காலத்தின் மேல் வரைந்த கோடுகள்- 2
ஓவியம்: இருள் (in the dark)2017
ஓவியர்: கிறிஸ்டோபர் அசோப்பர்டி(Chrishtopher Azzorpadi)Malta
மால்டா (Malta) மத்தியத்தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு. மால்டா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கீழ் இருந்தாலும் ஆப்பிரிக்க பகுதிகளை இணைக்கும் பாலமாக இருக்கிறது.இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்,
1942- ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்த காலகட்டம்.மால்டா ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.அச்சு நாடுகளான ஜெர்மனி,இத்தாலி போன்ற நாடுகள் ஆப்பிரிக்கப் பகுதிகளைக் கைப்பற்ற முடியவில்லை.அதற்குத் தடையாக மால்டா தீவு இருந்தது.பிரித்தானியம் தனது இராணுவ தளவாடங்களைப் பரிமாற்றம் செய்யப்படும் இரகசிய தீவானது மால்டா.அச்சு நாடுகள் மால்டாவை கைப்பற்ற தீர்மானம் செய்தது. பிரித்தானியம் படைகளை சாரைசாரையாக கடல் வழியே இறக்கியது.பிரிட்டனின் கப்பல் படை மிகவும் வலுவானது என்பதை உலக நாடுகள் அனைத்தும் அறிந்திருந்தன.
இதன் விளைவு, வான்வழித் தாக்குதல்கள் அதிகமானது.மால்டாவின் மீது சர்வ சாதாரணமாக குண்டுகள் வீசப்பட்டது.மக்கள் வீடுகளை , உடைமைகளை இழந்து வீதியில் நின்றனர். 30,000 வீடுகளுக்கு மேல் தரைமட்டமானது. ஆயிரக்கணக்கான வானூர்திகள் விண்ணில் நொறுங்கின.இரு தரப்பிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின.இறுதியில் நேச நாடுகள் ஜெயித்தது. மால்டா கைப்பற்றப் பட்டது. போர் முடிந்த பின்னரும் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னர் இறுதியாக 1964ஆம் ஆண்டு மால்டா சுதந்திரம் அடைந்தது.
அந்த காலகட்டத்தில் மக்கள் உயர்நிலைக் கல்வி பெற மால்டாவிலிருந்து இத்தாலிக்கு போக வேண்டிய நிலைதான் இருந்தது. அரபு நாடுகளின் கலாச்சாரம் ஆங்காங்கே பரவியிருந்தாலும் ரோமன் கத்தோலிக்(R C)எனப்படும் கிறித்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் பரவலாகக் காணப்படுகின்றனர்.
கிறிஸ்டோபர் அசோப்பர்டி 1972 ஆம் வருடம் மால்டாவில் பிறந்தார். தனது பள்ளி நாட்களை மால்டாவிலேயே கழித்தார்.
கிறிஸ்டோபர் மால்டாவில் பிறந்து வளர்ந்தாலும், இத்தாலியில் உள்ள பெருகியா எனும் நகரத்தில் 1992ஆம் ஆண்டு பியட்ரோ வன்னுசி அகாடமி ஆஃப் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் தனது இளங்கலை படிப்பு முடித்து,யூனிவர்சிட்டி ஆஃப் மால்டாவில் முதுகலைப் படிப்பும் பயின்று பட்டம் பெற்றவர்.மனித முக அமைப்பு(portrait)பற்றிய புரிதலும் அதனை வெளிப்படுத்தும் உத்திகளிலும் சிறந்து விளங்குபவர்.
காலங்கள் நகர்வதோடு நிறைய ஓவியங்களை வரைகிறார்.2000 ஆம் ஆண்டின் மத்தியில் ஜெசபெல்லா என்ற பெண்ணை மணக்கிறார். எண்ணெய்ச் சாய உருவப்பட ஓவியங்கள்(Oil Painting), உருவச் சிலை ஆக்கம்(sculpture) என்று பயிற்சி தொடர்கிறது.
2004 ஆம் ஆண்டு தன் மகளை சாதாரணமாக புகைப்படம் எடுக்கும் போது தன்னுள் சிறந்த புகைப்படங்களை எடுக்கும் கலை பிரக்ஞையுடன் வெளிப்படுகிறது என்று உணர்கிறார். கிறிஸ்டோபர் பன்முகக் கலைஞராக உருவெடுக்கிறார்.
ஒருவன் தன்னுள் இருக்கும் திறமையை மறைத்து வைத்திருந்தாலும் அது காலத்தால் வெளிப்பட்டே தீரும்.கிறிஸ்டோபர் ஓவியம் தீட்டுவதிலும், சிற்பங்கள் செதுக்குவத்திலும்,புகைப்படக் கலையிலும், டிஜிட்டல் ஓவியத்திலும், புதிய உச்சத்தைத் தொடுகிறார். மீண்டும் இவரது கால்கள் மீண்டும் கல்லூரியை நோக்கி பயணிக்கிறது. லண்டனில் சென்று புகைப்பட நிபுனத்துவத்திற்கான பிரிவில் முதுகலைப் பட்டம் பெறுகிறார்.
