இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகள் அபாயகரமான அளவில் உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வருகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களுக்கு மறுக்கப்படும்  உரிமைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க 2006 செப்டம்பரில் பேராசிரியர். S.K.தோரத் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு சரியாக 13 ஆண்டுகள் ஆகின்றன.

பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவரான சுக்தியோ தோரத் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு, எய்ம்ஸ் நிறுவனத்தில் உயரடுக்கு அல்லாத சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பல பாகுபாடுகளை மிகவும்  ஆழமாக ஆராய்ந்தது. சுதந்திர  இந்தியாவில்  ஒரு குழு அமைக்கப்பட்டு  ஒடுக்கப்பட்ட மாணவர்கள்  எதிர்கொள்ளும் பிரச்சனைகளை விசாரணை செய்தது அதுவே முதல்முறை.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அந்தக் குழு பேசிய பிறகு எஸ்சி / எஸ்டி மாணவர்களில் 72% பேர் கற்பித்தல் அமர்வுகளில் ஏதோவொருவிதமான பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர் என்று அதிர்ச்சியளிக்கும் உண்மையை கண்டுபிடித்தது.இரண்டாவதாக, விடுதிகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவியது, உதாரணமாக சுமார் 88% மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் சமூக ஒதுக்கலை அனுபவிப்பதாக தெரிவித்தது. குழுவின் அறிக்கை எஸ்சி / எஸ்டி பேராசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாகுபாட்டைக் கோடிட்டுக் காட்டியது.

பதினைந்து நாட்களுக்கு முன்பு எய்ம்ஸ் நிறுவனத்தில் ஒரு பெண் மருத்துவரின் தற்கொலை முயற்சியைப் பதிவு செய்கிறது. எய்ம்ஸின் பல் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த மருத்துவர், பாலியல் துன்புறுத்தல் மற்றும் சாதி பாகுபாட்டை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. தோரட் கமிட்டி அறிக்கை வெளிவந்து 13 ஆண்டுகளுக்கு பிறகும்  எய்ம்ஸ் நிறுவனத்தில் சாதி பாகுபாடுகளை நீக்கும் உண்மையான மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்பதற்கான மற்றொரு நினைவூட்டல் இது.

எய்ம்ஸ் நிறுவனத்தில் நிலவும் சமூக சூழ்நிலையை ஆராய மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டுக் குழுக்களை  உருவாக்க வேண்டுமென அறிக்கை பரிந்துரைத்தது; சமூக நல்லிணக்கத்தை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்குதல்; ஒடுக்கப்பட்ட மாணவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் கையாள்வதற்கு “சம வாய்ப்பு அலுவலகம்” அமைத்தல்; அனைத்துத் தரப்பு  மாணவர்களையும் கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்க ஊக்குவித்தல்; மூத்த பயிற்சி மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் முறையை உருவாக்குதல். எய்ம்ஸில் இடஒதுக்கீடு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தோரத் குழுவின் அறிக்கை  வலியுறுத்தியிருந்தது.

அண்மையில் எய்ம்ஸ் நிறுவனத்தில் பெண் மருத்துவர் தற்கொலைக்கு முயன்றது கவலைக்குரியது, அந்த மருத்துவர் எழுப்பிய பிரச்சினைகளை ஆராயுமாறு  நிர்வாகத்திற்கும், பயிற்சி மருத்துவர்கள்  சங்கம் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதியிருந்தார். சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் சங்கம் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் எழுதியிருந்தது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் ஒருபோதும் எடுக்கவில்லை.

கேள்வி என்னவென்றால் நிர்வாகத்தின் செயலற்ற தன்மை சாதி குருட்டுத்தன்மையின் விளைவாக இருந்ததா அல்லது ஒடுக்கப்பட்ட மாணவரை வேண்டுமென்றே புறக்கணித்ததா? நிச்சயமாக, எய்ம்ஸ் நிர்வாகத்தின் மோசமனா அணுகுமுறை இதற்கு விதிவிலக்கல்ல. 22 மே 2019 அன்று, பில்-முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மதிப்பிற்குரிய மருத்துவர் பாயல் தத்வி, மூத்த மருத்துவர்களால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். 26 வயதான அவர் இன்றும் உயிருடன் இருந்திருந்தால், அவரது சமூகத்தைச் சேர்ந்த முதல் மருத்துவராக இருந்திருப்பார்.

உயர்சாதி சகாக்களான, மூத்த மருத்துவர்கள் ஹேமா அஹுஜா, பக்தி மெஹ்ரா மற்றும் அனிக்தா கண்டேல்வால் ஆகியோரது தொடர்ச்சியான துன்புறுத்தல்கள் குறித்து பாயல் தத்வி தனது மருத்துவமனையின் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார். தான் அறுவை சிகிச்சைகள் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இது உட்பட  பிற துன்புறுத்தல்கள் அனைத்தும் குறித்து அவர் தனது பெற்றோரிடமும்,  கணவர் டாக்டர் சல்மான் தாத்வியிடமும் தெரிவித்திருந்தார்.

