நாகார்ஜுனரின் “மூலமத்யமகாகாரிகா” நூலின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று இறைநம்பிக்கையாளர்களின் (குறிப்பாக வைதீக பக்தர்களின்) கடவுள் குறித்த கருத்துரு எவ்வளவு அபத்தமானது என அவர் நிறுவுகிற இடம். குறிப்பாக முதல் அத்தியாயத்தில் வரும் இந்த ஆறாவது சுலோகத்தை பாருங்கள்.

“For neither an existent nor a nonexistent thing
Is a condition appropriate.
If a thing is nonexistent, how could it have a condition?
If a thing is already existent, what would a condition do?”

“இருக்கிற அல்லது இல்லாத ஒன்றுக்கு
ஒரு நிலை தேவையிருக்காது.
ஒன்று இல்லையெனில், அதற்கு நிலை இருக்காது அல்லவா?
அது ஏற்கனவே இருக்கிறதெனில், அதற்கு ஒரு நிலையின் அவசியம் என்ன?”

முந்தின சில சுலோகங்களில் நிலைகள் சாராம்சமானவையாய் இருக்கக் கூடும் எனும் வாதத்தை முறியடிக்க முயன்ற நாகார்ஜுனர் இப்போது மீண்டும் நிகழ்த்தப்படும் விசயங்களின் சாராம்சம் பற்றி பேச வருகிறார்.
இங்கு முக்கியமான குறிப்பு ‘இருப்பது’, ‘இல்லாதது’ என்பதற்கு நிஜத்தில் இருப்பது, இல்லாதது எனப் பொருள் இல்லை. சாராம்சமாக இருப்பது, சாராம்சமாக இல்லாதது என்றே புரிந்து கொள்ள வேண்டும் (சம்ஸ்கிருதத்தில் சத் – அசத் போன்ற சொற்கள் இதற்கு பயன்படுகின்றன.) இப்போது படித்தால் இந்த சுலோகம் உங்களுக்கு தெளிவாக விளங்கும்:
ஒன்று சாராம்சமானதாய் உள்ளதென்றாலோ இல்லையென்றாலோ அதற்கு ஒரு நிலை அவசியமில்லை. ஒன்று சாராம்சமாய் இல்லையென்றால் அதற்கு என ஒரு சாராம்சமான நிலை இருக்க முடியாது தானே என பின்னோக்கி வாதிட்டு நிறுவுகிறார் நாகார்ஜுனர். அதே போல ஒன்று சாராம்சமாய் இருக்கிறதென்றால், அது காலத்தைக் கடந்து இருப்பது, அதனாலே அது ஏற்கனவே இருக்கிறது எனப் பொருளாகி விடும். ஏற்கனவே இருக்கிற ஒன்றை மற்றொன்று நிகழ்த்த முடியாது, எனில் அதற்கு நிலையே இருக்க முடியாது தானே எனக் கேட்கிறார்.

இந்த வாதத்தை நாம் கடவுளைப் பெற்றது யார் எனும் கேள்வியின் பின்னணியில் இருந்து பார்த்தால் இன்னும் ஆழமானதாக ஆகும் – கடவுள் இருப்பதும் இல்லை, இல்லாமல் ஆவதும் இல்லை என (கீதையில் கண்ணன் சொல்வதைப் போல) கூறப்படுவது உண்மையெனில், கடவுளுக்கு நிலைகளே இருக்க முடியாது. எனில் கடவுள் சாத்தியமே இல்லை என ஆகிறார். நிலைகளால் மட்டுமே ஒன்று சார்புநிலையில் தோன்ற முடியும் என்பது நாகார்ஜுனரின் அடிப்படையான வாதம். நிலைகளே இல்லாத ஒன்று இருக்கவே முடியாது தானே? எனில் கடவுள் தோற்றமும் முடிவும் அற்றவர், சாராம்சமானவர் எனச் சொல்வது கடவுள் இல்லை என்பதற்கு சமானமானது என நாகார்ஜுனர் இங்கு நிறுவுகிறார்.
கடவுளுக்கு நிலையே இல்லை எனில் அவர் தன்னையே தோற்றுவித்தாரா? கடவுள் தன்னையே தோற்றுவித்தார் எனில் அவர் நிலையா அல்லது நிகழ்வா? அவர் நிலையும் நிகழ்வுமெனில் எவ்வளவு அபத்தம்? கடவுள் காலத்துக்கு அப்பாலானவர், காலதீதமானவர் எனில் காலத்தை யார் ஏற்படுத்தியது? (காலத்துக்கு அப்பால இருப்பதற்கும் அங்கு காலம் இருக்க வேண்டுமல்லவா?) கடவுளே காலத்துக்கு வெளியே நின்று காலத்தையும் உண்டாக்கினார் எனில் கடவுள் காலத்தின் நிலையாகிறார், எனில் அவர் சாராம்சமற்றவர் ஆகிறார். இப்படி இந்த சுலோகம் மற்றும் இதற்கு முந்தையவற்றின் வாதத்தை கடவுளின் இருப்பை அலச பயன்படுத்தும் போது பல ஓட்டைகள் புலப்படுகின்றன.