்குகளில் பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஏன் நமக்கு ஒருவகை இசை பிடிக்கிறது என்பதற்குப் பல நேரங்களில் அறிவுப்பூர்வமாகப் பதில் கூற முடியாது. இருப்பினும் மனிதனால் தனக்கு இருக்கும் துளியூண்டு அறிவை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை. ஆராய்ந்துகொண்டே இருக்கிறான். உளவியல்படி உணர்ச்சிகள் நினைவுகளோடு தொடர்புடையவை . துக்கம், மகிழ்ச்சி, அச்சம் போன்ற உணர்வுகளோடு தொடர்புடைய நிகழ்வுகள் நினைவுகளில் நீங்காமல் இருக்கின்றன. அந்நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கும்போது அப்போது அனுபவித்த உணர்வுகளை மீண்டும் அனுபவிக்கிறான்.

இசையும் உணர்வுகளோடும் நினைவுகளோடும் தொடர்புடையதாக இருக்கிறது. ஆகவே இசையை மீண்டும் மீண்டும் கேட்பதன்மூலம் கடந்த காலத்துக்குத் திரும்ப முயற்சிப்பதாகக் கருதலாம். அதிலும் குறிப்பாகத் திரை இசை. செவ்வியல் இசையைவிட அதிகமாக நினைவுகளோடு தொடர்புடையது திரை இசை. ஒரு கர்னாடக இசைப் பாடலையோ மேற்கத்திய செவ்வியல் இசையையோ கேட்டால் நம் மனதில் அமைதி, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி போன்ற உணர்வுகள் எழலாம். ஆனால் திரைப்பாடல்களைக் கேட்கும்போது இனம்புரியாத பல்வேறு உணர்வுகளும் நினைவுகளும் மனதில் அலையடிக்கும். பலசமயங்களில் சுனாமிபோல் ஆழிப் பேரலையாக. திரைப்பாடல்கள் நம்மிடையே மிகவும் செல்வாக்கு பெற்றிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்.

தமிழ்த்திரை இசைத்துறை மிகவும் பேறுபெற்றது. பாவனாசம் சிவன் தொடங்கி ஜி.ராமநாதன், எஸ்.வி.வெங்கட்ராம், சி.ஆர்.சுப்பராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, கே.வி. மகாதேவன், எம்.எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இளையராஜா என ஏ.ஆர்.ரஹ்மான் வரை ஏராளமான மேதைகளை நமக்குத் தந்திருக்கிறது.

ஏனைய அனைவருமே அபாரத் திறமைசாலிகள், மேதைகள் என்பதில் எந்த ஐயமுமில்லை என்பதைக் கூறிக்கொண்டு இசைஞானி இளையராஜாவின் இசையில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதைக் கொஞ்சம் அவரது பாடல்களின் வழியே பயணித்து ஆராய முயற்சிப்பதே இத்தொடரின் நோக்கம். ஆராய்ச்சி என்பது மிகப்பெரிய வார்த்தை. அறிந்துகொள்ள என்று கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கக்கூடும்.

இசையை ஆராய, மன்னிக்கவும்… அறிய நினைப்பது அதிலும் இசை ரசனைப்பற்றி அறிய நினைத்தால் ஒரு கட்டத்துக்குமேல் அறிவு மற்றும் மொழியின் போதாமையில் போய்த்தான் முடியும். பொங்கிப் பெருகி வழியும் அருவி ஏன் பேரழகாக இருக்கிறது என நானூறு வார்த்தைகளுக்குள் கட்டுரை வரையவும் எனச் சொன்னால் எப்படி எழுதுவது? அதுபோல் அந்த இசை நதியின் பெருவெள்ளத்தை ஓட்டத்தை அறிவு செல்லும் எல்லைவரை சென்று வார்த்தைகளால் கடக்க முடியாத இடம் வரும்போது ஓரமாக நின்று வேடிக்கை மட்டும் பார்த்து வியந்து நிற்போம்.

இசைஞானியின் இசையும் அப்படித்தான். இந்த இடத்தில் மீண்டும் அறிவு / உணர்ச்சி என்னும் எதிர்நிலைகளுக்கு மீண்டும் திரும்புகிறோம். இசைஞானி என்னும் பட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஞானம் என்பது அறிவு. இசையில் அறிவின் பங்கு மிகமுக்கியமானது. ஒலி பற்றிய அறிவே அடிப்படை இசை அறிவு. ஒவ்வொரு ஸ்வரத்துக்கும் உள்ள அதிர்வெண் (frequency) பற்றிய அறிவு, வெவ்வேறு ஸ்வரங்கள் வெவ்வேறு ராகங்களாக உருமாறுவதை அறியும் அறிவு, மேற்கத்திய, இந்திய செவ்வியல் மற்றும் நாட்டார் வழக்கியல் இசை ஆகியவற்றுக்குள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றிய அறிவு, வெவ்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளையும் அவற்றை இணைப்பதிலும் உள்ள அறிவு, இசையைக் குறியீடுகளாக (நொட்டேஷன்) மாற்றி ஒவ்வொரு இசைக்கருவிக்குமான நோட்ஸையும் எழுதி ஒருங்கிணைக்கும் அறிவு, தாளம் எனப்படும் காலப் பிரமாணத்தைப் பற்றிய அறிவு என ஏராளமான திறன்கள் இளையராஜாவின் இசையில் அபாரமாக வெளிப்படுகின்றன.

இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சில உதாரணங்களுடன் விளக்கலாம் என நினைக்கிறேன். கம்பர் சொன்னதுபோல் பாற்கடல் முழுதையும் குடிக்க நினைத்த பூனையின் ஆசை போல்தான்.

செவ்வியல் இசை பயின்றவன் என்ற அடிப்படையில் பாடல்களின் இசை இலக்கண நுட்பங்களை ஓரளவுக்கு விளக்க முடியும் என்ற நம்பிக்கை.

அதே சமயம் தொழில்நுட்பத் தகவல்கள் கலைச்சொற்கள் தேவையான அளவு மட்டுமே இருக்கும். ஒரு ரசிகனின் உணர்வுக் கொந்தளிப்பும் வியப்புமே அதிகமாக இருக்கும் என்ற உறுதிமொழியுடன் தொடங்குகிறேன்.

இசையில் தொடங்குதம்மா…

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 9. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 10. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 11. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 12. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்