பாயல் தத்வி இறந்த பிறகு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் இடங்கள் கசப்புடனே நிரப்பப்படுகின்றன என்று தோரத் கூறினார். “கடந்த பத்தாண்டுகளில் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்களில் உயர் கல்வி நிறுவனங்களில் பயின்ற சுமார் 25-30% மாணவர்கள்  சாதி பாகுபாட்டின் காரணமாக இறந்துவிட்டனர், ஆனால் அடுத்தடுத்த அரசாங்கங்கள் சாதி பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு உறுதியான கொள்கை முடிவையும் எடுக்கத் தவறிவிட்டன …” என்று அவர் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

சாதி பாகுபாட்டின் அடிப்படையான தர்க்கம் தூய்மை மற்றும் இழிவான வாதம் ஐ.ஐ.டி மெட்ராஸிலும் வெளிப்பட்டது, அங்கு 2018 ஆம் ஆண்டு உணவு விடுதியில் சைவ உணவு உண்பவர்கள் மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு தனி நுழைவாயில்கள்  வரையறுக்கப்பட்டன. அம்பேத்கர் பெரியார் ஆய்வு வட்டம் எனும்  அங்கு செயல்படும் மாணவர் குழு, இந்த பிரச்சினையை தேசிய கவனத்திற்கு கொண்டு வந்தது.  மக்களின் பெரும் சலசலப்புக்குப் பின்னர் தனி நுழைவாயில்கள் திரும்பப் பெறப்பட்டது.

“நவீன’ சமுதாயத்தில் சாதி  எதவாது முகமூடி அணிந்து மறைந்து கொள்கிறது. ஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில், இது சைவ மற்றும் அசைவ மாணவர்களுக்கான  தனி நுழைவுவாயில், தனி பாத்திரங்கள், தனி சாப்பாட்டு பகுதி மற்றும் கழுவும் பகுதி என தன்னை வெளிப்படுத்துகிறது … ”என்று ஏபிஎஸ்சி மாணவர்கள் தெரிவித்தனர்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சமூக மானுடவியல் பேராசிரியரான அஜந்தா சுப்பிரமணியன் “ஐ.ஐ.டி-மெட்ராஸில் சாதி கலாச்சாரத்தின் உடற்கூறியல்” என்ற தனது கட்டுரையில் சாதி மற்றும் தகுதி என்ற கருத்துக்களை ஆராய்கிறார். பொதுவாக உயர் சாதியினரின் நலனுக்காகசாதி மற்றும் சாதியவாதம் ஐஐடி மெட்ராஸை மிக நீண்ட காலமாக வடிவமைத்துள்ளது என்று அவர் குறிப்பிடுகிறார்.2008 ஆம் ஆண்டுவரை, பிற பின்தங்கிய வகுப்பு அல்லது ஓபிசி பிரிவினருக்காக கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படும்வரை, பொது பிரிவு மாணவர்களின் சேர்க்கை 77.5% ஆகும். இது, சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளபடி, பெரும்பாலும் உயர்சாதி  மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.மாணவர்கள் மட்டுமல்ல, ஐ.ஐ.டி-மெட்ராஸில் உள்ள ஆசிரியர்களின் அமைப்பும் மிக அதிக அளவில்  உயர்சாதியினரை கொண்டுள்ளது,” என்று அவர் குறிப்பிடுகிறார், அதாவது 464 பேராசிரியர்கள் பொது பிரிவினர், 59 ஓபிசிக்கள், 11 எஸ்சிக்கள் மற்றும் 02 எஸ்.டி.

ரோஹித் வெமுலாவின் வழக்கும் வேறுபட்டதல்ல. இந்தியாவில் சமுதாயத்திலும் கல்வி நிறுவனங்களிலும் ஆழமாக வேரூன்றிய சாதி மூடநம்பிக்கைகள், அவருடைய  அடையாளத்தையும் அவருக்குள்ள வாய்ப்புகளையும்  அதன் மதிப்பையும் ஒரு வாக்கு,ஒரு எண், ஒரு பொருள் என குறைத்தன. ஒரு போதும்  மனதுள்ள மனிதனாக கருதப்படவில்லை என்ற அவரது மறக்க முடியாத மற்றும் ஆழ்ந்த கடுமையான தற்கொலைக் குறிப்பு  2016 ஆம் வருடம் ஜனவரி மாதம் கூறியது.

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின்  நம்பிக்கைக்குரிய மாணவர், அறிவியல் எழுத்தாளராக ஆசைப்பட்டார், அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். இந்துத்துவா மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஆகஸ்ட் 2015 இல் பல்கலைக்கழகத்தால் அநியாயமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ரோஹித்தின் மரணம் தேசியளவில்  சலசலப்புக்கு வழிவகுத்தது. ஒரு இளம் அறிஞரை ஒரு நிறுவனம் கொலை செய்ததற்கு நீதி கேட்டு  இந்திய அளவிலான மாணவர் எழுச்சியை உருவாக்கியது. உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களைப் பாதுகாக்க நிர்பயா சட்டம் போன்று ரோஹித் சட்டத்திற்கான கோரிக்கைகள் இருந்தன. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கும் சாதி அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு காண்பவர்களுக்கு தண்டனை வழங்கவும்  பதவி நீக்கம் செய்யவும் அந்த சட்டம் கருவியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தின.