Lighting எனப்படும் ஒளியூட்டும் முறையை கையாள்வதில் தேர்ந்த கலைஞராகிறார்.
அதன் பின்னர், சுமார் பத்து வருட இடைவெளியில் விருதுகளை வாங்கிக் குவிக்கிறார்.மால்டா போட்டோகிராபி சொஸைட்டி,ஹாங்காங்,சிங்கப்பூர்,அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் சிறந்த தனித்துவமான புகைப்படம் என்று பல பதக்கங்களை வெல்கிறார்.
அது மட்டுமல்லாமல்,கடந்த ஒன்றரை வருடங்களாக மட்பாண்டங்களின் கலை,மற்றும் அதன் அறிவியலையும் ஆராய்ந்து வருகிறார்.செராமிக்ஸ்(Ceramics) எனப்படும் பீங்கான் குவளைகள் செய்யும் கலை.அதை திறம்படச் செய்வதில் வல்லவர்.களிமண் எப்போதும் எனக்குப் பிடித்தமான பொருளாக இருந்து வருகிறது என்று கூறுகிறார்.
இதற்கிடையே பல ஓவியங்களையும் தீட்டுகிறார். இவரிடம் உள்ள சிறப்பம்சம் ஒவியத்திற்கான மாதிரி படங்களை அவரே புகைப்படமாக எடுத்து அதனை ஓவியமாக வார்த்தெடுப்பது தான்.
The phone cell,Caring,The Offering,Lost Tradition, Resurrection,In The Dark போன்ற ஓவியங்கள் புகழ் பெற்றவை.
இயேசு பிட்டுக் கொடுத்த அப்பம்,உயிர்த்தெழுதல் போன்ற பல ஓவியங்கள் முக்கியமானவை.
இதில் இருள்(In The Dark) என்ற ஓவியம் மிகவும் புகழ் பெற்றது.மெழுகுவர்த்தி ஏந்திய கைகள்.மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் கண்களும், கலவரத்துடனான முகம்,கரையும் மெழுகுவர்த்தி என பல்வேறு நுணுக்கங்களைக் கொண்ட இவ் ஓவியம் இவரது ஓவியங்களில் மிகவும் முக்கியமான படைப்பு.
சிறிது நேரம் இந்த ஓவியத்தை உற்று நோக்குங்கள். சாதாரணமாக இல்லாமல் வித்தியாசமான அமைப்பினைக் கொண்டிருப்பதை உணரலாம்.
இந்த பெண் அணிந்திருக்கும் உடை மால்டா மக்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்று. கையில் மெழுகுவர்த்தியுடன் நின்று கொண்டிருக்கும் பெண்.உடைகளில் ஜரிகைகள்,சுருக்கங்கள் என அவ்வளவு நுணுக்கமாக தூரிகையை கையாண்டிருக்கிறார். அந்த பெண் அணிந்திருக்கும் வெள்ளை நிற உடை மெழுகுவர்த்தியின் ஒளியின் காரணமாக தங்க நிறமும், மஞ்சள் நிறமும் கலந்து மேலும் அழகு சேர்க்கிறது.அந்த மெழுகுவர்த்தி கரைந்து வழிகிறது.மெழுகுவர்த்தியின் வெளிச்சம் முகத்திற்கு நேராக விழுகிறது. முகத்தின் இரு பக்கங்களிலும் லேசாக இருள் சூழ்ந்துள்ளது. தலையின் பின்புறம் Malta மக்களின் கத்தோலிக்க இயக்கத்தின் அடையாளமாக ஒரு துணியினை உடுத்தியுள்ளார்.எரியும் மெழுகுவர்த்தியின் சுடரிலிருந்து வெளிப்படும் ஒளியின் அளவு முகத்திலும்,கைகளிலும்,ஆடைகளிலும் மாறுபடுகிறது.
மேலும் கிறிஸ்டோபர் அவர்கள் இதில் பெர்ஸ்பேக்ட்டிவ் (Perspective) என்ற ஒரு நுட்பமான முறையையும் ஓவியத்தினுள் புகுத்தியுள்ளார். அதாவது நீங்கள் ஓவியத்தை இடது புறம் திருப்பினாலும், வலது புறம் திருப்பினாலும் அந்த முகம் மற்றும் கைகள் உங்களை பார்த்த திசையில் திரும்புவது போன்ற பிம்பம் ஏற்படும்.கண்கள் உங்களையே உற்று நோக்கும்.
