அரசுப் பள்ளி மாணவர்கள் கழிப்பறையைச் சுத்தம் செய்யும் வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து கந்துவா மாவட்ட ஆட்சியர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், கந்துவா மாவட்டத்தில் சின்ஹாரா கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் கழிப்பறையை மாணவர்களே சுத்தம் செய்யவேண்டுமெனப் பள்ளி நிர்வாகமே உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தின் கழிப்பறையைச் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ பதிவிற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு உருவானது.

இதுகுறித்து கந்துவா மாவட்ட ஆட்சியர் தன்வி சுந்திரியல் கூறுகையில், ”மாணவர்களுக்குத் தூய்மை குறித்து நடைமுறைக் கல்வி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட உத்தரவிட்டிருக்கலாம். அதில் ஒன்றும் தவறில்லை.” என்று தெரிவித்தார். வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரின் இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.