தங்கள் சமூகங்களுக்கும்  நாட்டிற்கும் முன்மாதிரியாக இருந்திருக்கக்கூடிய எத்தனை மாணவர்களை நாம் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளும்வரை தியாகம் செய்ய வேண்டும் என்பதற்கு இன்று வரை பதிலில்லை.

இந்த மறுப்புகள், அவமானங்கள் மற்றும் இறப்புகளில் குற்றத்திற்கு  உடந்தையாக சமூகம் இருக்கக் கூடாது. ரோஹித்தின் மரணத்திற்குப் பிறகு கவிஞர் மீனா கந்தசாமி , ஒரு தலித் மாணவரின் தற்கொலை என்பது ஒரு தனித்து வெளியேறும் உத்தி மட்டுமல்ல, … அவனை அல்லது அவளை தோற்கடித்த சமூகத்தின் அவமானம் என்று எழுதியிருந்தார்.

எனினும் காலம் சாதி பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறையைக் குறைப்பதாகத் தெரியவில்லை, மாறாக அதிகரிக்கும் வேறுபாடுகள் பொது  இயல்பாக்கப்பட்டு வருகிறது. அரசின் முக்கிய கூறுகள்; சட்டமன்றம், நிர்வாக மற்றும் நீதித்துறை கூட இந்த இயல்பாக்கலை விரும்புவதாகத் தெரிகிறது.

சாதி வெறியர்கள் இந்துத்துவ மேலாதிக்க அமைப்புகளின் வளர்ச்சியினால்  இன்னும் ஏற்றம் கண்டிருக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மையத்திலும் பெரும்பாலான மாநிலங்களிலும் பாஜக அதிகாரத்திற்கு வந்தவுடன் தலித்துகளுக்கான  சமூக உறுதி நடவடிக்கைகள் மற்றும் சட்டப் பாதுகாப்பிற்கான தற்போதைய விதிகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு திட்டமிட்டு  முறையாக உதவுகிறது.

பாஜக அரசாங்கம் பல்கலைக்கழக நியமனங்களில் அதிகமான தலித்துகளை உள்ளடக்குவதற்கான சட்ட விதிகளை நீர்த்துப்போகச் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவால்  வன்கொடுமை சட்டம் நீர்த்துப்போன போது அதனை அசல் வடிவத்திற்கு மீட்டெடுப்பதில் அரசு முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை …. மாறாக, இடஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி என்பதற்கு பதிலாக இட ஒதுக்கீடு என்பது துறை வாரியாக , அதன் அடிப்படையில் இருக்கும் என்று யுஜிசி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் 52 ஆசிரிய பதவிகளுக்கான அறிவிக்கையில்  ஒரே ஒரு பதவி மட்டுமே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று பல நிகழ்வுகள் இருக்கின்றன.

கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட பிரிவினரின்  பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் பல செயல் திட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய சில தனித்துவமான, அதிபுத்திசாலித்தனமான வழிகளை வெளிப்படுத்துகிறார்கள். உதாரணமாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஒரு காலத்தில் தனித்துவமான இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் இருந்திருக்கிறது, பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும்  சமூகத்தின் மிகவும் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் நிறுவனத்தின் தரவரிசை மற்றும் கோப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருப்பினும், சிறிது காலத்திற்கு பிறகு பல்கலைக்கழகத்தின் மாணவர்களைத் தெரிவு செய்யும் முறையில்  மாணவர்களின் தரம் என்பதன் அடிப்படையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2013-14 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையின்படி, ஜே.என்.யுவில் உள்ள மொத்த 7,677 மாணவர்களில் 3,648 (அல்லது பாதி) தலித்-பகுஜன் (1,058 எஸ்சி, 632 எஸ்.டி + 1,948 ஓ.பி.சி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் சேர்க்கப்பட்டால், உயர்சாதி மற்றும் உயர் வர்க்கம் ஜே.என்.யுவில் ஒரு சிறுபான்மையினர் என்று ஜே.என்.யு  தலித் பகுஜன் சொற்பொழிவின் 2016 ஆம் ஆண்டு கட்டுரையில் அபய் குமார் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் சமீபத்திய தற்கொலை முயற்சிகள் மற்றும் பிற மாற்றங்கள், பல்கலைக்கழகம் அதன் தனித்துவமான இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்யும் முடிவு போன்றவை, மக்கள் பிரதிநிதித்துவ சமூக அமைப்பின்  கடைசி கோட்டையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதை தெரிவிக்கிறது.

நன்றி: https://www.newsclick.in/Operation-Eklavya-in-Action-at-Premier-Institutes

தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி