ராஜா கைய வச்சா – 2

காதலர் தினம் இப்போதுதான் கடந்துபோனது. தனிப்பட்ட வாழ்வில் காதல் அனுபவம் பெற்றிருக்க வாய்ப்பே இல்லாத ஒரு பாதிரியாரின் நினைவாகத்தானே காதலர் தினம் கொண்டாடப்படுகிறது? தான் காதலிக்காவிட்டாலும் பலரது காதலைச் சேர்த்து வைத்தவர் அவர். அவரைப் போலவே தனிப்பட்ட வாழ்வில் காதலுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாத ஆன்மீக நெறிப்படி வாழ்வதால் சாமியார் என்று அழைக்கப்படும் ஒருவர் நம்மிடையே இருக்கிறார். ஆனால் அவரும் பலருக்குக் காதலை உருவாக்கியிருக்கிறார். பலரது காதலை வளர்த்திருக்கிறார். அவர்தான் இசைஞானி.

இசை என்பது உணர்வுகளோடு நெருங்கிய தொடர்புடையது. உணர்வுகளைக் கிளப்பக்கூடியது. ஏற்கனவே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளை லென்ஸ்போல் மிகைப்படுத்திக் காட்டக்கூடியது. போன கட்டுரையில் சொன்னது போல் உணர்வுகளைத் தூண்டும்போது நினைவுகளும் தூண்டப்படுகின்றன. காதலைப்போல் இவ்விரண்டையும் தூண்டக்கூடியது எதுவும் இல்லை. இளையராஜாவின் இசையோ காதல் நெருப்பில் ஊற்றும் நெய் போன்றது. சில சமயம் பெட்ரோல் போன்றது.

பல வருடங்களுக்குமுன் ஒரு நெருங்கிய உறவினர் வீட்டில் ஒரு சிறு விருந்து. விருந்து முடிந்தபின் எல்லோரும் பாடுவது, மிமிக்ரி செய்வது என்று செய்து கொண்டிருந்தனர். என்னைப் புல்லாங்குழல் வாசிக்கச் சொன்னார்கள். (கூட்டத்தைக் கலைக்கக்கூட இருந்திருக்கலாம்.) நான் ஓரளவு சுமாராக ஒரு பாடலை வாசித்தேன். நிகழ்வு முடிந்ததும் சுமார் ஐம்பது வயதான ஒருவர் வந்து என்னிடம் கண்கலங்கினார். “இந்தப் பாடலைக் கேட்கவே கூடாது என்றிருந்தேன். ஒரு காலத்தில் இப்பாடல் என் வாழ்க்கையில் மிகமிக முக்கிய இடம் வகித்தது. என் காதலிக்கும் மிகவும் பிடித்த பாடல். இப்போது கேட்டாலும் அந்த நாள் முழுக்க வேறு எந்த வேலையும் ஓடாது. வேதனை கலந்த ஆனந்தம்” என்றார். அவரது காதலைப் பற்றிக் கேட்கவில்லை.

இதே பாடலை முகநூலில் ஒருமுறை பதிந்திருந்தபோது ஒருவர் என்னை அழைத்து ‘இந்தப் பாடல்தான் எங்கள் காதலுக்குச் சாட்சி. எப்போது கேட்டாலும் ஆனந்தம்தான். அந்தக் காதலிதான் இப்போது என் மனைவி’ என உற்சாகமாகப் பேசினார். ஒரே பாடல் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு உணர்வுகளையும் நினைவுகளையும் தூண்டுகிறது. அந்தப் பாடல்?

1984 ஆம் ஆண்டு வெளியான ‘வைதேகி காத்திருந்தாள்’ திரைப்படத்தில் இசைஞானி இசையமைப்பில் அமைந்துள்ள ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’ என்ற பாடல். இளையராஜா என்னும் கடலில் விளைந்த முத்துக்களில் முக்கியமானவற்றுள் ஒன்று. ஒரு நானோ(nano) வினாடி கூடத் தொய்வு விழாத துள்ளலான பாடல்.

கொஞ்சம் டெக்னிக்கலாகப் பேச வேண்டுமானால் இப்பாடல் ஆபோகி என்னும் ராகத்தில் அமைந்தது. ஸ ரி க ம ப த நி என்னும் ஏழு ஸ்வரங்களும் ஒரு ராகத்தில் வந்தால் அதைத் தாய் ராகம் அல்லது மேளகர்த்தா ராகம் என்கிறார்கள். அப்படி ஒரு மேளகர்த்தா ராகமாகிய கரஹரப்ரியா என்னும் ராகத்தில் பஞ்சமம் என்னும் ப வும் நிஷாதம் என்னும் நி யும் இல்லாமல் இருந்தால் அதுதான் ஆபோகி ராகம். ‘சபாபதிக்கு வேறுதெய்வம் சமானமாகுமா’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் கீர்த்தனை இந்த ராகத்தில் மிகப் புகழ்பெற்றது.

