ராஜா கைய வச்சா- 7

கொரோனா காலத்தில் மக்களை இன்னும் சங்கடப்படுத்த வேண்டாமே எனச் சில நாட்கள் கட்டுரை எதுவும் எழுதாமல் இருந்தேன். ஆனால் பலர் ( சரி..சிலர்) விரும்பிக் கேட்டுக் கொண்டதால் தனிமைக் கொடுமையைத் தணிக்க இசைஞானி இசை உதவுமே என மீண்டும் களத்தில்…

கொரோனாவைவிட வேகமாகத் தொற்றிக் கொள்ளக் கூடியது இசைஞானியின் இசை. இதுவும் காற்றில் பரவக் கூடியதுதான். என்ன இந்த வைரஸ் காதுகளின் வழியே பரவக் கூடியது. ஒரு முறை கேட்டாலே நம்மைப் பற்றிக் கொள்ளக் கூடியது. இப்போது இருப்பது போல் அடிக்கடி இசை கேட்க அலைபேசிகள், யூட்யூப் சேனல்கள், தொலைக் காட்சி சானல்கள் என எதுவும் இல்லாத காலகட்டத்தில் ஒரே ஒரு முறை கேட்டவுடனேயே நம்மைப் பீடித்துப் பல நாட்கள் நம்மை முணுமுணுக்க வைத்தவை இசை ஞானியின் பாடல்கள்.

அதிலும் ஒரு சில படங்களைத் தவிர பல படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் என்றெல்லாம் பெரிதாக இருக்காது. பெரும்பாலான பாடல்களைத் திரையரங்கில்தான் முதன்முறையாகக் கேட்போம். கரகாட்டக்காரன் போன்ற படங்களின் பாடல்களை எல்லாம் முதன்முதல் திரையரங்கில்தான் கேட்டேன். ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் படங்களுக்கே படங்களுக்கே அதுதான் நிலைமை.

1992 ஆம் வருடம் பொங்கல் சீசன். திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரில் மன்னன் திரைப்படம் பார்ப்பதற்காகச் சென்று பல மணி நேரங்கள் காத்திருந்து பின் திரைப்படத்தைப் பார்த்தபோது முதன்முறையாக ” அம்மா என்றழைக்காத உயிரில்லையே ” என்ற பாடலைக் கேட்டேன். ஏசுதாஸின் குரலும் கல்யாணி ராகத்தில் அமைத்த இசைஞானியின் இசையும் ,படத்தில் ரஜினிகாந்த்,பண்டரிபாயின் நடிப்பு எல்லாமாகச் சேர்த்து அளித்த ஒரு பரவச அனுபவம் இன்று வரை நினைவிருக்கிறது. பல நாட்கள், மாதங்கள் அந்தப் பாடலால் பீடிக்கப் பட்டிருந்தேன்.

இளையராஜா இசையமையத்த பல திரைப்படங்களைத் திரையரங்குகளில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறுதான் வெளியே வருவோம். ராசாவே உன்னை நம்பி (1988) படம் என்றால் ராசாத்தி மனசில, கரகாட்டக்காரன் (1989) என்றால் கேட்கவே தேவையில்லை மாங்குயிலே பூங்குயிலே , நாயகன் (1987) என்றால் தென்பாண்டிச் சீமையிலே , சின்னத்தம்பி (1991) என்றால் தூளியிலே ஆடவந்த எனப் பல பிரபல பாடல்களை முதன்முறையாகத் திரையரங்கில் கேட்டுவிட்டு அப்பாடலால் பீடிக்கப்பட்டே வெளியே வருவோம்.

அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பின்னணி இசையில் அந்தப் பாடல்களின் தாக்கம் படம் முழுதும் நீடிக்கும்.

இதுபோல் காதுகளைத் தொற்றி நம்மை நீங்காத பாடலுக்கு Earworms என்று ஆங்கிலத்தில் பெயர். செவிப்புழு எனச் சொல்வது அசிங்கமாக இருந்தாலும் அது ஒரு கிருமிபோல் நம்மைத் தொற்றத்தான் செய்கிறது. சில சமயம் நமக்குப் பிடிக்காத பாடல்கள்கூட நம் மனதில் தேவையில்லாமல் அடிக்கடி வரக்கூடும் . அதீதமாகப் போய் எரிச்சல் , மன உளைச்சல் எல்லாம் உண்டாக்கும். ஆனால் இசைஞானியின் பாடல்களைப் பொருத்தவரை அவை இனிமையான உணர்வுகளை எழுப்பக்கூடிய சுகமான தொற்றாக அமைகின்றன.

இதுபோல் பற்றிக் கொள்ள எனக்குத் தோன்றும் இன்னொரு காரணம் இளையராஜாவின் மெட்டுக்கள் மிக எளிமையாக அதே நேரம் இனிமையாக இருப்பதால் சட்டென்று நம்மால் அந்த மெட்டைக் கிரகித்து முணுமுணுக்க முடிகிறது .அவரது பாடல்களை ஆய்வு செய்தால் சில சமயம் ராகத்தை நம்ப முடியாத அளவுக்கு எளிமையாகப் பயன்படுத்தி இருப்பார். முன்பு சொன்னது போல் ரீதி கௌளை ராகத்தின் ஸ்வரங்களின் ஆரோகணத்தை (ஏறு வரிசை ) அப்படியே சின்னக்கண்ணன் அழைக்கிறான் என மாற்றியது போல்.

ஆனால் எளிமையான விஷயங்கள் எல்லாம் சாதாரமானவை அல்ல. அந்த எளிமைக்குப் பின் மிகப் பெரிய திறமையும் உழைப்பும் இருக்கிறது. மேலும் எளிமையான மெட்டைத் தனது ஆர்கெஸ்ட்ரா அமைப்பின் மூலம் மிக நுட்பமாக அழகு படுத்திச் சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து அழகு படுத்திப் பிரம்மாண்டமாக ஆக்கி இருப்பார்.

நகை செய்வது போல்தான். ஒரு எளிமையான மாடலை வார்ப்பில் உருவாக்கி அதை நுணுக்கமான வேலைப்பாடுகள் மூலம் ஆபரணம்.ஆக்குவது. அப்படி இளையராஜா என்னும் பொற்கொல்லர் செய்த தங்கச் சங்கிலிதான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் பாடல்.

முதன்முறை கேட்டதுமே நெஞ்சைக் கவ்வும். கேட்கக் கேட்க அதன் அழகும் எளிமையும் நுட்பமும் விரிந்து கொண்டே போகும். இப்பாடலுக்கு இசைஞானி பயன்படுத்திய ராகம் கீரவாணி. இளையராஜாவின் ராகங்கள் என டிசம்பர் புத்தகக் கண்காட்சியில் தனி ஸ்டாலே போடும் அளவுக்குப் புத்தகங்கள் எழுத முடியும். அப்படி நடந்தால் அந்த ஸ்டாலில் கீரவாணிக்கு ஒரு அடுக்கு ஒதுக்க வேண்டும். அந்த அளவுக்கு ஏராளமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார்.

அவற்றுள் ஒரு பிரமாதமான பாடல் தூறல் நின்னுபோச்சு(1982) படத்தில் வரும் தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி என்னும் பாடல். இப்படத்தில் பாடல்கள் எல்லாமே மிகப் பிரபலம். படமும் பாக்யராஜின் திரைக்கதை அமைப்பில் சூப்பர் ஹிட். இந்தப் பாடல் கீரவாணியில் அமைந்த ஒரு இதமான டூயட். மிக எளிமையாக அமைந்த பல்லவி. அதிலும் வெறும் ஸ என்ற ஸ்வரத்தைதான் முதல் நான்கு வார்த்தைகளுக்கு அமைத்திருக்கிறார். கீரவாணியில் சும்மா மேலும் கீழும் ஊஞ்சல் போல் ஆடி பல்லவியை அமைத்திருக்கிறார்.

பாடல் ஆரம்பமே பாடகரின் குரலில் இரண்டு வரிகள். பின்னர்தான் பாடல் தொடக்கம் . இது ராஜாவின் பாணிகளில் ஒன்று. ( இன்னொரு உதாரணம் குழலூதும் கண்ணனுக்கு பாடல்). பிசிறில்லாமல் இசைஞானி நினைத்த சங்கதிகளைக் குரலில் கொண்டுவரும் எஸ்.ஜானகி பாடலை ஆரம்பிக்கிறார். தொடர்ந்து வயலின், மாண்டலின் சந்தூர் என தந்திகளின் சங்கமத்தில் ஒரு இசைக் கோவை.

அதே இசைக் கருவிகளின் கூட்டணியில் இசைக்குப்பிறகு சரணத்தில் ” காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி” என்று மலேஷியா வாசுதேவன் எடுப்பார். சரணத்தில்தான் அவரது குரல் முதன்முதலில் ஒலிக்கிறது. அடிக்கடி நான் கூறுவது போல் சரணத்தில் முதன் முறையாக பாடகரின் குரலை ஒலிக்க வைப்பதும் ராஜாவின் பாணிகளில் ஒன்று. அலங்காரங்கள் இல்லாத இயல்பான குரல் மலேஷியாவினுடையது. அவரும் ஜானகி அம்மாவும் இப்பாடலின் அழகுக்கு அழகு சேர்த்திருப்பார்.

இரண்டாவது சரணத்துக்கு முந்தைய இசைத் துணுக்கு வேறொரு விதமாக மாண்டலின், வயலின் ,ஷெனாய் ,குழல் என்ற கூட்டணியில் அமைந்திருக்கும். சரணம் விறுவிறுவென அமைந்திருக்கும் .சரணம் முடியும் இடத்தில் ஒரு பேதை உறங்கிட இடம் கொடு என்னும் வரிகளில் பே….என்று ஜானகி இழுக்கும் இடம் கீரவாணியின் முக்கிய ஸ்வரமான தா வில் அமைந்து நம் நெஞ்சையும் இழுக்கும்.

‘அந்திப்பூ விரியும் அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும் ‘என்பது போன்ற வைரமுத்துவின் வரிகளும் சேர்ந்து இப்பாடலைச் சமூக இடைவெளிவிட்டுத் தூரத்தில் எங்கோ கேட்டாலும் நம்மைத் தொற்றிக் கொள்ளும் இசை வைரஸ் ஆக்குகிறது. திரையில் பார்க்கும்போதும் பாக்யராஜின் உடற்பயிற்சி நடனத்தையும் மீறி இப்பாடல் நம்மைக் கவரத்தான் செய்கிறது.

https://youtu.be/4dj_IIWbuTQ

இதைவிடப் பயங்கரமாகக் காற்றில் கலந்து பரவும் இன்னொரு வைரஸும் இசைஞானி இசையில் இதே கீரவாணி ராகத்தில் இருக்கிறது.

அது அடுத்த கட்டுரையில்….
******************************************

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
 2. ’நதியில் ஆடும் பூவனம் ’ சௌந்தர்ய ஆராதனை- டாக்டர் ஜி.ராமானுஜம்
 3. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
 4. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
 5.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
 6. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
 7. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
 8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
 9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
 10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
 11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
 12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
 13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்