அதிகாரபூர்வமற்ற குடியேற்றங்களை ஒன்று காவியமாக்குகிறார்கள். அல்லது காலிகள் என முத்திரை குத்துகிறார்கள். அவற்றை குடியிருப்புகள் என அங்கீகரிப்பதே இல்லை.

பெயரில்லாத மனிதர்களைக் கொண்ட பளபளக்கும் நகரங்கள். நிலம் பற்றாக்குறையாக இருக்கும் அத்தகைய மும்பை நகரத்தில் கான்கீரிட் காடுகளுக்கு நடுவில் சிக்கியிருக்கும் ஒரு பகுதி தாராவி. அதைச் சிலர் சேரி என்கிறார்கள். அதை நான் இந்தியாவின் மிகப் பெரிய அதிகாரபூர்வமற்ற குடியேற்றங்கள் என நான் அழைப்பேன்.

மிகவும் காவியமாக்கப்பட்ட பகுதியான தாராவியில் பல நூறு கோவிட்-19 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள். அதில் பலர் இறந்திருக்கிறார்கள். இதனால் மீண்டும் தாராவி செய்தியில் அடிபடுகிறது. வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டு என்று செய்திகளில் தாராவியை குறிப்பிடுகிறார்கள்.

புதிய வாழ்க்கை பிறக்கும் என்ற நம்பிக்கையோடு நகரங்களுக்கு வந்து, மனிதன் வாழத் தகுதியற்ற இடத்தில் சிக்கிக்கொள்ளும் உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு தாராவி ஒரு நினைவூட்டலாக விளங்குகிறது. அவர்களின் கனவுகளைக் கொண்டாடும் நாம், அவர்களின் நலன் குறித்து அக்கறை கொள்வதில்லை.

காற்றோட்டமில்லாத பத்துக்குப் பத்து அறையில் 10 பேர்கூட தங்கும் நிலை ஏற்படுவதுண்டு. காச நோய் முதல் கோவிட்-19 வரை எல்லாவிதமான நோய்கள் பரவலுக்கும் ஏற்ற தகரக் கொட்டகையில் வசிப்பவர்கள் அவர்கள். தண்ணீர்தான் அங்கு மிக அரிதான பொருள். அதற்காக அவர்கள் செலவிடுவது அதிகம்.

மும்பையிலிருந்து மெக்சிகோ வரை, கராச்சியிலிருந்து கேப் டவுன் வரை, கைரோவிலிருந்து சா பாவ்லோ வரை ஏராளமான தாராவிகள் வாழ்கின்றன. அவை வாழ்கின்றன என்பதே சமூகத்தின் கூட்டுத் தோல்வியையும் நமது வளர்ச்சிக் கதையிலுள்ள ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் காட்டுகிறது.

பொருளாதார உந்துசக்திகள்

அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் வீட்டுக்குள் இருங்கள், சமூக விலகலை பின்பற்றுங்கள், நன்றாக சாப்பிடுங்கள், அடிக்கடி கை கழுவுங்கள் என்று சொல்வது முரண்பாடானது முரண்நகை மட்டுமல்ல, அது ஈவிரக்கமற்ற செயல். இந்தியா போன்ற தேசங்களில் நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கும் சுயநல ஊடகங்களும் இத்தகைய குடியிருப்புகளை பிரச்சனையாக முன்னுறுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஏனென்றால் அந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள்தான் அவர்களுக்கு உதவியாட்களாக இருக்கிறார்கள், அவர்களது அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் வேலை செய்கிறார்கள்.

இந்தக் குடியிருப்புகள் பொருளாதார உந்துசக்திகளாகத் திகழ்கின்றன. எம்ப்ட்ராய்டரி வேலைகள், தோல் பதனிடுதல், இரும்புத் தொழில்கள், டிரைவர்கள், பாலியல் தொழிலாளர்கள் முதலிய பல நூறு தொழில்களுக்கு இந்தக் குடியிருப்புகளிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள். இந்த இணை பொருளாதாரம்தான் இந்திய நடுத்தர வர்க்கத்திற்கு ஆதரவாக இருக்கிறது. அவர்கள் சார்ந்து இருக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கம் விடுதலை பெறவும் அவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள தாராவிகள் உடல் நலமின்மையில் நிரந்தரமாக சிக்குண்டு கிடக்கின்றன. காச நோய், மலேரியா, டெங்கி, ஊட்டச் சத்துக் குறைபாடு, ஊத்தைப் பல் போன்ற பிரச்சனைகள் இங்கு பூதாகாரமான அளவில் இருக்கின்றன.

உடல்நல பிரச்சனைகளை சந்திக்கும் இந்த குடியிருப்புவாசிகளுக்கு நாம் கொடுக்கும் ஆஃபர் என்ன… குறைவான சம்பளம், வேலை உறுதியின்மை, சம்பளத்துடனான விடுப்பு இன்மை, மருத்துவக் காப்பீடு இல்லாமை… அதிக சுமையும் தேவையைவிட குறைவான நிதி ஒதுக்கீடும் கொண்ட பொது சுகாதார கட்டமைப்பிற்கும் மிகவும் செலவு பிடிக்கும் தனியார் மருத்துவத்திற்கும் இடையில் அவர்கள் அல்லாடுகிறார்கள்.

எதிர்வினையை எவ்வாறு கட்டமைக்க வேண்டும்

இந்தக் கிருமி உலக அளவில் அனைவரது வாழ்வாதாரத்தையும் வீழ்த்திக்கொண்டிருக்கும் சமயத்தில்தான் நமக்கு ஞானோதயம் பிறக்கிறது. முழுமையான எதிர்வினை எவ்வாறு இருக்க வேண்டும்…

கிருமியின் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பலன் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இத்தகைய குடியிருப்புவாசிகளின் நிலையில் நம்மை வைத்து இதிலுள்ள பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். உணவு, மருந்து, தண்ணீர், தகவல் எல்லாம் அவர்களை எட்ட வேண்டும். இந்தக் கிருமிக்கு எதிராக போராட வேண்டுமென்றால் இதையெல்லாம் கவனித்தாக வேண்டும். சரியாகத் திட்டமிடாத ஊரடங்கு இவர்களை கவலைக்கும் பீதிக்கும் பதட்டத்திற்கும் உள்ளாக்குகிறது.

யார் யார் மூலமாக கிருமியின் பரவல் நேர்ந்திருக்கலாம் என ஆராய்வது முக்கியம்தான். ஆனால் நம்பிக்கையையும் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்துவது அதைவிட முக்கியமானது. மக்களோடு இணைப்பில் இருப்பது இதை சிறப்பாக சாத்தியமாக்கும். இந்தக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ஒருவரோடு ஒருவர் சிறப்பாக ஒன்றிணைக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு சரியான தகவல்களைத் தெரிவித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவசியம். அரசு சாரா நிறுவனங்கள், சமூக இயக்கங்கள், மத அமைப்புகளையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தகவலை எட்டச் செய்வது, நம்பிக்கை ஏற்படுத்துவது, சமூக ஒருங்கிணைப்பை சாத்தியமாக்குவது மிக முக்கியமானது. சேவைகள் அவர்களை எட்டச் செய்வதிலுள்ள இடைவெளிகளை சரி செய்ய வேண்டும். ஏனென்றால் ஜனத்தொகையும் ஜனநெருக்கடியும் அதிகமாக இருக்கும் இடத்தில் கிருமியும் பட்டினியும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தும்.

தொலைநோக்கில் இந்தக் குடியிருப்புகளின் வாழ்நிலைகளை எப்படி மாற்றுவது என நாம் யோசிக்க வேண்டும். எவ்வளவுதான் துடிப்பாக இயங்கினாலும் இந்தக் குடியிருப்புகள் மனிதனின் தன்மானத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிய இழுக்கு.

மும்பையின் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்வதற்காக ஒரு இளம் ஆய்வாளராக முதல் முறையாக தாராவி சென்றது இன்னமும் நினைவில் உள்ளது. என் வாழ்வில் நான் கண்ட துணிச்சலான பெண்கள் அவர்கள். ஒற்றை அறை கொண்ட தற்காலிக குடியிருப்புகளில் பிதுங்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். எச்.ஐ.வியுடன் போராடிக்கொண்டிருந்த துணிச்சலான, திறமைகள் வாய்ந்தவர்கள் அவர்கள்.

அதற்கடுத்த ஒரு மழை நாளில் உத்தரப் பிரதேசத்திலிருந்து வந்த ஓவாயிஸ் என்ற எச்.ஐ.வி பாஸிட்டிவ் புலம் பெயர் தொழிலாளருடன் இருந்தேன். மருந்துக்கு கட்டுப்படாத காசநோயிலிருந்து மீண்டு வந்திருந்தார் அவர். நீங்கள் வீட்டுக்குத் திரும்புவீர்களா என்று அவரிடம் கேட்டேன். குறுகலான சந்துகளில் மழை நீர் ஓடிக்கொண்டிருந்தது. தான் அமர்ந்திருந்த சிறிய அறையிலிருந்தபடி புன்னகையுடன் கூறினார் ஓவாயிஸ், “எனக்கு இங்கு இருப்பதைத்தான் பிடித்திருக்கிறது. இதுதான் என் வீடு.”

இணைந்து பணியாற்றினால் கொரோனாவுக்கு எதிராக போராட்டத்தில் முன்னணியில் நிற்கக்கூடியவர்கள் இவர்கள்.

உலகின் பல பகுதிகளிலும் உள்ள தாராவிகள் பிரச்சனை அல்ல. மனித ஆரோக்கியம், வளர்ச்சி குறித்த நமது அணுகுமுறைதான் பிரச்சனை. இந்தக் குடியிருப்புவாசிகளை ஹீரோக்களாகவோ, வில்லன்களாகவோ ஆக்காமல் விலகி நின்று அவர்களை அவர்களாகப் பார்த்தால்தான் இது சாத்தியம். இது துயரமிக்க மக்களின் குடியிருப்புகள் அல்ல. இதுவே எங்கள் வீடு என பலர் சொல்லும் இடம் இது.

 

தமிழில்: செந்தில் குமார்

Courtesy:

https://scroll.in/article/960980/from-dharavi-to-sao-paulos-favelas-a-covid-19-response-must-engage-the-communities-that-live-there