அடுத்ததாக,இந்த முகத்தில் ஏற்படும் உணர்ச்சி மகிழ்ச்சியா இல்லை துக்கமா என்பதை யூகிக்க முடியா வண்ணம் குழப்பமாக உள்ளது.சாதாரணமாக பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றும் ஓவியத்தில் கண்களை மட்டும் மறைத்துவிட்டுப் பார்த்தால் கவலையுடன் காட்சியளிக்கிறது.
ஒருசில இலக்கியங்களின் புரிதல்கள் நம்மை தொந்தரவு செய்யக் கூடும். நம் மனசாட்சியை உலுக்கச் செய்யும்.இன்னும்,சில திரைப்படங்கள் நம் மனதை தளும்பச் செய்துவிடும்.ஆனால்,ஒரு ஓவியம் நம்மை எந்த விதத்திலாவது பாதிக்குமா என்றால்,கண்டிப்பாக அதன் எதிர்வினை இவற்றையெல்லாம் விட இருமடங்கு அதிகமாக இருக்கும்.
கலைஞன் எப்பொழுதும் தன்னை அந்த கலைக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்கிறான்.அந்தக் கலை அவன் மனதில் ஏற்கனவே கனவுச் சித்திரமாக அவனது என்ன ஓட்டங்களுக்கிடையில் தீட்டப் பட்டு விடுகிறது.மாறாக,அவன் இந்த உலகிற்கு வெளிக்கொணர்வது அதன் நிழலான பிம்பங்களை மட்டுமே.
பிம்பங்களின் சாயலே மனதில் இவ்வளவு கலவரங்களை ஏற்படுத்துமென்றால்,கலைஞனின் எண்ண ஓட்டங்களில் பயணிக்க நேர்ந்தால் நம் மனம் ஒரு அவிழ்க்க முடியாத புதிர் வட்டங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். அதிலிருந்து மீள்வது கடினம். அந்த புதிர் வட்டங்கள் அடுத்தடுத்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும். அது ஒரு பரந்து விரிந்த கடலைப் போல காட்சியளிக்கிறது. அதிலிருந்து ஒரு சில துளிகள் மட்டுமே நம்மை நனைக்கும்.
இதே போன்ற காட்சி அமைப்பு கொண்ட இன்னொரு ஓவியமும் உள்ளது. அது”Glow of Hope”எனும் தலைப்பில் ஹெல்டார்கர்(Heldarkar) எனும் மராத்திய ஓவியர் வரைந்த ஒரு நுட்பமான கலை. இவர் 1945 களில் இந்த ஓவியத்தை தீட்டினார். இது இவருடைய படைப்புகளில் மிக முக்கியமானதாக இது கருதப்படுகிறது.ஹெல்டார்கர் மற்றும் கிறிஸ்டோபர் இரு கலைஞர்கள் வரைந்த ஓவியத்திற்கும் மத ரீதியான வேறுபாட்டினை தவிர்த்து அதன் அமைப்பில் கருத்தியல் சார்பு ஒன்றுதான்.
இதை எழுதிக்கொண்டிருந்தபோது ஓவியர் கிரிஸ்டோபர் அவர்களுடன் முகநூல் மூலமாக உரையாடினேன். என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பிறகு சில கேள்விகளை அவரிடம் கேட்டேன் .
* இந்த (in the dark )ஓவியத்தினை வரைவதற்கு எது உந்துதலாக இருந்தது?
நான் நீண்ட நாட்களாகவே கையில் மெழுகுவர்த்தியுடன் நிற்கும் ஒரு பெண்ணை ஓவியமாக வரைய எண்ணியிருந்தேன்.பிரகு ஒரு புகைப்பட மாதிரியை கொண்டு இவ்ஓவியத்தை வரைந்தேன்.முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை(Emotions) அதிகமாக பிரயத்தனப்பட்டு கொண்டுவந்தேன்.
* இந்த ஓவியத்தை தீட்ட எத்தனை மணி நேரம் ஆனது?
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை சுமார் நூறு மணிநேரம் ஆகியிருக்கும்.
ஒரு ஓவியத்திற்காக நான் செலவிட்ட அனைத்து மணிநேரங்களும் சுவாரஸ்யமான மணிநேரங்கள். நான் ஒரு ஓவியத்தை முடிக்கும்போது புதிய ஒன்றைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் .
* இது ஒரு தரமான படைப்பு.இதை பலர் விலை கொடுத்து வாங்க முன் வந்திருப்பார்களே?
இது எனது வீட்டுப் படிக்கட்டின் மேற்சுவரில் மாட்டப் பட்டிருக்கிறது. இதுவரை பலர் அதை வாங்க விரும்பினர், ஆனால் அது விற்பனைக்கு இல்லை. நான் விரும்பும் சில ஓவியங்களில் இதுவும் ஒன்று.