திரையிசையில் மாலையிட்ட மங்கை (1958) படத்தில் வரும் ‘நானன்றி யார் வருவார்’ என்ற இனிய பாடலும் கலைக்கோவில் (1964) படத்தில் வரும் ‘தங்கரதம் வந்தது’ என்னும் பாடலும் இந்த ராகத்தில் பிரபலமானவை.

இந்த ராகத்துக்கு வேறு ஒரு வடிவம் கொடுத்திருப்பார் இளையராஜா ‘இன்றைக்கு ஏன் இந்த’ என்ற இப்பாடலில். பாடல் தொடக்கம் முதல் முடிவு வரை துள்ளலான பாடல். திஸ்ரம் எனப்படும் தகிட தகிட என்னும் நடையில் அமைந்த ஓட்டமான பாடல். ஆபோகி ராகத்தில் அருமையாக மெட்டமைப்பது மட்டுமல்ல, அப்பாடலை முழுமையாக்க ஒவ்வொரு இசைக்கருவியையும் மிகச் சரியாகக் கையாண்டிருப்பார். அவர் தந்திக் கருவிகளான கித்தார், சிதார், வீணை, சந்தூர் மற்றும் வயலின், காற்றொலிக் கருவிகளான நாதஸ்வரம், ஷெனாய், சாக்ஸபோன் எனப் பல்வேறு வகையான இசைக்கருவிகள், ட்ரெம்ஸ், தபலா, மிருதங்கம் போன்ற தாளவாத்தியக் கருவிகள் என விதவிதமான கருவிகளை ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்றவாறு மிகக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பார்.

ஒரு திரைப்பாடலின் தொடக்க வாத்திய இசை (Prelude), சரணங்களுக்கு நடுவே வரக்கூடிய இசை (interlude) என அமைந்திருக்கும். பாடலின் மெட்டு மட்டுமல்ல இந்தத் தொடக்க, இடைநிலை இசையும் ரசிகர்களுக்கு மனப்பாடமாக இருப்பது இளையராஜாவின் இசையில்தான் அதிகம் என்பது என் கருத்து. ஏன் பல படங்களில் BGM எனப்படும் பின்னணி இசைகூடப் பலருக்கு மனப்பாடம். அந்தவகையில் ஆர்கெஸ்ட்ரைசேஷன் எனப்படும் இசைக்கருவிகளை ஒருங்கிணைப்பதில் அபாரத் துல்லியம் கூடிவந்துள்ள பாடல் இது.

ஆரம்பத்தில் மணியோசை ஒத்த தந்தி ஒலி. பின் ஜெயச்சந்திரனின் ஆலாபனை. யேசுதாஸுக்கும் எஸ்பிபிக்கும் நடுவாந்திரமான ஒரு அருமையான குரல் ஜெயச்சந்திரனுக்கு. பாடலைத் தனது பிசிறடிக்காத அழுத்தமான குரலில் வாணி ஜெயராம் தொடர்வார், இருவரின் குரலையும் தொடர்ந்து வீணையில் ஆபோகி ராகம் ஒலிக்கும். பின்னர் முதல் சரணத்துக்கு முன் புல்லாங்குழலும் வயலினும் வீணையும் இந்த ராகத்தை இசைப்பதில் போட்டி போட்டுக்கொள்ளும்.
இரண்டாவது சரணத்துக்கு முன் வாணி ஜெயராம் ஸ்வரங்களைப் பாடுவார். கூர்ந்து கவனித்தால் ஸ்வரங்கள் ஸரிகமதஸா என்றுதான் வரும். ஆபோகியில் ‘ப’ வும் ‘நி’ யும் கிடையாது என்பதை மீண்டும் நினைவு கூருங்கள்.

பாடல் முழுமைக்கும் முதுகெலும்புபோல் ஆதாரமாக இருப்பது தகிட தகிட என்னும் திஸ்ர நடையில் வேகமான காட்டாறுபோல் ஓடிக் கொண்டிருக்கும் மிருதங்கம் / தபேலாவின் தாளம்தான்.

கலைஞனின் சில படைப்புகள் ஒரு மாற்றுக்கூடக் குறைவில்லாத பொன்போல் அமைந்துவிடும். அப்படி அமைந்து ‘ஆபோகி’ ராகத்தில் என்றென்றைக்குமான ஆனந்த உணர்வுகளின் ஊற்றாக உலா வருகிறது இப்பாடல்! அதனால்தான் அந்தக் காலகட்டத்தில் காதலித்தவர்கள் இப்பாடலைத் தங்கள் காதலோடு அடையாளப்படுத்திக் கொண்டனர். காதல் வயப்படாதவர்களுக்கும் அந்த அனுபவத்தை ஒத்த ஒரு ஆனந்தத்தைத் தருகிறது இப்பாடல். இசை பற்றிய அறிவோ ஆபோகி ராகத்தையோ அறியாதவர்கூட மனம் கரைந்து இப்பாடலை ரசிக்க முடிவதுபோல்…

மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு முறை மட்டும் கேட்டு நிறுத்த முடியுமா எனப் பாருங்கள்!!

முந்தைய தொடர்கள்

1. இசையில் தொடங்குதம்மா… – https://bit.ly/3b6w7H7

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 9. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 10. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 11. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 12. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்