* நவீன ஓவியம் குறித்த உங்கள் பார்வை –
நவீன மற்றும் கிளாசிக் வகையான ஓவியம் இரண்டையும் விரும்புகிறேன். நவீன ஓவியக்கலையை பயில்வது எளிது என்று சிலர் நினைக்கிறார்கள். என் கருத்துப்படி இது உண்மை இல்லை.ஒரு நல்ல முறையான கலைக்கு சீரான மற்றும் நிறக்கலவை , நல்லிணக்கம் மற்றும் அதன் வடிவம் பற்றிய சிறந்த புரிதல் தேவை.
* உங்களுக்கு பிடித்த ஓவியர் யார்?
காரவாஜியோ(Caravaggio) ரெம்ப்ராண்ட்(Rembrandt) மற்றும் லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) அவர்களின் யுக்தி, நிறம், கலவை மற்றும் ஒளியின் அளவைப் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை நான் விரும்புகிறேன்.
* கல்லூரியில் ஓவியத் துறையைத் தேர்வு செய்ய உங்களைத் தூண்டியது எது?
பதினான்கு வயதில் நான் வரைய முடியும் என்பதை நான் அறிந்து கொண்டேன்.பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, எனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள மால்டா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் ஒரு வரைபடக் கலை படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். அங்கு நான் முக அமைப்பு வரைதல், ஓவியம் மற்றும் சிற்பம் செதுக்குதல் ஆகியவற்றைப் படித்தேன்.
* உங்கள் தந்தை ஒரு ஓவியரா?
இல்லை, எனது குடும்பத்தில் நான் மட்டுமே ஓவியர்.
* உங்களது பால்ய கால நாட்களைப் பற்றி கொஞ்சம் பகிர்ந்து கொள்ளுங்கள்
நான் குழந்தையாக இருந்தபோது என்னால் ஓவியங்கள் வரையவும்,பருப்பொருள் ஒன்றினை சிற்பமாக்கவும் முடியும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நான் எப்போதும் எனது கைகளாலேயே கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வமாக இருந்தேன். என்னால் வரைய முடியும் என்பதைக் கண்டுபிடித்த எனது நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில் ஒருவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பின்னர், நானாகவே அந்த திறமையை வளர்த்துக் கொண்டேன்.
* மால்டாவுக்கு ஒரு வரலாற்றுப் பின்புலம் உள்ளது.அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் –
1964 இல் மால்டாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்கு முன்னர் மால்டா எப்போதும் அயல்நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வண்ணம் இருந்தது.மால்டாவை ஆக்கிரமித்த ஒவ்வொரு நாடும் எங்களது கலாச்சார மற்றும் கலை பாரம்பரியத்தை வளப்படுத்த உதவியது. இரண்டாம் உலகப் போரின்போது மால்டா மிகவும் மோசமான நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால், அந்த மோசமான அனுபவங்கள் இப்போது சீரிய முறையில் வழி நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் அனைத்து வளங்களும் உள்ளடக்கிய ஒரு சிறந்த சமுதாயமாக மால்டா திகழ்கிறது.
* இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புபவை (புகைப்படம் எடுத்தல் மற்றும் நவீன ஓவியம் சார்ந்து)?
இளம் ஓவியர்கள், சிற்பிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் புத்தகங்களைப் படிக்கவும், யூடியூப் டுடோரியல்களைப் பார்க்கவும் நான் மிகவும் ஊக்குவிக்கிறேன். அதன் அடிப்படை நுட்பங்களை அவர்கள் முயற்சி செய்து பயின்ற பிறகுதான் அவர்கள் தங்களுக்கென தனித்துவமான பாணியை வளர்த்துக் கொள்ள முடியும்.நவீன ஓவியம், சிற்பக் கலை ஆகியவற்றின் அடிப்படைப் புரிதல் மிக அவசியம்.
உங்களிடம் உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி என கூறி உரையாடலை முடித்தார்.
கிறிஸ்டோபர் அவர்களின் கலையினூடான பார்வையை நீங்களும் அறிய அவரது இணையதளத்தினை பார்வையிடுங்கள்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- ஓவியர்: ராஜா ரவிவர்மா : ஓவியம்: சடாயுவின் வீழ்ச்சி(1895) - எம்.சரவணக்குமார்
- கனாவில் நிகழ்ந்த திருமணம் : எம்.சரவணக்குமார்
- டெறேன்ஸ் கஃபேவின் அழகிய மாலைப் பொழுது : எம்.சரவணக்குமார்
- மாவீரன் நெப்போலியன் முடிசூடும் விழா : எம்.சரவணக்குமார்
- பற்றி எரிந்த தேவாலயம் : எட்வர்ட் லியான் கோர்டஸின் ’நோட்டர் டாம்’-எம்.சரவணக் குமார்